-உ.வே.சாமிநாதையர்

12. சிவதருமோத்திரச்சுவடி பெற்ற வரலாறு
சுந்தரம்பிள்ளையின் இயல்பு
பிள்ளையவர்களிடம் அக்காலத்துப் படித்த மாணவர்களுள் சுந்தரம் பிள்ளையென்ற ஒருவர் இவரிடத்தில் மிக்க பக்தி உள்ளவராக இருந்தனர். இவருக்கு ஏதேனும் குறையிருக்கின்றதென்பதை அறிவாராயின் எவ்வாறேனும் முயன்று அதனைப் போக்க முற்படுவார். இவரை யாரேனும் சற்றுக் குறைவாகப் பேசுவதைக் கேட்டால் அவரோடு எதிர்த்துப் பேசி அடக்கி அவரைத் தாம் செய்ததற்கு இரங்குமாறு செய்துவிடுவார். உலக அனுபவம் மிக உடையவர். சாதுர்யமாகப் பேச வல்லவர். இன்ன காரியத்தை இன்னவாறு செய்ய வேண்டுமென்று யோசித்து நடத்தும் யூகி. அவருக்குப் பல நண்பர்கள் உண்டு. அவருடைய நல்ல குணங்கள் அந்நண்பர்களை அவர் சொற்படி எந்தக் காரியத்தையும் இயற்றுமாறு செய்விக்கும்.
சிவதருமோத்திரச்சுவடி பெற முயன்றது
பிள்ளையவர்கள் ஒருசமயம் சென்னையிலுள்ள காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடமிருந்து திருத்தணிகைப் புராணத்தை வருவித்துத் தாமே பிரதி செய்து கொண்டு பொருளாராய்ந்து படித்து வருவாராயினர். அப்புராணத்தில் அகத்தியன் அருள்பெறு படலத்திற் சில பாகத்திற்குச் செவ்வனே பொருள் புலப்படவில்லை. அதைப்பற்றி இயன்றவரையிற் பலரிடத்துச் சென்று சென்று வினாவினார்; விளங்கவில்லை. பின்பு, சிவதருமோத்தரமென்னும் நூலின் உதவியால் அப்பகுதியின் பொருள் விளங்குமென்று ஒருவரால் அறிந்தார். உடனே அந் நூல் எங்கே கிடைக்குமென்று விசாரிக்கத் தொடங்கினார்; இன்னவிடத்திலுள்ளதென்பது கூடத் துலங்கவில்லை.
பின் பலவகையாக முயன்று வருகையில் அது திரிசிரபுரத்திலுள்ள ஓர் அபிஷேகஸ்தரிடம் இருப்பதாகத் தெரியவந்தது. அவரிடம் சென்று தம்மிடம் அதனைக் கொடுத்தாற் பார்த்துக் கொண்டு சில தினங்களில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக இவர் பலமுறை வேண்டியும் அவர் கொடுக்கவில்லை. வேறு தக்கவர்களைக் கொண்டும் கேட்கச் செய்தார். அம்முயற்சியும் பயன்படவில்லை; கேட்குந்தோறும் ஏதேனும் காரணங்களைக் கூறிக் கொண்டே வந்தார்: அது பூசையிலிருக்கிறதென்றும், அதனை அப்பொழுது எடுக்கக் கூடாதென்றும், அதனுடைய பெருமை மற்றவர்களுக்குத் தெரியாதென்றும், அதிலேயுள்ள இரகசியக் கருத்துக்கள் எளிதிற் புலப்படாவென்றும் பலபடியாகச் சொல்லிவிட்டார். பலமுறை கேட்கக் கேட்க அவருடைய பிடிவாதம் பலப்பட்டுவந்தது. பொருள் தருவதாகச் சொன்னாற் கொடுக்கக் கூடுமென்று நினைந்த இவர் தக்க தொகை தருவதாகவும் புத்தகத்தைச் சில தினத்தில் திருப்பிக் கொடுப்பதற்காகத் தக்க பிணை கொடுப்பதாகவும் சொல்லிப் பார்த்தார். எந்தவகையிலும் அவர் இணங்கவில்லை. இவர் தம் முயற்சி சிறிதும் பயன்படாமை கண்டு மிகவும் வருத்தமுற்றார். ‘புத்தகம் எங்கேயாவது இருக்குமோ வென்று தேடியலைந்து வருத்தம் அடைந்தோம். இந்த ஊரிலேயே இருப்பதாகத் தெரிந்தும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமலிருக்கிறதே! அந்தப் பிடிவாதக்காரருடைய நெஞ்சம் இளகாதா?’ என எண்ணி எண்ணி நைந்தார்.
