– சுவாமி விமூர்த்தானந்தர்

1897-ஆம் ஆண்டு. மேற்கு வங்கத்தில், கொல்கத்தா நகரில் பிளேக் நோய் கொரோனா தொற்றைப் போன்று பயங்கரமாகப் பரவிக்கொண்டிருந்தது.
மக்களுக்கு ஆன்மிகத்தைப் போதித்து வந்த சுவாமி விவேகானந்தர் ‘இது எல்லாம் மாயை. மக்கள் கஷ்டப்படுவது அவர்களது தலைவிதி’ என்றெல்லாம் பேசவில்லை.
ஜபமாலை உருட்டிக்கொண்டிருந்த அவரது சீடர்கள் உடனே துடைப்பத்தை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாகச் சுத்தம் செய்தார்கள். பிளேக் வந்ததற்கு சுத்தமின்மை தான் முக்கிய காரணம் என்பதால், அந்தப் பணியை சுவாமிஜி ஆரம்பித்தார். அடுத்து ஏழை மக்களுக்கு தங்குவதற்கும் உணவுக்கும் பெரும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
சுவாமிஜி அதற்காகப் பலரிடம் நிதி வேண்டி முயன்றார். ஆனால் வேண்டிய அளவிற்கு நிதி வரவில்லை. பாமரர்களின் சேவையே பகவானின் சேவை என்று முழங்கிய சுவாமி விவேகானந்தர் உடனே ஒன்றைக் கூறினார். தேவைப்பட்டால்,சில மாதங்களுக்கு முன்னர் தான் மிகுந்த சிரமத்துடன் வாங்கியிருந்த ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான பேலூர் மடத்தை விற்க எண்ணினார். அந்தப் பணத்தைக் கொண்டு மக்கள் சேவைக்குப் பயன்படுத்தலாம் என்று அவரது தாயுள்ளம் நினைத்தது.
நாம் துறவிகள், ஏதோ மரத்தடியில்கூட நாம் தங்கி வாழ்ந்து விடலாம். ஆனால் மக்கள் துன்பப்படக் கூடாது என்றுதான் தாய்மையுணர்வு கொண்ட அந்தத் துறவியின் தொண்டுள்ளம் துடித்தது.
இப்படிப்பட்ட சமயக்குரவர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், ஆதீனங்கள் வாழ்ந்த புண்ணிய பூமி நம் பூமி.
ஆனால் இன்று பல மடங்களில், தேவாலயங்களில், சர்ச்சுகளில் பல்வேறு மதத் தலைவர்களிடம் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அவர்களது நிர்வாகத்தின் கீழ் பல கோயில்கள், கல்வி நிலையங்கள், ஏக்கர் கணக்கில் நிலங்கள் போன்றவை இருக்கின்றன.
பொதுவாக, அப்படிப்பட்ட நிர்வாகத்தின் கவனமெல்லாம் அசையா சொத்துக்கள் மீதே இருப்பதால், அவர்களது இடங்களில் மண்டிக் கிடக்கும் சோம்பலையும் சுயநலத்தையும் அந்த நிர்வாகத்தால் அசைக்க முடியவில்லை.
மடத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பது தனது முதற் கடமை என்பார் மடத்து நிர்வாகி. இந்தச் சிக்கலான பொறுப்பினைச் சுமப்பதால் பல மடாதிபதிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தாங்கள் செய்ய வேண்டிய காரியங்களை மறக்க வேண்டியிருக்கிறது, அல்லது புறந்தள்ள வேண்டியிருக்கிறது. அன்றாட அலுவல்கள், அன்றாடப் புலம்பலாக மாறி, மடங்களும், தேவாலயங்களும் தொய்வு நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இதுபோன்ற பெரும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்னமே ராமேஸ்வரத்தில் உரையாற்றியபோது கூறியது மிகவும் முக்கியமானது:
"சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவரது பிள்ளைகளாகிய உயிர்கள் அனைத்திற்கும் சேவை செய்ய வேண்டும். கடவுளின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே அவரது மிகச் சிறந்த தொண்டர்கள் ஆவார்கள்."
இதைப் படித்தவுடன் சமயத் தலைவர்கள் பலரும், தாங்கள் எவ்வாறு தங்கள் நிலையில் இருந்து இறங்கி மக்களுக்குச் சேவை செய்வது என்று யோசிப்பார்கள், அல்லது கேள்வி கேட்பார்கள்.
மடம் என்பது என்ன? நூற்றாண்டுகளாக உள்ள சம்பிரதாயத்தை எப்படிப் பாதுகாப்பது? மடத்தின் ஆன்மிகப் பொக்கிஷங்களை எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது போன்றவற்றைப் புரிந்து கொண்டால், சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்தின் ஆழம் புரியும்.
