-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

சாதிகள் ஒழிய வேண்டும்; ஆனால், இடஒதுக்கீட்டிற்காக சாதிகள் தொடர வேண்டும் என்ற முரண்பட்ட வாதத்திற்கு வலுவாகக் கூறப்படும் ஒரே காரணம், ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சாதியின் அடிப்படையில் கல்வியுரிமை மறுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் முன்னேற வேண்டும்; ஆகவே, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே.
உண்மையில் பண்டைய பாரதத்தில் சாதிகளின் அடிப்படையில்தான் மக்களுக்குக் கல்வியறிவு வழங்கப்பட்டதா? குறிப்பிட்ட மேல்சாதியினர் மட்டுமே கல்வி கற்றார்களா? கல்வியைக் கற்றுக் கொள்ளும் உரிமை சிறுபான்மையினர்களுக்கு மறுக்கப்பட்டதா? கல்விச் சாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் பாடத்திட்டங்கள் எப்படியிருந்தன- என்ற பல கேள்விகளுக்கு விடைதேடும் விதமாக ஆராய்ச்சி மனநிலையில் எழுதப்பட்ட நூல் ‘அழகிய மரம்’
18-ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை ஆராயும் இந்நூல், மேற்கண்ட வினாக்களுக்கு தக்க ஆதாரங்களுடனும், குறிப்புகளுடனும் விரிவான விடைகளை அளிக்கின்றது.
காந்திய சிந்தனையாளரான தரம்பால் அவர்கள், ஆங்கிலத்தில் ‘The Beautiful Tree’ என்று எழுதிய நூலை தமிழில் பி.ஆர்.மஹாதேவன் அவர்கள் ‘அழகிய மரம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளார். இந்நூலிற்கான தலைப்பை காந்தியடிகள் எழுதிய குறிப்பிலிருந்து தேர்வு செய்துள்ளனர்.
“பிரிட்டிஷார் பாரதம் வருவதற்கு முன்பு இங்கு இயல்பாயிருந்த நிலையிலிருந்து கல்வியை வளர்க்காமல், மண்ணைத் தோண்டி வேருடன் பிடுங்கி ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்து விட்டது” என்பது, பண்டைய பாரதத்தில் இருந்த கல்வி முறையை அழித்த பிரிட்டிஷார் பற்றி காந்தியடிகள் கூறிய கருத்து.
பள்ளிகளில் பதிலளிக்காத மாணவனைப் பார்த்து ஆசிரியர் “ஏண்டா மரமாட்டம் நிக்கிற?” என்பார். அவர் குறிப்பிடும் மரம், ஏதும் துளிர்க்காத வெட்டப்பட்ட மரம். ஆனால், இது அழகிய மரம். தான் துளிர்விட்ட நிலத்தில் வேரூன்றி, திசையெட்டும் கிளைபரப்பி, காய்கனி ஈந்து, நிழல் விரிந்து, பல்லுயிர்களும் பயனடைய நிலைத்து நிற்பதே அழகிய மரம்.
கல்வி என்பதும் மரம் போன்றதே. தன் சமூகத்தின் பாரம்பரியத்தில் வேரூன்றி, பல்லறிவு விரிந்து தேடி, பெற்ற பயன்களை சமூகத்திற்கு வழங்கி, சமூகத்தை நலமுடனும், உயிர்ப்புடனும் இயங்கச் செய்வதே, ஒருவர் கற்ற கல்வியின் பயனாக இருக்க முடியும் என்பதால், கல்வி தொடர்பான இந்நூலிற்கு அழகிய மரம் எனத் தலைப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமானதே.
