மகாவித்துவான் சரித்திரம்- 1(7)

-உ.வே.சாமிநாதையர்

7. சென்னைக்குப் பிரயாணம்

.

சென்னைக்குச் செல்ல விரும்பியது

இவருடைய அறிவு வரவர வளர்ச்சியுறுதலைப் போலக் கற்றவர்களோடு பழக வேண்டுமென்னும் ஆர்வமும் இவர்பால் மிக்கு வந்தது. “நவிறொறு நூனயம்போலும் பயிறொறும், பண்புடை யாளர் தொடர்பு” என்னும் ஆன்றோரமுத மொழியை அறிந்த இவர் நூனயத்தை அறிந்ததோடன்றிப் பண்புடையாளர் தொடர்பையும் விரும்புதல் இயல்பன்றோ? பின் எந்த எந்த ஊரில் தமிழ் வித்துவான்கள் இருக்கிறார்களென்றும் அவர்கள் எவ்வெந் நூலிற் பயிற்சியுடையவர்களென்றும் அறிந்து கொள்வாராயினர். அவ்வாறு விசாரித்து வருகையில் சென்னையில் தமிழ்ப் புலவர்கள் பலர் இருப்பதாக அறிந்தனர்.

அக்காலத்திற் சென்னையில் துரைத்தனத்தார், *1 கல்விச்சங்க மொன்றையமைத்துப் பல ஊர்களிலிருந்த சிறந்த தமிழ் வித்துவான்களை வரவழைத்துக் கூட்டி அவர்கள் வாயிலாக மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லுதல், பிரசங்கம் புரிவித்தல், பழைய தமிழ்நூல்களை ஆராய்ச்சி செய்து பதிப்பித்தல், செய்யுள் வடிவமான நூல்களை வசனமாக எழுதுவித்தல், பாடசாலைகளுக்கு உபயோகமாகும்படி வசனநடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றுவித்தல், வடமொழி முதலிய வேறு மொழிகளிலுள்ள நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பித்தல் முதலியவற்றை நடத்தி வருகிறார்களென்பதையறிந்து, அங்கே சென்று அவர்களுடைய பழக்கத்தால் நல்ல பயிற்சியை அடையலாமென்றும் பல நூல்களில் தமக்கிருந்த ஐயங்களை நீக்கிக்கொள்ளலாமென்றும் இவரெண்ணினார். ஆயினும் அங்கு சென்று இருத்தற்காகும் செலவிற்குரிய பொருள் இல்லாமையால் அங்ஙனம் செய்ய முடியவில்லையே யென்ற வருத்தம் இவருக்கு இருந்துவந்தது.

சென்னை சேர்ந்தது

இவ்வாறிருக்கையில் இவரை ஆதரித்து வந்த லட்சுமண பிள்ளை யென்பவர் தமக்கு சென்னை ஹைகோர்ட்டிலிருந்த வழக்கொன்றை அங்கே சென்று நடத்துவதற்குத் தக்கவர் யாரென்று ஆலோசித்தனர். அப்பொழுது எல்லா நற்குணங்களும் ஒருங்கே அமைந்த இவருடைய நினைவு வந்தது. இவரைச் சென்னைக்கு அனுப்பினால் காரியத்தை ஒழுங்காக முடித்துக்கொண்டு வருவதோடு தமக்கும் மிக்க கெளரவத்தை உண்டுபண்ணுவாரென் றெண்ணி இவரைப் பார்த்து, “என்னுடைய குடும்ப வழக்கொன்றன் சம்பந்தமாகச் சென்னைக்குப் போய் வருவதற்கு உங்களுக்குச் சௌகரியப்படுமா? அங்ஙனம் போய் வருவதாகவிருந்தால் எனக்கு அநுகூலமாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டார்.

அப்பொழுது, ‘சென்னைக்கு நாம் எப்பொழுது செல்வோம்? அங்குள்ள பெரிய பண்டிதர்களுடன் அளவளாவிப் பல ஐயங்களை எப்பொழுது தீர்த்துக் கொள்வோம்; இதுவரையில் நாம் பெறாதனவும் கேள்வி நிலையிலுள்ளனவுமாகிய நூல்களை எப்பொழுது பெறுவோம்; படிப்போம்? அப்படிப்பட்ட நல்ல காலம் நமக்கு வருமோ! அதற்குரிய பொருள் இல்லையே!’ என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொண்டேயிருந்த இவருக்கு, லட்சுமண பிள்ளையின் வார்த்தை மிக்க பசியுள்ளவர்களுக்குக் கிடைத்த அமுதத்தைப் போல ஆனந்தத்தை விளைவித்தது. அந்த மகிழ்ச்சிக் குறிப்பைத் தமது முகம் புலப்படுத்த அவரைப் பார்த்து, “என்னைச் சென்னைக்கு அனுப்பினால் உங்களுடைய காரியத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துவிட்டு வருவதுடன் பலநாளாக உள்ள என்னுடைய மனக்குறையையும் எளிதில் தீர்த்துக்கொண்டு வருவேன்” என்றார். அவர், “உங்களுடைய மனக்குறையென்ன?” என்று கேட்ப, “சென்னையிலுள்ள தமிழ் வித்துவான்களை யெல்லாம் பார்த்துப் பழகி அறிந்துகொள்ள வேண்டுவனவற்றை அறிந்துகொள்ளுதலும் இதுகாறும் எனக்குள்ள பல ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளுதலுமே” என்றார். அவர் தமது அருகிலிருந்தவர்களை நோக்கி, “இந்நகரத்திற் புகழ்பெற்று விளங்கும் இக்கவிஞர் பெருமானுக்கும் கல்வி விஷயத்தில் மனக்குறை இருக்கின்றதே! அக்குறையைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று இவர்களுக்குள்ள ஆவலைப் பாருங்கள். பிறரிடத்துத் தெரிந்துகொள்ள வேண்டுவன பல உள்ளன வென்று இங்ஙனம் வெளிப்படையாக யாரேனும் இக்காலத்திற் சொல்லுவார்களா? அற்பக் கல்வியை யுடையவர்களும் தம்மை எல்லாமறிந்தவர்களாகக் காட்டிப் பிறரை வஞ்சித்துத் தாமும் கெட்டுத் தம்மைச் சார்ந்தவர்களையுங் கெடுத்து விடுவார்களே!” என்று இவருடைய குணங்களைப் பலவாறாக வியந்து புகழ்ந்தனர். பிறகு உடனிருந்து இவருக்கு உதவி செய்வதற்கு வேலைக்காரனொருவனை நியமித்து இருவருடைய பிரயாணத்துக்கும், சில மாதம் சென்னையில் இருத்தற்கும் வேண்டிய பொருளை உதவி முகமன் கூறியனுப்பினார்.

