அதிகமான் நெடுமான் அஞ்சி-12

-கி.வா.ஜகந்நாதன்

12. அந்தப்புர நிகழ்ச்சி

இப்போது அதிகமானுடைய அரண்மனையில் முன்னே நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய ஆதாரம் ஒன்றும் இப்போது கிடைக்கவில்லை. ஆனாலும்  ‘அதிகமான் கோட்டை’ என்று இப்போது வழங்கும் ஊரில் வாய்வழிச் செய்தியாக இந்த வரலாறு வழங்கி வருகிறது.

அதிகமானுடைய அரண்மனை கோட்டைக்குள் இருந்தது. அங்கே அந்தப்புரமும் இருந்தது. அவனுடைய மனைவியும் அதிகமானுக்கு உறவினராகிய பெண்மணிகளும் அந்தப்புரத்தில் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு ஏவல் செய்யப் பல வேலைக்காரிகள் இருந்தார்கள்.

அரண்மனையில் உள்ளவர்களின் துணிகளை வெளுக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் ஆடை வெளுப்பவர்களின் தலைவன். அவனிடம் பலர் வேலை செய்தார்கள். அந்தப்புரத்துத் துணிகளை ஆடவர் வெளுப்பதில்லை. சலவைத் தொழிலாளர் குலப் பெண்களே வெளுத்துவந்தார்கள். அதிகமானுடைய மனைவியின் ஆடைகளை வெளுப்பதற்குத் தனியே ஒரு சலவையாளர் குலப் பெண்ணை அமர்த்தி யிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவள் அந்தப்புரத்துக்கு வந்து வெளுப்பதற்குரிய துணிகளை எடுத்துச் செல்வாள்.

அரண்மனையில் வேலை செய்கிறவர்களுக்குத் தனியே மானியம் கொடுத்திருந்தார்கள். இது அந்தக் கால வழக்கம். அங்கே பல வகையான ஏவல்களைச் செய்கிறவர்கள் பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்து வந்தார்கள். மயிர் வினைஞர்கள், ஆடை வெளுப்பவர்கள், மண்கலம் கொடுப்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், கன்னார வேலை செய்பவர்கள், பொன் வாணிகர்கள் ஆகிய எல்லோருமே தந்தைக்குப் பின் மகனாக அரண்மனை ஊழியத்தைப் புரிந்து வருகிறவர்களே. அவரவர்கள் வாழ்க்கைக்குப் போதிய விளைவையுடைய இறையிலி நிலங்களைப் பழைய அரசர்கள் வழங்கியிருந்தார்கள். ஒவ்வோராண்டும் பண்டிகைக் காலங்களில் ஆடை, அணி, உணவுப் பண்டங்கள் முதலியன அரண்மனையிலிருந்து தனியே கிடைக்கும். அரண்மனையில் உள்ளவர்களுக்குத் திருமணமோ, மகப்பேறோ உண்டானால் அப்போது பரிசுகள் கிடைக்கும். அதனால் அத்தகைய தொழிலாளிகளும் கலைஞர்களும் நன்றாக வாழ்ந்தார்கள். பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடினார்கள். அவர்களுடைய வீட்டில் மணம் முதலியன நடந்தால் அரண்மனையிலிருந்து அவற்றிற்கென்று தனியே பண்டங்களும் பொருளும் கிடைக்கும். இதனால், யாதொரு குறைவுமின்றி மன நிறைவோடு அந்தத் தொழிலாளர்கள் தம் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்துவந்தார்கள்; அரசனிடத்திலும் அவனுடைய உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் அவர்களுக்கு ஆழ்ந்த அன்பு இருந்தது. அதுபோலவே அரண்மனையிலுள்ள அரசரும் அரசியரும் அந்தத் தொழிலாளர்கள் நன்மையைத் தம் நன்மையாகவே கருதி ஆவன செய்து வந்தார்கள்.

