சாந்திக்கு மார்க்கம்- 1

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

ஜேம்ஸ் ஆலன் எழுதிய  ‘From Poverty to Power’ என்ற நூலின் இரண்டாம் பகுதி  ‘The way to peace’ ஆகும். அதனை வ.உ.சி.  ‘சாந்திக்கு மார்க்கம்’ என்று மொழிபெயர்த்தார்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகம் அறிவதற்காக மொழிபெயர்த்திருக்கிறார் வ.உ.சி. இந்நூல் பல பகுதிகளாக இங்கே பதிவாகிறது…

நன்றி:
சாந்திக்கு மார்க்கம்
(ஜேம்ஸ் ஆலனின் நூல், தமிழில் மொழிபெயர்ப்பு)
வ.உ.சிதம்பரம் பிள்ளை
பாரி நிலையம், சென்னை, 1961

$$$

சாந்திக்கு மார்க்கம்

பொருளடக்கம்

முகவுரை
1. தியான வலிமை
2. இரண்டு தலைவர்- யானும் கடவுளும்
3. ஆன்ம வலிமையை அடைதல்
4. சுயநயமற்ற அன்பை அநுபவித்தல்
5. கடவுளோடு ஐக்கியமாதல்
6. முனிவர்களும், முனிகளும், இரக்ஷகர்களும் ஊழியம் புரிதல்
7. பூரண சாந்தியை அடைதல்.

$$$

முகவுரை

 ‘சாந்திக்கு மார்க்கம்’ என்னும் இந்நூல் இங்கிலாந்து தேசம், இல்பிராக் கோம்பி நகர் ஜேம்ஸ் ஆலன் என்னும் பெரியாருடைய, (From Poverty to Power) ‘எளிமையிலிருந்து வலிமைக்கு’ என்னும் ஆங்கில நூலின் இரண்டாம் பாகமாகிய, ‘The Way of Peace’  என்பதன் மொழிபெயர்ப்பு.

முதல் நூலின் ஆசிரியர், நமது நாட்டு நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களைக் கற்று, அவற்றின் பொருள்களைக் கடைப்பிடித்தொழுகி, மெய்ஞ்ஞானியாய் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில், அவர், தாம் கண்ட உண்மைகளை ஏனையோர்களும் கண்டு ஒழுக்க மேம்பாடு அடைந்து, மெய்ஞ்ஞானிகளாய்ப் பேரின்பம் பெற்று வாழ வேண்டுமென்ற அவாவுடையவராய், ஆங்கில மொழியில் பல நூல்கள் இயற்றி, அச்சிட்டு வெளிப்படுத்தினார். அவற்றில் பலவற்றைப் படிக்கும் பாக்கியம் எனக்கு 1905-ம் வருஷம் கிடைத்தது. அவற்றின் அருமை பெருமைகளைக் கண்டு யான் ஆச்சரியம் அடைந்து, அவற்றையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் மக்கள் படிக்கும்படி செய்ய வேண்டுமென்று கருதினேன். உடனே அந்நூல்களில் சிறிய அளவினவாகிய இரண்டு நூல்களை ‘மனம் போல வாழ்வு’, ‘அகமே புறம்’ என்னும் பெயர்களோடு மொழிபெயர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அவற்றை தமிழ் மக்கள் மிக விருப்போடு வாங்கிப் படித்ததைக் கண்டு, யான் ஆலனுடைய ஏனைய நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி, இதன் முதல் நூலின் முதற்பாகமாகிய  ‘The Path of Prosperity’ என்பதை  ‘வலிமைக்கு மார்க்கம்’ எனவும், இரண்டாம் பாகத்தைச்  ‘சாந்திக்கு மார்க்கம்’ எனவும், வேறு இரண்டு நூல்களைப்  ‘பேரின்ப மார்க்கம்’,  ‘ஊழை வெல்வதற்கு உபாயம்’ எனவும் அரைகுறையாக மொழிபெயர்த்து வைத்தேன். பின்னர்  ‘வலிமைக்கு மார்க்க’த்தைப் பூரணமாக்கி அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அதனையும் தமிழுலகம் விருப்பத்துடன் ஏற்றது.

கலாசாலைகளுக்குப் பாடப்புத்தகங்கள் விதிக்கும் (Text Book Committee) பாடப் புத்தக சபையார் யான் அச்சிட்டு வெளிப்படுத்திய மேற்கூறிய மூன்று நூல்களையும் பாடப் புத்தகங்களாக ஏற்றுக்கொண்டனர். உடனே இந்நூலைப் பூரணமாக்கி இப்போது அச்சிட்டு வெளியிடுகிறேன்.

இந்நூல் முதல்நூலின் சரியான மொழிபெயர்ப்பு. முதல் நூலிலுள்ள பாக்களை தமிழ்ப் பாக்களாக்கி இந்நூலில் ஆங்காங்குச் சேர்ந்துள்ளேன். இந்நூலும், முதல் நூலாசிரியரின் ஏனைய நூல்களைப் போன்று, மிகமிக உயர்ந்த இகலோக பரலோகப் பதவிகளை அளிக்கவல்ல மான்பு வாய்ந்தது. தமிழுலகம் இதனையும் உவகையுடன் வரவேற்குமென்று நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் துணை.