இவர் திரிசிரபுரத்திலும் அதனைச் சார்ந்த ஊர்களிலுமுள்ள தம்முடைய மாணாக்கர்களையும் உண்மையன்பர்களையும் பார்த்துத் தம்முடைய பிரயாணச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்து ஒரு நல்ல தினத்திற் புறப்பட்டனர். அப்பொழுது நல்ல நிமித்தங்கள் பல உண்டாயின. வழியனுப்புவதற்கு வந்த முதியவர்கள் அந்நிமித்தங்களை அறிந்து, “ஐயா! நீங்கள் நல்ல பலனை யடைந்து பெருஞ்சிறப்போடு திரும்பி வருவீர்கள்” என்று உளங்கனிந்து அனுப்பினார்கள். உடன் பழகியவர்கள் இவருடைய பிரிவை ஆற்றாதவர்களாகி, “இவருடன் நாமும் சென்னைக்குச் செல்லக் கூடவில்லையே!” என வருந்தினார்கள். பின்பு எல்லோரிடமும் விடைபெற்றுப் பட்டீச்சுரம், மாயூரம், சிதம்பரம் முதலிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தும், ஆங்காங்குள்ள தமிழ் வித்துவான்களோடு பழகி அளவளாவியிருந்தும் குறிப்பிட்ட காலத்திற் சென்னை வந்து சேர்ந்தனர்.

தாம் வந்த காரியத்தை ஆண்டுள்ள வக்கீல் ஒருவரிடம் சொல்லி, அவரால், சில மாதம் தாம் அந்நகரில் இருக்கவேண்டியிருக்குமென்பதை யறிந்து கொண்டார்; அதனை லட்சுமண பிள்ளைக்குக் கடிதமூலமாகத் தெரிவித்தனர். பின்பு அந்நகரிலுள்ள தமிழ் வித்துவான்களிடம் சென்று சென்று அறிய வேண்டுவனவற்றை அறிய நிச்சயித்தனர்.

சென்னை வித்துவான்களின் பழக்கம்

அப்பொழுது சென்னையில் இருந்த வித்துவான்கள்: திருவாவடுதுறை ஆதீன வித்துவான் *2 ஸ்ரீ தாண்டவராயத் தம்பிரான், காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை, *3 போரூர் வாத்தியார், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் முதலியவர்கள்.

இவர், கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் முதலிய சைவ நூல்களிலும் சைவப் பிரபந்தங்கள் பலவற்றிலும் திருவாரூர்த் தல புராணம் முதலியவற்றிலும் உள்ள ஐயங்களை காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடத்தும், கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார், திருக்குறள்- பரிமேலழகருரை முதலியவற்றிலுள்ள ஐயங்களைத் திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையிடத்தும் கேட்டுத் தெளிந்தனர்.

எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியார் கம்ப ராமாயணம் முதலிய பெரிய காப்பியங்களிலும் செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலும் முறையே பாடங்கேட்டு நல்ல பயிற்சி உடையவரென்பதைத் தெரிந்து அவற்றிலுள்ள ஐயங்களை அவரிடத்து வினாவித் தெளிந்தனர். இம்மூவர்களிடமும் இருந்த அரிய நூல்களைப் பெற்றுப் பிரதிசெய்து கொண்டு பாடங்கேட்டும், பின்னும் சென்னையில் ஆங்காங்குள்ள கற்றுத் தேர்ந்த பெரியோரிடத்து ஒழிந்த காலங்களிற் சென்று அவர்களுக்கு என்ன என்ன நூல்களிற் பயிற்சி உண்டோ அவற்றை முன்னதாக அறிந்துகொண்டு அந் நூல்களைக் கேட்டுத் தெளிந்தும் மனமகிழ்ச்சியோடு காலங்கழிப்பாராயினர். ஒவ்வொரு தினத்தும் பகலின் முற்பாகத்திற் காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடத்தும் பிற்பகலில் எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியாரிடத்தும் அஸ்தமனத்திற்குப் பின்பு மயிலாப்பூரில் உள்ள திருவண்ணாமலை மடத்தில் இருந்த திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையினிடத்தும் சென்று அவரவர்களுக்கு ஆக வேண்டிய எழுதுதல்,  ஒப்புநோக்குதல் முதலிய காரியங்களை முன்னரே அறிந்து ஒழுங்காகச் செய்து அவர்கள் அன்போடு பாடம் சொல்லுதலைக் கேட்டுவருதல் இவருக்கியல்பாக இருந்தது. அம் மூவர்களுள் யாருக்கேனும் பாடஞ்சொல்லுதற்கு சமயமில்லையாயின் அதனை முன்பே தெரிந்து கொண்டு அக்காலத்தில் மற்ற பெரியோர்களிடத்துச் சென்று வேண்டியவற்றைத் தெரிந்து கொள்வார். காலத்தின் அருமையை அறிந்தவராதலின் அரிதின் வாய்த்த இச்சந்தர்ப்பத்தைக் கணமேனும் வீண் போக்கக் கூடாதென்னும் எண்ணம் மிக உடையாராயினார்.

