கவி அரவிந்தரும் பத்திரிகையாளர் அரவிந்தரும்

-திருநின்றவூர் ரவிகுமார்

கவி அரவிந்தர்

ஆரம்பத்தில் மனிதன் மின்னலையும் இடியையும் மழையையும் ஆழ்ந்து விரிந்த நதியையும் கண்டு பயந்தான். அவற்றை துதித்தான். அவ்வாறான துதி பாடல்களே வேதங்கள் என்று மூடர்கள் பேசுவதை கேட்டிருக்கலாம். நம் முன்னோர்கள் அஞ்சவில்லை. இயற்கையை புரிந்து கொண்டனர். வியந்தனர். அதை வெளிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட வழி கவித்துவமானது.

ரிஷி மரபு

வேத ரிஷிகள் ஞானிகள் மட்டுமல்ல கவிஞர்களும் கூட. ரிஷி மரபில் வந்த ஸ்ரீ அரவிந்த மகரிஷியும் படைப்பாற்றல் மிக்க கவிஞர்தான். இதை

 “கீழை ஞானத்தின் மேன்மையையும் ஐரோப்பிய அறிவையும் பொருத்தமாக இணைத்து பரிபூரணமாக்கிய மகான் ஸ்ரீ அரவிந்தர். பாரத ரிஷிகளின் பரம்பரையில் கடைசியாக வந்த அவர், படைப்பாற்றல் என்னும் வில்லை தன் கரத்தில் உறுதியாக பிடித்துள்ளார்”

-என்கிறார் ரொமெயின் ரோலந்து என்ற ஜெர்மானிய அறிஞர்.

இதை வேறுவிதமாகச் சொல்கிறார் துவிஜேந்திர குமார் ராய் என்ற வங்கமொழி இலக்கியவாதி. அரவிந்தர் இந்தியத் தொடர்பே இல்லாமல் ஆங்கிலச் சூழ்நிலையில் இங்கிலாந்தில் வளர்ந்து, பின்பு பாரதம் திரும்பிய போது அவருக்கு வங்கமொழி கற்பித்தவர் திரு. ராய்.

 “ஸ்ரீ அரவிந்தர் இவ்வுலகை சார்ந்தவர் அல்லர். அவர் ஏதோ சாபத்தால் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கிவந்த ஒரு தேவனாக இருக்கலாம்”

-என்பது அவர் அரவிந்தர் பற்றிக் கூறிய பல விஷயங்களில் ஒன்று.

ஊற்றுக்கண்

அரவிந்தருக்கு ஐந்து வயதானபோது டார்ஜிலிங்கில் இருந்த ஐரோப்பிய குழந்தைகளுக்கான லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அப்போது அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்து அரவிந்தருக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்,

“அரவிந்தர் எப்போதும் தன் பாடங்களை கணநேரத்தில் முழுமையாகக் கற்று விடுவார். அவரது விழிகள் தீர்க்கமாக இருக்கும். உறுதியும் சிந்தனை வயப்பட்டதாகவும் அவரது பார்வை இருக்கும். அவை எதிர்காலத்தை உற்று நோக்குவது போல் தோன்றும். அவரது உள்ளமோ இனிமையும் அமைதியும் அன்பும் நிறைந்ததாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் சிறந்த மாணவராகவும், எல்லோராலும் பாராட்டப்படுபவராகவும் அவர் இருந்தார்” 

-என்று பின்னாளில் நினைவு கூர்ந்தார் என, அரவிந்தர் பற்றி திரு. பலித் எழுதிய நூலில் உள்ளது.

அரவிந்தரின் ஏழாம் வயதிலேயே அவரது சகோதரர்களுடன் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டார். தம் பிள்ளைகள் பண்பாடு, நடத்தை, கல்வி ஆகியவற்றில் முற்றிலும் ஆங்கில மயமாகவே இருக்க வேண்டும். இந்தியத் தொடர்பு எந்த வகையிலும் இருக்கக் கூடாது என்று, அவரது தந்தையார் விரும்பினார். ஆங்கில நாகரிகத்தின் மீது அவருக்கிருந்த மோக வெறியால் அவ்வாறு செய்தார். ஆனால் அவர் அதில் பரிதாபமாக தோற்றுப் போனார் என்பதை, அவர் வாழ்நாளின் கடைசிக் காலத்தில் அரவிந்தருக்கு எழுதிய கடிதங்களும் அரவிந்தரின் வாழ்க்கையையும் சான்றாக விளங்குகின்றன.

