-எஸ்.எஸ்.மகாதேவன்

14. மகத்தான தேசிய கலாச்சாரத்தில்
மாநில எல்லை கரைந்து மறையும் அற்புதம்!
பகவத்கீதை அருளப்பட்ட குருக்ஷேத்திரத்திற்கு (ஹரியானா) என் பேத்தி உள்பட 18 தென் மாநிலக் குழந்தைகள் நேரில் சென்று பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் 700 ஸ்லோகங்களையும் சென்ற வாரம் மனப்பாடமாக முற்றோதல் நிகழ்த்திய தகவலை என் முகநூலில் பதிவிட்டிருந்தேன். “அருமை. சொல்லிக் கொடுத்த குருவின் க்ஷேத்திரம்?” என்று பின்னூட்டத்தில் கூடுதல் தகவல் கேட்டிருந்தார் நண்பர் பத்மன். “ஆஸ்டின் (அமெரிக்கா)வாசியான ஆந்திர அன்பர்! ஆன்லைனில் பயிற்சி கொடுத்து அசத்தினார்! ஆண்டு நெடுக அந்தந்த பெற்றோரும் தவத்தில் பங்கேற்கச் செய்தார்!!” என்று அவருக்கு பதில் அளித்திருந்தேன்.
இப்போது அந்த ஆந்திர அன்பர் பற்றி, அல்ல அல்ல, அவரது குடும்பம் பற்றி கூடுதல் தகவல். அவருக்கு இரண்டு புதல்விகள். பெரியவள் கர்நாடகாவில் ஆயுர்வேதம் பயில்கிறார். சின்னவள் பள்ளிப்படிப்பு முடிப்பதற்குள் 12 ஆண்டு பரதநாட்டியப் பயிற்சி முடித்து தெலுங்கானாவின் பாக்ய நகரில் சென்ற மாதம் அரங்கேற்றம் கண்டாள். இந்தச் சிறுமி குருக்ஷேத்திரம் போகும் வழியில் சென்னையில் என் வீட்டுக்கு வந்திருந்தாள்; கேட்டேன்: “இருப்பது அமெரிக்காவில். உன் அக்காவும் நீயும் படிப்பது தொன்மை பாரதிய பாடங்களை. உன் அப்பாவின் எண்ணம் என்ன?” தெலுங்குச் சாயலில் அமெரிக்க ஆங்கிலத்தில் பதில் சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். தெளிவான தேன் போன்ற எளிமையான சமஸ்கிருதத்தில்- ஆம், சமஸ்கிருதத்தில்- அந்த அமெரிக்க இந்தியக் குழந்தை சொன்னது இது: “மகோதய! (பெரியவரே), விருட்சம் நிற்கிறது; கிளைகளும் இலைகளும் பழங்களும் உயரே உயரே காட்சியளிக்கின்றன; இதற்கெல்லாம் மூல காரணம் மரத்தின் வேர். வேரை மறக்கக் கூடாது என்று பிதா வததி (அப்பா சொல்வார்)”. என்ன விவரம், என்ன விநயம்! அந்த அமெரிக்க இந்தியக் குடும்பத்தின் பாரதிய கலாச்சாரப் பற்றுக்கு அது சமஸ்கிருதக் குடும்பம் ஆனதுதான் பிள்ளையார் சுழி என்று புரிந்து கொண்டேன்.

