-உ.வே.சாமிநாதையர்

6. திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி முதலியவற்றை இயற்றியது
லட்சுமணபிள்ளை யென்பவரின் இயல்பு
திரிசிரபுரத்தில் இவரை ஆதரித்தவர்களுள் ஒருவராகிய லட்சுமண பிள்ளை யென்பவர் தமிழ் நூல்களில் அபிமானம் உடையவர்; செய்யுள் நயங்களை அறிபவர்; படித்தவர்களைத் தேடிப் போய் வலிந்து உபசரிப்பவர். அவர் இக் கவிஞர்பெருமானுடைய சிறப்பையும், இவர் பல இடங்களிலுள்ளவர்களாலும் போற்றப்பட்டு வருதலையும் அறிந்து ஏனையோர்களைக் காட்டிலும் மிக்க அன்புடன் இவரை ஆதரித்துவந்தார். நாளடைவில் இவருடைய கல்வித்திறமையில் ஈடுபட்டு இவருக்கு வேண்டிய பலவகை அநுகூலங்களையும் செய்து வந்தார்.
திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி
இவ்வாறு இருந்து வருகையில் பிள்ளையவர்கள் திருப்பைஞ்ஞீலிக்குச் சில அன்பர்களுடன் ஒருமுறை சென்றிருந்தார்; அப்பொழுது உடன்சென்றவர்களும் அங்கேயுள்ளவர்களும் அந்தத் தலசம்பந்தமாக ஒரு பிரபந்தம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். பல திரிபு யமக அந்தாதிகளை வாசித்த பழக்கத்தாலும் வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பல திரிபுயமகப் பாடல்களின் உரையையும் அவற்றின் போக்கையும் அறிந்து கொண்ட வன்மையாலும் திரிபுயமகங்களைத் தாமும் பாட வேண்டுமென்னும் அவாவுடையவராக இருந்துவந்தனராதலின் அவர்கள் விருப்பத்திற்கிணங்கி அத் தலத்திற்கு ஒரு திரிபந்தாதி சில தினத்தில் இவராற் செய்யப்பெற்றது.
அது மிக எளிய நடையில் அமைந்துள்ளது. இடையிடையே அகப்பொருட்டுறைகளுள்ள பாடல்கள் காணப்படும். அவற்றுள், பாங்கிவிடு தூது, அன்னவிடு தூது, கிள்ளைவிடு தூது, வண்டுவிடு தூது, நாரைவிடு தூது, மேகவிடுதூது முதலியவை உள்ளன. தலத்தின் பெயராகிய கதலிவனமென்பதை, 21-ஆம் பாடலில் திரிபிலமைத்துப் பாடியிருத்தல் கருதற்குரியது. சிவபெருமான் திருநாமங்களாகிய, ‘சங்கரனே’ (29), ‘சிவசம்பு’ (42) என்பனவற்றைத் திரிபிலமைத்துப் பாடியுள்ளார்.
"வினை வாட்டுதலின், உருத்தா மரைபடுவேனை” (1),
"அருமந்த கல்வி" (36),
"மதனப் பயல்” (62)
என்றவிடங்களில் உலகவழக்குச் சொற்கள் அமைந்து மிக்க இன்பத்தைச் செய்கின்றன. உவமான சங்கிரகம் முதலிய இலக்கண நூல்களில் எடுத்தோதப் பெற்றனவாகிய, கூந்தல் முதலியவற்றிற்குக் கொன்றைக்கனி முதலிய உவமைகளை அங்கங்கே காணலாம்.
*1 "அத்தத்தி லங்குச பாசமுள் ளாற்கத் தனைவினையேன்
சித்தத் திலங்கும் பரனைப்பைஞ் ஞீலியிற் சென்றுதொழார்
கத்தத் திலங்குழைப் பார்போல் யமன்கசக் கத்திரிபட்
டுத்தத் திலங்கு மிழிந்திங்குந் தோன்றி யுலைபவரே" (52)
என்ற செய்யுளில் யமனுக்கு எள்ளாட்டுவாரை உவமை கூறியிருத்தல் பாராட்டற்குரியது. முன்னோர் மொழி பொருளை இடத்திற்கேற்ப அங்கங்கே எடுத்தாண்டதன்றி இக்கவிஞர்பிரான், “இலங் கயிலாதரன்” (திருவரங்கத்தந்தாதி) என்பதிலுள்ள அயிலாதரனென்ற சொல்லை, “எல்லையிலாதரன்றந்தாய்” (55) என்றவிடத்தும், “அந்தகா வந்துபார் சற்றென் கைக்கெட்டவே” (கந்தரலங்காரம்) என்ற தொடரை “அந்தகா வந்து பாரொரு கையினியே” (71) என்றவிடத்தும், “அவனிவனென் றெண்ணி யலையா திருத்தி” (அழகர் கலம்பகம், 2) என்பதை, “அவனிவனென் றலையாம னெஞ்சே” (86) என்றவிடத்தும் அமைத்து அவர்கள் சொல்லையும் பொன்னே போற் போற்றினமை அறிந்து இன்புறற்குரியது. இந் நூலிலுள்ள சில சுவையுள்ள பாடல்கள் வருமாறு:-