ஒருநாள் அவ்வெண்ணத்தினால் முகவாட்டமுற்றவராகி இருந்த இவரைப் பார்த்த மேற்கூறிய சுந்தரம்பிள்ளை இவரருகிற் சென்று வணக்கத்தோடு நின்று, “இவ்வளவு கவலைக்குக் காரணம் என்ன?” என்றனர். இவர், தாம் திருத்தணிகைப் புராணம் படித்துக்கொண்டு வருவதும் அதிலுள்ள அகத்தியன் அருள்பெறு படலத்திற்குப் பொருள் புலப்படாமலிருப்பதும் சிவதருமோத்திரம் இருந்தால் அந்தப் பாகத்தின் பொருளை எளிதில் அறிந்து கொள்ளலாமென்று கேள்வியுற்றதும் அந்நகரில் உள்ள அபிஷேகஸ்தர் ஒருவரிடம் அந்நூல் இருப்பதாக அறிந்ததும் பல வகையாக முயன்றும் அதனை அவர் கொடுக்க மறுத்துவிட்டதும் சொன்னார். சுந்தரம்பிள்ளை, “அப்பிரதி அவரிடத்தில் இருப்பது உண்மையாக இருந்தால் எப்படியும் கூடிய விரைவில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். ஐயா அவர்களுக்குச் சிறிதும் கவலை வேண்டாம்” என்று சொல்லிப் போயினர். தாம் பலவாறு முயன்றும் கிடையாத அப்புத்தகம் சுந்தரம் பிள்ளைக்கு மட்டும் எவ்வாறு கிடைக்குமென்னு மெண்ணத்துடன் இவர் இருப்பாராயினர்.
சுந்தரம்பிள்ளை செய்த தந்திரம்
இவர் இப்படியிருக்கையில் ஒருநாள், மேற்கூறிய தேசிகருடைய வீட்டிற்கு எதிரே தக்க பிரபு ஒருவர் இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியொன்றில் வந்து இறங்கினார். முன்னர் ஒருசேவகன் ஓடிவந்து தேசிகருடைய வீட்டின் இடைகழியில் நின்று, இந்த வீடு இன்னாருடைய வீடுதானோவென்று மெல்ல விசாரித்தான். உள்ளே இருந்த ஒருவர், “ஆம்; நீர் யார்? ஏன் அவரைத் தேடுகிறீர்? வந்த காரியம் யாது?” என்றார். அவன், இன்ன பெயருள்ள ஐயா அவர்கள் உள்ளே இருக்கிறார்களா, அவர்களோடு தான் வந்த காரியத்தைச் சொல்ல வேண்டுமென்றான். அவர் விரைவாக அவனை அணுகி, “அப்பெயருள்ளவன் நானே. சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்” என்றார்.
இவர்களிருவரும் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில், வேறொரு சேவகன் உயர்ந்த விரிப்பொன்றைக் கொணர்ந்து அவ் வீட்டுத் திண்ணையின்மேல் விரித்தான். மற்றொருவன் திண்டைக் கொணர்ந்து சுவரிற் சார்த்தினான். முன் கூறிய பிரபு திண்ணையின்மேல் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்து திண்டிற் சாய்ந்த வண்ணமாகப் பெருமிதமான தோற்றத்துடன் இருந்தார். திண்ணையின் கீழே உயர்ந்த ஆடையையும் உடுப்புக்களையும் தரித்து அவற்றிற்கேற்பத் தலைச்சாத்தணிந்த வேலைக்காரர்கள் சிலர் வரிசையாகக் கைகட்டி வாய்பொத்தி அந்தப்பிரபுவின் முகத்தை நோக்கிக்கொண்டே வணக்கத்துடன் நின்றார்கள். அவர்களைக் கண்டவுடன் உள்ளே நின்று பேசிக் கொண்டிருந்த சேவகன் சரேலென்று வெளியே வந்துவிட்டான்.