மொழியறிவு

மான்செஸ்டரில் திருமதி ட்ருயெட் வீட்டில் இருந்தபோதே அரவிந்தர் லத்தீன் மொழியைக் கற்றார். திருமதி ட்ருயெட் லத்தீன், பிரெஞ்ச் மொழி வல்லுனர். பிறகு அவரிடமிருந்தே பிரெஞ்சு மொழியையும் கற்றார். பத்து வயதிலேயே அரவிந்தர் கவிதை எழுத ஆரம்பித்தார். அவரது கவிதைகள் மான்செஸ்டர் நகரில் இருந்த  ‘பாக்ஸ் பேமிலி மேகசின்’ என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளன. அந்தக் காலத்தில் அவருடைய நண்பர்களாக ஆஸ்கார் வைல்டு, லாரன்ஸ் பின்யோன் ஆகியோர் இருந்தனர்.

பின்னர் லண்டனில் இருந்த செயின்ட் பால் கல்லூரியில் சேர்ந்தபோது கிரேக்க மொழியைக் கற்றார். கல்லூரி படிப்புக்கு அவருக்கு நல்கை கிடைத்தது மட்டுமல்ல, அங்கு பல பரிசுகளையும் பெற்றார். லத்தீன், கிரேக்க மொழிக்கான பரிசுகள் அனைத்தும் அரவிந்தருக்குக் கிடைத்தன. இது அவரது ஆசிரியர்கள், சக மாணவர்கள் இடையே வியப்பையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.

மொழியறிவும் பண்பாட்டு அறிவும்

அதுபற்றி அவரது பேராசிரியரும் பல்கலைக்கழக செனட் உறுப்பினருமான ஜி.டபிள்யூ.பிராதிரோ, தனது நண்பரும் அரவிந்தரின் நலம் விரும்பியான ஜேம்ஸ் கார்டனுக்கு எழுதிய கடிதத்தில்,

 “லத்தீன், கிரேக்க மொழியில் வல்லவராக இருக்கிறார். ஆங்கில மொழியில் பேசவும் எழுதவும் அவருக்கு இருக்கும் புலமை, இலக்கிய விஷயங்களில், அவற்றை விளக்குவதில், அவருக்கு இருக்கும் மதிநுட்பம் அபாரமானது. இலக்கியத்தில் திறன் வாய்ந்த பல இளம் ஆங்கிலேயர்களையும் விட மிகச்சிறந்த ஆங்கிலத்தில் அரவிந்தர் எழுதுகிறார்”

-என்று குறிப்பிட்டதிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

கிரேக்க, லத்தீன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளின் மூலமாக அவர் ஐரோப்பியப் பண்பாட்டையும் அதன் வேர்களையும் தெரிந்துகொண்டார். பாரதம் வந்த பிறகு சம்ஸ்கிருதம், வங்க மொழியைக் கற்று அதன்மூலம் இந்துப் பண்பாட்டை தெளிவாகப் புரிந்து கொண்டார். உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்ட ஹிந்து ஞானத்தை தர்க்க ரீதியாகவும் ஐரோப்பிய அணுகு முறையைப் பின்பற்றியும் அவரால் வெளிப்படுத்த முடிந்தது. இதையே ரொமெயின் ரோலந்து குறிப்பிட்டார்.

விடுதலைக் கவி

லண்டனில் அவர் இருந்தபோது உலகெங்கும் எழுந்த விடுதலை வேட்கை, புரட்சிகள் பற்றி செய்திகள் வந்தபோது, தானும் அதில் பங்காற்ற வேண்டியுள்ளதை அரவிந்தர் புரிந்து கொண்டார். பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட வேண்டும் என அவர் ஆழமாகவும் உறுதியாகவும் நம்பி இருந்தார். இது ஐரிஸ் விடுதலை போராளியான சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னெல் என்பவரின் நினைவாஞ்சலியாக அரவிந்தர் எழுதிய கவிதையே சாட்சி கூறுகிறது.