பிற்காலத்தில், தாம் இவ்வாறு படித்துவந்த செய்தியை இவர் எங்களுக்குச் சொல்லுகையில், “திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை வீட்டிற்குச் செல்லும்பொழுது ஸ்ரீ கபாலீசுவரர் கோயிலின் வாயிலின் வழியேதான் செல்வேன். அப்பொழுது உள்ளே சென்று ஸ்வாமியைத் தரிசித்துக்கொண்டு போக வேண்டுமென்னும் விருப்பம் இருப்பினும் நேரமாய் விடுமேயென்னும் கவலையால் சந்நிதியில் நின்றே அஞ்சலி செய்துவிட்டுச் செல்வேன்” என்று சொன்னதுண்டு.

இடையிடையே ஓய்வுக்காலம் நேருமானால் தம்மிடம் பாடங் கேட்க விரும்பினவர்களுக்கு அவர்கள் விரும்பிய நூல்களைப் பாடஞ்சொல்லி வருவார். அப்பொழுது படித்தவர்கள் *4 புரச பாக்கம் பொன்னம்பல முதலியார், கரிவரதப் பிள்ளை முதலியவர்கள். காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடம் படிக்கும் காலத்தில், உடன் படித்தவர்கள் மேற்குறித்த தாண்டவராயத் தம்பிரானும் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும். தாண்டவராயத் தம்பிரானும் இவரும் பலமுறை சந்தித்துத் தம்முள் அளவளாவுவதுண்டு. அதனால் அவருக்கு இவர்பால் அன்பு மிகுதியுற்றது. இவருடைய அறிவின் வன்மையும் நற்குணமும் அவரை வயப்படுத்திக் கொண்டன.

காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடத்து இவர் படிக்கும் பொழுது இவரெழுதிக்கொண்ட கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூதின் பழைய கடிதப்பிரதி பென்ஸிலால் அங்கங்கே குறித்த சில அரும்பதக் குறிப்புடன் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

சபாபதி முதலியார், திருவேங்கடாசல முதலியார், திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை யென்னும் மூவரும் ஒருவருடைய வீட்டிற்கு ஒருவர் போய் நூலாராய்ச்சியின் விஷயமாக ஒருவரோடொருவர் அளவளாவி இன்புறுவது வழக்கம். அக்காலங்களிலெல்லாம் அவர்கள் பிள்ளையவர்களுக்குத் தமிழ் நூல்களிலுள்ள வேட்கைப் பெருக்கத்தையும் இயற்கையறிவினையும் முன்னரே இவருக்கு அமைந்திருக்கும் அகன்ற நூலாராய்ச்சிப் பெருமையையும் ஞாபக சக்தியையும் அடக்கத்தையும் தருக்கின்மையையும் நட்புடைமை முதலியவற்றையும் குறித்து வியந்தார்கள். இவர் சந்தேகமென்று வினவுகின்ற வினாக்களில் பெரும்பாலன அவர்களுக்குப் புதிய விஷயங்களை அந்தச் சமயங்களில் தோன்றச்செய்யும்; விடைதர வேண்டி மேன்மேலும் பல நூல்களை ஆராயும்படி அவர்களை அவை தூண்டும். இவருடைய பாடல்களையும் அவற்றிலுள்ள நயங்களையும் அவர்களறிந்து இவருடைய ஆற்றலைப் பாராட்டினார்கள். இளமையிலே இவ்வளவு நல்லாற்றல் வாய்ந்தமை யாருக்குத்தான் வியப்பைக்கொடாது?

மழவை மகாலிங்கையரைச் சந்தித்தது

அவர்கள் மூவரும் இவரை மகாலிங்கையருக்குக் காட்டி அவரை மகிழ்விக்க வேண்டுமென்று தீர்மானம் செய்தார்கள். அந்த விருப்பம் இவருக்கும் நெடுநாளாக இருந்துவந்தது. ஓர் ஆதிவாரத்தில் மேற்கூறிய மூவர்களும் வேறு சிலரும் இவரை அழைத்துக்கொண்டு மழவை மகாலிங்கையருடைய வீட்டிற்குப் போனார்கள்.

மழவை மகாலிங்கையரை அறியாதவர் யாவர்? மதுரைக்குக் கிழக்கேயுள்ள மழவராயனேந்தலென்பது அவர் ஊர். அதன் பெயரின் மரூஉவே மழவையென்பது. மகாலிங்கையர், திருத்தணிகை விசாகப் பெருமாளையரிடத்தும் அவர் சகோதரர் சரவணப் பெருமாளையரிடத்தும் தமிழ் நூல்களை முறையே பாடங்கேட்டவர்; கேட்டவற்றை ஆராய்ந்து தெளிந்தவர்; கம்ப ராமாயணம், திருத்தணிகைப் புராணம் முதலிய பெருங் காப்பியங்களில் நல்ல பயிற்சி உள்ளவர். இலக்கண அறிவை விசேஷமாகப் பெற்றவர்; அஞ்சா நெஞ்சினர்; விரைந்து செய்யுள் செய்யும் ஆற்றலுடையவர்; ஸங்கீத லோலர்; சிநேக வாத்ஸல்ய சீலர்; ஆதிசைவ குல திலகர்; தாண்டவராயத் தம்பிரானுக்கு உயிர்த்தோழர். பிற்காலத்தில் *5 ஆறுமுக நாவலர் சென்னைக்கு வந்திருந்தபொழுது பலருடைய வேண்டுகோட்கிணங்கி அவரெழுதிய பைபிள் தமிழ் வசன புத்தகத்தைப் பரிசோதித்தற்குத் தேர்ந்தெடுக்கப்பெற்றவர்.

விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையரென்னு மிருவருடைய ஆசிரியராகிய இராமாநுச கவிராயர் அவ்விருவரையும் பிற வித்துவான்களையும் இழிவுபடுத்திப் பேசுவதும் தம்மையே புகழ்ந்து கொள்வதும் கண்டு வருந்திய அறிஞர் பலர் அவருடைய இந்தச் செயலை நீக்க வேண்டுமென்று மகாலிங்கையரிடம் வற்புறுத்திக் கூறினார்கள். அவர் அதற்கு இணங்கி இராமாநுச கவிராயரை எந்தவிடத்தில் எவ்வளவு கூட்டத்துக்கு இடையிற் கண்டாலும் தமிழ் நூல்களிலுள்ள விடுத்தற்கரிய பல கேள்விகளைக் கேட்டு அவரை விடையளிக்கவொண்ணாதபடி செய்துவந்தார். இதனால் மகாலிங்கையருக்குப் பெருமதிப்பும், குற்றத்தைப் பட்சபாதமின்றிக் கண்டிக்கும் இயல்புடையவரென்னும் பெயரும் உண்டாயின.