மடத்தின், கோயிலின், தேவாலயத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பது மட்டும் நிர்வாகமல்ல. அதைவிட முக்கியமான, புனித பாரம்பரியத்தைப் பராமரிப்பதும் மடத்தின் நிர்வாகக் கடமை ஆகும்.
தர்ம நிர்வாகம்
முழுமையான மடத்து நிர்வாகம் என்பது என்ன? பக்தர்கள் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தைப் பற்றிய பிரசாரத்தைத் தொடர்ச்சியாக, பக்தர்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் வகையில் மடத்தின் நிர்வாகம் சொல்லிக் கொண்டிருப்பதுதான் தர்ம நிர்வாகம்.
தார்மிகம் மற்றும் இறைவனை முன்னிலைப்படுத்திய வாழ்க்கையைப் பற்றிப் பக்தர்களுக்கு உபதேசிக்காமல், சமயச் சிந்தனைகளை மட்டும் அவர்களிடத்தில் அலசிக் கொண்டிருப்பதில் அதிகப் பலனில்லை. தத்துவங்களைப் பற்றி எடுத்துச் சொல்லாமல் சடங்குகளைப் பிரதானப்படுத்துவதும் பக்தர்களுக்கு ஆற்றும் சிறந்த தொண்டாக இருக்க முடியாது.
உணர்வுள்ள சமயச் சடங்கு, அருளாளர்கள் காட்டிய அந்தந்த மார்க்கத்தின் தத்துவங்கள், சிறந்த பக்தர்கள் காட்டிய பக்திநெறி, மிக முக்கியமாக மானுட சேவை- இவை அனைத்தும் சேர்ந்தால்தான் சமய வாழ்க்கை முழுமையாகும். இது விவேகானந்தர் காட்டிய வீரியமான சமய நெறி.
மடத்தின் ஆணிவேரும் பக்க வேர்களும்
பக்தர்கள் அல்லது அன்பர்கள் அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனின் பார்வையில் இருந்து காரியங்கள் ஆற்ற வேண்டும். தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் கொண்டு தனக்கும் பிறருக்கும் பயன்படும் வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவை மடத்திற்கு வரும் அன்பர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்தத் தொய்வில்லாத முயற்சியில் மடத்துத் தலைவர்கள் பக்தர்களுக்கு ஆணிவேராக இருக்க வேண்டும். அந்த நிலையில் மடத்தின் நிர்வாகத்திற்கு ஒரு பிரச்னை என்றால் அந்தப் பக்தர்களே நிர்வாகத்திற்கு விசுவாசமாக, மடத்தின் அரணாக, பக்க வேர்களாக மாறுவார்கள்.
ஒருமுறை சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் ரயிலில் பயணம் செய்தார். அப்போது பயறு விற்றுவந்தார் ஒருவர். அவரிடம் ஓர் அணாவிற்கு அல்ல, ஒரு ரூபாய்க்கு பயறினை வாங்கி அந்தச் சிறு வியாபாரியின் வியாபாரத்தை விவேகானந்தர் பெருக்கினார். எல்லா மக்களும், குறிப்பாக அடித்தட்டு மக்களும் முன்னேற வேண்டும் என்பது விவேகானந்தரின் வெற்றி மந்திரம்.
அப்படிப்பட்ட சுவாமிஜி, கண்ணீரோடு அன்றைய ஆட்சியாளர்களிடம், அரசர்களிடம், மடாதிபதிகளிடம், பணக்காரர்களிடம், அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொண்டதெல்லாம் இதுதான்:
'பாமர மக்களைப் புறக்கணிக்காதீர்கள். தரித்திரத்தை அவர்களிடமிருந்து நீக்குங்கள். அவர்களுக்குக் கல்வி கொடுங்கள். ஏனெனில் அவர்கள் நாராயணர்கள்- தெய்வங்கள் -தரித்திர நாராயணர்கள்.'
இவ்வாறு புழுவாக நெளிந்த பாமரர்களை பரமனின் அம்சமாகப் பார்க்கக் கற்றுத் தந்தார் சுவாமிஜி.
ஆனால் அதிகாரம் படைத்த அல்லது அதிகாரத்தைப் பிடித்துக்கொண்ட அல்லது அதிகாரத்தில் சிக்கிக்கொண்ட சமய ஆட்சியாளர்கள், தரித்திர நாராயணர்களை ஒதுக்கினார்கள்; புறம் தள்ளினார்கள்.