இருள் சூழும் வேளையில்
வழிகாட்ட வந்த ஒளியே,
இன்று வானினின்று
அகற்றப்பட்ட விண்மீனே,
அண்மையில்தான்
விடுதலை வீரனென
முகமன் கூறப்பட்டாய்.
நம் பிரபுக்கள் உன்னைக் கண்டு
மிக மிக அஞ்சினர்.
அச்சத்தால்
மிக மிக வெறுத்தனர். 
வாளைவிட மிகக் கூரிய
சொற்களால் நீங்கள்
அவர்களைத் தாக்கினீர்கள். 
நீங்களும் அப்போது
இந்த அவலப் புவியின்
குழந்தையாய் இருந்தீர்கள்.

1891இல் இந்த கவிதை எழுதப்பட்டபோது அரவிந்தருக்கு வயது பத்தொன்பது!

1893ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேற்குலகின் மீது பேரிடியாக தாக்கத்தை ஏற்படுத்திய ஹிந்துத் துறவி சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றது அந்த ஆண்டுதான். அதே ஆண்டில் தான் ஆங்கில ஐரோப்பிய நாகரிகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட அரவிந்தர் பாரதம் வந்தார்.

 “எதையும் பகுத்துப் பகுத்து ஆராய்பவர் விஞ்ஞானி; அதைப் போலவே தத்துவ ஞானி, வேறுபாடுகளைக் காணும் சிந்தனை உள்ளவர்; அக விழியால் காண்பது கவிக்கு இயல்பாக அமைந்ததோர் ஆற்றல்” என்கிறார் மனோஜ் தாஸ். இவர் அரவிந்தரின் சீடர் மட்டுமல்ல அவரை ஒரு கவிஞராக வரையறுக்க முயற்சித்தவர்.

சாரமானதாகவும் உலகம் முழுவதற்குமானதாகவும் காவியமும் கவிதையும் இருக்க வேண்டும். அது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படுவதாக, தீவிரமானதாக இருக்க வேண்டும். அது புலன்கள், மனம், வாழ்க்கை ஆகியவற்றில் ஊடுருவி மகத்தான விரிவை அளிப்பதாக இருக்க வேண்டும்.

-என்று அரவிந்தர் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதை,  கவிதை, காவியம் பற்றிய அவரது பார்வையாகக் கொள்ளலாம்.

ஆன்மிகக் கவி

 “நான் பம்பாயில் பாரத மண்ணில் அடி எடுத்து வைத்தது முதல் எனக்கு ஆன்மிக அனுபவங்கள் ஏற்பட ஆரம்பித்தன. ஆனால் அவை இவ்வுலகிலிருந்து தொடர்புகளை அறுப்பவையல்ல. மாறாக உள்ளார்ந்த தொடர்பை ஏற்படுத்துவதாக இருந்தன... 

அண்டவெளியில் ஊடுருவிப் பரந்திருக்கும் எல்லையற்ற பரம்பொருள் ஒன்றுள்ளது. அது தன் படைப்பு முழுவதிலும் பரவி உள்ளது. அது உயிர்ப் பொருள்களில் மட்டுமல்ல ஜடப் பொருள்களிலும் குடியிருக்கிறது...

எனது ஆன்மிக அனுபவங்களில் நான் இதை உணர்ந்தது மட்டுமல்ல, இச்சட உணர்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், அதன் விளைவுகளை காணவும் முடிந்தது. இந்த பூதவுலகம் கடந்த சூட்சும உலகிலும், அதைச் சார்ந்த ஞான உலகங்களிலும் நான் நுழைய கண்டேன்”

-என்று அரவிந்தர் தன் சீடருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதை அற்புதமாக விளக்குகின்றன அவர் எழுதிய  ‘சானெட்’ வகை சார்ந்த கவிதை. அவர் காஷ்மீரம் சென்றபோது அங்குள்ள சங்கராச்சாரியார் குன்றுக்குச் சென்றார். அதன் அருகில் உள்ள ஒரு பழமையான அம்மன் கோயிலைக் கண்டார். தேவியை வணங்கினார். அதுபற்றி  ‘கல்லில் உறையும் தேவி’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையின் சாரம் இது:

தேவர்களின் ஒரு நகரில், ஒரு சிறிய கோயிலில், செதுக்கப்பட்ட உறுப்புகளில் இருந்து பரமன் என்னை நோக்கினான். சாக்காடற்ற தெய்வீகமான, ஜீவனுள்ள திருமுன்பு அவன்;  முடிவுற்றது எல்லாவற்றையும் தன்னுள் கொண்டதொரு வடிவம் உடையவன் அவன். 