இத்தகைய அமைப்பில் அரசியின் ஆடைகளை வெளுக்கும் கடமையை ஒரு குடும்பத்தினர் மேற்கொண்டிருந்தனர். அதிகமான் காலத்தில் ஒரு பெண்மணி அரசிக்கு உடை ஒலிக்கும் ஊழியம் புரிந்துவந்தாள். அவளுக்கு ஒரு சிறிய பெண் இருந்தாள். அரண்மனைக்கு வரும்போது அவளையும் அழைத்து வருவாள் தாய். தாய்க்கு முதுமை வந்துவிட்டது. அந்தப்புரம் செல்வதை அவள் நிறுத்திக்கொண்டாள்; தனக்குப் பதிலாகத் தன் மகளை அனுப்பினாள்.

நன்றாக வளர்ந்து அழகியாக நின்றாள் அந்தப் பெண் பருவத்தின் மெருகு அவள் மேனியிலே ஒளிர்ந்தது. அதிகமானுடைய மனைவிக்கு அவளிடம் தனியன் ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகளில் பழையனவற்றை அவளுக்குக் கொடுப்பாள். அதை உடுத்துக்கொண்டு அவள் நின்றால் அரசி அவளைப் பார்த்துப் பார்த்து இன்புறுவாள். ‘அடி பெண்ணே , நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய்! அரசியாகப் பிறக்க வேண்டியவள், வேறு குடும்பத்திலே பிறந்துவிட்டாயே! பிரமன் சிறிது நாழிகைக்குமுன் உன்னைப் படைத்திருந்தால் நீ எந்த மன்னனுடைய அந்தப்புரத்தில் இருப்பாயோ!’ என்பாள்.

‘போங்கள் அம்மா! என்னை ஏன் இப்படிப் பரிகாசம் செய்கிறீர்கள்? அப்படி ஏதாவது இருந்தால் உங்கள் அரண்மனைச் சோறுதான் காரணம்’ என்பாள். அவளுக்கு அடிக்கடி அரண்மனை மடைப் பள்ளியிலிருந்து உணவையும் சிற்றுண்டிகளையும் அரசி கொடுக்கச் செய்வது வழக்கம்.

“உன்னையும் என்னையும் பார்த்தால் உன்னைத் தான் அரசியென்று தெரியாதவர்கள் நினைப்பார்களடி!” என்று அரசி பாராட்டுவாள்.

“அப்படியெல்லாம் சொன்னால் எனக்குக் கோபம் வரும், அம்மா!” என்று பொய்யாகக் கடிந்து கொள்வாள் அந்த இளம்பெண் ; ஆனால் அவள் உள்ளத்துக்குள் பெருமை பொங்கும் சிறு பெண்தானே? அந்தப் பெண் அரசி சொல்வதையெல்லாம் வீட்டுக்குப் போய்த் தன் தாயிடம் சொல்வாள். அவள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து போவாள். “ஆமாமடி பெண்ணே, நீ இராசாத்தியாகப் பிறக்க வேண்டியவள் தான்” என்பாள்; அடுத்து, “உன்னைத் தட்டிக்கொண்டு போக எந்த ஆண்பிள்ளை பிறந்திருக்கிறானோ?” என்பாள்.

ஒரு நாள் அந்தப் பெண்ணைக் காணாவிட்டால் அரசிக்குப் பொழுது போகாது. அவள் அழகியாக இருந்ததோடு அறிவுச் சிறப்பும் உடையவளாக இருந்தாள். நன்றாகப் பேசினாள். இங்கிதம் அறிந்து பழகினாள். எப்போதாவது அரசிக்கு மனவருத்தம் இருந்தால் சிரிக்கச் சிரிக்கப் பேசி அவளுக்கு இருந்த வருத்தத்தை மறக்கும்படி செய்வாள்.

சிறுமியாக இருக்கும்போது அவள் நினைத்த போதெல்லாம் அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தாள். பருவ மங்கையாக மிளிரத் தொடங்கிய பின் நாலு பேர் கண்ணில் படும்படி வருவதில்லை; யாரும் காணாதபடி ஒதுங்கி ஒதுங்கி அந்தப்புரத்துக்குப் போவாள். அரசு பல அந்தரங்கச் செய்திகளையும் அவளிடம் சொன்னாள் அரண்மனையிலிருந்து வெளியே போவதற்கு ஒரு சுரங்க வழி இருக்கிறதென்ற இரகசியத்தைக்கூடச் சொன்னாள்.

