-எஸ்.எஸ்.மகாதேவன்

15. பசுஞ்சாணம்: புதிய கோணம்!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ‘வடகிழக்கு பல்கலைக்கழக’ ஆராய்ச்சியாளர்கள் பசுவின் சாணத்தை 1,700 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் எரித்து அதை வடிகட்டியாக்கி கடல்நீரை வடிகட்டினால் பாக்டீரியா இல்லாத நன்னீர் கிடைக்கிறது என்று கண்டுபிடித்திருப்பதாகத் தகவல். பாரத விஞ்ஞானிகளும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது உலகம் நாளை சந்திக்க இருக்கிற கடுமையான குடிநீர்ப் பிரச்னைக்கு கோமாதா புண்ணியத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எவ்வளவு கடுமையானது குடிநீர்ப் பிரச்னை என்று பார்ப்போம். உலகின் 70 % தண்ணீர் தான், ஆனால் குடிக்கும் தரத்தில் உள்ள நீரின் அளவு வெறும் 3 சதவீதம் மட்டுமே. மாசுபாடு, தாறுமாறான பயன்பாடு, சுயநலப் போக்கு, மழை பொய்த்துப் போனது, நிலத்தடி நீர் வரம்பு மீறி உறிஞ்சப்படுவது போன்ற காரணங்களால் இந்த சிறு அளவு நன்னீர் கூட வேகமாகக் குறைந்து வருகிறது. கொடிய தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உலகெங்கும் 142 கோடிப் பேர். இவர்களில் 45 கோடி குழந்தைகள்.
குடிதண்ணீருக்காக பல்வேறு உத்திகள் பரிசோதித்துப் பார்க்கப்படுவதில் வியப்பில்லை. அதில் ஒன்று, கடல்நீரை உப்பு நீக்கி நன்னீராக்குவது. மிகவும் அதிக பொருள் செலவு வைக்கும் வேதிப்பொருட்கள் இதற்குத் தேவை. ஏராளமாக மின்சாரம் தேவைப்படும். கடைசியில் ஒரு லிட்டர் நன்னீர் கிடைக்கிறது என்றால் ஒன்றரை லிட்டர் மிகவும் உப்புக் கரிக்கும் தண்ணீர் (Brine) இந்த முறையில் மிஞ்சுகிறது. அது கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு செய்யக் கூடியது.
எனவேதான் பசுஞ்சாண வடிகட்டி உத்தி பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
பாரத அரசு நாடு நெடுக 75 பெரிய நகரங்களில் பசுஞ்சாணத்தில் இருந்து பிரம்மாண்டமான பயோ கேஸ் ஆலைகளை அமைத்துள்ளதால் சாணம் வேளாண் பெருமக்களுக்கு நல்ல விலை பெற்றுத் தருகிறது. இப்போது கடல் நீரை நன்னீராக்க பசுஞ்சாணம் வடிகட்டியாகப் பயன்படும் என்ற கண்டுபிடிப்பு எந்த அளவுக்கு விவசாயிகளுக்கு கூடுதல் ஆதாயம் என்பதை நாம் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.
ராஜஸ்தான் அரசு அதிகாரிகள் கணக்கீட்டின்படி பாரதத்தில் தினமும் 30 லட்சம் டன் பசுஞ்சாணம் கிடைக்கிறது. சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசுகளால் ஒரு கிலோ பசுஞ்சாணம் 1.50 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. எனவே சாணம் அன்றாடம் கோடிகள் புரளும் பெரு வர்த்தகம் என்பதில் சந்தேகமில்லை.
குவைத்தில் பேரீச்சை சாகுபடி மேம்பட பாரதத்தின் சுதேசி பசுவின் சாணம் மிகவும் உதவுகிறது என்று கண்டறிந்த அந்த நாடு, ஜூன் மாதம் தொடங்கி ராஜஸ்தானிலிருந்து கன்டெய்னர் கன்டெய்னராக பசுஞ்சாணம் இறக்குமதி செய்து கொள்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 3 லட்சம் பசுக்கள் உள்ளன. அந்த மாநில அரசு பசுஞ்சாணம் கொள்முதல் செய்து வந்தது பழைய செய்தி. இப்போது பசுவின் சிறுநீரை கொள்முதல் செய்யத் தொடங்கியிருக்கிறது. இதற்கான அந்த மாநில அரசின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு யாரும் கேலி செய்யவில்லை. அந்தக் காலம் மலையேறிவிட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம் இயற்கை வேளாண்மைக்கு முழுமையாக மாறிவிட ஆசைப்படுகிறது. எனவே அது செய்யும் முதல் வேலை பசுஞ்சாணம் கொள்முதல். இயற்கை விவசாயத்துடன் சாண எரிவாயு உற்பத்தி செய்வதும் அதன் திட்டத்தில் அடங்கும். கேட்பானேன், கால்நடைப் பண்ணை வைத்துள்ள விவசாயி காட்டில் மழை.
