வலிமைக்கு மார்க்கம் -1

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

ஜேம்ஸ் ஆலனின் சுய முன்னேற்ற நூலான  ‘From Poverty to Power’ என்ற நூலின் முதல் பகுதி  ‘The Path of Prosperity’ ஆகும். அதனை வ.உ.சி.  ‘வலிமைக்கு மார்க்கம்’ என்று 1916-ல் மொழிபெயர்த்தார்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகம் அறிவதற்காக மொழிபெயர்த்திருக்கிறார் வ.உ.சி. இந்நூல் பல பகுதிகளாக இங்கே பதிவாகிறது….

நன்றி:
வலிமைக்கு மார்க்கம்
(ஜேம்ஸ் ஆலனின் நூல், தமிழில் மொழிபெயர்ப்பு)
வ.உ.சிதம்பரம் பிள்ளை
பூம்புகார் பதிப்பகம், சென்னை (2004)

$$$

வலிமைக்கு மார்க்கம்

பொருளடக்கம்

1. முதனூற் பாயிரம்
2. பாயிரம்
3. சில சொற்களின் பொருள்கள்
4. காப்பு முதலியன
5. ஜேம்ஸ் ஆலன் சரித்திரச் சுருக்கம்
6. துன்பத்தின் கற்பனை
7. உலகம் மனத்தின் பிரதிபிம்பம்
8. விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி
9. நினைப்பின் மௌன வலிமை
10. ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும்
11. வளரும் இன்பத்தின் மர்மம்
12. வலிமையை அடைதல்

$$$

1. முதனூற் பாயிரம்

உலகத்தைச் சுற்றிப் பார்த்தேன். அது துன்ப நெருப்பால் சுடப்பட்டுத் துக்கப் புகையால் மூடுண்டிருக்கக் கண்டேன். அதன் காரணத்தைக் காண நினைத்தேன். அதனை உலகமெல்லாம் தேடினேன்; அதனை அங்குக் கண்டிலேன். நூல்களுள் தேடினேன்; அதனை அங்கும் கண்டிலேன். அகத்துள் தேடினேன்; அதனையும் அது அவரவரால் ஆக்கப்பட்டுள்ள தன்மையையும் அங்கு கண்டேன். மறுபடியும் அகத்துள் ஆழ்ந்து நோக்கினேன்; அதனைப் பரிகரிக்கும் மருந்தினைக் கண்டேன். அம்மருந்தாவது ஒரு சட்டம்; அன்பாகிய சட்டம். அஃது ஓர் ஒழுக்கம்; அச்சட்டத்திற்கு அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அஃது ஓர் உண்மை, மனத்தை வென்று கீழ்ப்படுத்தி அமைதியாக்கும் உண்மை. புருஷர்களும் ஸ்திரீகளும், வலியராயினும் எளியராயினும், கற்றாராயினும் கல்லாராயினும், இல்வாழ்வாராயினும் துறவிகளாயினும், சகல வெற்றிகளுக்கும், சகல சித்திகளுக்கும், சகல இன்பங்களுக்கும், சகல சுகங்களுக்கும், சகல உண்மைகளுக்கும் மூலமாயுள்ள பொருளைத் தமது அகத்துள் காண்டற்கு உதவி புரியும் ஒரு நூலை எழுதுவதாக ஒரு கனவு கண்டேன். அக்கனவு நீண்ட காலமாக என் உள்ளேயிருந்தது. அது கடைசியில் நனவாய் வெளிப்பட்டு விட்டது. உலகத்தின் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்கி, அதற்கு இன்பத்தையும் சுகத்தையும் அளிக்குமாறு அதனை இப்பொழுது அனுப்புகின்றேன்.

ஜேம்ஸ் ஆலன்

$$$

2. பாயிரம்

இந்நூல் ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் அரிய நூல்களில்  ‘எளிமையிலிருந்து வலிமைக்கு’ எனப் பொருள்படும் ஓர் அழகிய நூலினது முதற் பாகத்தின் மொழிபெயர்ப்பு. முதனூலின் ஐந்தாவது அதிகாரத்தின் தொடக்கத்தில் கண்ட ஆங்கிலக் கதையை நம்மவரிற் பெரும்பாலார் கேட்டிருக்க மாட்டாராதலால் அக்கதையின் பெயரினை இந்நூலிற் குறிப்பதால் பயனில்லையென்று கருதி, அதற்குப் பதிலாகப் ‘பாரதக் கதை’ என்று குறித்துள்ளேன். முதனூலின் கருத்துக்களை நம்மவர்கள் எளிதில் உணருமாறு, சிற்சில இடங்களில், சில சொற்களைச் சேர்த்தும் சில சொற்களை விடுத்தும், இம் மொழிபெயர்ப்பைச் செய்துள்ளேன்.

