-எஸ்.எஸ்.மகாதேவன்

அறிமுகம்:
திரு. எஸ்.எஸ்.மகாதேவன், தமிழ் இதழியல் உலகின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தியாகபூமி, இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜயபாரதம் பத்திரிகைகளில் பணியாற்றியவர்; நமது இணையதளத்தின் வழிகாட்டி. அவரது வாழ்வனுபவங்கள் இத்தளத்தில் தொடராக வெளிவருகின்றன…
$$$
ஓம்
1. ஆசிரிய தரிசனம்
முதலில் ஒரு வேடிக்கை. தமிழில் 3 வகுப்பு வரையும் மலையாளத்தில் 3 வகுப்பு வரையும் மட்டுமே படித்த ஒரு பெண்மணி, ஆசிரியர்களிடம் நான் பார்த்த அரும் பண்புகள் பற்றிய இந்த கட்டுரையின் முதல் சம்பவ கதாநாயகி என்பது வேடிக்கைதானே?

பெயர் ருக்மணி. திருவனந்தபுரத்திலும் நாகர்கோயிலிலும் வசித்தவர். எனவேதான் இரு மொழிகளிலும் 3 வகுப்பு! வை.மு.கோதைநாயகி போன்ற போன தலைமுறைக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான நாவல்களை உரக்கப் படித்து முடித்தார் – எல்லாம் பத்து வயதிற்குள். படுத்த படுக்கையாக இருந்த தன் பாட்டிக்கு அவர் வாசித்துக் காட்ட வேண்டியிருந்தது. அந்தக் கால வழக்கப்படி ருக்மணிக்கு 15 வயதில் திருமணம். அதற்கு முன்பே விதவிதமான மனிதர்கள், அவர்களின் நல்லது கெட்டது என்று அவருக்கு அந்த வாசிப்பு கணிசமான உலக ஞானம் அளித்திருந்தது. அவர் பெற்ற வாழ்க்கைக் கல்வி, புகுந்த வீட்டில் அவரை மகாராணி போல மரியாதைக்குரியவராக திகழச் செய்தது. அவரின் மூன்று புதல்வர்களில் ஒருவர் ராமகிருஷ்ண மடத்தில் துறவியானார் என்றால், இன்னொரு புதல்வர் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் ஆகி குடும்பத்தை விட்டுச் சென்றார். குடும்பத்தார் கோபத்தில் சீறினால், ’நல்லதுக்குத் தானே, நாட்டுக்காகத் தானே போறாங்க? போற இடத்துல அவங்க காலூன்றி நிற்க நாம சாமிய வேண்டிக்குவோம்’ என்று அந்தத் தாய் சொன்னாள். உலக ஞானமும் நாட்டு நடப்பு பற்றிய விழிப்பும் அவருக்குள் இருந்து அப்படி பேசியிருக்கிறது. ஐ.ஐ.எம் போன்ற பெரிய பெரிய மேலாண் பயிற்சி மையங்களில் சொல்லிக் கொடுக்கிற விவேகப்பண்பு அவருக்கு சகஜமாக அமைந்திருந்தது. சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட அவரது உறவினர்களின் குடும்பங்களுக்கு அந்த வாழ்க்கைக் கல்வியின் நயம் சகஜமாகப் பரவியது. போதுமா ருக்மணி புராணம்? வணங்கி அவருக்கு விடைகொடுப்போம்.