உலகப் பேரன்னை அவள். அவளுடைய திருவுள்ள கருத்து வலிமை மிக்கது. இரண்டுமே உலகின் ஆழ்ந்த தூக்கத்தில் குடியிருந்தன. குரலற்ற, சர்வசக்தி வாய்ந்த, ஆராய்ந்து அறியக்கூடாத அவள், பாலைவனத்திலும், கானத்திலும், கடலின் ஆழத்திலும் உள்ள அவள் பேசாமடந்தை ஆகவும் இருந்தாள். 

இப்போது மனம் என்னும் திரையினுள் வசிக்கும் அவள் ஒரு சொல் கூட பேசுவதில்லை. குரலற்றவளும் ஆராய்ந்து அறிய முடியாதவளும், அகிலமும் அறிந்தவளாயும் உள்ள அவள், தன் விசித்திரமான உடம்போடு கூடிய உருவத்தின் ரகசியத்தை நம் ஆன்மா கண்டு கேட்கின்ற வரையில் மறைத்து கொண்டே இருப்பாள். 

வழிபடும் பக்தனிடமும் அசையா வடிவிலும் உறைபவள் அவள் ஒருத்தியே. அழகும் விளங்கா மெய்மையும் உடையவள் அவள். கல்லிலோ உடலியோ அவளைத் துணியால் மூடி ஒப்பனை செய்யக்கூடும்.

‘சாவித்திரி’ என்ற அவரது சிறிய கவிதைக் காப்பியத்தில் வரும் ஒரு சிறுபகுதி, மேற்கண்ட அரவிந்தரின் கடிதத்தின் கருத்தை நிறைவு செய்வதைக் காணலாம்:

புவியே வலிமை மிக மிகுந்த ஆன்மாக்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடமாகும். புவியே வீரம் மிகுந்தவர்களின் போர்க்களமாகும். பெயர்பெற்ற கொல்லர் தன் வேலைப்பாடுகளை உருப்படுத்தும் உலைக்களம்.

ஸ்ரீ அரவிந்தர் அறிவு கடந்த மெய்யுணர்வு உடைய ஒரு கவி என்று மனோஜ் தாஸின் கூற்று உண்மையானது தான்.

புரட்சிக் கவி

ராதை தன் காதலை கிருஷ்ணனிடம் கூறுகிறாள். அதை ஏற்கவில்லை அவன். அதனால் கோபம் அடைந்த ராதை அவனுக்கு பதிலடி கொடுக்கிறாள்.

“பிரஜாவின் பெண்களுக்கு உவகை அளிக்கும் நந்தகுமாரனைப் போல நான் இறந்து மீண்டும் பிறப்பேன். அப்போது நான் உன்னை அழகிய சுருள் மயிர் அமைந்த, புன்னகை செய்யும் முகத்தை உடைய ராதையாக ஆக்குவேன்.

பின் உன்னை காதலிப்பேன், பின் விட்டுவிடுவேன். காலையிலும் மாலையிலும் தண்ணீர் கொண்டுவர கடம்பின் கிளைகளின் கீழ் செல்லுகையில் மரத்தின் மீது சாய்ந்து கொண்டே புல்லாங்குழலில் இனிது இசைப்பேன்.”

இக்காலத்தில் பெண்ணியம் பேசுவோருக்கு அரவிந்தரின் இந்தk கவிதை ஆச்சரியம் அளிக்கலாம்.

