அதிகமான் நெடுமான் அஞ்சி-9

-கி.வா.ஜகந்நாதன்

9. சேரமான் செய்த முடிவு

மலையமான் திருமுடிக் காரி திருக்கோவலூரை விட்டு ஓடியவன், ஒருவரும் அறியாமல் ஓரிடத்தில் இருந்தான். அவனுடைய வீரர்களில் சிலர் அவன் இருக்கும் இடம் அறிந்து அவனோடு சேர்ந்து கொண்டார்கள். யாவரும் வஞ்சிமா நகரை நோக்கிப் புறப்பட்டார்கள். காரியென்னும் குதிரையில் ஏறி விரைவாகச் சென்றான் மலையமான்.

அதிகமான் திருக்கோவலூரை முற்றுகையிட்டது உடனே பெருஞ்சேரல் இரும்பொறைக்குத் தெரியவில்லை. தெரிந்த பிறகு, அவன் மகிழ்ச்சியே அடைந்தான். காரி, கோட்டை கொத்தளங்களுள்ள தன் ஊராகிய கோவலூரில் இருந்தான். பகைவர்களை அவர்கள் ஊரிலேயே சென்று பொருது அடர்க்கும் பேராற்றல் உடையவன் அவன். அத்தகையவன் தன்னூரில் இருக்கும்போது அவனை யாரால் வெல்ல முடியும்? அதிகமானுக்குக் கேடுகாலம் வந்ததனால்தான் இந்தப் பேதைமைச் செயலை மேற்கொண்டானென்று சேரன் எண்ணினான்.

ஆனால் அவன் நினைத்த வண்ணம் நடக்கவில்லை. அதிகமானே வெற்றி பெற்றான். காரி எங்கே போனான் என்பது தெரியாமல் சேரன் கலங்கினான். காரியையே தோல்வியுறச் செய்த அதிகமான் பெரிய விறல் வீரனாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினான். காரியைப் பற்றிய செய்தியை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தான். கடைசியில் ஒரு நாள் காரியே நேரில் வந்து சேர்ந்தான்.

அவனைக் கண்டவுடன் சேரன், “நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்றான்.

“என் வரவையா?” என்று மலையமான் கேட்டான்.

“உம் வரவை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.”

“பின்னே எதை எதிர்பார்க்கவில்லை?”

”நீர் தோல்வியுறுவீர் என்பதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதிகமான் உம்மிடம் சிக்கிக் கொள்வான் என்றே நம்பினேன்.”

“ஆனைக்கும் அடி சறுக்கும் என்னும் பழமொழிக்கு நான் எடுத்துக்காட்டாகி விட்டேன். கொல்லிக் கூற்றப் போரில், எதிர்பார்த்ததை விட மிகுதியான நாட்கள் போரிடும்படி நேர்ந்தது. அந்த நாட்டினர் ஓரியிடம் பேரன்புடையவர்களாக இருந்தார்கள். ஆகையால் பலர் படையிலே சேர்ந்து போரிட்டார்கள். எங்கள் முழு வலிமையையும் காட்டும்படி நேர்ந்தது. அதனால் என் படைவீரர்கள் களைப்படைந்திருந்தனர். அந்தச் சமயம் பார்த்து அதிகமான் வந்தான். களைத்துப்போன படையை வைத்துக்கொண்டு போரிடும்படி ஆகிவிட்டது. துணைப்படை ஒன்றும் வரவில்லை அல்லவா?”

தான் துணையாகப் படையை அனுப்பவில்லை யென்பதை மலையமான் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறான் என்று சேரமான் தெரிந்து கொண்டான். “எல்லோருக்கும் துணையாகச் சென்று வெற்றியை வாங்கித் தரும் உமக்குப் பிறர் துணை எதற்கு என்று எண்ணிவிட்டேன். சரி, நடந்தது நடந்துவிட்டது. இனிச் செய்ய வேண்டியதையே ஆராய வேண்டும்” என்றான் பெருஞ்சேரல் இரும்பொறை.

“என்ன செய்வது என்பதை நாடு இழந்து நிற்கும் நானா சொல்ல வல்லேன்? இத்தகைய அவமானம் என் வாழ்க்கையில் பட்டதில்லை. அதிகமான் முன் நின்று போர் செய்து உயிரை நீத்திருக்கலாம். அந்தச் சமயத்தில் அந்த எண்ணம் தோன்றவில்லை. எனக்கு என் உயிரே வெல்லமாக இருந்தது” என்று வருத்தம் ஒலிக்கும் குரலில் பேசினான் காரி.

“உமது வருத்தத்தை நான் நன்றாக உணர்கிறேன்; உம்முடைய ஊக்கமும் வலிமையும் உடம்மை விட்டு எப்போதும் நீங்கா. ஆதலின் சோர்வு அடையாமல் இழந்த நாட்டைப் பெற வழி தேடவேண்டும்.”