இடஒதுக்கிடு கோரிக்கை முதல், இன்று பேசப்படும் ‘நீட்’ தேர்வு புறக்கணிப்பு வரை திராவிட அரசியலுக்கான முழுக் காரணமாக இருப்பது தங்களை இரண்டாயிரம் வருடங்களாகப் படிக்க விடவில்லை; பிராமணர்கள் மட்டும் படித்து அரசு வேலைகளைப் பெற்று பயனடைந்தனர் என்பதாகும். ஆனால் இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைதானா என ஆராய்ந்து, கீழ்க்கண்ட முடிவுகளை இந்நூல் நம்முன் வைக்கிறது:
- பிரிட்டிஷார் பாரதம் வரும் முன்னரே, உலகின் பிற பகுதிகளில் இருந்த கல்வி நிலையை விட மேலான நிலையில் நமது கல்வி இருந்திருக்கிறது.
- அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்றாக கல்வி கற்றதால், மேல்வகுப்பு மாணவர்களே கீழ்வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து பாடங்களைக் கற்பித்திருக்கிறார்கள். இம்முறையின் மூலமாக அம்மாணவர்களுக்கு, மாணவப் பருவத்திலேயே ஆசிரியராகக் கற்பிக்கும் திறனும் வாய்த்து விடுகிறது.
- சமஸ்கிருதமும், அண்டைப்பகுதி மொழிகளும் கற்றுத் தரப்பட்டாலும் தாய்மொழிக் கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
- மன்னர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் கல்வி மையங்களுக்கான பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளது.
- வர்த்தக நோக்கில் பாரதத்திற்குள் நுழைந்த பிரிட்டிஷார் பாரதப் பாரம்பரியப் பள்ளிகளுக்கு கிடைத்து வந்த அரசு உதவிகள் அனைத்தையும் நிறுத்தினர். அரசு உதவியை நம்பி இயங்கி வந்த ஏராளமான குருகுலங்கள், திண்ணைப் பள்ளிகள், மதரஸாக்கள், பாரசீக அரபுப் பள்ளிகள் என அனைத்துமே ஒரு தலைமுறைக்குள் அழிந்தன.
- பிரிட்டிஷார் அறிமுகப் படுத்திய கல்வி முறையானது பள்ளிக் கட்டடங்களுக்கே முக்கியத்துவம் அளித்தது. கட்டடம்- கட்டணம் என்ற நோக்கத்தில் முறைப்படுத்தப்பட்ட கல்வி முறையில், பாரதிய இடைநிலை, கடைநிலை சாதியினர் கல்வி முறையில் பிந்தங்கிப் போக நேர்ந்தது. பிரிட்டிஷாரின் 200 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கடைநிலை, இடை நிலை சாதியினருக்கு ஏற்பட்ட பின்னடைவையே திராவிட அரசியல் சக்திகள் 2000 ஆண்டுகால பார்ப்பன சதியாகக் குறிப்பிட்டு வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். கல்விச்சாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவமளிக்கும் கல்வி முறை தற்போதுகூட மக்களை ஈர்க்கின்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட நவீன வடிவிலான கட்டடங்கள், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், தங்குமிட வசதி, குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்கள் வீட்டு வாசலுக்கே வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுதல்…, இப்படி பல வசதிகளை அளிக்கும் கல்வி நிறுவனங்கள் அதற்கேற்ப உயர் கட்டணங்களையும் வசூலிக்கும் நிலையில், வசதியான மாணவர்களே அந்நிறுவனங்களில் கல்வியைப் பெறும் இன்றைய சூழலில், வசதியற்ற மாணவர்களுக்கு அங்கு வாய்ப்பு மறுக்கப்படுவதையும் கல்வியாளர்கள் கவனத்தில் கொண்டால் அன்று நிகழ்ந்த இது போன்ற பாதிப்புகளையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
- அப்படியானால், அந்த 200 ஆண்டு கால பிரிட்டிஷார் ஆட்சியில் பிராமணர்கள் மட்டும் முன்னேறினர் என்பது சாதி முன்னுரிமையால் அல்ல; பொருளாதார ரீதியில் அவர்கள் முன்னிலையில் இருந்ததுதான் என்பதையும் இந்நூல் குறிப்பிடுகிறது.