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

தூத்துக்குடி
17-07-1934

$$$

1. தியான வலிமை

ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்கு மார்க்கம். அது புவியிலிருந்து சுவர்க்கத்திற்கு, பொய்ப் பொருளிலிருந்து மெய்ப்பொருட்கு, துன்பத்திலிருந்து இன்பத்திற்குக் கொண்டுபோகும் சூட்சும ஏணி. ஒவ்வொரு சாதுவும் அவ்வேணியில் ஏறியிருக்கின்றான்; ஒவ்வொரு பாவியும் விரைவிலோ, தாழ்ப்பிலோ அவ்வேணிக்கு வர வேண்டும்; தன்னையும் இவ்வுலகையும் புறக்கணித்து, கடவுளையும் அவருலகையும் நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு யாத்ரிகனும் அவ்வேணியின் பொற்படிகளில் தனது பாதங்களை வைத்து ஏற வேண்டும். அதனுடைய உதவியில்லாமல், நீங்கள் கடவுணிலையை, கடவுட்டன்மையை, கடவுளமைதியை அடைய முடியாது; மெய்ப்பொருளின் கலப்பற்ற இன்பத்தையும், மங்காத பெருமையையும் காண முடியாது.

தியானமாவது, ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறிய வேண்டுமென்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல். எதனை நீங்கள் அடிக்கடி தியானித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதனை நீங்கள் அறிவது மாத்திரமல்லாமல்லாமல், அதன் வடிவமாக மேன்மேலும் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்; ஏனெனில், அஃது உங்கள் உயிரோடு கலந்து உங்கள் உயிரே ஆகிவிடும். ஆதலால், நீங்கள் சுயநயமும் கீழ்மையும் பொருந்திய ஒன்றை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருப்பீர்களாயின், நீங்கள் முடிவில் சுயநயத்தர்களாகவும் கீழ்மக்களாகவும் ஆய்விடுவீர்கள். நீங்கள் பரநயமும் தூய்மையும் பொருந்திய ஒன்றை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருப்பீர்களாயின், நீங்கள் நிச்சயமாகப் பரநயத்தர்களாவும் தூயர்களாகவும் ஆய்விடுவீர்கள்.

நீங்கள் எதைப்பற்றி அடிக்கடி ஆழ்ந்து நினைக்கின்றீர்களோ, வேலையற்ற நேரங்களில் எதனிடத்தில் உங்கள் ஆத்மா இயற்கையாகச் செல்கின்றதோ, அதனை எனக்குச் சொல்லுங்கள்; நீங்கள் எந்தத் துன்ப இடத்திற்கு அல்லது இன்ப இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் தெய்வ வடிவாகவா அல்லது மிருக வடிவாகவா வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.

ஒருவன் எந்தக் குணத்தை அடிக்கடி நினைக்கின்றானோ அந்தக் குணத்தின் எதார்த்த வடிவத்தை அவன் அடையும்படியான விலக்க முடியாத தன்மை ஏற்படுகின்றது. ஆதலால், உங்கள் தியானப் பொருளை நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களை மேலே உயர்த்தும்படியான விதத்தில் உங்கள் தியானப்பொருள் மேலானதாக இருக்கட்டும்; கீழானதாக இருக்க வேண்டா; சுயநய அம்சம் எதுவும் கலக்காத தூயதாக இருக்கட்டும், அதற்குத் தக்கபடி உங்கள் ஹிருதயம் அசுத்தமாகிப் பொய்ப்பொருள்பால் இழுக்கப்படாமல், சுத்தமாகி மெய்பொருள்பால் இழுக்கப்படும்.

தியானம் ஆத்மார்த்த வாழ்விற்கும் ஞானத்திற்கும் அடிப்படை. ஒவ்வொரு தீர்க்கதரிசியும், ஞானியும், லோக ரக்ஷகனும் தியான வலிமையாலேயே அவ்வாறாயிருக்கின்றனர். ”யான் மெய்ப்பொருள்” என்று சொல்லும் வரையில் புத்தர் பெருமான் மெய்ப்பொருளைத் தியானித்துக் கொண்டிருந்தார். ”யானும் என் தந்தையும் ஒருவனே” என்று சொல்லும் வரையில் ஏசுநாதர் கடவுளின் அந்தரியாமித்துவத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