இந் நிகழ்ச்சியை வந்து இடைகழியில் நின்று கண்ட தேசிகர் வாயிற்படியின் உட்புறத்தினின்று தெருப்பக்கத்தைப் பார்த்தனர். பார்த்து, ‘யாரோ தக்கவரொருவர் பரிவாரங்களுடன் வந்தது நம்மைப் பார்ப்பதற்கோ? வேறு யாரைப் பார்த்தற்கோ? தெரியவில்லை; எல்லாம் சீக்கிரம் தெரிய வரும். இப்போது இந்தப் பிரபுவினிடம் திடீரென்று நாம் போவது நமக்குக் கெளரவமன்று; அழைத்தாற் போவோம்’ என்றெண்ணி உள்ளே சென்று ஓரிடத்திற் பலகையொன்றில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டேயிருந்தனர்.
அவர் அப்படியிருக்கையில் முன்பு அவரோடு பேசிக்கொண்டிருந்த சேவகன் மீட்டும் மெல்ல உள்ளே சென்றான். தேசிகர் உள்ளே போயிருப்பதையறிந்து அழைக்கலாமோ, ஆகாதோவென்னும் அச்சக் குறிப்பைப் புலப்படுத்திச் சற்று நேரம் அடி ஓசைப்படாமல் நின்றான்; பிறகு கனைத்தான். அப்பொழுது அவர், “ஏன் நிற்கிறீர்?” என்று வினவ, அவன், “எசமானவர்கள் உங்களுடைய சமயத்தைப் பார்த்துவரச் சொன்னார்கள்” என்றான். அவர் மிக்க பரபரப்புடன் எழுந்து நின்று, “உள்ளே அழைத்து வரலாமே” என்றார். அவன், “அவர்கள் இப்போது ஆசௌசமுள்ளவர்களாக இருத்தலால் உள்ளே வரக் கூடவில்லை; திண்ணையிலேயே இருக்கிறார்கள்” என்று மெல்லச் சொன்னான்.
உடனே அவர், “நானே வந்து பார்க்கிறேன்; வருவதனாற் குற்றமில்லை” என்று சொல்லிவிட்டுக் கண்டி முதலியவற்றை அணிந்துகொண்டு வெளியே வந்து பிரபுவைப் பார்த்தனர். அவர் அஞ்சலி செய்து இருக்கும்படி குறிப்பித்தனர். தேசிகர் அப்படியே இருந்து பிரபுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்பொழுது பிரபுவுடன் வந்த ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவரைப் பார்த்து இரகசியமாக தேசிகர், “இவர்கள் யார்? எங்கே வந்தார்கள்?” என்று மெல்லக் கேட்டார். அவர், “எஜமானவர்கள் தென்னாட்டில் ஒரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தாயார் முதலியவர்களோடு சிதம்பர தரிசனத்திற்காக வந்து இவ்வூரில் இறங்கி ஜம்புநாதரையும் தாயுமானவரையும் ரங்கநாதரையும் தரிசனம் பண்ணிக்கொண்டு மூன்று நாளைக்குக் குறையாமல் இங்கே தங்க வேண்டுமென்று கண்டோன்மெண்டிலுள்ள பங்களா ஒன்றில் இருந்தார்கள். அப்படியிருக்கும்போது தாயாரவர்களுக்குச் சுரங்கண்டது. எவ்வளவோ செலவிட்டு வைத்தியர்களைக்கொண்டு தக்க வைத்தியம் செய்தார்கள்; ஒன்றாலுங் குணப்படவில்லை. நேற்று அவர்கள் சிவபதம் அடைந்துவிட்டார்கள். உடனே தகனம் முதலியவற்றை நடத்தினார்கள். தம்முடைய ஊரில் அவர்கள் இறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ மேலாகக் காரியங்களை நடத்தியிருப்பார்கள். என்ன செய்கிறது! எல்லாம் தெய்வச் செயலல்லவோ? நம்முடைய செயலில் என்ன இருக்கிறது! இன்று காலையிற் சஞ்சயனமும் நடந்தது. சில விவரங்களை விசாரிப்பதற்கு நினைந்து தக்கவர்கள் யாரென்று கேட்டபொழுது சிலர் உங்களைப் பற்றிச் சொன்னார்கள். அதனாலே தான் நேரே இங்கு விஜயம் செய்தார்கள். வேண்டிய பதார்த்தம் விலை கொடுத்தாலும் அவ்விடத்தைப் போல இங்கே அகப்பட மாட்டாது. பண்ணிவைக்கக்கூடிய தக்கவர்களும் அவ்விடத்தைப் போலக் கிடைக்க மாட்டார்களென்றும் தோற்றுகிறது. எல்லாம் நேற்றுப் பார்த்துவிட்டோம். அதனாலே இன்று இராத்திரி புறப்பட்டு ஊருக்குப் போய் மேற்காரியங்களையெல்லாம் நடத்த இவர்கள் கருதுகிறார்கள்” என்றார்.