யாரிடம் பரதம் பயின்றாளாம்? கைகூப்பி ஒரு பெண்மணியின் பெயர் சொன்னாள். அவர் கேரளத்தில் இருந்து அமெரிக்கா சென்று வசிப்பவராம். சரி, சமஸ்கிருதம் யாரிடம்…? இப்போது அந்தக் குழந்தை எழுந்து நின்று கொண்டாள். கூப்பிய கைகளை உயர்த்தி ‘வியோமா’ என்றாள். வியோமா என்றால் விண்வெளியாம். சரி, உயர்ந்த பாடம், உயர்ந்த இடத்தைக் காட்டுகிறாள் என்று நினைத்தேன். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன்லைனில் இலவசமாக பல நிலை சமஸ்கிருத வகுப்புகள் நடத்தி வரும் பெங்களூரு வியோமா அமைப்பு என்று விளக்கினாள். ஆந்திராவில் பிறப்பு; அமெரிக்காவில் வளர்ப்பு. பரதத்திற்கு கேரள குரு. சமஸ்கிருதத்திற்கு கர்நாடகா! மாநில வேலிகள் எல்லாம் எங்கோ கரைந்து மறைய… (இந்தச் சம்பவ சங்கிலியில் அமெரிக்காவும் ஒரு களம் என்பதால்) உலகு தழுவிய பாரதீய கலாச்சாரம் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது.
குருக்ஷேத்திர பகவத் கீதை முற்றோதல் நடத்திய ஆந்திர அன்பரைப் பற்றி சொல்லத் தொடங்கி அவர் குடும்பம் பற்றி விவரித்து … தமிழில் எழுதிக்கொண்டே போகும்போது, பாரத கலாச்சார வியாபகம் எவ்வளவு அபார சக்தி கொண்டது என்பது உறைத்தது. ஆண்டு நெடுக மனப்பாடத் தவம் செய்வித்து குருக்ஷேத்ரத்தில் நிறைவு செய்தததற்கு அந்த ஆந்திர அன்பருக்கு எது ஊக்கம்? அவரது தாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கண்ட கனவாம். தாயின் சொல்லை மட்டுமல்ல, தாய் கண்ட கனவையும் நனவாக்கிய அந்தப் புதல்வர் காட்டியது அர்த்தமுள்ள தாய்ப்பாசம்.
அந்த ஆந்திர அன்பரின் பாரதப் பற்று ஒரு மிக சமீபத்திய உதாரணம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வந்த ஒரு பெண்மணி வேலையை விட்டுவிட்டு சென்னையில் குடியேறினார் – தன் இரு புதல்வர்களுடன். இருவரும் சிறுவர்கள். பெரியவன் சங்கீதமும் சமஸ்கிருதமும் கற்றுக்கொண்டான். பள்ளிப்படிப்பு என்றால் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் கல்வி நிலையம் நடத்தும் தொலைநிலைக் கல்வி. எளிமையான பாரதிய சூழலில், தொன்மையான பாரதிய வித்தைகளை உள்வாங்கிக்கொண்டே ஐரோப்பியப் படிப்பு என்பதால், பாரத மண்ணில் வேர், ஐரோப்பிய அரங்கில் கிளைகளும் இலைகளும் கனிகளும்… இது இந்த சிறுவனின் உத்தி. சின்னவனைப் பற்றி சொல்லவே வேண்டாம்… அண்ணன் காட்டிய வழியே தான் அவனுக்கும்.

ஏப்ரலில் ‘விஜயபாரதம்’ வார இதழில் ’1 2 3 4 5 6’ என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை, ஆறு வித்தியாசமான குடும்பங்களைப் பற்றி பேசியது. அதில் ஐந்தாவது ஆறாவது குடும்பங்களைப் பற்றிய தகவல் இங்கே இடப் பொருத்தம் உள்ளது:
“குடும்பம் ஐந்து: வெளிநாட்டில் ஒரு ஹிந்து குடும்பம். வசதியான வாழ்வின் மேல் வரம்பைக் கடந்துவிட்ட அந்தக் குடும்பம் தாய்நாடு திரும்பியது; படித்த படிப்பும் செய்த தொழிலும் கைகொடுக்க இங்கே ‘ஸ்டார்ட் அப்’ ஒன்று தொடங்கியது. ஒரு தீபத்திலிருந்து பல தீபங்கள் ஏற்றுவது போல ஒரு குடும்பம் பல குடும்பங்களில் அடுப்பெரிய வகை செய்தது.
“குடும்பம் ஆறு: வசதியான வாழ்க்கை. கணவனும் மனைவியும் அமர்ந்து பேசி, ஐந்தாவது வகுப்பு முடித்த மகனை வேதம் படிக்க பாரம்பரியப் பாடசாலையில் சேர்ப்பது என்று தீர்மானிக்கிறார்கள்.அப்படியே நடக்கிறது. இந்தத் தகவல் எந்த ஊடகத்தின் உதவியுமின்றி நூறு குடும்பங்களைச் சென்றடைகிறது.”
இப்படி நடப்பதற்கான காரணம் இது என்பதையும் அந்தக் கட்டுரை சொல்லி முடிகிறது: “நல்லது செய்பவர்களை நல்லது நினைப்பவர்களை நல்லது சொல்பவர்களை எல்லோரும் நாடுகிறார்கள். எனவேதான்…”.
ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது:
நாட்டிற்கு உள்ளும் நாட்டிற்கு வெளியேயும், பாரதத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நிகழ்காலம் எப்படி நடைபெற வேண்டும் என்பதையும் பற்றி சிந்தித்துச் செயல்படுத்தும் அரசுகளும் அமைப்புகளும் உண்டு. அதே பணிகளை மேற்கொண்ட குடும்பங்களும் எண்ணற்றவை உண்டு. அதாவது, குடும்பத்தால் (சமுதாயத்தால் என்று புரிந்து கொள்க) அரசுக்கும் அமைப்புகளுக்கும் ஆதாயம்.
தேசத்துக்கும் தான்!
$$$