தெய்வ உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட தியானமே பிரார்த்தனையின் சாரமும் உயிருமாகும். அது கடவுளிடத்து ஆன்மா மௌனமாகச் சென்று சேர்தலாம். தியானமற்ற (எனக்கு இன்ன அருள்க என்று கேட்கும்) மனுப்பிரார்த்தனை உயிரற்ற உடம்பு: அது மனத்தையும் ஹிருதயத்தையும் பாவத்திற்கும் துன்பத்திற்கும் மேலே உயர்த்தும் வலிமையற்றது. ஞானத்திற்காகவும் மனோசாந்திக்காவும், மேலான தூய்மைக்காகவும், பூரண மெய்யுணர்வுக்காகவும், நீங்கள் நாள்தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தும், நீங்கள் பிரார்த்திக்கும் பொருள் உங்களுக்குத் தூரத்திலே இருக்குமானால், நீங்கள் பிரார்த்திப்பது ஒன்றும், நீங்கள் நினைப்பதும் செய்வதும் வேறொன்றுமா யிருக்கிறதென்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; நீங்கள் அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிற மாசற்ற உண்மைகளை நீங்கள் அடையவிடாமல் தடுக்கிற சுயநயப் பற்றுடைய பொருள்களிலிருந்து உங்கள் மனத்தை அப்புறப்படுத்தி அதன் போக்கில் விடாமல் நிறுத்துவீர்களாயின், நீங்கள் எதனைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்களோ அதனை உங்களுக்குக் கொடுக்கும்படியும், நீங்கள் மற்றவர்களிடத்துச் செலுத்தாத அன்பையும் கிருபையையும் செலுத்தும்படியும் கடவுளிடத்து நீங்கள் கேளாதிருப்பீர்களாயின், நீங்கள் எப்பொழுதும் மெய்ப்பொருளின் தன்மையை நினைக்கவும் அநுசரித்து நடக்கவும் தொடங்குவீர்களாயின், நீங்கள் அம்மாசற்ற உண்மைகளில் ஐக்கியமாகும்படி நாள்தோறும் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்.

ஏதேனும் ஒரு லௌகிக இலாபத்தை அடைய விரும்புகிறவன், அதனை அடைவதற்குச் சுறுசுறுப்பாக வேலை செய்ய விருப்பமுள்ளவனாயிருத்தல் வேண்டும். தான் விரும்பிய மாத்திரத்தில் அந்த இலாபம் தனக்கு வந்துவிடுமென்று எதிர்பார்த்துக் கைகளைக் கட்டிக்கொண்டு காத்திருக்கின்றவன் மடையனேயாவன். முயற்சியென்றும் செய்யாமல் மோக்ஷ உடைமைகளை நீங்கள் அடையக் கூடுமென்று வீணாக எண்ண வேண்டா, மெய்ப்பொருள் இராஜ்யத்தில் நீங்கள் உண்மையாக வேலை செய்ய ஆரம்பிக்கும்போது மாத்திரம் நீங்கள் மோக்ஷ உடைமைகளை அடைவதற்கு அநுமதிக்கப்படுவீர்கள்; நீங்கள் விரும்பும் ஆத்ம உடைமைகளை அடைவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பொறுமையோடும் முணுமுணுக்காமலும் செய்து முடித்த பொழுது, அவ்வுடைமைகள் உங்களைச் சேரவிடாமல் வைத்திருக்கப்பட மாட்டா.

உங்கள் சொந்தத் திருப்தியை மாத்திரம் நாடாமல் மெய்ப்பொருளை உண்மையாக நாடுவீர்களாயின், லௌகிக சுகங்களுக்கும் இன்பங்களுக்கும் மேலாக அதனை நீங்கள் நேசிப்பீர்களாயின், ஆனந்தத்திற்கும் மேலாக அதனை நீங்கள் கோருவீர்களாயின், அதனை அடைவதற்கு ஆவசீயகமான முயற்சியைச் செய்வதற்கு நீங்கள் விருப்பமுள்ளவராயிருப்பீர்கள்.

பாவத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் நீங்கள் விடுபடுதற்கு விரும்புவீர்களாயின், நீங்கள் அடைய வேண்டுமென்று பெருமூச்சுவிட்டுப் பிரார்த்திக்கும் மாசற்ற தூய்மையைக் கொள்ள விரும்புவீர்களாயின், உலக அறிவையும் ஆத்ம ஞானத்தையும் அடையவும், நிலையானதும் ஆழ்ந்ததுமான சாந்தியை அனுபவவிக்கவும் விரும்புவீர்களாயின், இப்பொழுது வந்து தியானமாகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள்; உங்கள் தியானத்தின் மேலான பொகுளாக மெய்ப்பொருளைக் கொள்ளுங்கள்.

சோம்பலான வீண் எண்ணங்களுக்கும் தியானத்திற்கும் உள்ள வேற்றுமையை ஆரம்பத்தில் அறிந்துகொள்ள வேண்டும். தியானத்தில் சொப்பனமும், அநுபவத்திற்கு எட்டாததும் ஒன்றும் இல்லை. கலப்பும் களங்கமுமற்ற மெய்ப் பொருளைத் தவிர வேறு ஒன்றும் அகத்தின்கண் இருக்கவிடாமல் செய்வதாகிய தேடுதலும் ஆராய்தலுமான அப்பியாசமே தியானம். இவ்வாறு தியானம் செய்தலால் உங்கள் துர்அபிமானங்களை வளர்க்க மாட்டீர்கள்: ஆனால், நீங்கள் ‘யான்’ என்பதை மறந்து, மெய்ப்பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறதாக மாத்திரம் உணர்ந்து கொண்டிருப்பீர்கள். அவ்வாறே, சென்ற காலத்தில் நீங்கள் உங்களைச் சுற்றிக் கட்டியிருக்கின்ற தீவினை மதில்களை ஒவ்வொன்றாக இடித்து மெய்ப்பொருளைக் காண்பதற்குப் பொறுமையோடு காத்துக் கொண்டிருப்பீர்கள்; உங்கள் தீவினை மதில்கள் போதிய அளவு நீக்கப்பட்டபொழுது மெய்ப்பொருட் காட்சி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் ஹிருதயம் மௌனமாக அடங்கியிருக்கும் காலையில் பின்வரும் செய்யுளின் பொருளைக் காண்பீர்கள்:

"நம்மகத் துள்ளே நடுவிடம் ஒன்றுளது;
மெய்ப்பொருள் நிறைந்தவன் விளங்கிநிற் கின்றது;
அதனைச் சுற்றி மதில் மதில் களாகத்
தூல மாமிசம் சூழ்ந்திருக் கின்றது;
அதன்தெளி வான முழுநற் காட்சியை
பொறியின்பப் போர்வை மறைத்துப் பலபல
தீமைக ளெல்லாம் செய்துநிற் கின்றது;
அதனை அறிதல் அகத்திருந் ததனொளி
வெளியே வரும்படி வழியொன்று செய்தலே;
மெய்ப்பொருள் ஒளியை வெளியிற் சென்று
பார்க்க வழிசெயல் பயனில் செயலே."

தியானம் செய்வதற்கு ஒவ்வொரு நாளிலும் ஒரு நேரத்தைக் குறித்துக் கொண்டு, அந்த நேரத்தில் தவறாது தியானம் செய்யுங்கள். ஒவ்வோருயிரும் உறங்கிக் கொண்டிருக்கும் விடியற்காலம் தியானத்திற்கு மிகமிகப் பொருத்தமான நேரம். எல்லா இயற்கை நிலைமைகளும் அப்பொழுது உங்களுக்கு அனுகூலமாயிருக்கும்: இராக்காலத்தின் நீண்ட உபவாசத்தால் காமக்குரோதாதிகள் அடங்கியிருக்கும்; முதல்நாட் கிளர்ச்சிகளும் தொந்தரவுகளும் ஒழிந்து போயிருக்கும்; மனமானது பலத்தோடும் அமைதியோடும் ஆத்மார்த்த போதனையை ஏற்றுக்கொள்ளத் தக்கதாயிருக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலைகளில் ஒன்று உங்களுடைய சோம்பலையும் உறக்கத்தையும் ஒழித்துவிடுதல்; அது செய்ய நீங்கள் மறுப்பீர்களாயின் நீங்கள் மேற்செல்ல அசத்தர்களாயிருப்பீர்கள்; ஏனெனில், ஆத்மாவின் வேண்டுதல்கள் தவறாமல் நிறைவேற்றப்படல் வேண்டும்.

ஆத்மா விழித்திருத்தற்கு மனமும் சரீரமும் விழித்திருத்தல் வேண்டும். சோம்பேறியும், சுகபோகியும் மெய்ப்பொருள் ஞானத்தை அடைய முடியாது. எவன் ஆரோக்கியமும் பலமும் உடையவனாயிருந்தும், சப்தம் இல்லாத அருமையான காலை நேரங்களைச் சோம்பலான உறக்கத்தில் கழிக்கிறானோ அவன் உயர்ந்த மோக்ஷ ஸ்தானங்களுக்கு ஏறுவதற்குச் சிறிதும் தகுதியில்லாதவன்.

எவன் தனது விழித்திருக்கிற அறிவினால் ஆகக்கூடிய உயர்ந்த காரியங்களை அறிந்திருக்கிறானோ, எவன் உலகத்தை மூடிக்கொண்டிருக்கிற அஞ்ஞானத்தைப் போக்குவதற்குத் தொடங்கியிருக்கிறானோ, அவன் நக்ஷத்திரங்களின் ஒளி மழுங்குவதற்கு முன்னே எழுந்திருந்து, விழியாத மனிதர்கள் கனாக்கண்டு கொண்டிருக்கும்போது, தன்னுடைய ஆத்மாவைச் சூழ்ந்துள்ள (அஞ்ஞானமாகிய) இருளோடு போராடி நிர்மலமான கோரிக்கையால் மெய்ப்பொருளின் ஒளியைக் காண்டதற்கு முயலுகிறான்.

“பெரியார் அடைந்துள பீடார் நிலைகள்
ஒருநாள் முயற்சியால் ஒன்றியவை யல்ல;
பலநாள் பிறர்கள் படுத்துறங் குங்கால்
இரவில் முயன்றதால் எய்திய வைகளே”

அதிகாலையில் எழுந்திராத ஒரு சாது, ஒரு பக்தன், ஒரு மெய்ப்பொருளாசிரியன் (இவ்வுலகில்) இருந்திருப்பதில்லை. தூய சிந்தனை செய்வதற்காக ஏசுநாதர் வழக்கமாக அதிகாலையில் எழுந்து, தனித்த மலைகளின்மேல் ஏறிச் சென்றார். புத்தர் பிரான் எந்நாளும் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே எழுந்து தியானம் செய்து வந்தார்; அவருடைய சீடர்களெல்லாம் அவ்வாறே செய்யும்படி கட்டளையிடப்பட்டார்கள்.