முதனூலில் கண்ட ஆங்கிலச் செய்யுள்களைத் தமிழ்ச் செய்யுள்களாக்கி இதன்கண் சேர்த்துள்ளேன். முதனூலிற் கண்ட விவிலிய நூல் கோட்பாடுகளும் மேற்கோள்களும் இதர மத நூல்களின் கோட்பாடுகளுக்கும் மேற்கோள்களுக்கும் ஒத்திருக்கின்றமையால் அவற்றை அவ்வாறே மொழி பெயர்த்துள்ளேன். இந்நூலில் நான் உபயோகித்துள்ள சில சொற்கள் குறிக்கும் பொருள்களையும் குறித்திருக்கிறேன். நான் இதுவரையில் பார்த்துள்ள இலக்கியங்களில் காணப்படாத ‘எஃது’ என்பது போன்ற ஒன்றிரண்டு சொற்களைப் புதியன புகுதலாக இதில் உபயோகித்துள்ளேன்.

ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் நூல்களெல்லாம் உலகத்திற்கு, முக்கியமாக நம் தேசத்திற்கு, மிக்க நன்மை அளிப்பவையென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம். அந்நூல்கள் நம் வள்ளுவர் மறைக்கொப்பப் போற்றத்தக்கவை. ஆகவே அந்நூலில் கூறியுள்ள பொருள்களைக் கசடற உணர்ந்து கைக்கொண்டொழுகுபவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மனிதர் அடையக்கூடிய மேலான நிலைகளையெல்லாம் அடைவரென்பது திண்ணம். ஆதலால், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அந்நூல்களால் நன்மை அடைய வேண்டும் என்பதே நான் அவற்றை மொழி பெயர்த்தற்குக் காரணம்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை
கோவிற்பட்டி, 25-7-30.

$$$

3. சில சொற்களின் பொருள்கள்

‘ஆன்மா’ என்பது ‘யான்’ ‘எனது’ எனக் கருதாது உலக நன்மையையே கருதுகின்ற பேரறிவு.
‘ஜீவன்’ என்பது ‘யான்’, ‘எனது’ எனக் கருதித் தனது நன்மையையே கருதுகின்ற சிற்றறிவு.
‘மனிதன்’ என்பவன் சூக்ஷ்ம ஸ்தூல உடம்புகளோடு கூடி நின்று நினைக்கின்ற ஜீவன்.
‘மனம்’ என்பது ஒரு சூக்ஷ்ம அல்லது சூக்ஷ்ம ஸ்தூல உடம்போடு கூடி நிற்கின்ற ஜீவனது நினைப்பு.
‘சூக்ஷ்ம உடம்பு’ என்பது ஸ்தூல உடம்பின் பொறிகள் வழியாகக் காண முடியாத ஓர் உடம்பு.
‘ஸ்தூல உடம்பு’ என்பது அப்பொறிகள் வழியாகக் காணத்தக்க ஓர் உடம்பு.
‘அகம்’ என்பது சூக்ஷ்ம ஸ்தூல உடம்புகளில் மனம் சஞ்சரிக்கின்ற இடம்.
‘புறம்’ என்பது ஸ்தூல உடம்பிற்கு வெளியில் மனம் சஞ்சரிக்கின்ற இடம்.
‘பரோக்ஷஞானம்’ என்பது கேள்வியால் அல்லது கல்வியால் அடையப்பட்ட அறிவு.
‘அபரோக்ஷஞானம்’ என்பது மனத்தால் அல்லது பொறிகளால் காணப்பட்ட அறிவு.
‘துன்பம்’, ‘துக்கம்’ என்பன முறையே ‘பொறிவருத்த’த்தையும் ‘மனவருத்த’த்தையும் குறிக்கும்.
‘இன்பம்’, ‘சுகம்’ என்பன முறையே ‘பொறிக்களிப்பை’யும், ‘மனக்களிப்பை’யும் குறிக்கும்.
‘போட்டி’ என்பது ஒருவரின் மற்றொருவர் மேம்பட வேண்டுமென்று செய்யும் முயற்சி முதலியன.

$$$

4. காப்பு

எளிமைக்கு மூலம் எனஇகழ நிற்பேன்
வலிமைக்கு மார்க்கம் வரைய-எளிமைக்கு
மூலம் என இரந்து மூவுலகும் காத்தரசாய்க்
காலமிடம் நீத்துநிற்பான் காப்பு.