*2 1."அத்தனை வாம்பரி யேற்றனை நீலி வனத்தமர்ந்த
நித்தனை வாவென்றென் குற்றே வலுங்கொ ணிருமலனைக்
கத்தனை வாய்மன மெய்யாற் றொழார்முற் கருமங்கணூல்
எத்தனை வாசித் திருக்கினு நீங்குவ தேதவர்க்கே." (19)
*3 2. "வருந்தா ரெனமகிழ்ந் தேனிற்றை ஞான்று வரையுஞ் சும்மா
இருந்தா ரனுப்புத லின்றிவண் டீரின்று போய்ச்சொலுங்கோள்
பெருந்தா ரணிபுகழ்ந் தேத்தும்பைஞ் ஞீலிப்பெம் மானுக்குத்தேன்
திருந்தார் முடியுடை யாருக்குத் தேவர்தந் தேவருக்கே." (60)
*4 3. "எண்ணா தவனன் பொடுநின் பதத்தையென் றாலுமெனை
உண்ணாத வன்னஞ்ச முண்டது போல வுவந்தருள்வாய்
விண்ணாத வன்கதிர் தோற்றா வரம்பை வியன்வன முக்
கண்ணா தவனன் குடையார் மனத்துறை காரணனே." (69)
இந்நூலுக்குரிய சிறப்புப்பாயிரப் பாடல்
*5 மறைநூ றுகளை யறவோர்ந்து ளாரு மகிழ்ந்துபவக்
கறைநூறு மாறுணர்ந் துய்ந்திடு மாறு கயிலையொப்ப
உறைநூறு மாடங்கொள் பைஞ்ஞீலி நாதற் குவந்துகலித்
துறைநூறு சொற்றனன் மீனாட்சி சுந்தரத் தூயவனே”
என்பது. இதனை இயற்றினவர் இன்னாரென்று தெரியவில்லை.
திருவானைக்காத் திரிபந்தாதி
பிரபந்தம் இயற்றும் ஆற்றல் இவர்பால் இவ்வாறு நாடோறும் பெருகி வந்தது. ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பெற்று வந்த பிரபந்தங்கள் பல வரவரச் சுவைகளில் வளர்ச்சியுற்று வந்திருத்தலைக் காணலாம். இக் கவிஞருடைய இருபத்தாறாம் பிராயத்திலே இவை நிகழ்ந்தன. திரிபந்தாதியொன்று திருவானைக்காவிற்கும் இவரால் அப்பொழுது இயற்றப்பெற்றதென்பர். அந் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.
திருச்சிராமலை யமக அந்தாதி
திரிபந்தாதிகள் சிலவற்றை இயற்றிய பின்னர் யமக அந்தாதி இயற்றத் தொடங்கினார். முதலிலே தாம் வாழ்ந்துவரும் திரிசிரபுர விஷயமாகவே ஒன்று இயற்றினார். அது திரிசிராமலை யமக அந்தாதியென வழங்கும். இவர் அந்த அந்தாதியை நன்கு ஆய்ந்து சுவை பெறச்செய்ய வேண்டுமென்னும் நோக்கமுடையவராக இருந்தார். இளமைப்பருவத்துப் பாடியதாதலின் அந் நூலுக்கு முன் ஆர்வமிகுதியால், விநாயகக் கடவுள், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ மட்டுவார்குழலம்மை, ஸ்ரீ செவ்வந்தி விநாயகர், முருகக்கடவுள், கலைமகள், திருநந்திதேவர், சைவசமயாசாரியர் நால்வர், சண்டேசுர நாயனார், மற்றைத் திருத்தொண்டர்கள், சேக்கிழார் முதலியோர்களை வாழ்த்திப் பதினொரு செய்யுட்களையும் அவையடக்கமாக ஒன்றையும் நூதன முறையாகப் பாடியுள்ளார். பிற அந்தாதிகளில் இம்முறை இல்லை.
“கங்காதர” (8), “அப்பாசிராமலையாய்” (21), “கந்தரத்தா” (25), “கையிலாய னம்பன்” (44), “பகவகங்காள” (99) என வரும் சிவபெருமான் திருநாமங்களையும், “குந்தனஞ் சந்தனம்” (35) என வரும் வழியெதுகையையும், “தரங்கந் தரங்கம்” (38) என்ற மடக்கையும் யமகத்திற் பொருத்திப் பாடியிருப்பது அறிந்து மகிழ்தற்குரியது. இடையிடையே திருவிளையாடற் புராணச் செய்திகளையும் நாயன்மார்கள் வரலாறுகளையும் காணலாம்.
அந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:-
*6 1."கலக்கந் தரமட வார்மயல் வாரி கலந்தவென்முன்
கலக்கந் தரவெஞ் சமன்வருங் காலங் கடுக்கைதப்ப
கலக்கந் தரநதி சூடுஞ் சிராமலை யாய்கன்னிபா
கலக்கந்தரநினை வேண்டிக்கொண்டே னெனைக் கண்டுகொள்ளே.”