- இந்நூலில் அக்காலகட்டத்திலிருந்த பள்ளி, கல்லூரிகளின் விபரங்கள், அங்கு படித்த மாணவர்களின் எண்ணிக்கைகள் சாதிவாரியாக, மதவாரியாக பல அட்டவணைகளில் அரசு ஆவணங்களில் காணப்படும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1800-களில் பிரிட்டனில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையை விட பாரதத்தில் அதிகமாயிருந்தது மட்டுமல்ல; பிரிட்டனில் கற்றுத் தரப்பட்ட பாடங்களை விட பாரதத்தில் கற்றுத் தரப்பட்ட பாடங்கள் உயர்வாக இருந்திருக்கின்றன. சாதிவாரியாக மாணவர்களின் எண்ணிக்கையை வகைப்படுத்தும் ஒரு அட்டவணைப்படி மொத்த மாணவர்களில் பிராமண சாதி மாணவர்கள் 19.40%, க்ஷத்ரிய மாணவர்கள் 0.31%, வைசியர்கள் 8.78%, சூத்திரர்கள் 49.58%, பிறசாதியினர் 14.96%, முஸ்லிம்கள் 6.94% என்ற விகிதங்களில் கல்வி கற்றவர்கள் இருந்தனர். இந்த புள்ளி விவரங்களின்படி பிராமணர்களைவிட சூத்திர மாணவர்களின் எண்ணிக்கையானது 30% அதிகமாக உள்ளதை அறியலாம். உண்மை நிலை இப்படியிருக்க, சூத்திரர்களுக்கு கல்வியுரிமை மறுக்கப்பட்டது என்ற பொய்யான தகவல்களை இன்றளவும் பரப்பி வருவது வெட்கக் கேடானது. இது நம் முன்னோர்களின் அறநிலையை அவமானப்படுத்துவது போன்றது.

இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை திட்டமிட்டுப் பரப்புகின்றவர்களுக்கு தக்க பதிலாய் சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல், பொருத்தமான இக்காலகட்டத்தில் வெளிவந்திருப்பது பாராட்டத்தக்கது.
இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் கூறுவது போல, உண்மையில் இந்தப் புத்தகம் காலம் தாழ்த்தி தமிழில் வந்திருக்கும் ஒன்றுதான். காலம் தாழ்த்தி வந்ததன் காரணமாக, பாரதத்தின் பாரம்பரியக் கல்வியை அழித்து, ஆங்கிலக் கல்வியை நிலைபெறச் செய்து, பிராமண அறிவுத் தரப்பை அப்புறப்படுத்தி, திராவிட வெறுப்புக் கருத்தியல் முன்னிலை பெற்றது வருந்தத்தக்கது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற நூல் வெளிவந்திருக்குமானால் திராவிட வெறுப்புக் கருத்தியல் மற்றும் அதன் அரசியல் வெற்றி ஆகியவற்றைத் தடுத்திருக்கலாம். ஆகவேதான் மஹாதேவன் கூறுகிறார்: “ இந்தப் புத்தகத்தை இதுநாள்வரை மொழிபெயர்க்காமல் இருந்தவர்களுக்கு கோபம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இந்நூலெங்கும் பலபுள்ளிவிவரங்கள் பரவிக் காணபடுவதில் நூலாசிரியரின் கடின உழைப்பு தென்படுகிறது. ஒரு பெரிய பலாப்பழத்தில் உள்ள சுளைகளை மட்டுமல்லாது, மேல்புறத்தோலில் உள்ள முட்களையும் எண்ணிக் குறிப்பிடுவது எவ்வளவு கடினமோ, அவ்வளவுக் கடினமான உழைப்பை புள்ளிவிவரங்களைத் தொகுப்பதில் ஆசிரியர் மெனக்கெட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நூலிற்கு மதிப்புரையென்பது மீண்டுமொருமுறை பலாத்தோலின் முட்களை எண்ணுவது போன்றதொரு கடினமான செயலே என்பதால், இந்நூலில் கவனிக்கப்படவேண்டிய முக்கியக் குறிப்புகளை மட்டும் பலாச்சுளைகளாகத் தொகுத்தளிக்கிறேன்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னர் வரை பாரதத்தில் விரிவான பரந்துபட்ட கல்வி அமைப்பு இருந்திருக்கிறது. பாரத கைவினைத் தொழில்கள் அழிக்கப்பட்டு பாரதக் கிராமங்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டது தொடர்பாக ஏராளமான படைப்புகள் வெளியாகின. ஆனால் மேற்கத்திய மயமாக்கப்பட்ட பாரதீயர்களின் மத்தியில் மார்க்ஸியர்கள், ஃபேபியர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள் ஆகியோரின் பார்வையானது வில்லியம் வில்பர் ஃபோர், ஜேம்ஸ் மில், காரல் மார்க்ஸ் ஆகியோருடைய எண்ணத்தைப் போலவே இந்தக் குற்றச்சாட்டுகளையும், உண்மைகளையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளாகவே கருதின. பிரிட்டிஷாரின் மீதான விமர்சனங்கள் உண்மையாகவே இருந்தாலும் தேவையற்றவை என்று ஒதுக்கித் தள்ளின.