விளைவு? அந்த நல்ல பாமரர்கள் ஒதுக்கப்பட்டதால் ஒரு காலகட்டத்தில் சொந்தப் பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும், சொந்த மதத்திலும், சொந்த மக்களிடமும் முரண்பட ஆரம்பித்தார்கள்; முரடர்களாக மாறினார்கள். நேற்றுவரை இருந்த பண்பாட்டிலும் மக்களிடத்தும் சமயத்திலும் மண்ணிலும் பெருமை கொண்டவர்கள், இன்று மனம் மாறி, மதம் மாறி சொந்த விஷயங்களை எதிர்க்கிறார்கள்; ஏளனம் செய்கிறார்கள்; ஆதங்கத்துடன் வெறுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். மத வியாபாரிகளிடம் சிக்கித் தவிக்கிறார்கள்.
நான்கினை ஆறாக்கினார்!
இந்த நிலை வரும் என்று முன்னமே தெரிந்த சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் கூறப்பட்ட நம் முன்னோர் சொன்னதை இன்னும் வளர்த்தார்.
‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ!’ இது ஹிந்து சமயப் பண்பாடு. ஆனால் காலத்தின் தேவையால், சமுதாயத்தின் மற்றும் ஹிந்து சமயத்தின் வளர்ச்சிக்காக மேற்கூறிய நான்கினை சுவாமிஜி மேலும் விரிவுபடுத்தினார்.
அன்னை, தந்தை, ஆச்சாரியர், விருந்தினர்களை தெய்வமாக வழிபட வேண்டும் என்பதோடு மேலும் இரண்டையும் சேர்த்தார் விவேகானந்தர். ‘தரித்ர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ’ என்று அவர் கூறி, நமது கவனத்தை மேலும் ஆழப் படுத்தினார்.
இதன் பொருள் என்ன? பாமரர்களையும் ஏழைகளையும் படிப்பறிவற்றவர்களையும் கவனிக்காவிட்டால், அவர்களுக்குத் தங்கள் பண்பாட்டிலும் சமயத்திலும் சரியான பயிற்சியும் ஞானமும் தராவிட்டால் அவர்கள் மூர்க்கர்கள்- முரடர்கள் ஆகி விடுவார்கள். ‘ஈயைக் கருடனில் ஏற்றுவோம்’ என்று மகாகவி பாரதியார் முழங்கியது ‘விவேகானந்த விட்டமினை’ உள்வாங்கியதால்தான்!
அவ்வாறு அவர்கள் முரடர்களாக மாறுவதற்கு முன் அவர்களை அரவணைத்து, அன்பு புகட்டி, அறிவு வழங்கி, ஆற்றல்மிக்க சக மனிதர்களாக மாற்றிக்கொள்ளுங்கள் என்பதே மகிமை மிக்க சுவாமி விவேகானந்தரின் உபதேசம்.
நமது மடங்களும் ஆன்மிகத் தலைவர்களும் பொறுப்புள்ளவர்களும், பாமரனைப் புறக்கணிக்காதே என்ற இந்த ஒன்றை மட்டும் கடைப்பிடித்திருந்தால், இன்று நமது மக்கள் வளர்ச்சியை நோக்கியே தங்களது பார்வையைச் செலுத்தி இருப்பார்கள். மதத்தாலும் சாதியாலும் இன்று பல பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவலம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
மரியாதைக்குரிய மடாதிபதிகள் தர்ம நிர்வாகம் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் துறவிகளை நம் முன்னோர் மடாதிபதி ஆக்கினார்கள். இதைப் புரிந்து கொள்ளாததால்தான், உயில் கட்டுகளையும், காசோலைக் கட்டுகளையும், வழக்குக் கட்டுகளையும் மட்டுமே கவனித்துக் கொள்ளும் அவல நிலை சிலருக்கு வந்துவிடுகிறது.
தாய், தந்தை, குரு, விருந்தினர்களையும் வணங்கு. அத்துடன் பாமரர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் மறக்காதே. படிக்காத அல்லது படிக்க வசதியை ஏற்படுத்தித் தராத பாமர சமூகத்தைக் கவனிக்காவிட்டால் அது முரட்டுக் கூட்டமாக மாறிவிடுகிறது.
இந்த வரலாற்று உண்மையை நமக்கு சுவாமிஜி 125 ஆண்டுகளுக்கு முன்னமே தமிழகத்தில் உரைத்த சொற்பொழிவுகள் மூலமாகக் காட்டிக் கொடுத்துவிட்டார்.
இந்த வரலாற்றுப் பிழையை நமது ஹிந்து சமுதாயம் புரிந்துகொண்டு பிழைத்திருத்தம் செய்து கொள்ளுமா?
குறிப்பு: இக்கட்டுரை ‘தினமணி’ நாளிதழில் (07.03.2022) வெளியானது, இங்கு மீள்பதிவாகிறது.
$$$