ஒழுக்கம்
ஒழுக்கத்தாற் சீர்சால் புயர்வெல்லாம் எய்தும்;
ஒழுக்கத்தால் மெய்ப்பொருளின் ஓர்வும்- பழுக்கும்
‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்’.

அறம்
‘சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்
காக்கம் எவனோ உயிர்க்‘கே-‘அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

பொருள்
‘பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை
தன்னின் ஆகும் தரணி; தரணியின்
பின்னை யாகும் பெரும்பொருள்; அப்பொருள்
துன்னும் காலைத் துன்னாதன இல்லையே.’

முயற்சி
‘நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் -நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.’

$$$

5. ஜேம்ஸ் ஆலன் – சரித்திரச் சுருக்கம்

ஜேம்ஸ் ஆலன் என்பவர் இங்கிலாந்து தேசத்தில் லீஸ்டர் என்னும் நகரத்தில் 1864-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி பிறந்தார். அவர் இளமைப் பருவத்திலேயே கல்வியில் மிக்க அவாவுடையவர்; அடிக்கடி தனித்த இடத்திற்குச் சென்று நூல்களை வாசித்துச் சிந்தித்திருப்பவர்: அவர் தமது தந்தையாரிடம் ஜீவ தத்துவங்களைப்பற்றி வினவுவர். அவரது தந்தையார் அவ்வினாக்களுக்கு விடைகள் கூற இயலாது தயங்குவர். அப்பொழுது அவரே தமது வினாக்களுக்கு விடைகள் கூறுவர். அவற்றைக் கேட்டு அவரது தந்தையார், ”மகனே! இவ்வளவு அறிவு ஒரு பிறப்பில் கற்ற கல்வியால் வரத்தக்கதன்று; நீ முன் பல பிறப்புகளில் கற்றிருக்கின்றாய் போலும்” என்று கூறுவர்.

ஆலனது இளமைப் பருவத்தில் அவரது சரீரம் மிகத் துர்பலமாயிருந்தது. அப்படியிருந்தும் அவர் விஷயங்களை அதிகமாக ஆலோசனை செய்து ஆராய்ச்சி செய்வது வழக்கம். அதைப் பார்த்த பலர், ”நீர் இவ்வளவு தூரம் ஆலோசனை செய்து ஆராய்ச்சி புரிவதால் உமது சரீரத்திற்குத் தீங்கு விளையக் கூடும்” என்று கூறுவதுண்டு. அவரது தந்தையாரும், ”ஆலனே! நீ இவ்வளவு தூரம் உன் மனத்திற்கு வேலை கொடுப்பாயானால், நீ சீக்கிரம் மரணம் அடைவாய்” என்று பல முறை கூறினதுண்டு. இவரது இவ்வார்த்தைகள் பிற்காலத்தில் ஆலனது ஞாபகத்திற்கு வந்தபோதெல்லாம் அவர் புன்சிரிப்பாகச் சிரித்துக் கொள்வர்.

ஆலன் எதை எதை எந்த எந்த நேரத்திற் செய்ய வேண்டுமோ, அதை அதை அந்த அந்த நேரத்தில் தமது முழுமனத்தோடும் செய்து முடிப்பர். அவர் எதிலும் தமது மனத்தை அரைகுறையாகச் செலுத்துவதில்லை; எதையும் அறைகுறையாகச் செய்வதுமில்லை. அவர் எதைச் செய்தாலும் திருத்தமாகவும் பூர்த்தியாகவும் செய்வார். அரவது ஏகாக்கிரக சித்தமே அவர் அடைந்த உன்னதப் பதவிக்கெல்லாம் அடிப்படை. படித்தல், விளையாடல், உண்ணல், உறங்கல் முதலிய சகல செயல்களையும் அவர் கிரமமாகவும் ஒழுங்காகவும் செய்து முடிப்பர்.