பாரதப் பாரம்பரியக் கல்வி பற்றிய பெல்லாரி ஆட்சியரின் அறிக்கை பல கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டப்பட்டிருகிறது. அதில் அவர் குறிப்பிடுவதாவது:
“ஐரோப்பிய பொருட்களின் வருகையால் உள்ளூர் தொழிலாளர் வர்க்கங்கள் வெகுவாக நசிந்துவிட்டன. ஐரோப்பியர்கள் பாரதத்தில் தற்காலிக முதலீடு செய்வது கூட சட்டத்தால் தடுக்கப்பட்டதால் பாரதப் பணமானது தினம் தினம் உறிஞ்சப்பட்டு வறுமைக்குள் வீழ்ந்துவிட்டது. இதனால் கிராமங்களில் முன்பிருந்த பள்ளிகளில் இப்போது ஒன்றுகூட இல்லை”. (ஆட்சியரின் இக்குறிப்பிலிருந்து பாரதத்தில் கல்வி முடக்கப்பட்டதற்கு சாதியம் காரணமல்ல என்பது புலப்படுகிறது).
“குழந்தைகள் ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அன்றைய தினம் ஆசிரியர்களும், பிற மாணவர்களும் புதிதாக பள்ளியில் சேரும் மாணவனின் வீட்டில் ஒன்று கூடுகிறார்கள். கணபதி விக்ரஹத்தின் முன்பு அனைவரும் அமர்ந்து பிரார்த்திக்கின்றனர். ஆசிரியர் மாணவரின் கையைப் பிடித்து அரிசியில் இறைவனின் பெயரை விரலால் எழுத வைக்கிறார். பெற்றோரின் வசதிக்கேற்ப ஆசிரியருக்கு தானங்கள் தரப்படுகின்றன”.
இது பெல்லாரி ஆட்சியர் அளித்த அறிக்கையின் ஒரு பகுதி:
“எனது கஜானாவிலிருந்து பிராமணர்களுக்கு கணிசமான தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இது இந்து ஆட்சியாளர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மானியங்கள் எந்தவித நிபந்தனையின் பேரிலும் தரப்படவில்லை. கற்றறிந்த பண்டிதர்கள், ஞானிகளின் ஆசி அரசுக்கு வேண்டும் என்ற நம்பிக்கையிலும், மரியாதையிலுமே வழங்கப்பட்டிருந்தன. ஆனாலும், இந்த மானியங்களைப் பெற்ற அனைவருமே ஏதாவது ஒரு அறிவியலைக் கற்றுத் தரும் கல்வி மையத்தை நடத்தி வந்திருக்கிறார்கள்”.
இது சேலம் ஆட்சியர் குறிப்பு:
“இந்துப் பள்ளிகளில் ஒரு மாணவருடைய கல்விக்கு ஆகும் செலவு ஆண்டுக்கு மூன்று ரூபாய், முஸல்மான் பள்ளிகளில் 15-20 ரூபாய் வரை ஆகிறது. எந்த இந்துப் பள்ளிக்கும் அரசு உதவி கிடைக்கவில்லை. முஸல்மான் பள்ளிக்கு மட்டும் ஆண்டுக்கு 20 ரூபாய் கிடைக்கும் வகையில் நிலமானியம் இருக்கிறது”.