சபாபதி முதலியார் முதலியவர்கள் பிள்ளையவர்களை அழைத்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றபொழுது அவர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றுத் தக்க இடங்களில் இருக்கச்செய்து தாமும் இருந்தார். பிள்ளையவர்கள் வணக்கத்தோடு ஒருபக்கத்தில் இருந்தனர். மகாலிங்கையர் இவரைச் சுட்டி, “இவர் யார்?” என்றார். சபாபதி முதலியார், “இவர் இருப்பது திரிசிரபுரம்; மீனாட்சிசுந்தரம் பிள்ளை யென்பது இவருடைய பெயர். இந்த ஊருக்குச் சில காரியமாக வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்; தமிழ் பயின்றவர்; செய்யுட்களை இயற்றும் பயிற்சியுமுடையவர்” என விடை கூறினார். தமிழ் பயின்றவர் என்றதைக் கேட்ட மகாலிங்கையர் இவரை நோக்கி, ”நீர் எந்த எந்த நூல்கள் வாசித்திருக்கிறீர்?” என்றார். இவர் தாம் படித்த நூல்களின் பெயர்கள் சிலவற்றைச் சொன்னார். பின்னர் அவர், “ஏதாவது ஒரு பாடல் சொல்லும்” என்றார். உடனே இவர்,

“இரசத வரையமர் பவள விலங்க லிடம்படர் பைங்கொடியே
இமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத் திமயம் வரும்படியே
சரணினை பவருட் டிமிரஞ் சிதறச் சாரு மிளங்கதிரே
சதுமறை யாலு மளப்பரி தான தயங்கு பொலாமணியே
மரகத வரையிள கியவெழி லெனவெழில் வாய்த்த செழுஞ்சுடரே
மதுரித நவரச மொழுகக் கனியும் வளத்த நறுங்கனியே
தரணி மிசைப்பொலி தருமக் குயிலே தாலோ தாலேலோ
தழையுந் தந்தி வனத்தமர் மயிலே தாலோ தாலேலோ” (தாலப். 6)

என்னும் பாடலைப் பொருள் விளங்கும்படி மெல்லச் சொன்னார். இவர் செய்யுளை அவ்வாறு சொல்லும் முறையினாலே அவர் இவர் நல்ல அறிவுடையராகவிருக்க வேண்டுமென்றெண்ணினார். ‘இப் பாடல் ஒரு பிள்ளைத்தமிழிலுள்ளது போலிருக்கிறது. சொற்களும் பொருளும் நயம்பெற இதில் அமைந்துள்ளன. அப்பிள்ளைத் தமிழ் எந்தக் கவிசிகாமணியின் வாக்கோ! இந்த நூல் அந்தத் திரிசிரபுர முதலிய இடங்களில் மட்டும் வழங்குகின்றது போலும்! இதன் பெயரையாவது இவ்வூரில் ஒருவரும் நம்மிடத்துச் சொன்னாரில்லையே!’ என்று பலவாறாக நினைந்து இவரை நோக்கி, “இச்செய்யுள் எந்த நூலிலுள்ளது?” என்று கேட்டார்.

இவர் வணக்கத்தோடு, “அடியேன் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழில் உள்ளது” என்றார். உடனே அவர் மிகவும் வியப்புற்று, ‘இவ்வளவு அருமையான நூலைச் செய்த இவர் அடங்கியிருப்பது என்ன ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது! இவர் எவ்வளவோ நூல்களைப் படித்திருக்க வேண்டுமே! எவ்வளவோ செய்யுட்கள் செய்து பழகியிருக்க வேண்டுமே! அளவற்ற பாடல்களைச் செய்திருந்தால்தானே இங்ஙனம் செய்யுள் செய்ய வரும்! இவருடைய அடக்கமே அடக்கம்! இவரைப் போன்றவர்களை இதுகாறும் யாம் கண்டிலேமே! இங்ஙனம் இருப்பதன்றோ கல்விக்கழகு!’ என்று தம்முட் பலவாறாக நினைத்து இவரை நோக்கி, “தயை செய்து இச்செய்யுளை இன்னும் ஒருமுறை சொல்லுங்கள்” என்று சொல்லி இரண்டு மூன்று முறை சொல்வித்துக் கேட்டார். பின்னும் அந்நூலிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லும்படி செய்து கேட்டு அவற்றின் பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றார். பின்பு சிறிது நேரம் யோசித்து, “நானும் ஒரு பாடல் சொல்லுவேன்; கேட்க வேண்டும்” என்று கூறி,

“தருமைவளர் குமரகுரு முனிவன் கல்வி
சார் *6 பகழிக் கூத்தனெனத் தரணி யோர்சொல்
இருவருமே நன்குபிள்ளைத் தமிழைச் செய்தற்
கேற்றவரென் றிடுமுரைவெந் நிட்டதம்மா
அருமைபெறு *7 காவையகி லாண்ட வல்லி
யம்மைமேன் மேற்படிநற் றமிழை யாய்ந்து
சுருதிநெறி தவறாத குணன்மீ னாட்சி
சுந்தரமா லன்பினொடு சொல்லும் போதே”