கேட்ட தேசிகர், “இந்த ஊரில் எல்லாப் பொருள்களும் கிடைக்கும்; பணம் மட்டும் இருந்தால் எதுதான் அகப்படாது? இவ்வூரிலுள்ள தச்சர், தட்டார், பாத்திரக் கடைக்காரர் முதலிய எவ்வகையாரையும் நான் அறிவேன்; அபரக்கிரியை செய்தற்கும் தக்க இடம் இருக்கிறது. என் கையிற் பணமட்டும் இல்லையேயன்றிச் சொன்னால் எதுவும் இந்த ஊரில் எனக்கு நடக்கும். ஒரு விதமான யோசனையும் பண்ண வேண்டாம். இவ்விடத்திலேயே செய்து விடுவதாக நிச்சயித்துவிடச் சொல்லுங்கள்” என்று மிகவும் வற்புறுத்திக் கூறினர். கேட்ட அவர், “செலவைப் பற்றி எஜமான் சிறிதும் யோசனை பண்ணவில்லை. பதார்த்தங்களை வாங்கி வருவதற்கும் வேண்டிய பேர்கள் இருக்கிறார்கள். ஸமுகத்திற்கு ஓர் எண்ணமிருக்கிறது. சிவதருமோத்திரமென்று ஒரு புஸ்தகம் இருக்கிறதாம்; இந்த ஸமயம் அதைப் படித்துக் கொண்டே பொழுதுபோக்க வேண்டுமென்பதுதான் அவர்கள் கருத்து. முன்பு பிதா எஜமான் அவர்கள் சிவபதமடைந்த பொழுது கூடச் சில பெரியோர்கள் சொல்லத் தெரிந்து எங்கிருந்தோ வருவித்து அந்த நூலைத்தான் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார்களாம். அது கிரந்தமாக இருந்தால் உதவாதாம்; தமிழாகவே இருக்க வேண்டுமாம்; இதற்காகவே அங்கே போக வேண்டுமாம்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் பின்பு மெல்ல, “இங்கேயே இருந்து முடித்துக்கொண்டு போகலாமே யென்று சிலர் எவ்வளவோ சொல்லியும் காதிலேறவில்லை. இந்தப் புஸ்தகத்தைப் படிக்காமற் போனால் என்ன?” என்று இரகசியமாகச் சொன்னார்.
அப்போது தேசிகர் அந்தப் பிரபுவை நோக்கி, “சிவதருமோத்திரம் என்னிடம் தமிழிலேயே உள்ளது. வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளலாம். உங்களைப் போன்ற பிரபுக்களுக்கல்லாமல் பின்னே வேறு யாருக்குத்தான் கொடுக்கப் போகிறேன்?” என்றனர்.