இது குண்டூர் ஆட்சியர் குறிப்பு:
“மாணவர்கள் காலை ஆறு மணிக்கு பள்ளிக்கு வருகிறார்கள். 9 மணி வரை கல்வி கற்கிறார்கள். காலை உணவை வீடுகளில் சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் பள்ளிக்குத் திரும்புகிறார்கள். மதியம் இரண்டு மூன்று மணி வரையில் பள்ளியில் இருக்கிறார்கள். பின் மதியத்தில் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு நான்கு மணிக்குப் பள்ளிக்குத் திரும்புகிறார்கள். அதன்பிறகு இரவு ஏழுமணி வரையில் பள்ளியில் இருக்கிறார்கள். தமக்குரிய ஆசிரியர்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் வேறு கிராமங்களில் உள்ள ஆசிரியர்களை நாடி கல்வி கற்கின்றனர். அவ்வாறு பயில நேரும் மாணவன் ஏழையாக இருக்கும் பட்சத்தில் அந்த மாணவனின் உணவுத் தேவைகளை அந்த கிராமத்தினரே மனமுவந்து அளிக்கின்றனர்”.
பாரதத்தில் 1776-1789 வரையிருந்த ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் எழுதிய குறிப்பு:
“பாரதிய இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படும் பிற பாடங்கள்- கவிதை, காவியம், வாள்சண்டை, களறிப்பயிற்று, தாவரவியல், மற்றும் மருத்துவம், கடல் பயணம், நவசாஸ்திரம், பந்துகளி, சதுரங்கம், கோலடி, தர்க்க சாஸ்திரம், ஜோதிடம், சட்டம், ஸ்வாத்யா, மௌனம். மாணவர்கள் கல்வி கற்கும் பருவத்தில் பிரம்மச்சர்யம் அனுஷ்டிக்க வேண்டும். பெண் வாசனையின்றி வாழ வேண்டும். தத்துவப் பாடத்தின் முதல்படி நிலையென்பது ஐந்து வருடங்கள் கடுமையான மௌன விரதம் இருப்பதென்பதே. பிதகோரஸ் இந்தத் தத்துவக் கல்வி முறையை பாரதீய தத்துவ ஆசிரியர்களிடமிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் அவருடைய மாணவர்களையும் இதுபோல் ஐந்து வருடங்கள் மவுன விரதம் இருக்கச் சொன்னார்”.
பாரம்பரிய பாரதத்தில் அனைத்து சாதியினருக்கும் கல்வி கற்றுத் தரப்பட்டிருக்கிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு மக்கள் விரும்பி உதவி அளித்திருக்கின்றனர். பலவகைகளிலும் சிறப்புற்று பரந்து விரிந்து ஆலமரம் போலிருந்த அழகிய மரமானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் தன் விருப்பத்திற்கேற்ப வெட்டிச் சீர்படுத்தி தொட்டியில் வளர்க்கப்படும் போன்சாய் மரம் போல இன்றைய கல்வி முறையாக மாற்றப்பட்டிருப்பதை, இந்நூலை முழுமையாகப் படித்தபின் புரிந்துகொள்ள முடிகிறது.
$$$
நூல் விவரம்:
அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
–தரம்பால் (தமிழில்: பி.ஆர். மகாதேவன்)
தமிழினி வெளியீடு ,
25-பி, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்ஸர் பிளாசா,
769, அண்ணா சாலை, சென்னை- 2
தொலைபேசி: 044- 2849 0027; அலைபேசி: 93442 90920
விலை: ரூ. 450
குறிப்பு:
இந்நூலின் இரண்டாம் பதிப்பு, கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
விலை: ரூ. 500-
இந்த நூலை அமேஸானில் வாங்கலாம்.
$$$