உங்களுடைய தினசரி வேலைகளை நீங்கள் அதிகாலையில் தொடங்க வேண்டியிருப்பதால், நீங்கள் நாள்தோறும் அதிகாலையில் தியானம் செய்ய முடியாதவர்களாயிருப்பின், இராத்திரி காலத்தில் ஒரு மணி நேரம் தியானம் செய்ய முயலுங்கள். உங்கள் தினசரி வேலைகளின் நீட்சியாலும் கஷ்டத்தாலும் நீங்கள் இராத்திரி காலத்திலும் தியானம் செய்ய முடியாதவர்களாயிருப்பின், அதற்காக நீங்கள் அதைரியப்பட வேண்டா; ஏனெனில் உங்கள் வேலையில் கிடைக்கும் இடைவேளைகளிலாவது, நீங்கள் இப்பொழுது காரியமில்லாமல் கழிக்கும் சில சோம்பல் நிமிஷங்களிலாவது உங்கள் நினைப்புக்களை மேம்படுத்திப் பரிசுத்தமான தியானத்திற்குத் திருப்பலாம்; உங்கள் வேலைகள் நீண்டகாலப் பழக்கத்தால் இயற்கையாக நிகழும் தன்மையனவாயிருந்தால், நீங்கள் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் நேரத்திலேயே தியானம் செய்யலாம். புகழ்பெற்ற கிறிஸ்தவ சாதுவும் தத்துவ ஞானியுமாகிய ‘யாக்கப் போகிம்’ என்பவர் நெடுநேரம் செருப்புத் தைத்துக் கொண்டிருக்கும்போதே தெய்வப் பொருள்களைப் பற்றிய தமது அகன்ற ஞானத்தை அடைந்தார். ஒவ்வொரு வேலையிலும் நினைப்பதற்கு நேரமுண்டு; மிக மிக அதிகமாக வேலை செய்கிறவருக்கும் மிக மிகக் கஷ்டத்துடன் வேலை செய்கிறவருக்கும் தியானம் செய்யவும் பிரார்த்தனை செய்யவும் நேரம் இல்லாமற் போகாது.

ஆத்ம தியானமும் தன்னைத் திருத்தலும் ஒன்றினின்று ஒன்று பிரிக்கப்பட முடியாதவை; ஆதலால், உங்களை அறிவதற்காக நீங்கள் உங்களைப்பற்றி ஊக்கமாகத் தியானம் செய்யத் தொடங்குங்கள்; நீங்கள் மெய்ப்பொருளைக் காண்பதற்கு உங்களிடத்திலுள்ள குற்றங்களை எல்லாம் அடியோடு நீக்குதலே உங்களுடைய முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டுமென்பதை நீங்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நோக்கங்களையும், நினைப்புகளையும் செயல்களையும் கவனித்து அவற்றை உங்களுடைய கோட்பாட்டுன் ஒப்பிட்டு, அவை அதற்குப் பொருத்தமானவையா என்று அமைதியான பக்ஷபாதமற்ற பார்வையோடு பார்த்து ஆராயத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதனால் மனச் சமாதானத்தையும் ஆத்ம சமாதானத்தையும் தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் அடைந்து கொண்டிருப்பீர்கள். அச்சமாதானங்கள் இல்லாமல், மனிதர்கள் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் உதவியற்ற துரும்புகளாயிருக்கிறார்கள். நீங்கள் வெறுப்புக்கு அல்லது வெகுளிக்கு அடிமைகளாயிருப்பின், உங்கள் குரூர நடக்கையையும் மூட நம்பிக்கையையும் நீங்கள் உணரும்படியான விதத்தில் அன்பையும் பொறுமையையும் பற்றித் தியானியுங்கள், பின்னர் நீங்கள் அன்பையும், பொறுமையையும், மனித்தலையையும் பற்றிய நினைப்புக்களில் சஞ்சரிக்கத் தொடங்குவீர்கள்; நீங்கள் உயர்ந்த குணங்களைக் கொண்டு தாழ்ந்த குணங்களை ஒழித்த காலையில், அன்பாகிய தெய்வ வட்டத்தின் ஞானம், அதற்கு உங்கள் வாழ்க்கையினுடையவும் சிக்கல்களுக்குமுள்ள சம்பந்தத்தைப் பற்றிய அறிவுடன், உங்கள் ஹிருதயத்தில் மௌனமாகப் புகுத்து, அதனை நாளடைவில் கவர்ந்துகொள்ளும். இந்த ஞானத்தை உங்களுடைய ஒவ்வொரு நினைப்பிலும், சொல்லிலும், செயலிலும் உபயோகிப்பீர்களாயின், நீங்கள் மிகமிகப் பொறுமையுள்ளவர்களாகவும், மிக மிக அன்புள்ளவர்களாகவும், மிக மிகத் தெய்வத்தன்மையுள்ளவர்களாகவும் வளர்வீர்கள். இவ்வாறாக ஒவ்வொரு குற்றத்தையும், ஒவ்வொரு சுயநய ஆசையையும், ஒவ்வொரு கெட்ட பழக்கத்தையும், தியானத்தின் வலிமையால் ஒழித்து விடலாம்; ஒவ்வொரு பாவமும், ஒவ்வொரு குற்றமும், உங்கள் அகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டபின், மெய்ப்பொருள் விளக்கு மிகத் தெளிவாகவும் பூரணமாகவும் யாத்திரிக ஆத்மாவைப் பிரகாசிப்பதாகும்.