அடுத்தது நமது கதை அரங்கத்தில் மேடை ஏறுபவர் கிருஷ்ணக் கோனார். வணங்கி வரவேற்போம்: தும்பைப் பூ போன்ற வெண் கதர்ச் சட்டை, வேட்டி; நெற்றியில் நெட்டுவாக்கில் திருமண் கீற்று. என் துவக்கப் பள்ளித் தலைமையாசிரியர் அவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அவரது துவக்கப் பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை அவரிடம் படித்த போது ‘காலையில் பள்ளிக்கூடம் பிற்பகலில் வீட்டில் தொழில் கற்பது’ என்ற முதலமைச்சர் ராஜாஜியின் திட்டம் வந்தது; என் வகுப்பு மாணவர்களில் சிலர் தந்தையுடன் வயல் வேலை, தச்சு வேலை பழகத் தொடங்கினார்கள். என் அப்பா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். ஐந்தாம் வகுப்பு மாணவன் ரயில் நிலைய நிர்வாகம் செய்ய முடியாது; நான் என்ன செய்வது? தலைமையாசிரியரிடம் கேட்டேன். நான் செய்யக்கூடிய விதத்தில் ஒரு உத்தி சொல்லிக் கொடுத்தார். ‘ஒரு நோட்டும் பென்சிலும் எடுத்துக் கொள். நம் ஊரில் யார் யார் என்னென்ன தொழில் செய்து வருகிறார்கள், என்னென்ன தொழில் கருவிகள் பயன்படுத்துகிறார்கள் என்று மத்தியானம் குறித்துக் கொண்டு நாளை பள்ளிக்கு வா’. கொல்லர், தச்சர், லாண்டரிக்காரர், முடிதிருத்துபவர், மளிகைக் கடைக்காரர் என்று பட்டியலும் கொடுத்தார். 35 வயதில் ’இந்தியா டுடே’ வார இதழின் தமிழ் இதழாசிரியர் ஆக, பேட்டி எடுக்கும் பயிற்சி அப்போதே எனக்குக் கிடைத்ததோ? ஆனால் அரசியல் புகுந்து அந்தத் திட்டத்தை நாசம் செய்தது. விளைவு, இன்று பட்டதாரிகளாக கல்லூரிகளில் இருந்து வெளியேறுபவர்கள் எம்பிளாயபிலிடி விஷயத்தில் படுமோசம் என்று தொழில் துறையினர் குறைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை தான் விடிவு தரணும்.
என் தலைமையாசிரியர் காலையில் தான் பார்த்த ஒரு காட்சியை வகுப்பில் விவரித்தார்: ‘ஒரு தாத்தா செம்பு எடுத்துக்கொண்டு வாய்க்காலுக்குப் போனார். ஊர் வழக்கப்படி வெளியே காலைக்கடன் ஆன பின் வாய்க்காலிலிருந்து செம்பில் தண்ணீர் எடுத்து கரையேறி மறுபுறம் இறங்கி கால் கழுவினார். வாய்க்கால் தண்ணீரை அசுத்தமாக்கவில்லை. இங்கே யாருடைய தாத்தா அவர்?’ ஒரு மாணவன் எழுந்து நின்று ‘என் தாத்தா’ என்றதும் பள்ளி அதிர கைதட்டல். தண்ணீரைப் பாதுகாக்க அவனுக்கு வாழ்வில் வேறு உபதேசம் எதுவும் தேவையே இல்லை! வகுப்பறை என்னதான் சாதிக்க முடியாது!
அப்பா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் என்பதால், ஊர் மாற்றி மதுரை மாவட்டக் கிராமம் போனேன். புதிய ஊரில் புதிய பள்ளியில் சேர்ந்தேன். இன்பச் சுற்றுலா அழைத்துக் கொண்டு போனார்கள். மதுரை திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர் தெப்பக்குளம் முதலியவை காட்டினார்கள். எல்லாம் பிரம்மாண்டம். என் பழைய தலைமை ஆசிரியருக்கு அதை எல்லாம் விவரித்து ஒரு அஞ்சலட்டை அனுப்பினேன். அதற்கு அஞ்சலட்டையில் பதில் அளித்தார் என்பதே ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் முழுதும் கொண்டாட்டமாக இருந்தது. அந்தக் கடிதத்தில் “எதைக் கண்டும் மலைக்காதே” என்று ஒரு அறிவுரை இருந்தது. அதன் பிறகு 60 ஆண்டுகள் உருண்டோடியும் அது இன்றும் என் மனதில் இருக்கிறது. ஒரு பழைய மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் தலைப்பொறுப்பாக கடிதம் எழுதியது மட்டுமல்ல, மந்திரச் சொல் போல அப்படி ஒரு குறிப்பு வழங்கி வாழ்நாள் முழுவதற்கும் அது பயன்படச் செய்தாரே!