என்னும் செய்யுளைச் சொல்லிக் காட்டினர். அப்பால், சபாபதி முதலியார் முதலியவர்களை நோக்கி, “இவ்வளவு படித்துப் பாடத் தெரிந்தும் இவர்கள் எவ்வளவு அடக்கமாயிருக்கிறார்கள்! என்ன ஆச்சரியம்!” என்று வியந்து பாராட்டினர். கேட்ட சபாபதி முதலியார், “அதைத்தான் நாங்கள் அறிவிக்க வந்தோம்” என்றார். மகாலிங்கையர் இவருடைய வரலாற்றை விசாரித்து வியந்து புகழ்ந்துவிட்டு, பின்பு இவரைப்பார்த்து, “இந்நூல் அச்சிற் பதிப்பிக்கப் பெற்றதோ? இல்லையாயின் விரைந்து பதிப்பித்துவிட வேண்டும். படித்தவர்களுக்கு இது நல்ல இனிய விருந்தாக விளங்கும்” என்று அன்புடன் சொன்னதோடு, “நீங்கள் இந்நகரில் எவ்வளவு நாள் இருத்தற்கு எண்ணியிருக்கிறீர்கள்? வேறு எவ்வளவு காரியங்கள் இருப்பினும் என்னோடு கூடவிருந்தே பெரும்பாலும் பொழுதுபோக்க வேண்டும். உங்களுக்கு ஆக வேண்டிய காரியம் என்னவிருந்தாலும் அதனைச் செவ்வனே செய்துமுடித்தற்குச் சித்தனாகவிருக்கிறேன்; யோசிக்க வேண்டாம்” என்று மிகவும் வற்புறுத்தினார்.

அங்ஙனம் செய்விக்க வேண்டுமென்று சபாபதி முதலியார் முதலியோரையும் கேட்டுக்கொண்டனர். இவர் அவர்களுடைய குறிப்பையறிந்து அங்ஙனம் செய்வதாகவே உடன்பட்டனர். அப்பால் எல்லோரும் மகாலிங்கையரிடம் விடை பெற்றுக்கொண்டு தத்தம் உறைவிடம் சென்றார்கள்.

பிள்ளையவர்கள் அக்காலந்தொடங்கி மகாலிங்கையரோடு பழகுதலை மிகுதியாக வைத்துக்கொண்டு அவரிடம் நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை, தண்டியலங்காரவுரை, நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலியவற்றிலும் பிறவற்றிலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து அதுவரை தமக்கு அகப்படாமல் இருந்ததாகிய இலக்கணக்கொத்துரையையும் அவர்பாற் பாடங்கேட்டனர். இலக்கணக் கொத்துரையை மகாலிங்கையர் இவரிடம் கொடுத்தபொழுது, “இந்த நூலைப் பெற வேண்டுமென்னும் ஆர்வத்தினால் பல இடங்களில் தேடினேன்; திருவாவடுதுறை மடத்திலும் சென்று மிக முயன்றேன்; கிடைக்கவில்லை. பின்பு நண்பர் தாண்டவராயத் தம்பிரானவர்களிடத்தே பெற்றேன். இதனை மிகவும் சாக்கிரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார். இவர் அதனைப் பெற்றுப் பிரதிசெய்துகொண்டார். அவர் எவ்வெவ்விடங்களுக்குப் போவதாக இருந்தாலும் இப் புலவர் பெருமானைத் தம்முடைய வண்டியிலேயே வைத்துக்கொண்டு சென்று மீளுவதும், அக்காலங்களில் இலக்கண சம்பந்தமான ஸல்லாபமே இவருடைய விருப்பத்தின்படி இவரிடம் மிகுதியாகச் செய்வதும், தமக்குத் தோற்றாதவற்றை இவர்பால் தெரிந்து கொள்வதும் அவருக்கு வழக்கமாக இருந்தன.

ஒருநாள் பல இடங்களுக்குப் போதற்கு இருவரும் வண்டியொன்றில் ஏறிப் புறப்பட்டபொழுது பிள்ளையவர்கள் மகாலிங்கையரைப் பார்த்து, “நீங்கள் காலேஜில் இலக்கணக் கேள்விகளை எவ்வாறு கேட்பது வழக்கம்?” என்று கேட்டார். அவர் ஒரு பாடலைச் சொல்லச் சொல்லி அந்தப் பாடலில் அமைந்துள்ள சொன்முடிபு பொருண்முடிபுகளையும் புணர்ச்சி விதிகளையும் பிற இலக்கணங்களையும் கேட்டுக்கொண்டே வந்தனர். அவ்வாறு கேட்டு வருகையில் நன்னூலிலுள்ள பெரும்பான்மையான இலக்கண விதிகளும் பிற இலக்கண நூல் விதிகளும் அவ்வொரு பாடலில் அமைந்தவற்றைக்கொண்டே கேட்டு விட்டனர். பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் போய்ப்பார்த்து வீடு திரும்பும் வரையில் அவ்வொரு பாட்டிலுள்ள இலக்கண அமைதிகளையே பல வகையாகக் கேட்பதிலும் விடையளிப்பதிலும் பொழுது சென்றது. அதனாற் பல விஷயங்கள் இவருக்குப் புதியனவாகத் தெரியவந்தன. *8 இவ்வாறு இருவரும் அளவளாவிப் பல விஷயங்களை அறிந்தும் அறிவித்தும் வந்தனர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” அன்றோ?

அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் அச்சிடப்பட்டது

மகாலிங்கையர் முன்னரே வற்புறுத்தியபடி அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் திரிசிரபுரம் லட்சுமண பிள்ளையின் பொருளுதவியால் புரசப்பாக்கம் பொன்னம்பல முதலியாரால் மகாலிங்கையர் முதலிய பலர் வழங்கிய சிறப்புப்பாயிரங்களோடு அச்சிற் பதிப்பிக்கப்பெற்று நிறைவேறியது. அது வெளிவந்த வருஷம் 1842 (பிலவ வருஷம், பங்குனி மாதம்); அதற்குச் சிறப்புப்பாயிரம் கொடுத்தவர்கள்: (1) மழவை மகாலிங்கையர், (2) தாண்டவராய்த் தம்பிரான், (3) காஞ்சீபுரம் சபாபதி முதலியார், (4) திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, (5) அஷ்டாவதானம் சபாபதி முதலியார், (6) இராமநாதபுரம் அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர், (7) பொன்னம்பல ஸ்வாமிகள், (8) காரைக்கால் முத்துச்சாமிக் கவிராயர், (9) காயாறு சின்னையா உபாத்தியாயர், (10) திரிசிரபுரம் சோமசுந்தரமுதலியார், (11) உறையூர் முத்துவீர உபாத்தியாயர் (12) திரிசிரபுரம் வீரராகவ செட்டியார், (13) புரசப்பாக்கம் பொன்னம்பல முதலியார், (14) பென்னெலூர் நாராயணசாமி நாயகர், (15) திரிசிரபுரம் நாராயண பிள்ளை.