இவ்வாறாகத் தியானிக்கையில், உங்களுடைய ஒரே உண்மை விரோதியாகிய உங்கள் சுயநய, அநித்திய, ஜீவனுக்கு விரோதமாக நீங்கள் இடைவிடாமல் உங்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பீர்கள்; மெய்ப்பொருளினின்று பிரிக்க முடியாத, தெய்வத் தன்மையும் அழிவில்லாமையும் பொருந்திய ஆத்மாவில், உங்களை மேலும் மேலும் உறுதியாக நிலைப்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் தியானங்களின் நேரான பயன் ஓர் அமைதியான தெய்வ பலம்; அஃது உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் நீங்கள் நிற்பதற்கும் தங்கியிருப்பதற்கும் உரிய இடமாகும். தூய நினைப்பின் வெல்லும் வலிமை மிகப் பெரியது; மௌனமான தியான காலத்தில் அடைந்த பலமும் ஞானமும், யுத்த காலத்திலும், துக்க காலத்திலும், துர்க்கிரியை செய்ய மனம் எழும் காலத்திலும், தப்பித்துக் கொள்ளக்கூடிய தைரியத்தையும் ஞாபகத்தையும் ஆத்மாவுக்குக் கொடுக்கும்.

தியான பலத்தால் நீங்கள் ஞானத்தில் வளரும்போது அசைவனவும், நிலையற்றனவும், துக்கத்தையும் துன்பத்தையும் தருவனவுமாகிய உங்கள் சுயநய அவாக்களை மிக அதிகமாக விட்டுவிடுவீர்கள்; என்றும் மாறுதலுறாத தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டு, நீங்கள் வளரும் நம்பிக்கையோடும் உறுதியோடும் மோக்ஷ அமைதியை அடைவீர்கள்.

தியானத்தின் பிரயோஜனம் நித்திய தத்துவங்களின் ஞானத்தை அடைதல்; தியானத்திலிருந்து உண்டாகும் பலம் அத்தத்துவங்களை நம்பி ஆதாரமாகக் கொள்ளும் வலிமையை அடைந்து, அவ்வாறே நித்தியப்பொருளோடு ஐக்கியமாதல். தியானத்தின் முடிவாவது மெய்ப்பொருளின், கடவுளின், நேரான ஞானத்தை அடைதலும் தெய்வ நித்திய சாந்தியை அடைதலுமாம்.

உங்களுடைய தியானங்கள் நீங்கள் இப்பொழுது கொண்டுள்ள ஒழுக்க நிலையிலிருந்து எழட்டும். உறுதியான விடாமுயற்சியால் நீங்கள் மெய்ப்பொருளாக வளர வேண்டியதிருக்கிறதென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வைதீகக் கிறிஸ்தவர்களாயிருந்தால், ஏசுநாதரின் மாசற்ற தூய்மையையும், அவரது ஒழுக்கத்தின் தெய்வ மேம்பாட்டையும் பற்றி இடைவிடாது தியானியுங்கள். அவருடைய பூரணத்துவத்தை மேன்மேலும் அடைவதற்காக நீங்கள் அவருடைய ஒவ்வோர் உபதேசத்தையும் உங்கள் அகவாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் உபயோகியுங்கள். மெய்ப்பொரு சட்டத்தைப்பற்றித் தியானிப்பதற்கும், தம்முடைய ஆசிரியருடைய உபதேசங்களை அப்பியாசத்தில் கொண்டு வருவதற்கும் மறுத்துக் கொண்டு, வெறுமனே தமது மதங்களைப் பற்றிக்கொண்டும், தமது மதத் தெய்வத்தைத் தொழுதுகொண்டும், இடைவிடாது பாவங்களைச் செய்து துன்பத்தை அநுபவித்துக் கொண்டும் இருக்கிற போலி மதத்தினர்களைப் போல இராதீர்கள்; அரைகுறைத் தெய்வங்களையும் கட்சிப் பிரதி கட்சி மதங்களையும் சுயநயத்தோடு பற்றிக் கொண்டிருத்தலை விட்டு, செத்த சடங்குகளையும் உயிரற்ற அஞ்ஞானத்தையும் கடந்து, தியான பலத்தால் மேற்செல்ல முயலுங்கள். அவ்வாறாக மாசற்ற மெய்ப்பொருளிடத்து மனத்தை நிறுத்திக் கொண்டு, ஞானமாகிய உயர்ந்த வழியில் நடப்பீர்களாயின், மெய்ப்பொருளை அடைதலினும் தாழ்ந்த இடம் ஒன்றையும் காணமாட்டீர்கள்.