”இப்போதுதான் எனக்கு நேர்ந்த விளைவுக்குக் காரணம் தெரிகிறது. மன்னர் பெருமானுடைய அவாவை நிறைவேற்ற நான் ஓரியை எதிர்த்துக் கொன்றேன். அது அறமல்லாத செயலாதலின் அதற்குரிய பயனை இப்போது பெறுகிறேன்.”

தனக்காக ஓரியைக் கொன்றதுதான் காரியின் இன்றை நிலைக்குக் காரணம் என்பதைப் பெருஞ் சேரலிரும்பொறை உணர வேண்டுமென்றே இப்படிப் பேசினான் மலையமான். அவ்வரசன் அதை நன்கு உணர்ந்தான். “எனக்குக் கொல்லிக் கூற்றத்தை ஓரியினிடமிருந்து கைப்பற்றித் தந்த வீரத்தை நான் மறப்பவன் அல்லன். எப்பாடு பட்டாவது உம்முடைய கோவலூரை அதிகமானிடமிருந்து உம்முடைய ஆட்சிக்கு வரச்செய்து பழையபடி உம்மை மலாட்டின் தலைவனாக ஆக்குவேன். நான் சேரர் குலத்தில் தோன்றியது உண்மையாயின் இந்தச் சொல்லை நிறைவேற்றுவேன்” என்று வீறுடன் வஞ்சினம் கூறினான் சேரன்.

அதைக் கேட்ட காரி உளம் மகிழ்ந்தான்; “அதிக மானை வெல்லுவது எளிய செயல் அன்று. பெரிய அகழி சூழ்ந்த வலிமையான கோட்டை அவனுக்கு இருக்கிறது. ஆற்றல் மிக்க வீரர்கள் செறிந்த பெரிய படையும் இருக்கிறது. ஆதலின் தீர ஆராய்ந்து வினையை மேற்கொள்ள வேண்டும்” என்றான்.

“நன்றாகவே ஆராய்ந்து தக்க முறையில் பெரிய படைகளைக் கூட்டி, யாரேனும் துணை வருவாரானால் அவர்களையும் சேர்த்துக்கொண்டு போரிடலாம். சிறிது காலம் சென்றாலும் அதிகமானை எதிர்க்கும் தகுதி பெற்ற பிறகே போரைத் தொடங்குவோம். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இனி ஒவ்வொரு கணமும் இந்தப் போரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன். இரவில் தூக்கமின்றி இதே கவலையாக இருப்பேன். உம் யோசனைகளை அவ்வப்போது சொல்லி வர வேண்டும்.”

அது முதல் பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினான். அது மிகப் பெரிய போராகவே இருக்கும் என்பதில் அவனுக்குச் சிறிதும் ஐயம் உண்டாகவில்லை. அதற்கு ஏற்றபடி விரிவான வகையில் ஆவன செய்ய முற்பட்டான். தன் படை வீரர்களில் இடையிலே சென்றவர்களை யெல்லாம் அழைத்துவரச் செய்தான். “அணிமையில் போர் செய்யவேண்டி நேருமாகையால் ஒவ்வொரு குடியிலும் உள்ளவர்களில் வலிமையும் பருவமும் உள்ள ஆடவர்கள் உடனே வந்து படையில் சேர வேண்டும் என்று யானையின் மேல் முரசை வைத்து அறையச் செய்தான். அது கேட்ட காளையர் பலர் வந்தனர். படைக்கலக் கொட்டிலில் உள்ள கருவிகளையெல்லாம் செப்பம் செய்வித்தான். படை வீரர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கக் கட்டளை யிட்டான். “எங்கே போர்? யாரோடு போர்?” என்பதை மட்டும் யாரும் அறியாமல் மந்தணமாகவே வைத்திருந்தான். ஒற்றர்களை அனுப்பித் தகடூரில் உள்ள அமைப்புக்களையும் படையின் அளவு முதலியவற்றையும் தெரிந்துகொண்டு வரும்படி ஏவினான். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருந்தான்.

இதற்குள் காரி அங்கங்கே மறைவாகத் தங்கியிருந்த தன் வீரர்கள் சிலரை ஆள் விட்டு அழைத்து வரச் செய்தான். அவன் வஞ்சிமா நகரத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்து பலர் அவனை வந்து அடைந்தார்கள். மீட்டும் போருக்கு ஏற்ற வகையில் தம்மை ஆயத்தம் செய்துகொண்டார்கள், அந்த வீரர்கள் அனைவரும் காரியின் போர் அநுபவமும் தன்னுடைய படையும் அதிகமானை வெல்லப் போதியவை என்று சேரமான் திண்ணமாக எண்ணினான். படை வகுப்பில் பேரணியாக இருப்பதைக் காரி தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்பது அவன் விருப்பம்.