அரவிந்தர் கவிஞர் மட்டுமல்ல, பல கவிஞர்களின் கவிதைகளையும் காவியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். வைணவக் கவி வித்யாபதி என்பவரால் மைதிலி மொழியில் எழுதப்பட்ட ராதை பற்றிய கவிதையை அரவிந்தர் மொழியில் பாருங்கள்:

விளையாடினும் விளையாடாள்.
அவள் மிகப் புதியவள்
போல் வெட்கப்படுகிறாள்.
தற்செயலான பார்வையும்
தாங்கள் பார்த்தும் பார்க்காள்.
ஊகித்து ஐயுறக் கூடாதென்று
தன் தோழியின் கண்களிலிருந்து
புன்னகை செய்கிறாள்.
மாதவா என்னைக் கேள்,
என்னைக் கேள்,
நான் உன்னிடம் கொண்டுவரும்
வழக்கு நியாயமானது.
இன்று ராதை
இக்கண்களை
பார்த்துவிட்டாள்.
ஈடு இணையற்ற
கன்னி அவள்.

 ‘யான் நோக்கும்கால் நிலம் நோக்கும் நோக்காகால்
தான் நோக்கி மெல்ல நகும்’

என்ற தெய்வத் தமிழ்ப் புலவரின் வாக்கு (குறள்- 1094) இங்கு நினைவு கூரத்தக்கது.

காளிதாசனின் மேகதூதத்தையும் விக்ரமோர்வசியத்தையும், பர்த்ருஹரியின் நீதி சதகத்தையும் சமஸ்கிருத மொழியிலிருந்து ஆங்கிலப்படுத்தியுள்ளார் அரவிந்தர்.

இலக்கியக் கவி

அரவிந்தர் பாரதம் வந்தவுடன் பரோடா சமஸ்தானத்தில் நிர்வாக அதிகாரியாக சில காலமும், பின்னர் பரோடா கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்போது அவர் எழுதியதுதான் ‘ஊர்வசி’ . ரிக் வேதத்தில் வரும் அழகியை காளிதாசன் புதிதாகப் படைத்தார். அதிலிருந்து எழுச்சி பெற்று எழுந்ததுதான் அரவிந்தரின் ஊர்வசி என்ற நீண்ட கவிதை.

கதை இதுதான்…

தேவலோகத்திற்குச் சென்று வரக்கூடிய அளவிற்கு வலிமையும் செல்வாக்கும் உள்ள பூவுலக மன்னன் புரூரவசு. தேவலோக அழகியான ஊர்வசியை காய்ஷி என்ற ஒரு அரக்கன் கடத்திச் சென்று விடுகிறான். தேவர்களால் அவளை மீட்க முடியாமல் புரூரவசு வின் உதவியைக் கோருகிறார்கள். அவன் அரக்கனை வென்று அவளை மீட்கிறான். இருவரும் காதல் வயப்பட்டு பூவுலகில் ஆனந்தமாக வாழ்கிறார்கள். தேவலோகப் பணி காரணமாக அவள் அவனைப் பிரிந்து மீண்டும் செல்கிறாள்.

 ‘காம்பின்றி தானே மலர்ந்த மலர்’ என்று இதில் ஊர்வசியை வர்ணிக்கிறார் அரவிந்தர். அரக்கனை வென்ற பின்  ஊர்வசியைக் காண்கிறான் அரசன்.

 “அவள் விழுந்த படியே கிடந்தாள். முரட்டுத்தனமாகக் கையாளப்பட்ட, தூய வெண்ணிறமும் பளபளப்புமான அல்லிமலர் போல... 

வழவழப்பும் பளபளப்புமான மேலாடையில் இருந்து பளிச்சிட்டது ஒரு தோள். பொன்னிறமாகவும் நிர்மால்யமாகவும் இருந்த அவள் மார்பு தெய்வீகப் பொலிவுடன் வீங்கியெழுந்தும் வெளிப்பட்டது.

ஒரு பொற்கரம் வீசி எறியப்பட்டிருந்தது. அவளுடைய முகம் வெண் பனியிடையே விழுந்த சந்திரனைப் போல் விளங்கியது”

-என்று வர்ணிக்கிறார் அரவிந்தர். இருவரும் காதலில் இணையும் காட்சி ரசமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இருவரும் கூடி இணைந்த கட்டத்தோடு கவிதை இப்படி முடிகிறது:

 “காதலர்கள் இப்புவியை அடியோடு துறந்து விட்டனர். ஆயினும், கீழே தொலைவிடத்தில் மோனம் நிறைந்ததும் வல்லமை வாய்ந்ததுமான அண்டவெளியின் ஊடே பசுமை நிறைந்ததும், விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் கூடியதுமான இப்பூமி இடைவிடாமல் சுழன்று கொண்டுதான் வருகின்றது.”