மதுரை ஜங்ஷனை அடுத்த மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் மீனாட்சிசுந்தரம் என்று கைத்தொழில் வாத்தியார் ஒருவர். எட்டாவது படித்துக் கொண்டிருந்த என் வகுப்பறைக்கு அவர் வருவதென்றால் எங்களின் யாராவது ஒரு ஆசிரியர் விடுப்பில் போயிருப்பார் என்று பொருள். நுழையும்போதே ஆசிரியர் நின்று பாடம் சொல்லும் மேடையை கையால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார். அடுத்த 45 நிமிடங்களில் எங்கள் மனக்கண்முன் எத்தனையோ மகாபாரத, ராமாயண பாத்திரங்களை நிஜம் ஆக்கிவிடுவார்: கண்ணன் வருவான், வெண்ணெய் திருடுவான், கீதை சொல்வான்; திரௌபதி வருவாள், ஆவேசமாக சபதம் செய்வாள்; பீமன் வருவான், கீசகனை அடித்து துவம்சம் செய்வான்; ராமபிரான் வருவார், போர்க்களத்தில் அடிபட்ட ராவணனுக்கு அடுத்த நாள் வர அனுமதி கொடுப்பார்; அணில் வரும், பாலம் கட்டும். அனுமார் வருவார், எகிறிக் கடல் தாண்டுவார்… அடுத்த பாடநேரத்துக்கான மணி அடிக்கும் போதுதான் நாங்கள் நிஜ உலகிற்குத் திரும்புவோம். எதையும் காது கொடுத்துக் கேட்கும் மூடு மாணவர்களுக்கு வரச் செய்து விடுவார். அவர் அறிமுகப்படுத்திய அந்தப் பாத்திரங்களின் பண்பு நலன்களை பின்னாளில் விவரமாகத் தெரிந்துகொள்ள அந்த 45 நிமிட பாடநேரத்தில்தான் உந்துதல் கிடைத்தது. தேசிய கல்விக் கொள்கை இன்று சொல்வதை அவர் அன்று நடத்திக் காட்டினார்.
உடுமலைப்பேட்டை போர்டு உயர்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கில ஆசிரியரின் பெயர் இ.என்.கோபாலகிருஷ்ணன் (ENG!) படு கண்டிப்பு. தடித்த பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்த அவர் தோற்றம் சினிமா இயக்குநர் கே.பாலச்சந்தரை ஞாபகப் படுத்தும். ஒருநாள் பாடத்தில் மேனேஜ்மென்ட் (management) என்ற சொல் வந்தது. அதன் ஸ்பெல்லிங்கில் நடுவில் e உண்டா இல்லையா என்ற கேள்வி வந்தது. இல்லை என்று எனக்கு எண்ணம். உண்டே என்றார் ENG. நானும் விடுவதாயில்லை. ‘அப்படியானால் ஹெட்மாஸ்டர் அறைக்குப் போ. அவர் அனுமதியுடன் டிக்ஷனரி கொண்டு வா’ என்றார் வகுப்பறையிலேயே அகராதியை பார்த்ததில் அவர் சொன்னது சரி என்று நிரூபணம் ஆனது. ஆனால் அவர் முகத்தில் வெற்றிப் பெருமிதம் காணப்படவில்லை. அகராதி உதவியுடன் மொழியறிவைக் கூர்தீட்டிக் கொள்வது எப்படி என்று எனக்கு மட்டுமல்ல, முழு வகுப்புக்கும் பயிற்சி கொடுத்த திருப்தி மட்டுமே அவர் முகத்தில் காணப்பட்டது. ஏன் அந்த கண்டிப்புக்காரர் எடுத்த எடுப்பிலேயே என்னைத் தலையில் தட்டி உட்கார வைத்து விடவில்லை என்பது பிறகுதான் என் சிற்றறிவுக்கு எட்டியது. அந்த ஆசிரியரின் பார்வை வியாபகம் கண்டு அவருக்கு ‘பலே மேனேஜர்’ என்று மானசீகமாக சான்றிதழ் கொடுத்தேன்!