அவர் வாலிபப் பருவத்தை அடைந்த பின்னர் தமது சிநேகிதரோடு நீண்ட தூரம் உலாவச் செல்வர். அவர் தமது மார்க்கத்தில் இயற்கைப் பொருள்களைப் பார்த்துக் களிப்புறுவர்; துஷ்ட மிருகங்களையும் நெருங்கி, அவற்றின் குணாதிசயங்களைக் கவனித்து அவற்றினிடத்து அன்பு பாராட்டுவர். அத்துஷ்ட மிருகங்களும் அவரிடத்தில் நெருங்கி வந்து அவர் வார்த்தைக்குப் பணிந்து இணங்கி நிற்கும். அவருடைய பதினைந்தாவது வயதில் அவர் தந்தையாரின் ஐசுவரியமெல்லாம் போய் விட்டன. அவரது தந்தையார் தமது குடும்பத்தின் அன்ன வஸ்திராதிகளுக்குப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்றனர். அங்குப் போய்ச் சேர்ந்த இரண்டு தினங்களுள் நியூயார்க் நகர் ஆஸ்பத்திரியில் அவர் இறந்து போயினர். அவரிடமிருந்து நமது ஆலன் குடும்பத்திற்குக் கிடைத்த செல்வமெல்லாம் அவர் நெடுங்காலமாக வைத்திருந்த வெள்ளிக் கைக் கடிகாரம் ஒன்றே. அவரது மரணத்திற்குப் பின்னர் ஆலன் நாள்தோறும், பதினைந்து மணிநேரம் வேலை செய்து தமது தாயாரையும் தமது இரண்டு சகோதரரையும் பாதுகாத்து வந்தார். அக்காலத்தில் அவர் தினந்தோறும் மூன்று நான்கு மணி நேரம் நூல்களை வாசித்து வருவர். ”கருமம்செய ஒருவன் கைதூவேன் என்னும், பெருமையிற் பீடுடையதில்” என்று நம் வள்ளுவர் கூறியதுபோல அவரும் ”அதிகம் கஷ்டப்பட்டு வேலை செய்தல் அநேகம் பாஷைகளைக் கற்பதோ டொக்கும்” என்று அடிக்கடி கூறுவர்.

ஆலன் பதினேழாவது வயதில் ஆங்கில நாடகக் கவிசிரேஷ்டராகிய ஷேக்ஸ்பியரின் நாடக நூல்களைக் கற்கத் தொடங்கி, அவற்றில் பெரும் பாகங்களை மனப்பாடம் செய்து முடித்தார், அக்காலத்திலும் மற்றைக் காலத்திலும் அவரது லட்சியம் மெய்யுணர்தல் ஒன்றே. அவர் அதற்காகவே பல நூல்களைக் கற்றார், இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாகச் சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவரது துணிவு. அவர் ஒழுக்கத்தை ஓர் ஆபரணமாக எக்காலத்தும் கொண்டிருந்தார். அவர் ஜாதியில் ஆங்கிலேயராயிருந்தும் புலாலுண்ணல், மதுவுண்ணல், அந்நிய ஸ்திரீகளுடன் உலாவச் செல்லல் முதலிய கெட்ட பழக்கங்களை ஒருபோதும் கைகொண்டவரல்லர். அவர் வாக்கினின்று வரும் வார்த்தைகளெல்லாம் பொருள் நிறைந்தனவாயும் இன்பம் பயப்பனவாயும் இருக்கும். அவரைக் கண்ட தீயோரும் நல்லோராய் விடுவர். இதற்குப் பல சான்றுகள் உண்டு. அவற்றுள் ஒன்று;-  அவர் ஒரு காலத்தில் வேலை பார்த்து வந்த ஓரிடத்தில் சதா காலமும் கெட்ட வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்த பல வேலைக்காரர்கள் அவர் அங்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களுள் அவ்வார்த்தைகளை அடியோடு நிறுத்தி விட்டார்கள்.