இது புராணக் காதல் கதையாக இருந்தாலும், இறுதிவரி அன்பே உலகை இயக்குகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பரோடா பணிக் காலத்தில் அவர் எழுதிய மற்றொரு நீண்ட கவிதை ‘காதலும் சாதலும்’. தலைவன் ருரு;  தலைவி பிரியம்வதா. இன்ப வாழ்வில் திடீரென்று பாம்பு தீண்டி அவள் இறந்து போகிறாள். ருரு காதல் தெய்வத்தின் உதவியைப் பெற்று பல பயங்கரமான பாதாள உலகங்களை எல்லாம் கடந்து, எமன் உலகுக்குச் செல்கிறான். எமன் விதிக்கும் நிபந்தனையின்படி தன் ஆயுளில் பாதியை அவளுக்குக் கொடுத்து அவளை மீட்கிறான்.

இந்த நீண்ட கவிதையை ‘ஆதி குடிமக்களின் விடுதலை கீதம்’ என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அம்மக்கள் சமயக் கொள்கைகள், அரசியல், பலவிதமான நிறுவனங்கள் ஆகிய கட்டுகள் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்தார்கள் என்கிறது கவிதை…

 “அக்காலத்தில் இப்புவி உயிரோட்டம் உடையதாகவும் நுண்ணுணர்வு கொண்டதாகவும் இருந்தது. புதியதாகவும் பழக்கப்படாததாயும் இருந்தது. இப்புவி அன்னையின் சமவெளிகளை சுதந்திரமாகவும் கோட்டை கொத்தளங்கள் இன்றி கைக் கொண்டிருந்தனர் ஓர் இனத்தவர். அவர்கள் உள்ளம் எந்தவிதமான கட்டுப்பாடுகளினாலும் இறுக்கிப் பிணைக்கப்படவில்லை. பேரொளி தமக்குள் ஊடுருவுவதற்கு ஏற்ற விதமாக அவர்கள் இணங்கி வாழ்ந்தார்கள்.”

 ‘காதலும் சாதலும்’ என்ற நீண்ட கவிதையின் இறுதி வரி இப்படி முடிகிறது:

 “புவி அன்னை தன் குழந்தைகளைப் பற்றி பெரிதும் மகிழ்ந்து இருந்தாள். குயிலின் குரல் உலகின் விடியலில் தொடர்ந்து கேட்டது.”

அன்பே உலகை இயக்குகிறது என்கிறாள் ‘ஊர்வசி’. அன்பு மரணத்தையும் வெல்லும் என்கிறது  ‘காதலும் சாதலும்’ . அரவிந்தரின் தத்துவ கவிதா காவியமான ‘சாவித்திரி’யும் புராணக் கதைக்கு புதியதொரு ஒளியையும், அன்பினாலே எமனின் எதோச்சதிகாரத்தை வெல்ல முடியும் என்பதையும் நிறுவுகிறது.

பின்குறிப்பு: 

அரவிந்தரின் கவிதைகள் மற்றும்  அதன் சாரத்தின் மொழிபெயர்ப்பு, அவரது சீடரான திரு. பி.கோதண்டராமன்.

$$$

பத்திரிகையாளர் அரவிந்தர்

தேச விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதியவர்கள் – முதலாளித்துவ, மார்க்சிய, மதச்சார்பற்ற அறிவுஜீவிக் குழுக்கள் – பாரதம் ஒரே தேசமா என்றும் தேசியம் பற்றியும் கேள்வி எழுப்புகிறார்கள். தேசம், தேசியம் குறித்து அரவிந்தர், திலகர், சாவர்க்கர், பங்கிம் சந்திரர், வ.உ.சி, மகாகவி பாரதி, பிபின் சந்திர பாலர் போன்றோர் எழுதியுள்ள கருத்துகளை வெளிச்சத்துக்கு வராதபடி தடுத்தும் விடுகிறார்கள் அவர்கள்.