மதுரைக் கல்லூரியில் பி.யூ.சி. படிக்கும்போது ‘அட்வான்ஸ்டு இங்கிலீஷ்’ என்று ஒரு பாடம் உண்டு. ஜூலியஸ் சீஸர் என்ற ஷேக்ஸ்பியரின் நாடகம் முழுவதும் படிக்க வேண்டும். வகுப்பு ராக்கெட் வேகத்தில் போகும்; முடிக்க வேண்டுமே? ஆனாலும் விரிவுரையாளர் நாராயணன் ஐரோப்பிய, பாரதிய இலக்கியகர்த்தாக்களின் மனப்பான்மைகளை ஒப்பிட்டு பாரத நாட்டின் மேன்மையை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. உதாரணமாக, வீதியில் நடமாடுகிற பாமர மக்களை ஷேக்ஸ்பியர் மட்டம் தட்டி வர்ணிப்பார்; ராமபிரான் குகனிடமும் சபரியிடமும் பேதமில்லாமல் பழகியதை ராமாயணம் வர்ணிப்பதை நாராயணன் எடுத்துக் காட்டுவார். இன்று மறக்கடிக்கப்பட்ட பெருமிதம் மிக்க பாரத வரலாற்றை வகுப்பறை வாயிலாக சமுதாயத்திற்குக் கொண்டு சேர்க்கும் கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் உண்டு அல்லவா?
அடையாறு மத்திய பாலிடெக்னிக்கில் சாண்ட்விச் கோர்ஸ் இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் என்ற பகுதிநேர டிப்ளமோ படிப்பு. ஒரு வாரம் தொழிற்சாலையில் நேரடியாக தொழில் கற்பது, மறுவாரம் வகுப்பறையில் பொறியியல் படிப்பது. பிரபாகர் என்று ஒரு விரிவுரையாளர். ஒரு நாள் அவர் என்னிடம், “மகாதேவன், முழுநேர டிப்ளமோ மாணவர்கள் புத்தகப் படிப்பைத் தவிர சொந்தக் கரங்களால் தொழில் செய்து கற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களை தொழில் கற்க வைப்பது எப்படி?” என்று மாணவனான என்னிடம் கேட்டார். இன்றும் பாரத நாடு இந்தக் கேள்விக்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறது. என்றாலும் அவர் ஒரு உத்தியைக் கையாண்டார். காலையில் சட்டைக் காலரில் அழுக்குப் படாத டீக்கான கல்லூரி மாணவர் உடையில் அவரைப் பார்க்கலாம்; பாலிடெக்னிக் வளாகத்திற்குள் நுழைந்ததும் தொழிற்சாலைத் தொழிலாளி போல ஆயில் படிந்த காக்கி உடையில் தென்படுவார். பலன் இருந்தது. அவர் கண்டுபிடித்த உத்திக்காக அவரை ஒரு தடவை பாராட்டலாம் என்றால், ஒரு சீனியர் மாணவரிடம் இது பற்றி கலந்துரையாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதே, அதற்காக இரண்டு முறை பாராட்டலாம்.