ஒரு நாள் அரசி அரண்மனைக்கு வெளியே போக வேண்டியிருந்தது. அன்று ஏதோ சிறப்பான நாளாதலால் கோட்டைக்குள் பெருங் கூட்டம். வெளியிலே உள்ள இறைவன் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துகொண்டு உடனே வர எண்ணினாள் அரசி. அப்போது அந்தப் பெண் வந்திருந்தாள். அவளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சுருங்கை வழியே புறப்பட்டு வெளியிலே வந்தாள். யாருக்கும் தெரியாமல் வந்து, தரிசனம் செய்துவிட்டு, மீட்டும் அந்த வழியே அரண்மனைக்குப் போய்விட்டாள். அரசியுடன் செல்லும்போது சுருங்கையின் அமைப்பையும் அதன் இரண்டு முனைகளையும் கவனித்தாள், துணை சென்ற இளம்பெண்.

ஒரு நாள் அவள் அரண்மனைக்குள் நுழைந்து அந்தப்புரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாள். அப்போது அரசிக்குத் தம்பி முறையாகும் ஒருவன் பார்வை அவள் மேல் விழுந்தது. அவன் அண்மனை அதிகாரிகளில் ஒருவனாக வேலை பார்க்கிறவன். அவன் தன் கண்களை நம்பவில்லை. இப்படியும் ஓரழகி இங்கே இருக்கிறாளா?’ என்று வியந்தான். அது முதல் அவள் வருவதையும் போவதையும் கவனித்தான். அரசிக்குத் துணி வெளுப்பவள் என்பதைத் தெரிந்துகொண்டான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு உள்ளம் ஏதோ செய்தது.

ஒரு நாள் அவள் அந்தப்புரத்திலிருந்து தன் வீட்டுக்குச் செல்லும்போது ஒதுக்கமான இடத்தில் அவள் போகும் வழியில் நின்றான். அவள் அணுகும் போது, “ஏ பெண்ணே, சிறிது நில்; உன்னுடன் சில வார்த்தைகள் பேச வேண்டும்” என்றான். அறிவாளியாகிய அந்தப் பெண் அவன் பார்வையையும் குரலின் குழைவையும் கொண்டு அவன் இயல்பை உணர்ந்து கொண்டாள்; மறுமொழி பேசாமல் சென்றுவிட்டாள்.

அவன் இன்னும் சில நாள் கழித்து அவளை வழிமறித்தான். அவள் அந்தப்புரத்துக்குச் செல்லாமல் திரும்பிப் போய்விட்டாள். அன்று அவளைக் காணாத அரசி காரணம் தெரியாமல் திகைத்தாள். அவள் உடம்புக்கு நோய் வந்துவிட்டதோ என்று அஞ்சினாள். அவள் வீட்டுக்கு ஆளை அனுப்பி விசாரித்து வரச் சொன்னாள். உடம்பு சரியில்லை யென்றும், மறுநாள் வருவதாகவும் சொல்லியனுப்பினாள் அவள்.

மறு நாள் துணைக்கு ஒரு கிழவியை அழைத்துக் கொண்டு அவள் அரண்மனை சென்றாள். அந்தப்புரத்துக்கும் போனாள். உடன் வந்த கிழவியை வெளியிலே நிறுத்திவைத்துவிட்டு, “உங்களுடன் சிறிது தனியே பேச வேண்டும் அம்மா!” என்று அரசியை அழைத்துச் சென்றாள். உள்ளே போனவுடன் அவள் அழத் தொடங்கி விட்டாள்; துயரத்தால் விம்மினாள்.

“என்னடி இது? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டாள் அரசி.

“இனிமேல் இந்த அரண்மனைக்கு நான் வர முடியாதம்மா. பொல்லாதவர்கள் இருக்கிற இடமாகப் போய்விட்டது. நான் மானத்தோடு வாழ எண்ணினால் இங்கே வரக் கூடாது” என்று திக்கித் திக்கிப் புலம்பிச் சொன்னாள்.

“நீ என்ன சொல்கிறாய்? என்ன நடந்தது? சொல்லிவிட்டு அழு.”

“யாரோ உங்கள் தம்பியாம்; என்னைக் கண்டு பல்லை இளிக்கிறான்.”

“என் தம்பியா?”