நின்றவர் உடனே பிரபுவின் நோக்கத்தை அறிந்து வந்து அபரக்கிரியைக்குரிய எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பு எழுதித் தரும்படி அவரைக் கேட்டனர். தேசிகர் உள்ளே இருந்து ஏடு எழுத்தாணிகளைக் கொணர்ந்து விரிவாக ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தனர். “ஊரிற் செய்தால் இன்னும் அதிகச் செலவாகும்” என்று பிரபுவைச் சேர்ந்தவர் சொல்ல, “இவ்வளவு செலவு செய்பவர்களே இந்தப் பக்கத்தில் யாரிருக்கிறார்கள்?” என்று தேசிகர் சொன்னார். கேட்ட பிரபு, “நீங்களே இருந்து எல்லாவற்றையும் நடத்துவிப்பதன்றி வாங்க வேண்டியவற்றையும் உடனிருந்து வாங்கித் தர வேண்டும்” என்று சொல்லி அஞ்சலி செய்து உடனே எழுந்து சென்று வண்டியில் ஏறினர். பக்கத்தில் நின்றவர், “நான் எப்பொழுது வர வேண்டும்?” என்று கேட்கவே, தேசிகர், “கருமாதியின் ஒரு வாரத்திற்குமுன் வந்தாற் போதும்; பரிஷ்காரமாக எல்லாவற்றையும் வாங்கிவிடலாம்” என்று சொல்லி வேகமாகச் சென்று பிரபுவை நோக்கி, “க்ஷணம் தாமஸிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்ச் சிவதருமோத்திர ஏட்டுப் பிரதியை எடுத்து வந்து அவர் கையிற் கொடுத்து, “இந்தப் புஸ்தகத்தை முன்னமே கொடாததற்காக க்ஷமிக்க வேண்டும்; தங்களைப் போன்றவர்களுடைய பழக்கம் எனக்குப் பெரிதேயல்லாமல் இந்தப் புஸ்தகம் பெரிதன்று. குறிப்பறிந்து உபகரிக்கும் மகாப்ரபுவாகிய தங்களுக்கு என்போலியர்கள் தெரிவிக்க வேண்டியது என்ன இருக்கிறது?” என்று வண்டியைப் பிடித்துக்கொண்டே நின்று சொல்ல அந்தப் பிரபு, ”எல்லாந் தெரிந்துகொண்டோம்; அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை” என்று சொல்லி ஐந்து ரூபாயை அவரிடம் சேர்ப்பித்தார். வண்டி அதிக வேகமாகச் சென்றது. நின்றவர்கள் வண்டியின் முன்னும் பின்னுமாக ஓடினார்கள். இக் காட்சிகளை யெல்லாம் பார்த்த தேசிகர் மிக்க மகிழ்ச்சியுடையவராகி வீட்டுக்குள்ளே சென்றனர்.
ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். இவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? வீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாது போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புஸ்தக முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதிசெய்துகொண்டு என்னிடம் கொடுத்து விடக்கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதி செய்வது ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். இவர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு தம்மிடம் அப்பொழுது படித்துவந்த மாணாக்கர்களிடத்தும் நண்பர்களிடத்தும் பத்துப்பத்து ஏடாகக் கொடுத்து ஒரு வாரத்துள் எழுதித்தர வேண்டுமென்று சொல்லி, எஞ்சிய ஏடுகளைத் தாம் கைக்கொண்டு எழுதுவாராயினர். ஏழு தினத்துள் புஸ்தகம் எழுதி முடிந்தது. எட்டாவது தினத்தில் ஒப்பிட்டுக்கொண்டு சுவடியைச் சுந்தரம் பிள்ளைக்கு அனுப்பி விட்டார். அப்பாற் சிவதருமோத்திரத்தைப் படித்துத் தணிகைப் புராணப் பகுதியிலுள்ள அரிய விஷயங்களை இவர் அறிந்து தெளிந்தனர்.