சேரர் படையில் இருந்த தலைமை வீரர்களில் பிட்டங்கொற்றன் என்பவன் ஒருவன். அவன் குடியே வீரப் பெருங்குடி; சேர மன்னர்களுக்குத் தம்முடைய வலிமையைப் பயன்படுத்தும் பெருவீரர்கள் பிறந்த குலம். பிட்டங்கொற்றன் இளமை மிடுக்கும் போர்ப் பயிற்சியும் உடையவன். தானே தலைமை தாங்கிப் போரை நடத்தும் ஆற்றலை அவன் பெற்றிருந்தான். காரியும் பிட்டங்கொற்றனும் இணைந்துவிட்டால் தீயும் காற்றும் சேர்ந்து கொண்டது போலாகிவிடும். பிறகு அவர்களை எதிர்ப்பதற்கு எவரால் முடியும்? வேறு வீரர்களில் சேரனுடைய அன்புக்குச் சிறப்பாக உரியவரானவர் சிலர் உண்டு. அவர்களில் நெடுங்கேரளன் என்பவன் ஒருவன்; மீசை அரும்பிய முகமும் திரண்ட தோள்களும் எடுப்பான பார்வையும் இரும்புருளையைப் போன்ற வலிமையும் பெற்றவன். போரில் அவனை விட்டால் இடையிலோ கடையிலோ நிற்க மாட்டான். நேரே முன்னணிப் படையிலே போய் நிற்பான்.

இத்தகைய வீரர்களை ஒவ்வொருவராகத் தன் அகக்கண்ணிலே நிறுத்திப் பார்த்தான் சேரன். நெடுங்கேரளனே போதும் போரை வெல்ல; அவனால் இயலாதென்றால் பிட்டங்கொற்றன் எவ்வளவு பெரும் படை வந்து எதிர்த்தாலும் முன்னின்று பகைவரைச் சாய்ப்பான்; அவனால் இயலாத செயலே இல்லை. ஒரு கால் அவன் தளர்ச்சியடைவதாக இருந்தால் காரி இருக்கிறான். தமிழ்நாட்டுப் படைகள் அத்தனையும் எதிர்த்தாலும் அஞ்சாமல் எதிர்நின்று மார்தட்டும் வீரன் அவன். அவனுடைய வீரம் இலக்கியத்தில் ஏறியதல்லவா?

நினைக்க நினைக்கப் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஊக்கம் வளர்ந்தது; துணிவு பிறந்தது; வெற்றி நிச்சயம் என்ற முடிவு ஒளிவிட்டது. செய்ய வேண்டிய ஆயத்தங்கள் பெரும்பாலும் நிறைவேறின. போர் முரசு கொட்ட வேண்டியதுதான்.

ஒரு நாள் தன்னுடைய அமைச்சர்களையும் படைத் தலைவர்களையும் சான்றோர்களையும் வைத்துக்கொண்டு மந்திராலோசனை செய்யத் தொடங்கினான். பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அன்பு கொண்டு அவனைப் பாடிய அரிசில்கிழார் என்னும் புலவரும் அங்கே இருந்தார். பெருஞ்சேரல் இரும்பொறை போரிட வேண்டிய காரணத்தை எடுத்துரைத்தான். அதிகமான் எப்போதும் நமக்குப் பகைவனாக இருக்கிறான். அவனுடைய குடியே சேரர்களுக்குத் தீங்கு எண்ணும் குடி. தாங்களே சேர மன்னர்களாக முடி கவித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதியர் குலத்தினருக்கு இருந்துவருகிறது. அதிகமான் நெடுமான் அஞ்சி வரவரப் பல நாடுகளை வலியச் சென்று போரிட்டுத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவருகிறான். அவனுடைய செயலால் நாடு இழந்த நல்லவர்கள் பலர்” என்றான்.

“பழையவர்களைப் பற்றி இப்பொழுது எண்ண வேண்டாம். அதிகமானைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு பெரியவர்.

“அதிகமான் ஈகையிற் சிறந்தவன், அறிவிற் சிறந்தவன் என்று யாவரும் சொல்கிறார்களே” என்றார் அரிசில்கிழார்.

“கொள்ளையிட்டு வந்ததைக் கொடுப்பது கொடையாகுமா? எவ்வளவு சிறந்தவனாக இருப்பினும் நாடு பிடிக்கும் ஆசை இருக்கும் வரைக்கும் அவன் கொடியவனே. படைப்பலத்திலே குறைந்தவர்கள், அவன் எந்தச் சமயத்தில் நம் மேல் படையெடுப்பானோ என்று அஞ்சிக் காலம் கடத்துகிறார்கள். அவன் நம் பெருவீரரான காரி ஓய்ந்திருந்த சமயம் பார்த்து அவர் ஊரைத் தாக்கி ஊரை விட்டு ஓட்டிவிட்டானே!”