“ஆமாம்; அவன் தான் சொன்னான். கடவுளே என்னைக் காப்பாற்றினார். அந்தக் கயவன் கண்ணிலே பட என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. இனி அவன் இருக்கும் வரையில் இங்கே என்னால் தலை காட்ட முடியாதம்மா.”

“போடி பைத்தியக்காரி! எவனோ ஒருவன் தவறு. செய்தால் அதற்காக நீ என்னைப் பார்க்காமல் இருக்கிறதாவது! நான் மன்னரிடம் சொல்லி அவனை ஒறுக்கச் சொல்கிறேன். நீ எப்போதும்போல் வந்து போய்க்கொண்டிரு.”

அந்தப் பெண் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். வரும்போது ஒரு துணையுடன் வருவதும் போகும்போது அரண்மனையிலிருந்து பெண் துணையுடன் போவதுமாக இருந்தாள்.

அவளுக்கு மனத் துயரம் ஆறவில்லை. தன்னை ஒரு தொழிலாளர் பெண் என்று எண்ணித் தீங்கு புரிய நினைந்த அந்தப் புல்லியனை வேலையிலிருந்து ஓட்டிவிட வேண்டுமென்று கறுவினாள். ஒவ்வொரு நாளும் அரசியை, “அவனை என்ன செய்தீர்கள் அம்மா?” என்று கேட்பாள். அரசிக்கோ இந்த நிகழ்ச்சியைப் பெரிதாக்க மனம் இல்லை; ‘மன்னரிடம் சொல்லி யிருக்கிறேன்” என்பாள்.

“நான் ஏழையென்று நீங்கள் எண்ணிவிட்டீர்கள். அதனால்தான் எனக்கு வந்த இன்னலைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. நீங்களே இப்படி நினைக்கும்போது அந்தப் பாவி என்னைக் கிள்ளுக் கீரையாக நினைத்தது வியப்பே அன்று” என்று ஒரு நாள் அவள் சற்றுக் கோபமாகவே பேசினாள்.

“அழகான பெண் என்றால் கண் உடையவர்கள் பார்க்காமல் இருப்பார்களா?” என்று அரசி விளையாட்டாகச் சொன்னாள்.

அந்தச் சொல் காதில் விழுந்ததோ இல்லையோ, அந்த இளம்பெண் புலிபோலச் சீறினாள். “என்ன அம்மா சொல்கிறீர்கள்? அவன் உங்களுக்குத் தம்பி என்று சொன்னது உண்மையாகவே இருக்கும் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. நான் ஏழையாக இருக்கலாம். நீங்கள் அரசியாக இருக்கலாம். ஆனால் உங்களுக்குள்ள மானம் எங்களுக்கும் உண்டு அம்மா, கற்பைக் காத்துக்கொள்வதில் எங்களுக்குள்ள வீரம் உங்களுக்குக்கூட வராது” என்று படபடவென்று கொட்டிவிட்டாள்.

அரசி நடுங்கிப் போனாள். ‘ஏன் இப்படிப் பேசினோம்?, என்று இரங்கினாள். “நான் இன்று எப்படியாவது அரசரிடம் சொல்லி ஏதாவது வழி பண்ணுகிறேன். நீயும் இங்கே இரு. உன் காதில் கேட்கும்படி நான் அவரிடம் பேசுகிறேன். நீ மறைவாக இருந்து கேள். அப்பொழுதாவது உனக்கு மனம் ஆறுகிறதா, பார்க்கிறேன்” என்று அவளை ஆற்று வித்தாள்.

அதிகமான் அப்போது வருவான் என்பதை அறிந்தே இதைச் சொன்னாள் அரசி. அந்தப் பெண் ஒரு மறைவிடத்தில் இருந்தாள். சிறிது நேரத்தில் அதிகமான் வந்தான். அவனுடன் அளவளாவினாள் அரசி. பேச்சினிடையே அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

“என் ஆடைகளை வெளுத்துத் தரும் பெண் ஒருத்தி நாள்தோறும் இங்கே வந்து போகிறாள். அவள் தன் கடமையை நன்றாகச் செய்து வருகிறாள்.”

“அவளுக்குப் பரிசு கொடுக்க வேண்டுமோ?”