*7 2. "ஆயாவப் பாலரி யம்பா சிராமலை யையநின்னை
யாயாவப் பானிற்கும் வெவ்வினைப் பட்டலைந் தேமனம்புண்
ணாயாவப் பார்சடை யாயுழல் வேற்குவை யச்சிலரை
யாயாவப் பாவென் றினிப்பிறந் தோத லதைத்தவிரே. " (60)
*8 3. "ஆவணங் காட்ட மதிக்கச் சுமக்கவப் போதுதெரி
யாவணங் காட்ட நரியையெல் லாம்பரி யாக்கமுதி
ராவணங் காட்டநம் மையன் சிராமலை யானைவைத்த
தாவணங் காட்டன்மை யாரன்பன் றேயி தறிமனமே." (89)
அந்த நூல் யாவராலும் நன்கு மதிக்கப்பெற்றது. அதற்கு முன்பு இவர் செய்த நூல்களெல்லாவற்றினும் சிறந்ததென்னும் பெருமை அதற்கு உண்டாயிற்று. அக்காலத்தில் இவருடைய அறிவின் ஆற்றல் எல்லோராலும் அறிந்து வியக்கப்பெற்றது. இச்செய்திகள்,
"பூவார் பொழிற்சிர பூதரம் வாழ்முக்கட் புண்ணியனாம்
தேவாதி தேவனுக் கந்தாதி மாலையைச் செய்தணிந்தான்
பாவார் தமிழின் றவப்பய னாவரு பண்புடையான்
நாவார் பெரும்புகழ் மீனாட்சி சுந்தர நாவலனே"
"தேன்பிறந்த கடுக்கையணி சடைப்பெருமான் றாயான செல்வ மாய்ச்சேர்
வான்பிறந்த தலப்பனுவல் பிறதலநூல் களினுமென்னே வயங்கு மென்னிற்
கான்பிறந்த குவளையந்தார் மீனாட்சி சுந்தரமா கவிஞர் கோமான்
தான்பிறந்த தலநூன்மற் றையதலநூ லினுஞ்சிறத்தல் சகசந் தானே?"
-என்ற அந்நூற் சிறப்புப்பாயிரங்களால் உய்த்துணரப்படும். இவற்றை இயற்றியவர்களின் பெயர்கள் இப்பொழுது தெரியவில்லை.
ஸ்ரீ அகிலாண்டநாயகி மாலை
இவர் சில அன்பர்களுடன் ஒரு தினம் திருவானைக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காகப் புறப்பட்டுக் காவிரியின் தென்பாலுள்ள *9 ஓடத்தில் ஏறியபொழுது உடனிருந்த சிதம்பரம்பிள்ளை யென்னுங் கனவான் இவரை நோக்கி ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் மீது ஒரு மாலை இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்; அப்பொழுது உடன் சென்றவருள் ஒருவர், “முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஒருமுறை வருவதற்குள் சோணசைலமாலையைப் பாடிமுடித்தது போல் நீங்கள் சம்புநாதரைத் தரிசனஞ் செய்து திரும்புவதற்குள் அம் மாலையைச் செய்வதற்கு இயலுமா?” என்று கேட்டார். இவர் நேருமானாற் செய்யலாமென்று சொல்லிப் பாடத்தொடங்கி, எழுதியும் எழுதுவித்துக்கொண்டும் சென்று கோயிலுக்குப்போய்த் தரிசனம் செய்த பின்பு, சில நாழிகை அங்கே ஓரிடத்தில் தங்கிப் பாடல்களைச் செய்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வீடுவந்து சேர்வதற்குள் அந்நூலை முடித்தனரென்று சொல்வார்கள்.
அம்மாலையிற் பலவிதமான கற்பனை நயங்கள் அமைந்துள்ளன. சிவபெருமானுக்கு இடப்பாகத்தில் அம்பிகை வீற்றிருக்கும் ஒரு செய்தியிலிருந்து கிளைத்த பலவகைக் கற்பனைகளும், நாயன்மார்களைப்பற்றியும் மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல்களைப்பற்றியும் உள்ள செய்திகளும் அதில் அங்கங்கே அமைவுற்றுச் சுவை நிரம்பி விளங்குகின்றன. தல சம்பந்தமான செய்திகளும் தற்குறிப்பேற்றவணியும் அம்மாலையை அழகு செய்கின்றன.
"பெருவள னமைந்த நீருரு வாய பெருந்தகை" (17)
"புண்ணிய வெள்ளை நாவலோ னாரம்
பூண்டவ னெனும் பெயர் புனைந்தான்" (64)
"ஒளிமிகு சம்பு லிங்கநா யகர்" (71)
என அத்தலத்துச் சிவபெருமானைப்பற்றிய செய்திகளையும்,
"இடையறா வன்பு பெருக்கிநீ பூசை யியற்றிட வினிதுள முவந்து
சடையறா முடியோ னுறைதரப் பெற்ற தண்ணிழ னாவலந் தருவோ" (30)
"சிலம்பி யியற்றுநூற் பந்தரு முவந்து புணரருள் புரிந்தான்" (60)
எனத் தலவரலாறுகளையும் –
"நினது பிறங்குபே ராலயஞ் சூழ்ந்த பொருவினீ றிட்டான் மதில்" (76)
எனத் திருநீறிட்டான் மதிலையும் பற்றி அங்கங்கே கூறியது இவர் திருவானைக்காப் புராணத்தைப் படித்துப் பல விஷயங்களை யறிந்தமையைப் புலப்படுத்துகின்றது.