முன்பு சேவகவேடம் பூண்டவராகிய ஒரு நண்பரிடம் சுந்தரம்பிள்ளை சிவதருமோத்திரப் பிரதியையும் ஒரு பவுனையும் கொடுத்து அவற்றை அத்தேசிகரிடம் சேர்ப்பித்துவரும்படி சொல்லியனுப்பினர். அவர் சென்று தேசிகரைக் காணவே அவர் மகிழ்வுற்று, “வரவேண்டும், வரவேண்டும்!” என்று கூறி வரவேற்றனர். சேவக வேடம் பூண்டவர் பவுனையும் சுவடியையும், அவர் கையிற் கொடுத்துவிட்டு, “ஊரிலேயே போய்த்தான் கருமாதி செய்ய வேண்டுமென்று உடனிருந்த பந்துக்கள் வற்புறுத்தினர். அதனால் எல்லாரோடும் புறப்பட்டு எசமானவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகக் கூடவில்லையேயென்று அவர்கள் வருத்தமுற்றார்கள். சீக்கிரத்தில் உங்களை அவ்விடத்துக்கு வருவிப்பார்களென்று எனக்குத் தோற்றுகிறது” என்று சொல்லி அஞ்சலி செய்து போய்விட்டார். தேசிகர் அதனைக் கேட்டு முதலில் வருத்தமுற்றாராயினும் பவுன் கிடைத்ததை நினைந்து சிறிது சமாதானமடைந்தார்.
பிள்ளையவர்கள் அப்பால் வேறொருவரால் நிகழ்ந்தவற்றை யெல்லாம் அறிந்து வியப்புற்றுச் சுந்தரம்பிள்ளையின் அன்புடைமையை எண்ணி மகிழ்ந்தார்.
தாம் செய்த இந்தத் தந்திரத்தைக் குறித்துப் பிள்ளையவர்கள் என்ன சொல்வார்களோவென்று அஞ்சிச் சுந்தரம்பிள்ளை சில தினங்கள் வாராமலே இருந்து விட்டார். அது தெரிந்த இவர் வர வேண்டுமென்று வற்புறுத்திச் சொல்லியனுப்பினார். அப்பால் சுந்தரம்பிள்ளை வந்தார். இவர் அவரை நோக்கி, “என்ன அப்பா! இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டபொழுது அவர், “‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்னும் திருக்குறளை அனுசரித்து அடியேன் நடந்தேன். இதனால் யாருக்கும் ஒருவிதமான துன்பமும் இல்லையே. ஏதோ செய்தேன். அச்செயல் ஐயாவுக்குக் குற்றமாகத் தோற்றினாற் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினர்.
சுந்தரம்பிள்ளையின்பால் இவருக்கிருந்த அன்பு
இதனால் மாணாக்கர்களுக்கு இவர்பால் உள்ள உண்மையான அன்பு புலப்படும். பிள்ளையவர்கள் தம்முடைய 58-ஆவது பிராயமாகிய ஆங்கிரஸ வருஷத்திற் கும்பகோணத்தில் ஒரு சபையில் நாகபட்டின புராணத்திலுள்ள சில பாடல்களுக்குப் பொருள் கூறி வருகையில் அவற்றிலுள்ள சில விஷயங்களைப் பற்றித் தியாகராச செட்டியார் ஆட்சேபித்தார்; சற்றே கடுமையாகவும் பேசினார். பேசிவிட்டு அவர் போனபொழுது அருகில் இருந்தவர்களிடம் பிள்ளையவர்கள், “சுந்தரம்பிள்ளை உயிரோடிருந்தால் தியாகராசு இவ்வளவு கடுமையாக என்னை நோக்கிப் பேசுவானா? அவன் சும்மா விட்டுவிடுவானா?” என்று சொன்னார். இவருடைய மாணாக்கர்களுள் ஒப்புயர்வற்ற அன்பினரென்று எல்லோராலும் கருதப்பெற்றிருக்கும் தியாகராச செட்டியாரையே தாழ்த்திச் சுந்தரம்பிள்ளையை உயர்த்திச் சொன்னாரென்றால் அந்தச் சுந்தரம் பிள்ளையினுடைய குருபக்தி யாராற் சொல்லுந் தரத்தது? அவருடைய ஞாபகம் இவருக்கு அடிக்கடி உண்டாகும். அவரைப் பற்றிப் பிற்காலத்திற் பலமுறை சொல்லியிருக்கின்றனர். அவருக்கு இந்த விசேடம் அமைந்திருந்தும் ஆயுளின் குறை நேர்ந்ததைப்பற்றியும் எல்லோரும் பார்க்கக்கூடாமற் போனதைப் பற்றியும் பிற்காலத்து மாணாக்கர்களுக்கெல்லாம் உண்டான வருத்தம் அதிகமே.
$$$