பாரதி- அறுபத்தாறு (11-14)

-மகாகவி பாரதி

பாரதி அறுபத்தாறு (11-14)

பொறுமையின் பெருமை


திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
      திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர்.
      செந்தமிழ்கண் டீர், பகுதி’தணி’யெ னுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
      ‘பொறுத்தவரே பூமியினை ஆள்வார்’என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
      அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்!       11

பொறுமையினை, அறக்கடவுள் புதல்வ னென்னும்
      யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்.
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்
      ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே;
பொறுமை யின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
      போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு
      மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்       12

ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
      அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றொ?
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?
      செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்;
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
      ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
      ”நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்”என்றான்.       13

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்!
      கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம், அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
      அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
      கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
      கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே.       14

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s