அந்நூலிலிருந்து வேறு சில பாடல்கள் வருமாறு:-
"அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை யணியுருப் பாதியில் வைத்தான் *10 தளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச் சடைமுடி வைத்தன னதனாற் பிளவியன் மதியஞ் சூடிய பெருமான் பித்தனென் றொருபெயர் பெற்றான் களமர்மொய் கழனி சூழ்திரு வானைக் காவகி லாண்ட நாயகியே." (7) "உலகிடை யழுத பிள்ளைபால் குடிக்கு முண்மையென் றுரைப்பதற் கேற்ப இலகுசீ காழி மழவழ வளித்தா யின்முலைப் பாலழா விடினும் அலகற விரங்கி யளிப்பவ ரிலையோ வத்தகு மழவுயா னருள்வாய்." (28) *11 "அம்பலத் தாட வெடுத்ததா டுணையென் றறைவனோர் கான்மலை யரையன் வம்பலர் முன்றிற் றிருமணத் தம்மி வைத்ததா டுணையென்ப னோர்காற் செம்பொரு டுணியா னென்றெனை யிகழேல் தேர்ந்தொரு வழிநின்றே னன்னே கம்பலர்த் தடஞ்சூழ் தருதிரு வானைக் காவகி லாண்டநா யகியே." (73)
அந்த நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் நயம் அமைந்திருப்பதைக் கண்ட யாவரும் இவ்வளவு விரைவில் இத்துணைச் சுவை மிக்க செய்யுட்களைப் பாடிய இவர் இறைவன் திருவருள் பெற்றவரேயென எண்ணி வியந்தனர். சிதம்பரம் பிள்ளை இவருக்குத் தக்க ஸம்மானம் செய்தார்.
அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்
பின்பு இவர் லட்சுமண பிள்ளை கேட்டுக்கொள்ள அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழை இயற்றினார். இவர் இயற்றியவற்றுள் முதற் பிள்ளைத்தமிழ் அதுவே. பல சுவைகளும் மிகுந்து அது விளங்குகின்றது. “தாங்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு” என்பதற்கிணங்க இவர் அதுகாறும் கற்ற நூல்களிலுள்ள பல கருத்துக்களும் கற்பனைகளும் அதிலமைந்துள்ளன. புதிய புதிய கற்பனைகளும் அதில் மலிந்து விளங்கும்.
முதன்முதலாகப் பிள்ளைத்தமிழை இயற்றத் தொடங்கிய இக்கவிஞர்பெருமான் தம் முயற்சிக்கு இடையூறு நேராமற் காக்கும் பொருட்டு விநாயகர், பரமசிவம், பராசத்தி, விநாயகர், சுப்பிரமணியக் கடவுள், நந்திதேவர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக ஸ்வாமிகள், தண்டீச நாயனார், திருத்தொண்டர்கள் என்பவர்களுக்கு வணக்கங் கூறி நூலுக்குக் காப்பமைத்துக் கொண்டார். இக்காப்புச் செய்யுட்கள் பன்னிரண்டும் அவையடக்கச் செய்யுள் ஒன்றும் சேர்த்துப் பாயிர உறுப்பை நூதனமாக அமைத்துக்கொண்டு நூலைத் தொடங்குகின்றார். வேறு பிள்ளைத்தமிழ்களிலும் இவரே பிற்காலத்திற் செய்த பிள்ளைத்தமிழ்களிலும் இத்துணை விரிவான துதிகள் இல்லை.
இங்ஙனம் அமைத்துக்கொண்ட துதிகளுள் முதலில் உள்ள விநாயக வணக்கத்தின்கண், ‘சம்புவனமமர் தேவியைச் சகல வண்டமுமளிக்கும் பிராட்டியை யுரைசெய் தண்டமிழ் வளம் பெருக’, ‘ஒருகோட் டிருபதத் திரிகடாக் குஞ்சரத்தை நினைவாம்’ என்று வணங்குகின்றார். விநாயகருடைய சிறுவிளையாட்டு ஒன்று இச்செய்யுளிற் கூறப்படுகின்றது: “வானத்தில் சந்திரன் விளங்குகின்றது; வெண்சோற்றுக் கவளமென்றெண்ணி அதனைக் கவர்வதற்கு விநாயகர் தமது துதிக்கையை நீட்டுகின்றார்; அதுகண்டு இந்தச் சந்திரன் இன்றோடே தொலைந்துவிடும், இனி இதனால் வரும் துன்பங்கள் இனி இல்லையாமென்று விரகதாபமுடைய மகளிர் களிக்கின்றனர். அதேசமயத்தில், நம்முடைய நாயகனுக்குத் துன்பம் வந்ததேயென்று நட்சத்திரக் கூட்டங்களும், நமது குடையாகிய சந்திரனுக்குத் தீங்கு வந்துவிட்டதேயென்று மன்மதனும் திகைக்கின்றனர். இங்ஙனம், ஒருசாரார்க்குக் களிப்பும் மற்றொரு சாரார்க்குத் துயரும் உண்டாக விநாயகர் தம் பனையெழில் காட்டும் கையை நீட்டுகின்றார்.” இச்செய்திகள் சுருங்கிய உருவில்,