“இல்லை; இல்லை. அவள் இளம்பெண்; இன்னும் மணமாகாதவள்.”

“மணம் செய்துவைக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாய்.”

அதுவும் இல்லை. அவள் பார்க்க அழகாக இருப்பாள். நல்ல வளர்ச்சியுடைய உடம்பு.”

இந்த வருணனைகளெல்லாம் எதற்கு?” “அவளைக் கண்டு அரண்மனை அதிகாரிகளில் யாரோ கண் அடித்தானாம்.”

அதிகமான் அதைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மறுபடியும் அத்தாணி மண்டபத்துக்குப் போகவேண்டி யிருந்தது. “சரி, சரி; அழகாக இருப்பதே ஒரு கேடு. அவளும் பணத்துக்கு ஆசைப் பட்டுப் பல்லை இளித்திருப்பாள். அதை மட்டும் உன்னிடத்திலிருந்து மறைத்துவிட்டாள் போலிருக்கிறது” என்று அந்த நிகழ்ச்சியைப் பொருட்படுத்தாமலே பேசினான்.

“அந்தப் பெண் அழுதுகொண்டு வந்து நிற்கிறாள்.”

“அதையெல்லாம் நீ நம்பாதே! அந்த அழுகையை யெல்லாம் நாளைக்கே பொருளாக மாற்றுவாள். இந்த மாதிரிப் பெண்களை இங்கே வர விடுவதே தவறு! சரி சரி; எனக்கு வேலை இருக்கிறது; போய் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டான்.

மறைவில் நின்ற ஏழை மங்கை காதில் அதிகமானுடைய பேச்சு நாராசம் போல் விழுந்தது. அவளுக்கு மாத்திரம் ஆற்றலும் வாய்ப்பும் இருந்தால் அந்த நாவைத் துண்டித்திருப்பாள். ‘எத்தனை இழி வாக ஏழைகளை நினைக்கிறான் இந்தக் கீழ் மகன்! அரசனே இப்படி இருக்கும்போது அவன் ஏவலர்கள் கற்புக்கும் மானத்துக்கும் பெண்மைக்கும் எங்கே மதிப்புக் கொடுக்கப் போகிறார்கள்? இவர்களால் உலகில் அறம் செத்துப் போய்விடும்’ என்று குமுறினாள். அரசி வருவதற்கு முன் மெல்ல நழுவி விட்டாள்.

அரசி வந்து பார்க்கும்போது அவளைக் காணவில்லை, கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாகி விட்டதே என்று அவள் வருந்தினாள். எப்படியாவது அவளுக்கு ஆறுதல் கூறலாம் என்று வந்தவள், அவளைக் காணாமையினால் பின்னும் துயருற்றாள்.

அன்று போனவள் தான்; அப்பால் அரண்மனைப் பக்கமே அந்தப் பெண் கால் எடுத்து, வைக்கவில்லை. அவள் தாய், “ஏன் அம்மா அரண்மனைக்குப் போகவில்லை?” என்று கேட்டாள். “மானம் மரியாதையுள்ளவர்கள் போகிற இடம் அன்று அது” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள் . அவள் பெண். ஏதோ தவறான செயல், அவள் சீற் றத்தைத் தூண்டிவிட்டிருக்க வேண்டுமென்று தாய் உய்த்துணர்ந்து சும்மா இருந்துவிட்டாள்.

அந்தப் பெண்ணுக்கு அதிகமானிடத்திலும் அவனைச் சேர்ந்தோரிடத்திலும் கட்டுக்கடங்காத வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பும் உண்டாயிற்று. யாரேனும் அதிகமானைப் புகழ்ந்தால் அவள் அங்கே நிற்பதில்லை. ‘கற்பின் பெருமையை உணராத, பெண்மையின் உயர்வைக் காப்பாற்றாத, அரசன் அரசனா? அரக்கன் அல்லவா?’ என்று எண்ணி எண்ணிப் பொருமினாள். பாவம்! யாருக்கும் நினைந்து தீங்கு புரியாத அதிகமான் அந்தப் பெண்ணளவில் பொல்லாதவன் ஆகி விட்டான். அதை ஊழ்வினைப் பயன் என்று சொல்வதையன்றி வேறு என்ன வென்பது?

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s