அந்நூல் லட்சுமண பிள்ளையின் விருப்பத்தாற் செய்யப்பட்ட தென்பது,

“… … … …. …. சிராப்பள்ளிவாழ்
மருவளர் பூங்குவ ளைத்தாம லட்சு மணன்விரும்பத்
தருவளர் சம்பு வனவல்லி பிள்ளைத் தமிழியற்றி
உருவளர் மீனாட்சி சுந்தரன் றந்தா னுணர்பவர்க்கே”
என்னும் பொன்னம்பல முதலியார் செய்யுளாலும் வெளியாகின்றது.

“சிற்பரன்சேர் சிரகிரியெம் மீனாட்சி சுந்தரமாஞ் சீரார் கொண்மூ
கற்பனைவண் கடலைமுகந் து .... ...
பற்பலரும் புகழ்பிள்ளைக் கவிமழையைப் பொழிந்ததென்பர் பாவ லோரே"

என்று தாண்டவராயத் தம்பிரானும்,

“கலைமுழு துணர்ந்த கவிஞர் குழாத்துள்
தலைமை நடாத்துஞ் சைவ சிகாமணி
நாச்சுவை யமுதினு மூங்குநனி சிறக்கும்
பாச்சுவை யமுதைப் பற்பக றோறும்
பெருவா னாட்டுப் புலவரும் பெட்புறத்
தருமீ னாட்சிசுந் தரநா வலனே”

என்று திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையும் தத்தம் சிறப்புப் பாயிரங்களில் இப்புலவர்கோமானைப் பாராட்டியிருத்தலால் அக்காலத்தே இவருக்கு இருந்த பெருமை விளங்கும். இராமநாதபுரம் அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர் பாடிய,

“கந்தவே ளோவலது கலைமகளோ விவ்வுருக்கொண் டாய்காணுன்னை
அந்தநாட் டவமிருந்து புலவோருக் கரசுசெய வன்பாற் பெற்ற
தந்தையே தந்தையுனைத் தான்படிக்க வைத்தவனே தமிழுக் காசான்
சுந்தரமா மதிவதனா மீனாட்சி சுந்தரனே துலங்கு மாலே”

என்ற செய்யுளும், உறையூர் முத்துவீர உபாத்தியாயர் பாடிய,

“தண்ணறுமுண் டகப்போதி லிருந்துலக மாக்கியவே தாவே யிந்தக்
கண்ணகன்ற புவியினிற்றன் னுருமாற்றி மக்களுருக் கவினத் தாங்கி
வண்ணமுறு மீனாட்சி சுந்தரமென் றொருநாமம் வயங்க வின்பம்
விண்ணவரும் பெறத்தந்தி வனப்பிள்ளைத் தமிழினிதா விளம்பி னானே”

என்ற செய்யுளும் இவர்பால் அவர்களுக்கிருந்த நன்மதிப்பைப் புலப்படுத்துகின்றன.

திரிசிராமலை யமகவந்தாதி முதலிய நூல்களையும் இவர் பதிப்பிக்க எண்ணியிருந்தும் பொருண்முட்டுப்பாட்டால் அவ்வாறு செய்ய இவருக்கு இயலவில்லை.

இடையிடையே வக்கீலிடம் சென்று ஹைகோர்ட்டிலுள்ள வழக்கின் நிலைமையைத் தெரிந்து லட்சுமண பிள்ளைக்கு அச் செய்தியை எழுதி அனுப்பியதோடு தமக்குச் சென்னையில் மேன்மேலுங் கிடைத்துவருகிற கல்விப் பயனையும் நூல்களையும் அவருக்கு நன்றியறிவோடு தெரிவித்துக் கொண்டு வந்தார். சபாபதி முதலியார் முதலிய பெரியோர்கள் இவரை ஒரு மாணாக்கராக நினையாமல் தம்மை ஒத்தவராகவே பாவித்து மரியாதையோடு நடத்திவந்தார்கள். புதிய நூல் இயற்றுபவர்கள் சபாபதி முதலியார் முதலியவர்களிடத்திற் சிறப்புப் பாயிரம் வாங்கும் பொழுது அவர்கள் மூலமாகப் பழக்கஞ் செய்துகொண்டு இவருடைய சிறப்புப் பாயிரங்களையும் பெற்று மகிழ்ந்து பதிப்பித்து வந்தார்கள் ,

‘நீங்கள்’ என்பதற்குப் பிரயோகம் காட்டியது

ஒருநாள் எழுமூர் திருவேங்கடாசல முதலியார் வீட்டிற்கு இவர் போன பொழுது அவராற் பதிப்பிக்கப்பெற்று வைத்திருந்த கம்ப ராமாயணம் அயோத்தியா காண்டத்தை எடுத்துப் பார்க்கையில் குகப்படலத்தில், “நைவீரலீர்” என்ற 67 – ஆம் செய்யுளில் ‘நீங்களைவீரும்’ என்ற தொடர் *9 ‘நீர்களைவீரும்’ என்று பதிப்பிக்கப்பட்டிருந்ததை நோக்கி முதலியாரவர்களைப் பார்த்து, “ஐயா, நீங்களென்பதே பாடமன்றோ? இதில் நீர்களென்று இருக்கிறதே” என்று வினாவினார்.

அவர், “நீங்களென்பதற்குப் பிரயோகம் இல்லையே. கள்விகுதியேற்ற நிலைமொழி இன்னதென்று தெரியவில்லையே” என்றார். உடனே இவர், “இந்தப் பிரயோகம் பழைய நூல்களிற் காணப்படுகின்றதே.