"சீருலவு வனசமகள் புரையுமட வாரிகல் தீர்ந்தோ மெனக் களிப்பச்
செறியுடுக் கணமுருவில் புத்தே டிகைப்பவிது தீங்கவள மென்றுததிதோய்
காருலவு மாகநடு வட்பொலியு மாம்பலங் காதன்மதி மீப்பனையெழில்
காட்டுங்கை நீட்டுமொரு கோட்டிரு பதத்திரி கடாக்குஞ் சரத்தை நினைவாம்”
என்று காணப்படுகின்றன. விநாயகர் ஒருவரே விக்கினத்தை நீக்குவதும் ஆக்குவதுமாகிய செயல்களையுடையவரென்னுங் குறிப்பும் இதனாற் பெறப்படுகின்றது. இங்ஙனம் முதலில் விநாயகக் கடவுளை வணங்கிப் பின்னர் பரமசிவ வணக்கம், பராசத்தி வணக்கம் செய்து, அவர்களுடைய திருக்குமாரர் என்னும் முறை பற்றி மீண்டும் ஒருமுறை விநாயகருக்கு வணக்கம் கூறுகின்றார்:
“கோமேவு மதிலொருமூன் றெரிக்கு ஞான்றெங்
குனிமதிசெஞ் சடைச்செருகும் பெருமா னன்பர்
நாமேவு தமிழ்க்கொருபூங் கொடிபாற் றூது
நடந்தநா யகன்விநா யகவென் றேத்தி
மாமேவு கதிர்க்காற்றேர் நடத்து மாறு
வருமடிக டிருவடிகள் வணக்கஞ் செய்வாம்
பூமேவு திருக்காவை மேவு ஞானப்
பூங்கோதை பாடல்வளம் பொலிய வென்றே." (பாயிரம், 4)
இவர் திருவானைக்காப் புராணத்தைப் படித்து இன்புற்று அதன்கண் ஈடுபட்டவராதலின், அந்நூற் காப்புச்செய்யுளில் விநாயகர், சிவபெருமான் தம்மை வழிபட்டு வேண்ட அவரது தேரை ஓடும்படியருளிய விளையாடலை அதன் ஆசிரியர் எடுத்தாண்டிருத்தலைப் போல இவரும் இச்செய்யுளில் அதனை அமைத்திருக்கின்றார்.
அடுத்துவரும் சுப்பிரமணியக் கடவுள் வணக்கத்தில், அவர் சூரபன்மனை அடக்கித் தேவர்களுக்குப் பெருவாழ்வளித்தவர் என்பதை,
“இரசத விலங்கன்மிசை யொழுகருவி புரையவீ ரிருமருப் பாம்பன்மாறா
திழிமுக் கடாம்பொழிய மென்சினைப் பைந்தரு விளங்காடு நறவுபொழியச்
சுரபிபல் வளன்பொழிய வேமவுல காளுமொரு தோன்றன்மனை யாட்டிகண்டஞ்
சூழுமங் கலநா ணாதுறை கழித்துவே றொட்டவனை யஞ்சலிப்பாம்" (5)
என மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். அச்செய்யுளிற் சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகத்தை அகலாமல் உமாதேவியார் வீற்றிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பிக்கிறார்: ‘நாகம், சிங்கம், துடி, மான் முதலியன தம்முடைய அவயவங்களில் ஒவ்வொன்றைக் கண்டு அஞ்சிச் சிவபெருமான் திருக்கரத்தை அடையும்படி அவருடைய பாகத்தை அகலாதிருக்கும் உமாதேவியார்’ என்னும் கருத்தமைய,
"உரகம்வல விலங்குதுடி நவ்விமுத லமலர்மே லுரறிவரு காலையிற்றன்
ஒளிரவ யவங்களிலொவ் வொன்றுகண் டொவ்வொன் றொதுங்கியவர் கையடையவப்
பரமரிட மகலா திருந்ததுணை " (பாயிரம், 5)
என்கின்றார். காப்புப்பருவத்துள், இந்திரனைப்பற்றிச் சொல்லும் பொழுது, அவன் தன் மனைவியினது குழல் முதலிய அவயவங்களுக்குப் பகையானவையென்று மேகம் முதலியவற்றை அடக்கியாள்கின்றானெனக் கற்பிக்கின்றார்:
"மோகத்தை யாங்கொண்ட போதெலா மிக்கின்ப முனியா தளித்திடுச்சி
மொய்குழ னுசுப்புமுலை சொற்பகைக ளிவையென முராரிமகிழ் வெய்தவேறி
மேகத்தை யோட்டித் திசாதிசை திரிந்தலைய மின்னைத் துரத்தியோங்கும்
வெற்பைத் துணித்தமுதை வாய்ப்பெய்து தருநீழல் மேவுமொரு கடவுள்காக்க."
