சிவகளிப் பேரலை- 79

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

79. திருவடிச் சிறப்பு

.

நித்யம் யோகிமனஸ்- ஸரோஜல சஞ்சார க்ஷமஸ்த்வத் க்ரமச்’-

ச’ம்போ தேன கதம் கடோர யமராட்வக்ஷ: கவாடக்ஷதி:/

அத்யந்தம் ம்ருதுலம் த்வங்க்ரியுலம் ஹா மே மனச்’சிந்தயத்-

யேதல்லோசன கோசரம் குரு விபோ ஹஸ்தேன ஸம்வாஹயே//

.

நின்பாதம் முனிமன மலரிதழ் தவழ்வதே

என்னய்யே யமமுரடு மார்கதவு மிதித்ததுவே

நின்னிரண்டு மென்பதம் வலித்திடுதோ வருந்தினேனே

என்முன்னே காட்டிடுவாய் பிடித்திடுவேன் நிறையோனே!

.

     இறைவனின் திருவடிப் பெருமைகளை முன்னரே பல ஸ்லோகங்களில் சிலாகித்துக் கூறியுள்ள ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் மேலும் சிறப்பித்துக் கூறுகிறார். சிவபெருமானின் திருவடிகள், மென்மையான மலரின் இதழ்போன்ற முனிவர் பெருமக்களின் மனக்கூட்டினிலே தவழ்பவை. முனிவர்களின் மனம் மென்மையானது என்பதால் அதனைவிட மென்மையானதாக பரமனின் பாதங்கள் திகழ்கின்றன. அப்படிப்பட்ட மென்மையான பாதங்கள், அனைவரின் உயிரையும் எடுத்துச் செல்லும் எமதர்மனின் முரட்டுத் தனமான மார்பை எப்படி மிதித்தனவோ? என்று வியக்கிறார் ஆதிசங்கரர்.

.எமனின் முரட்டு மார்பை மிதித்ததனால் சிவனே, உனது மென்மையான பாதங்கள் வலிக்கின்றனவா? அவற்றை என் முன்னே காட்டிடுவாய், எங்கும் நிறைந்தவனே (விபோ), அவற்றை எனது கரங்களால் பிடித்து விடுகிறேன் என்று கொஞ்சுகிறார் ஆதிசங்கரர்.

     எங்கும் நிறைந்தவனாக சிவபெருமான் இருந்தாலும், பக்தர்களுக்கு அகப்படாமல் இருக்கிறார். அவரை நைச்சியமாகப் பேசி, தனது மனபீடத்தில் கொலுவிருக்க வைப்பதற்காக பக்தன் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்பதை இங்கே சொல்லிக் கொடுக்கிறார் ஜகத்குரு ஆதிசங்கரர். உலகத்தையே உருவாக்கி, காத்து, ஆட்டிப் படைக்கும் வல்லமை படைத்த பகவானின் பாதங்கள் எமனை உதைத்ததால் வலிக்கவா செய்யும். மென்மைக்கு மென்மையும், வன்மைக்கு வன்மையும் வாய்ந்ததல்லவோ அந்தத் திருப்பாதங்கள்! ஆயினும்,  அந்தப் பாதங்களை சிக்கெனப் பிடித்து வாழ்வைக் கடைத்தேற்றுவதற்கும், அதனை வருடியபடி ஏகாந்த அனுபவத்தில் திளைப்பதற்காகவும் ஐயா உனக்கு கால் வலிக்கின்றதா? என்னிடம் காட்டேன், பிடித்து விடுகிறேன் என்று பக்தனுக்காகக் குழைந்து கேட்கிறார் அவர்.

     இந்த ஸ்லோகத்தில், மார்க்கேண்டனுக்காக எமதர்மனைக் காலால் உதைத்த புராணக் கதையை நமக்கு நினைவுறுத்துகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 16 வயதில் மார்க்கேண்டயனின் ஆயுள் முடிந்துவிடும் என்பது விதி. இதனை அறிந்துகொண்ட சிவபக்தனான மார்க்கண்டேயன், சிவபெருமானே கதி என உயிர் போகும் தருணத்திலும் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறான். பாசக்கயிற்றை சுழற்றிவீசிய எமதர்மன், மார்க்கண்டேயனோடு அவன் கட்டிப்பிடித்துள்ள சிவலிங்கத்தையும் சேர்த்து கட்டியிழுக்க முனைகிறான். பக்தனைக் காப்பாற்ற அந்தப் பரம்பொருள் விருட்டென வெளிப்பட்டு, காலனின் மார்பில் மிதித்து அவனுக்கே காலனாக ஆகிறார். இதனால், சிவனுக்கு மகாகாலன் (மகாகாளன்) என்றும் திருநாமம் உண்டு.

.இங்கே, சிவபெருமானின் பக்தர்களிடம் காலன் தன் கைவரிசையைக் காட்ட முடியாது, சிவனை வணங்குவோருக்கு அற்பத்தனமாக ஆயுள் முடியாது, அவரது திருவருளால் முக்தி சித்திக்கும் என்பதையும் மிக அழகாகக் கோடிட்டுக் காட்டுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். இந்தப் புராணச் சம்பவம் நிகழ்ந்த திருத்தலம்தான் திருக்கடையூர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s