எவன் ஊக்கத்தோடு தியானம் செய்கிறானோ அவன் முதலில் ஓர் உண்மையைத் தூரத்தில் காண்கிறான்; பின்னர் தினந்தோறும் செய்யும் தியானத்தால் அதனை அடைகிறான்; மெய்ப்பொருளின் உபதேசப்படி நடக்கிறவன் மாத்திரம் மெய்ப்பொருளின் மதத்தை அறியக்கூடும்; தூய நினைப்பால் மெய்ப்பொருளைக் கண்ட போதிலும், தியான அப்பியாசத்தால் மாத்திரமே மெய்ப்பொருளாதல் கூடும்.

தெய்வத்தன்மை வாய்ந்த கௌதம புத்தர், “எவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை மறந்து, சிற்றின்பத்தில் மனத்தைச் செலுத்தி, வீண் பெருமை பாராட்டிக் கொண்டு, தியானம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் கால அளவில் தியானத்தில் முயன்று கொண்டிருந்த மனிதனைப் பார்த்துப் பொறாமைப்படுவான்” என்று சொன்னார். அவர் தமது சீடர்களுக்குப் பின்வரும் ஐந்து பெரிய தியானங்களையும் உபதேசித்தார்.

“முதல் தியானம் அன்பைப் பற்றிய தியானம். அஃதாவது, உங்கள் விரோதிகளுடைய ஷேமம் உள்பட எல்லா உயிர்களுடைய ஷேமத்தையும் நன்மையையும் நீங்கள் விரும்பும்படியான, விதத்தில், உங்கள் அகத்தைச் சீர்படுத்தி வைத்துக்கொள்ளுதல்.”

”இரண்டாவது தியானம் இரக்கத்தைப்பற்றிய தியானம். அஃதாவது, எல்லா உயிர்களிடத்தும் உங்களுக்கு ஆழ்ந்த இரக்கம் உண்டாகும்படியான விதத்தில், அவ்வுயிர்களெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருத்தலை நினைத்து, அவ்வுயிர்களுடைய கவலைகளையும் துக்கங்களையும் தெளிவாக மனோபாவனை செய்தல்.”

”மூன்றாவது தியானம் சந்தோஷத்தைப் பற்றிய தியானம்; அஃதாவது, நீங்கள் மற்றவர்களுடைய சம்பத்தை நினைத்து, அவர்கள் சந்தோஷங்களுடன் நீங்களும் சந்தோஷித்தல்.”

”நான்காவது தியானம் அசுத்தத்தைப் பற்றிய தியானம், அஃதாவது, அயோக்கியதையின் தீய பலன்களையும், பாவத்தினுடையனவும் வியாதியினுடையனவும் பயன்களையும், நிமிஷத்தில் கழியக்கூடிய சிற்றின்பம் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை யென்பதையும் சிந்தித்தல்.

”ஐந்தாவது தியானம் சாந்தியைப்பற்றிய தியானம்; அஃதாவது, நீங்கள் விருப்பு வெறுப்புக்களுக்கும், வருந்துதல் வருத்துதல்களுக்கும், செல்வம் வறுமைகளுக்கும் மேற்பட்டு, உங்கள் ஊழைப் பக்ஷபாதமற்ற அமைதியோடும் பூரண சமாதானத்தோடும் ஏற்றுக்கொள்ளுதல்.”