(காப்புப், 6)
திருமகளைப் பற்றிய காப்புப்பருவச் செய்யுள் மிக்க சுவையுடைய கற்பனையோடு திகழ்கின்றது: ‘இடைச்சியர்கள் வீட்டில் உள்ள பால் முழுவதையும், அவர்கள் தங்கள் வீட்டுக்கதவைத் தாழிட்டு மூடியிருப்ப அதனைத் திறந்து உட்புகுந்து உண்டு பின் அவர்களுடைய மத்தடியைப் பெற்று வருந்தும் தன் கணவராகிய திருமாலை, உம்முடைய விருப்பத்தின்படி பாலை உண்டுகொண்டு சுகமாகத் தூங்குகவென்று, தன் பிறந்தகமாகிய பாற்கடலில் குடியிருக்கச் செய்தவள்’ என்னும் கருத்தமைய,
“முத்தநகை விதுமுகப் பொதுவியர் கடப்பான் முழுக்கவன் றாழ்வலித்து
மூடுங் கவாடந் தடிந்துமனை புக்குண முனிந்தவர் பிணித்தடிக்கும்
மத்தடி பொறுத்துவரு துணைமுகிலை யுண்டுகண் வளர்ந்துறைதி யென்றுதன்னை
வயிறுளைந் தீன்றவொரு பாற்கடற் குடியாக்கு மடமானை யஞ்சலிப்பாம்" (காப்புப், 7)
என்று கற்பிக்கின்றார். சப்பாணிப் பருவத்தில், சூரியனை,
“கலைமணக் குங்கொடிக் கொருபீட மானநாக் கடவுளொரு வாதமர்ந்த
கமலபீ டமுமகில மகளிடை பொதிந்தபூங் கலைவயி றுளைந்துயிர்த்த
சிலைமணக் குஞ்சிறு நுதல்சின கரப்பூஞ் செழுங்கபா டமுந்திறக்குந் திறவுகோல்” (சப்பாணிப், 3)
என்கின்றார். அப்பருவத்திலேயே அம்பிகையின் திருக்கரத்தை,
"...........வழுதிப் பொன்மனையிற்
றையலார் மைக்கண் புதைக்குங் கை" (சப். 1)
"............. வரைக்கரைய னெனுமுன்
தந்தை தர வெந்தையார் தொட்டகை” (சப். 2)
“அருமறைக் கிழவன்முத லைவருக் குந்தொழில்க
ளைந்தெண்ண லளவை செய்ய ஐவிரல் படைத்தகை "
"....... சுட்டினோ டவர்க் கத்தொழில் காட்டுகை"
"பருமுலை மருப்புற வளைக்குறி படத்துகிர்
பட்டகோ டீரமுடியெம் பரமனைத் தழுவுகை"
"வளரறங்கள்முப் பத்திரண்டும் புரிகை"
"குருமணி குயிற்றிய விருங்கங் கணக்கை"
'கொடியேனையஞ்ச லென்ற கோலக்கை"
"........ மடப் பொய்தற் பிணாக்களொடு
குளிர்பனி வரைச் சோலைதண்
தருநறவு கொட்டுமலர் கொய்யுங்கை" (சப். 4)
"............. இணைக்கணெழு கருணை வெள்ளம்
எங்கும் பரந்தப் பரற்குமீ திட்டடிய
ரிருவினையை வாரியோடக்
கோகனக மதின்முளைத் தாலெனப் பொலிகை” (சப். 5)
" ............ எம்மா னளவில் வேடிரண் டெனவரச் செய்து ,
............ கவின்முடி தரித்தரி யணைக்கண்வைத் திருகயல்
களிக்கநோக் காவொருகயல்
கொள்ளென விரும்பிக் கொடுத்தகை" (சப். 6)
எனப் பலபடப் புனைவர். முத்தப்பருவத்தில்,
“சிரபுரச்சந் ததிதழைக்க முலைகொடுத்த தலைவிமுத்தந் தருகவே
திருமகட்குங் கலைமகட்கு மெழில்சிறக்கு மிறைவிமுத்தந் தருகவே
தரணிமுற்றுந் தனிதழைக்க நனிபுரக்கு மமலைமுத்தந் தருகவே
சடைமுடித்தும் பியைவிருப்ப முடனுயிர்த்த விமலைமுத்தந் தருகவே
மரகதப்பொன் சிமயவெற்பு நிகர்தழைக்கும் வடிவிமுத்தந் தருகவே
மழைமுகிற்கண் டெழுபசுத்த மடமயிற்கு நிகரண்முத்தந் தருகவே
உரகபொற்கங் கணரிடத்து மருவுசத்தி கவுரிமுத்தந் தருகவே
உரலடிக்குஞ் சரவனத்து மெனதுளத்து முறைவண்முத்தந் தருகவே"
(முத்தப். 10)
என்னும் செய்யுள் சந்தத்தில் அமைந்ததேனும் எளிதிற் பொருள் விளங்க இருத்தல் அறிந்து இன்புறற்குரியது. அம்பிகையின் திருச்செவியில் குழைத்தோடிலங்குவதைத் தற்குறிப்பேற்ற அமைதியோடு,
"கம்பக் களிற்றுரியர் கட்சுடரி லங்கியைக் கைத்தலையி ருத்திமதியைக் கங்கைமுடி வைத்தல்போல் வையாமை கண்டுசெங் கதிர்நினது செவிபுகுந்தோர் கும்பத்த னஞ்சடை யிடைக்கரந் தார்நினது கொழுநரென மொழிதலேய்ப்பக் குழைத்தோ டிலங்க” (வாரானைப். 1)
என வருணிக்கின்றார். அம்புலிப்பருவத்தில் முறையே சாம பேத தான தண்டம் பொருந்தச் செய்யுட்களை அமைக்கின்றார். பேதத்தைச் சொல்லும்பொழுது சந்திரனை இழித்து,
*12 "மாலெச்சி லைச்சுற்று முனியெச்சி றோன்றியொரு மாசுணத் தெச்சிலானாய்” (அம்புலிப். 4)
எனச் சதுர்படக் கூறுகின்றார்.