வாழ்க்கை திசை மாறியது. ஆர்.எஸ்.எஸ் அறிமுகம் கிடைத்தது. சிறுவயது முதலே மொழி ஆர்வம், மொழிபெயர்ப்பு நாட்டம் உண்டு. சங்கத்தின் ‘தியாகபூமி’ வாரப் பத்திரிகை ஆசிரியர் ஆனேன். சங்கப் பெரியவர்கள் இதழியல் வகுப்பில் சேர அறிவுறுத்தினார்கள். மயிலையில் பாரதிய வித்யாபவன் அமைப்பு நடத்துகிற மாலைநேர வகுப்பில் சேர்ந்தேன். அங்கே நாட்டு நடப்பு என்ற ஒரு பாடம். நடத்துபவர் தினமணியின் அப்போதைய சீனியர் உதவி ஆசிரியர் ஏ.ஜி.வெங்கடாச்சாரியார். பரிபூரண முதிர்ச்சி. அவர் வகுப்பு என்றால் 100 கூகுள் தேடிய பலன் கிடைக்கும். அப்போது ஒருநாள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம். மன்னராட்சியைக் கவிழ்த்தார்கள். அன்று மாலை வகுப்பில் ஏ.ஜி. சார் ஆப்கானிஸ்தானம், அதன் வரலாறு, அதன் ஆட்சியாளர்கள், ஆட்சி மாற்றத்திற்கான பின்னணி, இன்று காலை அங்கே நடந்த நிகழ்வு என அனைத்தையும் மடைதிறந்த வெள்ளமாகச் சொல்லி முடித்தார். விரல் நுனியில் அத்தனை விவரம்! நான் ஆசிரியரானால் இப்படி ஒரு ‘சரக்கு’ மாஸ்டர் ஆக வேண்டும் என்ற ஆசை வகுப்பில் எல்லா இதழியல் பயிற்சியாளர்களுக்கும் ஏற்பட்டது பெரிய விஷயம் இல்லை; ஆனால் பத்திரிகையாளர் என்பவர் விவரக் களஞ்சியமாக விளங்க வேண்டும் என்பது நன்கு புரிந்தது.
ஆசிரியர் என்றால் அவருக்கு தனது சப்ஜெக்ட் அத்துபடி ஆகிவிட வேண்டும் என்பது போல, ஊர் நிலவரம் கூட சரிவரப் புரிந்திருக்க வேண்டும். மதுரையில் ஒரு பள்ளி ஆசிரியர்; பெயர் ஹாலாஸ்யம். வகுப்பில் வருகைப் பட்டியல் படித்தார். ஒரு மாணவன் பெயர் கர்த்தர் என்று இருந்தது. சென்ற வருடம் வரை அவன் சுப்பிரமணியன். ஆசிரியர் பார்த்தார். “சுப்பிரமணியன்! நீ என்றும் சுப்பிரமணியன் தான் எனக்கு. எல்லாரும் சுப்பிரமணியனை சுப்பிரமணியன்னுதான் கூப்பிடணும்” என்று அன்போடு உத்தரவிட்டார் அனைவரும் கேட்டார்கள். அவர் உருவாக்கியிருந்த வகுப்பறைச் சூழல் அப்படி.
வடசென்னை, சக்திவேல் நகர் விவேகானந்த வித்யாலயத்தில் ஏழாவது வகுப்பு படிக்கும் ஒரு மாணவி. எளிய குடும்பம் தான். ஆனால் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் தான் வருவாள். பிறவியிலேயே இரு கால்களும் செயலிழந்து இருந்ததுதான் காரணம். வகுப்பறை இரண்டாவது மாடி. ஆனால் வகுப்புக்குச் செல்வதில் துளிக்கூட சிரமம் ஏற்படவில்லை; காரணம் அன்பு காட்டிய ஒரு ஆசிரியை; தாய் குழந்தையை இடுப்பில் வைத்து செல்வது போல அந்த மாணவியை புத்தகப் பையுடன் இடுப்பில் வைத்துக்கொண்டு வகுப்பறையில் கொண்டு சேர்ப்பார். அதைப் பார்த்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கும் சரி, குறிப்பிட்ட அந்த மாணவிக்கும் சரி, வாழ்நாள் நெடுக அன்பு காட்டுவது எப்படி என்ற பாடம் அமோகமாக மனதில் பதிந்து போயிருக்கும் என்கிறேன்; ஒப்புக் கொள்கிறீர்களா?
நன்றி: வித்யாவாணி
(அனுபவங்கள் முடிவதில்லை)
$$$