மகரிஷி அரவிந்தரின் எழுத்துகள் வாளைவிடக் கூர்மையானவை என்று ‘வந்தேமாதரமும் இந்திய தேசியமும்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரம் என்பது சந்தையில் பொருள் வாங்குவது போல எளிதானது அல்ல. அது வலிமையினால் ஆங்கிலேயரிடமிருந்து பறிக்க வேண்டியது என்பதை ‘வந்தே மாதரம்’ என்ற பத்திரிகை மூலம் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தார் அரவிந்தர். அதற்கு அவருக்குத் தேவைப்பட்டது இரண்டே ஆண்டுகள்.

‘வந்தே மாதரம்’ என்ற பெயரில் பிபின் சந்திர பாலர் ஒரு நாளேட்டை ஆகஸ்ட் 1906 (7-8- 1906) இல் துவங்கினர். இந்த நாளேடுடன் ஜூலை 1907 (2-7-1907) முதல் வார இதழும் வெளியானது. இரண்டும் 1908 அக்டோபரில் (29-10- 1908) நின்றுவிட்டது.

அரவிந்தர் பத்திரிகையில் கட்டுரை எழுதும் பணியை முதன்முதலில் தொடங்கியது 1893 இல். மும்பையிலிருந்து வெளியான ‘ஹிந்து பிரகாஷ்’ என்ற வாரப் பத்திரிகையில் அவர் எழுதத் தொடங்கினார். அதற்கு முன் அவரது கவிதைகள் இங்கிலாந்து பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. ‘பாரதமும் பிரிட்டிஷ் பாராளுமன்றமும்’ என்பது அவர் ஹிந்து பிரகாஷில் எழுதிய முதல் கட்டுரை. அது வெளிவந்தது 26 ஜூன் 1893.

‘வந்தே மாதர’த்தை பிபின் சந்திர பாலர் துவங்கியபோது, அரவிந்தர் பரோடாவிலிருந்து நீங்கி கொல்கத்தா வந்து, அதில் இணை ஆசிரியராகச் சேர்ந்தார். அதன்மூலம் விடுதலைக் கனலை கொழுந்தெழச் செய்தார். அதைப் படித்த அனைவரின் மனதிலும் ‘நீங்கள் இந்தியரா அல்லது பிரிட்டிஷ் ஆதரவாளரா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை ஆசிரியர் கூறுகிறார்: ‘அரவிந்தர் வந்தேமாதரத்தில் எழுதியுள்ள கட்டுரைகளின் ஒவ்வொரு வாக்கியமும் ராஜத்துரோகம்தான். ஆனால் அது வெளிப்படையாக தெரியாதபடி எழுதியது அவருடைய சாமர்த்தியம்’. ஆங்கிலேயரான அவர் பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில், ‘நாடு முழுக்க பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அலை வீசுவதற்கு பின்னணிக் காரணம் அரவிந்தர்தான்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுவாக, அந்தக் காலத்தில், வங்காளிகள் பலவீனமானவர்கள், பயந்தாங்கொள்ளிகள் என்று கருதப்பட்டனர். அதனால்தான் வங்காளிகளின் போராட்டத்தைப் பற்றி எழுதிய மெக்காலே பிரபு, ‘வெறிகொண்ட ஓநாய்க்கு எதிராக ஆடுகளின் கூட்டம்’ என்று ஏளனமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த நிலையை எரிமலையாக மாற்றியன அரவிந்தரின் எழுத்துக்கள். ஆங்கில அரசு அச்சத்தில் அலறியது. ஆங்கிலேயரின் பெயரைக் கேட்டாலே நடுங்கிய பங்காளிகளை உயிர்த்தியாகம் செய்யத் தூண்டியதும், அதன்மூலம் ஆங்கிலேயர்களை அச்சத்தில் ஆழ்த்தியதுமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர் அரவிந்தர்.

‘வந்தேமாதரம்’ ஆங்கில நாளேடு. அரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதினார். அவரது எழுத்துக்கள், பொதுவான பார்வையில், உயர்வானதும் கடினமானதுமான உயர்ந்த தரமான ஆங்கில வாக்கிய அமைப்பைக் கொண்டவை. அதற்குக் காரணம் இருந்தது. அவரது எழுத்தின் நோக்கம் மக்கள் மத்தியில் விடுதலை கனலை எழுப்புவது மட்டுமல்ல; ஆங்கிலேயர்களின், அவர்களது அடிவருடிகளாக இருந்த படித்த இந்தியர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்குவதும் அவரது எழுத்தின் நோக்கம். அவர் ஒரு ஆசிரியர் குழுவையும் ஏற்படுத்தி இருந்தார். எனவே அவரிடம் இருந்து வந்த எழுத்துகளுக்காக, அவர் மீது மட்டுமே குற்றம் சுமத்த அரசால் முடியாமல் போனது.