அவர் தமது இருபத்து நான்காம் வயதில், ”ஆசிய தீபம்” (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. அது முதற்கொண்டு அவர் நமது நாட்டு நூல்களை மிகுதியாக வாசிக்கத் தொடங்கினர்ர். நமது நாட்டு நூல்களில் அவருக்கிருந்த விருப்பம் வேறு எந்த நாட்டு நூல்களிலும் இல்லை. அவர், ”கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்” என்று அடிக்கடி கூறுவதுண்டு. அவர் வாக்கினின்று வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நமது நாட்டு நீதியும் மதக் கோட்பாடும் கலந்திருக்கும். ஒழுக்கம் ஒன்றே மெய்யுணர்வுக்கும் மற்றைய சகல உயர்ந்த பதவிகளுக்கும் மார்க்கம் என்பது அவருடைய சித்தாந்தம். அதுபற்றி அவர் எஞ்ஞான்றும் ஒழுக்கத்தைத் தம் உயிரினும் அதிகமாக ஓம்பி வந்தார்.

அவர் தமது முப்பதாம் வயதில் லில்லி ஆலன் என்னும் ஓர் ஆங்கில மாதை மணம் புரிந்தார். அவ்வம்மையார் அவரது உடம்பு, மனம், ஆன்மா என்ற மூன்றிற்கும் ஓர் ஒப்பற்ற துணையாக அவரோடு கூடி வாழ்ந்து வந்தனர். அவரது முப்பதிரண்டாம் வயதில் அவருக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு நோரா ஆலன் என்று பெயரிட்டனர். அவள் பிறந்த நாள் முதற்கொண்டு அவர் விஷய இச்சையை விட்டுவிட்டனர். அவர் காலை மூன்று மணிக்கு எழுந்திருந்து தியானத்தில் இருப்பர்; குன்றுகளின் மீது தனித்துச் சென்று ஆன்மா தத்துவங்களை சிந்திப்பர்; அவரை அடுத்தோர்களுக்கு ஆன்ம ஞானத்தை உபதேசிப்பர். ”மனிதனது புற நிலைமைகளெல்லாம் அவனது அக நிலைமைகளிலிருந்தே வருகின்றன” என்பதும், ”புற நிலைமைகைளத் திருத்த வேண்டும்” என்பதும் அவருடைய முக்கிய உபதேசங்கள்.

அவர் இயற்றியுள்ள பல நூல்கள் அவருடைய பெயர் இவ்வுலகில் என்றென்றும் நின்று நிலவும்படிக்கும் அவரது அறிவையும் ஆற்றலையும் சொல்வன்மையையும் எல்லாரும் புகழும்படிக்கும் செய்கின்றன. அவர்,  ‘புத்தி விளக்கம்’ (The Light of Reason) என்று ஒரு மாதாந்திரப் பத்திரிகை நடத்தி வந்தார். அதனை வேறொரு பெயருடன் அவரது மனைவியார் நடத்தி வந்தார்.

அவர் சரீர ஆரோக்கியம் குன்றிய காலத்தும் அவரது கடைசிக் காலத்தும், அவர் தமது தியானத்தையாவது, தெய்வ சிந்தனையையாவது, பரோபகார வேலையையாவது நிறுத்தியதுமில்லை; குறைத்ததுமில்லை. அவரது சரீர ஆரோக்கியத்தைக் கருதி அவரது மனைவியார் முதலியோர் அவரது வேலைகளைக் குறைக்கவேண்டுமென்று அவரிடத்திற் கூறிய பல சமயங்களிலும், ”வேலை செய்வதற்காகவே யான் உடலோடு கூடிப் பிறந்தேன். வேலை செய்வதற்காகவே உடலோடு கூடி வாழ்கிறேன்; என் வேலை முடிந்தவுடனே இவ்வுடலை யான் விட்டுவிடுவேன்; நீங்கள் என் வேலையைத் தடுக்கவேண்டாம்” என்று கூறியிருக்கின்றனர். அவர் கடைசியாக 1912-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி, ”எனது வேலைகளையெல்லாம் செய்து முடித்து விட்டேன். யான் இது முதல் தந்தைபாற் செல்வதற்குச் சித்தமாகின்றேன்” என்று கூறித் தமது வேலைகளை விட்டு நீங்கித் தமது மனைவியார் முதலியோர் களிப்படையும்படி பல நல்ல காரியங்களைப்பற்றி அவருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்து, அம்மாதம் 24-ம் தேதி பரமபதம் அடைந்தார். அவரது சரீரம் நமது நாட்டு வழக்கப்படி காஷ்டத்தில் வைத்து எரிக்கப்பட்டது. அவரது ஆவி அறிவு வடிவமாக எங்கும் நிறைந்து விளங்குகிறது.

(தொடர்கிறது)

$$$

One thought on “வலிமைக்கு மார்க்கம் -1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s