'ஆங்கது தெரிந்து வேதா
வாவிகள் வினைக்கீ டன்றி
நீங்களிவ் வாறு செய்கை
நெறியதன் றென்ன லோடும்' (கந்த. உருத்திரர். 40)

என்பதில் எதுகையிலேயே நீங்களென்பது வந்திருக்கின்றதே” என்றார். அதனைக் கேட்ட முதலியாரவர்கள், “தம்பி! உங்களுக்கு ஞாபகமுள்ளது எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லையே. ஒரு சொல்லின் உருவத்தைப் புலப்படுத்துவதற்குரிய மேற்கோள்களை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பது வியக்கத்தக்கதே!” என்று பாராட்டினார்.

திரிசிரபுரம் மீண்டது

இவ்வாறு சற்றேறக்குறைய ஒருவருட காலம் இவர் சென்னையில் இருந்தார். பின்பு லட்சுமண பிள்ளையினுடைய வழக்கு முடிவடைந்தமையினாலும் தாம் வந்து பல நாட்களானமையினாலும் இவர் திரிசிரபுரத்திற்குப் புறப்பட்டுச் செல்ல எண்ணினார். சென்னையிலுள்ள பல பண்டிதர்களைப் பிரிவது இவருக்குத் தாங்கொணா வருத்தத்தை உண்டாக்கியது. சபாபதி முதலியார் முதலியவர்களுக்கும் இவரிடம் பாடங்கேட்ட மாணவர்களுக்கும் இவர் பிரிவு அவ்வாறே இருந்தது.

“உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்”

என்பது உண்மையன்றோ? அப்பால் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரிதிற் சென்னையை விட்டுப் புறப்பட்டார். சபாபதி முதலியார் இவரைப் பார்த்து, “உங்களுடைய பிரிவை நினைந்தால் மனம் கலங்குகின்றது. உங்களுடைய அருமை பழகப் பழக அதிகமாக விளங்கியது. உங்களால் தமிழுலகம் பெரும் பேறடையப் போகின்றதென்பதை நினைந்து என் நெஞ்சம் அளவற்ற மகிழ்ச்சியை அடைகின்றது. இறைவன் உங்களுக்குத் தீர்க்காயுளையும் அரோக திடகாத்திரத்தையும் அளித்தருள வேண்டும். அடிக்கடி கடிதம் எழுத வேண்டும்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவர் போர்டு துரையென்பவர். அச்சங்கத்திற் பலர் தமிழ்ப்புலமை நடாத்தினதாக அக்காலத்து அச்சிட்ட நூல்களால் தெரிய வருகின்றது. அப்பொழுது இருந்த புலவர்களிற் சிலருடைய வரலாறும் பதிப்பித்த நூல்களும் வருமாறு:

தாண்டவராய முதலியார்: இவர் கல்விச் சங்கத்துத் தலைமைப் புலமையை 1839 – ஆம் வருடம் வரையில் நடத்தியவர். பின்பு வேறு உத்தியோகத்தில் நியமிக்கப்பட்டு விசாகப்பட்டணம் சென்றார். இலக்கண வினாவிடையென்னும் நூலொன்று இவரால் இயற்றப்பட்டு, 1826 – ஆம் வருடம் பதிப்பிக்கப் பெற்றது. இவர் நாலடியாரையும் திவாகரம் முதல் எட்டுத் தொகுதிகளையும் ஆராய்ந்து பதிப்பித்தற்குச் சித்தம் செய்தார். இச்செய்தி கீழ்வரும் அவர் கடிதத்தால் விளங்கும்:

ம-ள-ள- ஸ்ரீ கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளையவர்களுக்கு விஜ்ஞாபனம்:
நாம் அச்சிற் பதிப்பிக்கத்தொடங்கிய சேந்தன்றிவாகரத்தி லொன்பான்றொகுதி தொடங்குவதற்கு எனக்கு வாய்த்த வேறு தேயத்திருக்கையாலும், பிறிது கருமத்தைக் கருத்தினாலுந் தீண்டவொண்ணாக் கருமந் தலைப்படலாலும், நான் கருதியவாறு முற்றுவித்தற்கியலாத மற்றைத் தொகுதிகளையு மொருவாறு புதுக்குவித்துச் சேர்த்துப் புத்தகத்தை, நிறைத்து வெளிப்படுத்துவீராகவென்ற, என் வேண்டுகோளை மேற்கொண்டு அவற்றிலிரண்டாயினுஞ் சேர்த்தமைக்கு அகமகிழ்வுறாநின்றேன். மறவியால் விடுபட்ட சில பொருள்களுஞ் சொற்களும் பின்னர்ச் சேர்ப்பித்தற்பொருட்டு நான் முன் குறித்திருந்த குறிப்பே டெனக்குக் காணப்பட்டாற் காலந் தாழ்க்காமற் பயன்படுத்துவேன்.
இங்ஙனம்,

தாண்டவராய முதலியார்.
விசாகப்பட்டணம்

ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி 1839ஆம் வருடம்

இவரிடம் 22 மாணாக்கர்கள் பாடங் கேட்டு வந்தார்களென்றும் அவர்களில் தாமும் ஒருவரென்றும் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்னிடம் சொல்லியதுண்டு.
மதுரைக் கந்தசாமிப்புலவர்: கல்விச் சங்கத்திலிருந்தவர்; ஸ்மிருதி சந்திரிகை முதலியவற்றைத் தமிழில் இயற்றியவர். அந்நூல் 1825 – ஆம் வருஷம் பதிப்பிக்கப்பெற்றது.

பு.நயனப்ப முதலியார்: இவர் அந்தச் சங்கத்து வித்துவானாக இருந்தவர்; தாண்டவராய முதலியாருடைய அநுமதிப்படி திவாகரம் 9, 10 – ஆம் தொகுதிகளைப் பரிசோதித்தளித்தவர்.


