புல்லர் செய்யும் மோசம்

-மகாகவி பாரதி

புல்லர் என்ற ஆங்கிலேய அதிகாரி தனது நியாயமற்ற நடவடிக்கைகளால் பெங்கால் மாகாண மக்களிடம் கெட்ட பெயர் பெற்றிருந்த நிலையில், அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று  ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி செய்தி வெளியிட்டார். அது  நடைபெறாமல் போன நிலையில், மறுவாரம் வெளியான செய்தி இது. இச்செய்தியில் உள்ள கேலியைக் கவனியுங்கள்!

புல்லர் நம்மை யெல்லாம் மோசம் பண்ணிவிட்டார். சென்ற வாரம் அவர் கிளம்பி விடுவாரென்று வெகு ஆனந்தத்துடன் எழுதி யிருந்தோம். அந்தக் குறிப்பு எழுதி முடிந்தவுடனேயே அவர் ராஜினாமா கொடுக்கப் போகிறா ரென்ற வதந்தி தக்க அதிகாரிகளால் மறுக்கப்படுகிற தென்ற தந்தி வந்து விட்டது. இதனையும் அக்குறிப்பின் இறுதியிலே சேர்க்கும்படியாக நேர்ந்துவிட்டது. இது என்ன கஷ்டகாலம்! கெட்ட வதந்திகள் தாம் மெய்யாக முடிகின்றனவே யல்லாமல், நல்ல வதந்திகள் பொய்யாகவே போய்விடுகின்றன. இவ்வளவிற் கப்பாலும் பெங்காளவாசிகள் புல்லர் ராஜினாமாக் கொடுக்கப் போவதாகச் சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டேதானிருக்கிறார்கள்.

ஸர் பி.புல்லர் நீங்கிப்போய் விடுவதாகவும், ரெவின்யூ போர்டு ஸீனியர் மெம்பராகிய மிஸ்டர் கே.ஜி. குப்தா டி.சி.எஸ். மேற்படி ஸ்தானத்திலே நியமிக்கப்படப் போவதாகவும் பெங்காளிகள் நம்புகிறார்கள். ஆனால், பெங்காளத்து மீன் வர்த்தகர்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யலா மென்பதைப் பற்றி ரிப்போர்ட் செய்யும் பொருட்டு ஸ்பெஷல் கடமையில் மிஸ்டர் குப்தா நியமிக்கப்பட்டிருப்பதாகச் சமாசாரம் வந்திருக்கிறது. இதனால், இவர் லெப்டினென்ட் கர்வனர் ஸ்தானம் பெறுவாரென்ற வதந்தி தப்பென்று தெளிவாகிறது. எனவே ஸர் பி.புல்லர் சீக்கிரம் பெயர்வாரென்று கொள்வதற்கிடமில்லாமலிருக்கிறது.

  • இந்தியா – 04.08.1906

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s