-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
86. அடிமுடி காணவொண்ணா அண்ணல்
.
பூஜாத்ரவ்ய ஸம்ருத்தயோ விரசிதா: பூஜாம் கதம் குர்மஹே
பக்ஷித்வம் ந ச வா கிடித்வமபி ந ப்ராப்தம் மயா துர்லபம்/
ஜானே மஸ்தக- மங்க்ரிபல்லவ- முமாஜானே ந தேsஹம் விபோ
ந ஜ்ஞாதம் ஹி பிதாமஹேன ஹரிணா தத்வேன தத்ரூபிணா//
.
கடல்போலும் பூசைப்பொருள் பூசனைதான் எவ்விதமே?
பறவையோ பன்றியோ ஆவதற்கு வழியில்லேன்
நிறையோனே நின்முடியும் திருவடியும் நானறியேன்
பதுமனும் படுத்தோனும் அவ்வுருவிலும் அறிகிலையே!
.
அனைத்திற்கும் அடித்தளமாகிய ஆதியாகவும், அனைத்தின் முடிவாகிய பூரணமாகவும் சிவபெருமான் இருக்கிறார். ஆதியும் அந்தமுமாய் உள்ள அந்தப் பரம்பொருளின் அடியையும், முடியையும் யார்தான் காண வல்லார்? அனைத்துமாய் விளங்கும் அந்தப் பிரும்மாண்டப் பரம்பொருளை, அதன் ஒரு துளியாய் இருக்கும் நாம் அளப்பது எங்ஙனம்? இதற்கு முதல் ஸ்லோகத்தில், சிவபெருமானுக்கு எப்படி பூஜைப் பொருள்களை சேகரிப்பது என்று வியந்த ஸ்ரீ ஆதிசங்கரர், அப்படியே கஷ்டப்பட்டு சேகரித்தாலும்கூட, எங்கும் வியாபித்திருக்கின்ற அந்தப் பரம்பொருளுக்கு எவ்விதம் பூஜை செய்வது என்று இந்த ஸ்லோகத்தில் மலைக்கிறார்.
கடல்போல் பூசனைப் பொருட்கள் குவியல் குவியலாகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு எப்படி பூஜை செய்வது? அவரது திருப்பாதங்களையும், திருமுடியையும் காணவியலாததால் எப்படி அவருக்கு நிறைவான பூஜையை செய்ய இயலும்?
.பிரும்மா அன்னப் பறவை வடிவெடுத்து பரம்பொருளின் முடியைக் காணவும், பெருமாள் பன்றி உருவெடுத்து பரமேஸ்வரனின் திருவடியைக் காணவும் முயன்றார்கள். அவர்களுக்கே முடியும் அடியும் தெரியவில்லை. பதுமத்தில் (தாமரையில்) வீற்றிருக்கும் பிரும்மனைப்போல அன்னப் பறவையாக வடிவெடுக்கவோ, பாம்பணையில் படுத்திருக்கும் திருமாலைப்போல் பன்றி உருவெடுக்கவோ எனக்கு சக்தியில்லை. அப்படிப்பட்ட மாபெரும் சக்தி படைத்திருந்தபோதிலும் அவர்கள் இருவராலும், சிவபெருமானே உமது அடி முடியைக் காண இயலவில்லை. நான் எப்படிக் காண முடியும்? ஆகையால் உமக்கு நிறைவான பூஜையை எவ்வாறு செய்ய இயலும்? என்று கேட்கிறார்.
$$$