இராமசாமிப் பிள்ளை: கல்விச் சங்கத்துப் புத்தக பரிபாலகர் (Librarian) ஆக இருந்தவர்; தாண்டவராய முதலியாராற் பரிசோதிக்கப்பட்ட திவாகரத்தை 1839 – ஆம் வருஷத்திற் பதிப்பித்தவர். இவர் ஊர் கொற்றமங்கலம்.


இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர்: இவர் வின்ஸ்லோ அகராதி பதிப்பிக்கும்பொழுது உடனிருந்து சகாயஞ்செய்தவர்களுள் ஒருவர். இவர் பரிசோதித்தும் உரையெழுதியும் பதிப்பித்த நூல்களிற் சில:

திருக்குறள் பரிமேலழகருரை – பதிப்பித்த வருடம் 1840
நன்னூல் விருத்தியுரை – பதிப்பித்த வருடம் 1845
கொன்றை வேந்தன் – பதிப்பித்த வருடம் 1847
இலக்கணச் சுருக்கம் – பதிப்பித்த வருடம் 1848
ஆத்திசூடி, வெற்றிவேற்கை

இயற்றமிழாசிரியர் விசாகப் பெருமாளையர்: கல்விச் சங்கத்துத் தமிழாசிரியர்; இலக்கணம் விசாகப் பெருமாள் கவிராயரெனவும் வழங்கப்படுவர்.

மழவை மகாலிங்கையர்: தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரையைப் பதிப்பித்தவர் – வருஷம் 1847.

2.  இவர் சென்னையில் கோவிந்தப்பன் நாயக்கன் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இருந்து விளங்கியவர்.

3.  இவர் கச்சியப்ப முனிவர் சென்னையிலிருந்து விநாயக புராணத்தை அரங்கேற்றிய பொழுது சிறப்புப்பாயிரம் அளித்த பெரியார்களுள் ஒருவர்.

4.  இவர் கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்து பின்பு சென்னை இராசதானிக் கலாசாலையிலும் அவ்வேலையில் இருந்தவர்.

5. “சென்னபட்டணம் போய்ச் சேர்ந்தவுடன் பைபில் அச்சிடுவதற்காகப் பார்சிவல் வந்தாரென்று கேள்விப்பட்டு அங்குள்ள மிசியோனாரிமார் (Missionaries) அவரிடத்திலே வந்து, யாழ்ப்பாணத்திலே தமிழ்க்கல்வி குறைவாதலானும், செந்தமிழ் பேசுவோர் அரியராதலானும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பண்டிதரால் திருத்தப்பட்ட பைபில் இங்குள்ள பண்டிதர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவர்கள் பிழை இல்லை என்றும் வசன நடை நன்றாயிருக்கின்றதென்றும் சொல்வார்களாயின் அச்சிற் பதிப்பிக்கலாமென்றும், அப்படிச் செய்யாது அச்சிற் பதிப்பிக்கின் நாங்கள் அதனை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் சொல்லிப் போயினர்.

“இவைகளைக் கேட்ட மாத்திரத்தே பார்சிவல் மனம் தைரியவீனப்பட்டுத் தமது பண்டிதரை (ஆறுமுக நாவலர்) நோக்கி ‘நாங்கள் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு சீக்கிரம் போய்விடலாமென்று வர இங்கே தடையுண்டு பட்டிருக்கின்றதே. நாங்கள் அவர்கள் சொல்லுக்குச் சம்மதித்து இங்குள்ள பண்டிதர் முன்னிலையில் வாசித்தால் அவர்கள் பிழையென்று சொல்லுகிறார்களோ சரியென்று சொல்லுகிறார்களோ தெரியவில்லையே, பிழையென்றாவது வசன நடை நன்றாயில்லையென்றாவது சொல்வார்களாயின், நமக்கெல்லாம் அவமானம் நேரிடுமே’ என்று சொல்லினர். பண்டிதர் அதற்கு உத்தரமாக, ‘நாங்கள் திருத்திய பைபிலில் ஒரு பிழையுமில்லை; வசன நடையும் நன்றாயிருக்கின்றது. அப்படியிருக்க அவர்கள் குற்றமேற்றுவார்களாயின் அதிலே ஒரு குற்றமுமில்லையென்று பல பிரமாணங்கொண்டு தாபித்து எங்களாலே திருத்தப்பட்டபடியே அச்சிடுவிப்போம். ஆதலால் அவர்கள் கருத்துக்கிசைந்து யாழ்ப்பாணத்திலும் செந்தமிழ் உண்டெனத் தாபித்தலே தகுதி’ என்று சொன்னார். அவர்கள் கேள்விக்கு இவர்கள் உடன்பட்டபோது அவர்கள் அதனைப் பார்வையிடும்படி அக்காலத்திலே சென்னபட்டணத்தில் சிறந்த வித்துவானாயிருந்த மகாலிங்கையரை ஏற்படுத்தினார்கள். மகாலிங்கையர் பைபில் முற்றும் வாசித்து அதிலே பிழையில்லையென்றும், வசன நடை நன்றாயிருக்கிறதென்றும், இந்தப் பிரகாரம் அச்சிடுதலே தகுதியென்றும், அவர்களுக்குச் சொல்லி யாழ்ப்பாணத்துத் தமிழையும் நன்கு பாராட்டி, வியந்தனர்” – கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஆறுமுக நாவலர் சரித்திரம், 1882; ப. 14-6.

6. இவர் இயற்றிய நூல் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.

7. காவை – திருவானைக்கா.

8. இச்செய்தி, நான் கும்பகோணம் காலேஜில் வேலையை ஏற்றுக் கொண்ட தினத்தில் ஸ்ரீ தியாகராச செட்டியாரவர்கள் தமக்குப் பிள்ளை யவர்களே சொல்லியதாகக் கூறியது.

9. அவர் பதிப்பிலும் அதனைப் பின்பற்றி அச்சிடப்பெற்ற பிற்பதிப்புக்கள் சிலவற்றிலும் ‘நீர்கள்’ என்றேயிருத்தலை இன்றும் காணலாம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s