இதற்குள் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்திருப்பீர்களே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக அல்லாத அரசியல் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் கோமாதாவின் அருமை மிக நன்றாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதால் அங்கெல்லாம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற கதை கிடையாது.
உத்தரப் பிரதேசத்திலும் குஜராத்திலும் பசுவதை தடை கண்டிப்பாக அமல்படுத்தப் படுவதால் வீதிகளில் பசுக்களும் காளைகளும் போக்குவரத்துக்கு இடையூறாகிற அளவுக்கு திரிவது முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை. இன்னும் ஓரிரு மாதங்களில் யோகியின் உத்தரப் பிரதேசத்தில் ஒரு லட்சம் பசுக்கள் தங்குவதற்கு காப்பகங்கள் தயாராகிவிடும். போக்குவரத்து நெரிசல் தளர்வதுடன் காப்பகங்களில் பசுக்கள் தங்குவதால் அவற்றின் சாணம் சேதாரமில்லாமல் சேகரிக்கப்பட முடியும் என்பதுதான் சூட்சுமம். காப்பகங்களில் உள்ள பசுக்களைத் தத்தெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார் என்பதால், ஆதரவற்ற, பால் மரத்த பசுக்கள் பராமரிப்பு மக்களியக்கமாகும் சூழல் உருவாகும்.
குப்பைமேட்டில் சாணத்தின் மீது மின்னல் தாக்கினால் அது பொன்னாகும் என்று பெரியவர்கள் பேசுவதைக் கேட்டு தென்பாண்டி நாட்டு கிராமப்புறச் சிறுவர்கள் தாங்களும் நம்புவது உண்டு. இன்று விஞ்ஞானமும் வணிகமும் சூழலியல் நிர்பந்தமும் சேர்ந்து சாணத்தின் மீது ஒரு கவர்ச்சி, மின்னலாகப் பாயத் தொடங்கிவிட்டது. சாணம் நிஜமாகவே பொன் ஆகும் என்பது என்னவோ நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது
பொருளாதார ஆதாயம் ஒருபுறமிருக்க, தொன்றுதொட்டு கோமாதாவை கடவுளாகப் போற்றும் ஹிந்து சமுதாயத்திற்கு சில எதிர்பார்ப்புகள் உண்டு: பசுக்களைக் கடத்தும் கிரிமினல் கூட்டங்களை வேரறுக்க வேண்டும். பசுவதை தடை சட்டத்தை அகில பாரத அளவில் இயற்றி கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக தமிழக அரசு ஹிந்து விரோதத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு பசுவதையைத் தடை செய்வது விவேகம்.
இது காலத்தின் கட்டாயம் கூட.
முத்தாய்ப்பு:

சாணம் மட்டும் இருந்தால் பணத்தில் புரளலாம் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.. (தமிழ்நாடு – கர்நாடகா எல்லையோர தமிழகக் கிராமமான) குமடாபுர வாசிகளுக்கோ இன்னொன்றும் தெரிந்திருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் கோரெ ஹெப்பா கிராமத் திருவிழாவில் பூசாரி வழிபாடு செய்து கிராமத்தை ஆசீர்வதித்த பிறகு, மக்கள் ஒன்றுகூடி ஊர் நடுவே குவித்து வைக்கப்பட்டிருக்கும் பசுஞ்சாணத்தில் புரளுகிறார்கள். கைநிறைய சாணம் எடுத்து மற்றவர்கள் மீது வீசுகிறார்கள். ஆரோக்கியத்துக்கு நல்லது, ஏதாவது வியாதி இருந்தால் குணமாகும் என்று நம்புகிறார்கள்.
$$$