பின்னர், அரவிந்தர் ‘தர்மம்’ என்ற வங்கமொழி பத்திரிகையிலும் ‘கர்மயோகி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையிலும் ஆசிரியராக இருந்தார். அப்போது அவர் மனம் மேலும் விசாலமானதாக இருந்தது. அதனால் ஆங்கில அரசை மாற்றுவது மட்டுமே தனது நோக்கமாகக் கருதாமல், தேசியம் என்பதை நவீன காலத்துக்கு ஏற்ப வரையறை செய்வதை தன் லட்சியமாகக் கொண்டார். ‘ஆரியா’ என்ற ஆங்கில பத்திரிகையிலும் அவர் ஆசிரியராக இருந்தார். அதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளார். (காண்க: காண்டீபம் ஆவணி 2021 இதழ்).

அரவிந்தர் பாரதம் வந்து பரோடாவில் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே தேசியம் என்றால் என்ன என்ற கேள்வியையும், அதற்கான விடையின் அடிப்படையில் பாரத தேசத்தை வரையறுப்பது பற்றியும் சிந்தித்து வந்தார். அரவிந்தரைப் பொருத்த வரையில், தேசம் என்பது வெறும் வார்த்தை அல்ல. கோடிக்கணக்கான மக்களின் வலிமையும் சங்கல்பமும்/ விருப்புறுதியும் இணைந்த சக்தியின் வடிவம்.

கோபால கிருஷ்ண கோகலே ‘தேசியக் கல்வி’ என்ற பெயரில் கல்வியைப் பற்றிய தீர்மானத்தை கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முன்மொழிந்தார். சூரத் காங்கிரஸ் மாநாட்டில் (1907) அந்தத் தீர்மானம் ‘சுதந்திரமான கல்விக் கொள்கை’ என்று பல மாற்றங்களுடன் ஏற்கப்பட்டது. இது அரவிந்தருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தேசியம் என்பது பற்றி காங்கிரசாரின் குறுகிய சிந்தனை வெளிப்பட்டது.

அரவிந்தர் தேசம், தேசியம் என்பதை தர்க்கரீதியாக, தெளிவாக விளக்கினார். 1908 ஜனவரி 19 ஆம் தேதி வெளியான அந்தக் கட்டுரையை படிக்கும்போது நம் கண்முன்னே பாரதத்தின் வரலாறும் புவியியலும் ஆன்மிகமும் மகோன்னதமாகத் திரண்டெழுந்து நிற்கின்றன. ஸ்வராஜ்ஜியம் பற்றிய அவரது கட்டுரை, காந்திஜி எழுதிய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற நூலைவிடச் சிறந்ததாக உள்ளதென்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்திய தேசியம் வெள்ளைக்காரர்களுக்கு எதிராக உருவானதல்ல. படித்தவர்கள், பொருளாதார மேதைகள் என தங்களைக் கருதிக்கொண்ட காங்கிரஸ்காரர்களின் கூடாரத்தில் இருந்து எழுந்ததல்ல. சிறையில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணனைப் போல, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத்தில் பிறந்ததுதான் பாரத தேசியம் என்று அரவிந்தர் எழுதியுள்ளார்.

இது தேசியம் பற்றிய மேற்கத்திய சிந்தனையாளர்களுக்கு பதிலடி மட்டுமல்ல; பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள கருத்துக்கு வைக்கப்பட்ட வெடி. பாரதத்தில் தேசியம் மிகத் தொன்மையான காலத்தில் இருந்து இன்று வரையிலும் தொடர்ந்து வருகின்ற ஒன்று.

அன்றைய இளைஞர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய இளம் தலைமுறையினருக்கும் அரவிந்தரின் எழுத்துக்கள் புதிய புரிதலை ஏற்படுத்துவதாக இருப்பதே அவரது எழுத்துக்களின் சிறப்பு.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s