ஸ்தல சம்பந்தமான விஷயங்களை இப்புலவர்கோமான் இந் நூலிற் பலவகையாக எடுத்தாள்கின்றார். காவை, மதகரிவனம், அத்தியாரணியம், தானப்பொருப்புவனம், உரலடிவனம், மதமாதங்கவனம் என்ற தலப்பெயர்களையும், சம்புநாதர், சம்புலிங்கப்பெருமான், சம்புநாயகர், அமுதப்பெருமான் என்ற சிவபெருமான் திருநாமங்களையும் எடுத்துப் பாராட்டுகிறார்.
“வெண்ணாவலெம் புண்ணியன் “, “பூமேவு வெண்ணாவ னீழலமர் முக்கட் புராதனர் “, “வெள்ளைநாவ லடிமுளைத்த தன் னேரிலி” என்பவை முதலிய இடங்களில் தலவிருட்சத்தைக் குறிப்பிக்கின்றார்; “ சிலந்தி பணிந்த நகர் ” என்பதிற் சிலந்தி இத் தலத்திற் பூசித்ததும், “முறைபுகும் வழக்கா றிழுக்காது கோலோச்சு முருகாத்தி யபயன் மகிழ முடியில்வெள் ளென்பையே கொத்தார மிட்டவரை முத்தார மிட்டவதனால்” என்பதிற் சிவபெருமான் ஆரங்கொண்டதும், “திரையெற்று கமலந்திரட்டாய்”, “சலிலந் திரட்டியது விரியாது”, “விரிபுனன் மலிந்துள வெனச் செங் கரங்கொடு வியப்பிற் றிரட்டிடாமே” என்பவற்றில் அம்பிகை தீர்த்தத்தைத் திரட்டிச் சிவலிங்கத் திருவுருவமைத்ததும், பிரமன், இந்திரன், திருமால் என்பவர்களுடைய பாவத்தைத் தீர்த்ததுமாகிய தலவரலாறுகளை இடையிடையே அமைத்துள்ளார்.
“எனையுமாளிருங் கருணையார்” என அப்பரையும், “எனையாள் வாதவூரடிகள்” என மாணிக்கவாசகரையும் கூறுவதால் இவருக்குச் சைவ சமயாசாரியர்கள்பால் உள்ள ஈடுபாடு புலப்படுகின்றது.
"ஒருத்தி பொற்றா ளருத்திகொண்டு ளிருத்திநிற்பாம்"
"பையரா நண்ணுலகு மண்ணுலகும் விண்ணுலகும்”
"கொம்புவரை பம்புவன வம்பிகை விரும்பிநின் கொவ்வைவாய் முத்தமருளே"
“முத்தி யளித்திடு மத்திவ னத்தவள் முத்த மளித்தருளே"
"அத்திவன வுத்தம ரிடத்தமர் பசுத்தகொடி”
"நாவிரி பாவிரி பூவிரி காவிரி நன்னீ ராடுகவே"
என்பன முதலியவைகளில் உள்ள எதுகை நயமும்,
“அருட்டுறையுள்வந் தருட்டுறை யளவளாய்”
"பயத்தன் பயத்தனாக"
என்பன போன்ற மடக்குக்களும்,
“நிம்பர் குலத்துறு செந்தேனே”
“வேம்பர் குடிக்கோர் செங்கரும்பே”
“மதமா தங்க வனத்துமட மானே”
“போதக வனங்குடி புகுந்தமென் காமர்பிடி”
என்பன போன்ற முரண்வகைகளும் பிறவும் இந்நூலில் மலிந்து சுவை தருகின்றன.
“இள மென்சிறு புதுத்தென்றல் வந்தரும்ப
எங்குமொளிர் செந்தழ லரும்புதேமா”
“துதிக்குமடியா குளக்கோயிற் றூண்டா விளக்கே”
“கபாய்”
என்பவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து அமைத்துக் கொண்டவை.
“மந்த மந்தச் சென்று” என்பது கம்பராமாயணத்திலிருந்து எடுத்துத் தொடுத்த தொடர்.
“மருங்கணை யாடைகை வெந்நிட் டுதையா”
என்பது திருவிளையாடற் புராணம் படித்ததைக் காட்டும் அடையாளம்.
“பங்கய மலர்த்திவரு செங்கதிர் நிறத்தவுடல் பனிமதி நிறங்கொளாது
படரரி மதர்த்தகண் குழியாது நாடிகள் பசந்துநா றாதுநுனைவாய்
கொங்கைகள் கறாதுமட் சுவைநாப் பெறாதகடு குழையா துறாதினம்பல்
குறிபடா தருமையொ டுயிர்த்திமய மாதேவி குளிர்புனல்பொன் வளைகுளிறிடும்
அங்கையி லெடுத்தாட்டி நீறிட்டு மட்காப் பணிந்தொழுகு திருமுலைப்பால்
ஆர்வமொ டருத்தவுண் டயறவழ்ந் தேறிமலை யரையன் புயத்தவன் பொற்
செங்கைவிரல் சிரமீது பற்றிநின் றாடுமயில் செங்கீரை யாடியருளே
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடியருளே"
(செங்கீரைப், 1)
என்பதில் கல்லாடம், திருவிளையாடற்புராணம், பிரபுலிங்கலீலை என்பவற்றிலுள்ள கருத்து அமைந்துள்ளது.
இக்கவிஞர்பிரான் இதன்கண் உலகவழக்கில் வழங்கும் கும்பு (கூட்டம்), ஒட்டியாணம் என்பன போன்ற சொற்களை அமைத்துள்ளார்.