இத் தியானங்களைச் செய்து புத்தரது சீடர்கள் மெய்ப்பொருள் ஞானத்தை அடைந்தார்கள். ஆனால், மெய்ப்பொருள் உங்களுடைய இலட்சியமாயிருக்கும் வரையில், குற்றமற்ற வாழ்க்கையும் தூயமனமுமுடைய ஒழுக்கத்திற்காக நீங்கள் தாகமும் பசியும் கொண்டிருக்கும் வரையில், இத்தியானங்களை நீங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் பெரிதன்று. ஆகையால், எங்கள் தியானங்களில் உங்கள் ஹிருதயம் சகல காமத்திலிருந்தும், குரோதத்திலிருந்தும், குற்றங் காண்டலிலிருந்தும் விடுபட்டு, அது பிரபஞ்சம் முழுவதையும் உள்ளூர்ந்த அருளோடு தழுவும் வரையில், எப்பொழுதும் அகன்று கொண்டிருக்கிற அன்போடு வளர்ந்து விரியட்டும். காலை ஒளியைப் பெறுவதற்காக அரும்பானது தனது இதழ்களைத் திறப்பது போல, மெய்ப்பொருளின் பெருமை வாய்ந்த ஒளியைப் பெறுவதற்காக உங்கள் ஆத்மாவை அதிகமாகத் திறப்பீர்களாக; கோரிக்கையாகி சிறகுகளைக் கொண்டு மேல்நோக்கிப் பறப்பீர்களாக; அச்சம் இல்லாமல் இருப்பீர்களாக; மிக மிக உயர்ந்தவற்றை அடையலாமென்று நம்புவீர்களாக; ஒரு பூரண இனிய வாழ்க்கையை அடையக்கூடுமென்று நம்புவீர்களாக; ஒரு மாசற்ற தூய வாழ்க்கையை அடையக் கூடுமென்று நம்புவீர்களாக. ஒரு பூரண பக்தி வாழ்க்கையை அடையக் கூடுமென்று நம்புவீர்களாக; மேலான மெய்ப்பொருளை அடையக்கூடுமென்று நம்புவீர்களாக. இவ்வாறு எவன் நம்புகிறானோ, அவன் மோக்ஷ மாலையின் மீது விரைவாக ஏறுகிறான்; இவ்வாறு நம்பாதவர்கள் மேக இருள் படிந்துள்ள நரகப் பள்ளத்தாக்கில் மயக்கத்தோடும் துன்பத்தோடும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு நம்புவதால், அவ்வாறு கோருவதால், அவ்வாறு தியானிப்பதால், உங்கள் ஆத்ம அநுபவங்கள் தெய்வ இனிமையும் அழகுமுள்ளனவாயிருக்கும்; உங்கள் பார்வையைப் பரவசப்படுத்தும் காட்சிகள் பெருமை வாய்ந்தனவாயிருக்கும். தெய்வ அன்பை, தெய்வ நீதியை, தெய்வப் பரிசுத்தத்தை அல்லது கடவுளை நீங்கள் அடையும் காலையில் உங்கள் இன்பம் பெரியதாகவும், உங்கள் சாந்தி ஆழ்ந்ததாகவும் இருக்கும்; பழைய பொருள்கள் நீங்கிவிடும். எல்லாம் புதியனவாய் விடும்; மெய்ப்பொருளைப் பார்க்கும் கண்ணுக்கு உரத்ததாகவும் ஊடுருவிச் செல்ல விடாததாகவும், மெய்ப்பொருளைப் பார்க்கும் கண்ணுக்கு மெல்லியதாகவும் ஊடுருவிச் செல்ல விடுவதாகவும் இருக்கிற ஸ்தூல பிரயஞ்சத்தின் திரையானது உயர்த்தப்பட்டு, சூட்சம பிரபஞ்சம் காட்டப்படும். காலத்திற்கு முடிவுண்டு, நீங்கள் முடிவில்லாமல் எஞ்ஞான்றும் வாழ்வீர்கள். மாற்றமும் மரணமும் இனிமேல் உங்களுக்குக் கவலையையும் துக்கத்தையும் கொடுக்க மாட்டா; ஏனெனில், நீங்கள் மாறுதல் இல்லாத பொருளை அடைந்து மரணம் இல்லாத பொருளின் ஹிருதயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.

ஞானமீன்

விஷ்ணுமூர்த்தியும், கிருஷ்ண சுவாமியும்,
புத்த தேவரும், கிறிஸ்து நாதரும்
பிறந்தநன் மீனே! பிறங்குமீன் இலாத
நடுராத் திரியின் நள்ளிருள் தன்னில்
நினதொளி காணும் மனமொடு வானை
நோக்கி யிருந்த நுண்ணறி வாளர்க்(கு)
ஒழுக்கத் தவர்வாழ் உலகத்தி னின்று
சின்மய வுருவுடை தேவ தூதனும்,
காமக் குரோதக் களத்திடை கடவுளும்
பிறக்கும் கதையைச் சிறக்கச் சொல்வோனும்
களைத்தலைத் துழன்று கவலுமாந் தர்க்கு
பரிந்திரக் கத்தினைப் பாடுபா வலனும்
வருவதை மொழிந்து மகிழ்ச்சியை நல்கினை.
ஒளிர்பல பொருள்களுள் ஒளிமிகு மீனே!
நீமறு படியும் நிசிநடு ராத்திரி
அழகுறும் படியா அலங்கரித் தருளினை;
சமயங்க ளின்புறச் சடங்குக ளோடும், 
உயிரும் பலனும் ஒன்றும் இலாத
கைசெய் விக்கிர கங்க ளோடும்,
எதிர்த்துப்போ ராடி இளைத்து மெலிந்து
மதத்தின் இருளில் வருந்திநின் றொளியை
நாடி நிற்கும் நல்லறி வாளர்க்(கு)
உற்சா கத்தினை ஊட்டி யருளினை;
நின்னை நினைந்து நிற்போர் நெஞ்சுள்
பழைய உண்மைகள் தழையச் செய்தனை;
அவரது தளர்ச்சிகள் அழிவுறச் செய்தனை;
அவரது நெறியில் அழகொளி பரப்பினை!
நின்பால் அன்பு நிகழ்த்து வோர்க்கு
துக்கத்தி னின்று தோன்றும் சுகத்தையும்
சந்தோஷத்தையும் சாந்தத் தினையும்
கொள்ளும் நெறியைக் கூறி யருளினை;
இரக்கா லத்தில் இளைக்க அலைந்து
நின்னைக் காண்போர் நிதமின் புறுவர்.
நின்னுயிர் ஒளியின் நிகரிலா வலியால்
அகத்துள் என்றும் ஆழ்ந்த அன்பு
நிலைக்கப் பொற்றோர் நிதமின் புறுவர்.
விஷ்ணு மூர்த்தியும், கிருஷ்ண சுவாமியும்,
புத்த தேவரும், கிறிஸ்து நாதரும்
பாரில் பிறந்த பழைநன் மீனே!
நினதுபா டத்தை நெஞ்சோடு கற்பேம்;
பணிவொடும் மகிழ்வொடும் பக்தியொடும் கற்பேம்;
அறிவொடும் பொறையொடும் அறிந்துநிற் பேமே.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s