“காரணமின்றி ஓரியைத் தாக்கிக் கொன்றதற்காகவே அவன் கோவலூரைத் தாக்கினான் என்றல்லா புலவர்கள் பேசுகிறார்கள்?” என்று அரிசில்கிழார் கூறினார்.

‘காரி கொல்லிக்கூற்றத்தை வசப்படுத்தாமல் இருந்திருந்தால் என்றேனும் ஒருநாள் அதிகனே கைப்பற்றியிருப்பான். அந்த நாடு கிடைக்கவில்லையே என்ற பொறாமையினால் தான் காரியின்மேல் சினம் கொண்டு கோவலூரை முற்றுகையிட்டான்.”

ஒரு போரிலிருந்து மற்றொரு போர் தொடங்குகிறது. அதனால் அரசர்களுக்கு நலமோ, தீங்கோ, நாட்டில் வாழும் மக்களுக்குத் தீங்கே உண்டாகிறது. எப்போதும் போர் நடந்தால் மக்கள் எப்படி வாழ முடியும்? கொல்லிப் போர் கோவலூர்ப் போரைக் கொண்டு வந்துவிட்டது. இப்போது கோவலூர்ப் போர் தகடூர்ப் போருக்கு வித்தாக வந்திருக்கிறது. யார் யாரோடு போர் செய்தாலும் பொதுவில் தமிழ்நாட்டில் வாளும் வாளும் வேலும் வேலும் மோதிய வண்ணமா யிருக்கின்றன” என்றார் சான்றோர் ஒருவர்.

“அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் போரை எண்ணுகையில் உள்ளம் சாம்புகிறது. அதிகமான் சேரர் குலத்திலிருந்து பிரிந்துபோன குடியினன். நம் மன்னர் பிரானுக்குத் தம்பி போன்றவன் *1 . அவன் மார்பில் புரள்வதும் சேரமன்னர்களுக்குரிய பனை மாலையே. அவனை இணக்கமாக வைத்து நட்பாடினால் சேர நாட்டுக்கும் நன்மை; தமிழ்நாட்டுக்கும் நன்மை.” -இப்படி வேறு ஒரு சான்றோர் சொன்னார்.

“அவன் சேர குலத்தைக் கண்டால் கனலுகிறான்; அவனைத் தம்பியென்று சொல்வதாவது!” என்றான் சேரன்.

தம்பியாகவே இருந்தால் என்ன? தம்பி நல்லவனாக இருந்தால் ஒத்துப் போகலாம். தீயவனாக இருந்தால் அடக்கவேண்டிய முறைப்படி அடக்க வேண்டியதுதான். அண்ணன் தம்பிகள் ஒழுங்காக இருந்தால் பாரதப்போரே வந்திராதே! தம் தம்பிமார் என்று தரும் புத்திரர் பாரதப் போரிலிருந்து விலகிக் கொண்டாரா?” என்று மிடுக்காகப் பேசினான் பிட்டங் கொற்றன்.

” நன்றாகச் சொன்னாய்!” என்று அவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தான் சேரமான்.

சான்றோர்களும் அரிசில்கிழாரும் போர் எழாமல் இருந்தால் நலமென்று எண்ணியவர்கள். ஆதலின் தங்களால் இயன்ற நியாயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் கூற்று அரசன் காதில் ஏறவில்லை. போருக்குரிய ஆயத்தங்கள் யாவும் ஆகிவிட்டன என்று அவர்கள் உணர்ந்தார்கள், வெள்ளம் வந்தபின் அணைபோட்டுத் தடுக்க முடியுமா? அரசர்கள் ஒரு செயலில் முனைந்துவிட்டால் அதை மாற்றுவது மிக அரிது.

அந்த அந்தரங்கக் கூட்டத்தில், அதிகமானோடு போர் செய்ய வேண்டியது இன்றியமையாததே என்ற முடிவை அரசன் வற்புறுத்தினான். படைத்தலைவர்கள் தோளைக் குலுக்கி ஆரவாரித்தார்கள். அமைச்சர்கள் தலையை அசைத்தார்கள். படையெடுத்து வரப்போகிறோம் என்று ஓலை அனுப்ப ஆளும் நாளும் தேர்ந்தெடுத்து விட்டான் சேரன்.

அடிக்குறிப்பு மேற்கோள்:

1. தகடூர் யாத்திரை (புறத்திரட்டு, 776.)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s