இங்ஙனம், பிள்ளையவர்கள் தம்முடைய பலவகையாற்றல்களையும் வெளிப்படுத்தி இந்நூலை இயற்றியிருத்தல் ஆராய்ந்து அறிந்து இன்புறற்குரியது.
அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழினால் இவருக்கு உண்டாகிய புகழ் அதுவரையில் இயற்றிய வேறு எந்நூலாலும் உண்டாகவில்லையென்பது மிகையன்று. இவருடைய கவியாற்றல் நாளடைவில் வளர்ச்சியுற்றது. அதனுடன் இவருடைய புகழும் வளர்ந்தது. திரிபந்தாதிகளில் தளிர்த்துத் திரிசிரபுர யமக அந்தாதியில் அரும்பி அகிலாண்டநாயகி மாலையிற் போதாகிய இப்புலவர்சிகாமணியினது கவித்திறனும் புகழும் அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழில் மலர்ந்து நின்றன. இவரினும் சிறந்த கவிஞரொருவர் இலரென்ற பெருமதிப்பும் மரியாதையும் அப்பக்கத்தில் எங்கும் பரவலாயின. இத்தகைய சுவைப்பிழம்பாகிய நூலை அச்சிட்டு வெளிப்படுத்தினால் யாவரும் எளிதிற் பெற்றுப் படித்து இன்புறுவாரென்று அன்பர்கள் பலர் பதிப்பிக்கும்படி வேண்டிக் கொண்டனர்; இவரும் அதற்கிணங்கிப் பதிப்பிக்க எண்ணியும் தக்க சாதனங்கள் இன்மையின் அம்முயற்சி அப்பொழுது நிறைவேறவில்லை.
$$$
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. அத்தத்தில் – கையில்; உள்ளாற்கு – உள்ள விநாயகக் கடவுளுக்கு. அத்தனை – தந்தையை, சித்தத்து இலங்கும். கத்த – கதறும்படி; திலங்குழைப்பார்போல் – எள்ளாட்டுவார் போல். திரிபட்டுத் தத்தில்; தத்து – ஆபத்து.
2. பரியேற்றனை – இடபத்தையே குதிரையாக உடையவனை. நீலிவனம் – திருப்பைஞ்ஞீலி; நீலிச்செடி இத்தலத்துக்குரியது. தொழாதவர்களுடைய பழைய கருமமலங்கள். ஏது: இல்லையென்றபடி.
3. இது வண்டுவிடு தூது. தார் (மாலை) வரும் என மகிழ்ந்தேன் . அனுப்புதலின்றிச் சும்மாயிருந்தார். தேன் திருந்து ஆர்; ஆர் – ஆத்தி மாலை.
4. யான் எண்ணாதவனென ஒரு சொல் வருவிக்க. வல் நஞ்சம். எனை உவந்து அருள்வாய். ஆதவன்கதிர் – சூரியகிரணங்கள். அரம்பை வனம் – வாழைவனம்; வாழை, இத்தலத்திற்குரிய விருட்சம். தவம் நன்கு உடையார்.
5. மறைநூல் துகளை அற ஓர்ந்து.
6. கலம் கந்தரம் – ஆபரணத்தைப் பூண்ட கழுத்தை உடைய. கலக்கந்தர – மனக்குழப்பத்தைத் தருவதற்கு. தப்பு அகல் அக்கு அந்தர நதி – குற்றமற்ற உருத்திராட்சத்தையும் கங்கையாற்றையும். கன்னிபாக லக்கந் தரம் நினைவேண்டிக் கொண்டேன்; லக்கந்தரம் – லட்சந்தரம்,
7. ஆய் ஆவப்பால் அரி அம்பா – ஆராயப்படுகின்ற அம்பறாத் தூணியிடத்தில் திருமாலாகிய அம்பை உடையாய். நின்னை ஆயாமல். மனம் புண்ணாய் ஆ அப்பு ஆர் சடையாய்: ஆ – ஐயோ! வையச்சிலரை- பூமியிலுள்ள சிலபேரை. ஆயா – தாயே. அடியேனுக்குப் பிறப்பை நீக்க வேண்டுமென்பது கருத்து.
8. ஆவணம் காட்டம் மதிக்க சுமக்க – கடைவீதியில் விறகை விலை மதிக்கும்படி சுமக்கவும். காட்ட நரியை தெரியாவணம் – காட்டிலே உள்ள நரிகளை பிறர் அறியாவாறு. முதிர் ஆவணம் – பழைய ஓலையை. வைத்தது ஆ வணங்கு ஆள் தன்மையார் அன்பு; ஆ: வியப்பின்கட் குறிப்பு. சுமக்கவும் ஆக்கவும் காட்டவும் வைத்தது அன்பன்றே என இயைக்க.
9. அக்காலத்திற் காவிரிக்குப் பாலங்கட்டப்படவில்லை.
10. தண்ணீர் மூன்று பிழை பொறுக்குமென்பது ஒரு பழமொழி.
11. இரண்டு செயலும் இடத்தாளின் செயலாதலின் இங்ஙனம் கூறினார்.
12. மாலெச்சி லென்றது பூமியை; அதனைச் சுற்றும் முனி எச்சி லென்றது கடலினை ; அகத்திய முனிவரால் உண்ணப்பட்டதாதலின் இங்ஙனம் கூறினார்.
$$$