-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
80. பக்தனுக்காக நடனப் பயிற்சி
.
ஏஷ்யத்யேஷஜனிம் மனோsஸ்ய கடினம் தஸ்மிந்நடானீதி
மத்ரக்ஷாயை கிரிஸீம்னி கோமலபத– ந்யாஸ: புராப்யாஸித:/
நோசேத்திவ்ய க்ருஹாந்தரேஷு ஸுமனஸ்-தல்பேஷு வேத்யாதிஷு
ப்ராயாஸ்ஸத்ஸு சி’லாதலேஷு நடனம் ச’ம்போ கிமர்த்தம் தவ//
.
இவன்பிறப்பான் இவன்மனது கடினமதில் ஆடுவேனென
அவனன்றே மென்பாதம் மலைமீதே பயின்றானே
அதுவன்றேல் உயர்வீடு மலர்படுக்கை நன்மேடை
பலவிருக்க கல்நிலத்தில் ஆடுவதென் காரணமே?
.
முந்தைய ஸ்லோகத்தில் மென்மையான சிவனின் திருப்பாதங்கள், எமனின் முரட்டு மார்பை எப்படி மிதித்தன? என்று வியந்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தனின் மனம் பல்வேறு எண்ணங்களாலும், அனுபவத்தாலும் கடினமாகத் திகழ்கிறதே, அதில் எப்படி அவர் நடனமிடுவார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலையும் தருகிறார்.
.இந்த உயிர், மனிதனாகப் பிறக்கப் போகிறது. இந்த மனிதனின் மனதோ மிகவும் கடினமானது. அப்படி இருந்தாலும், அவனது உள்ளத்திலே நான் நடனமாடுவேன் என்று சிவபெருமான் சங்கல்பித்து விட்டாராம் (உறுதி எடுத்துவிட்டாராம்). ஆகையினால்தான், இப்படிப்பட்ட கடின மனதுடைய பக்தர்களின் மனத்திலும் நடனமாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் செயலை சிவபெருமான் செய்து வருகிறார். அப்படி என்ன செய்கிறார்?
உயர்ந்த தன்மை வாய்ந்த சிறந்த மாளிகைகள், மலர் நிறைந்த படுக்கைகள், மிக அருமையான மேடை ஆகியவற்றில் எல்லாம் நடனமாட சிவபெருமானுக்கு வசதிகள் இருந்தும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, தமது மென்பாதங்களைக் கொண்டு கற்கள் நிறைந்த இமயமலை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் அல்லவோ அவர் விருப்பத்துடன் நடனமாடுகிறார்? இதற்கு என்ன காரணம்? என்னைப் போன்ற கடின மனதுடைய பக்தர்களின் மனங்களிலேயும் நடனமிட வேண்டும் என்று அவர் திருவுள்ளம் கொண்டதால் அல்லவோ, கல் நிலத்தில் இதுபோன்ற நடனப் பயிற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்? என்று கேட்கிறார் பகவத்பாதர்.
.உறுதியான பக்தி இருந்தால் போதும், எப்படிப்பட்ட கடின மனதுடையவனாக இருந்தாலும் அவனது மனத்திலே நடனமிட்டு அவனை உயர்த்துவதற்காக சிவபெருமான் வந்தருள்வார் என்பதை இங்கே திண்ணமுறச் செப்புகிறார் ஆதி சங்கரர்.
$$$