கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்

-சுவாமி ஓம்காராநந்தர்

ஓம்

ஸ்ரீகுருப்யோ நம:

ஞானமாம் சொல்லின் பொருளாம் நம் பாரத நாட்டில், தொன்றுதொட்டு மக்களின் வாழ்வியலைப் பற்றிய கல்வியை அறிந்திருந்தினர். வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றிய அறிவும், அதனை அடைவதற்குரிய வழியைப் பற்றிய அறிவும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.

ஆங்கிலேயர் நம் தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், திட்டமிட்டு நம் தேசத்தின் குருகுலக் கல்வி முறையை அடியோடு ஒழித்தனர்; வெறும் எழுத்தர்களை உருவாக்கும் கல்வித்திட்டத்தினை உருவாக்கினர். பாரத தேசம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், இன்றும் ஆங்கிலேயரின் கல்வித்திட்டம் தான் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றிய தெளிவைத் தராத கல்வியை , மன நிம்மதியைத் தராத ஏட்டுக் கல்வியைப் பயில தம் வாழ்நாளில் இருபது வருடங்களுக்கு மேல் செலவழிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

எந்தக் கல்வியைக் கற்றால் அதிகமாக பணம் கிடைக்குமோ, அந்தக் கல்வியைக் கற்பதற்கே கடும்போட்டி நிலவுகிறது. விஞ்ஞானத்தின் அசுரத்தனமான வேகத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. வாழ்க்கை வசதிகள் பெருகியுள்ளன. அதேநேரத்தில் வாழ்க்கைச் சிக்கல்களும் பெருகியுள்ளன. பொதுவாழ்வில் லஞ்சம் ; ஊழல் நிறைந்த சூழல், தனிப்பட்ட வாழ்வில் உறவுகளில் விரிசல் – என் வாழ்க்கையை ஓர் அமைதியின்மை எப்போதும் சூழ்ந்துள்ளதை உணர முடிகிறது.

இன்று கல்வி கற்றவர்கள் பலர் அறத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர் ; சிறு பிரச்னைகளுக்கு கூட மனம் தளர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கல்வி வியாபாரமயமாகி வருகிறது. தெய்வமாக மதிக்க வேண்டிய ஆசிரியரை மாணவர் கொலை செய்யவும் துணிந்து விட்டனர்.

இன்றைய கல்வி அறிவை வளர்க்கவில்லை. உணர்ச்சிகளைக் கையாள கற்றுத் தரவில்லை.  வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்றுத்தரவில்லை. வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களையே உருவாக்கி வருகிறது.

இந்த அவல நிலையில் , திருவள்ளுவரும், விவேகானந்தரும் கல்வி பற்றிக் கூறியிருப்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்து உரத்துச் சிந்தித்தல் மிகத் தேவையான ஒன்றாகும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ‘திருக்குறள்’ என்ற ஒப்பற்ற நூலைத் தந்திருக்கிறார். இன்றும் திருக்குறளின் மூலம் வாழ்ந்து, திருவள்ளுவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு தன் சொந்தக் கல்வியை இழந்து, அறியாமையிலும் வறுமையிலும் சிக்கித் தவித்த எண்ணற்ற மக்களின் உள்ளத்தில் தன் சாகாவரம் பெற்ற சொற்களின் மூலம் எழுச்சி தீபம் ஏற்றியவர்.

மகான்கள் வாழ்ந்த காலம் வேறாக இருக்கலாம். அவர்களது மொழி வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்துக்களில் காணப்படும் ஒற்றுமை என்றும் உய்த்து உணரத்தக்கதாகும்.

திருவள்ளுவர் –  சுவாமி விவேகானந்தர்:

இவர்கள் இருவருமே மனிதப் பிறவியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார்கள். தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள். சோம்பலைத் தூற்றியிருக்கிறார்கள்.முயற்சியின் மேன்மையப் போற்றியிருக்கிறார்கள். ஒழுக்கத்தின் பெருமைய உணரச்செய்திருக்கிறார்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியைப் பற்றிய கருத்துக்களை அழகாக வடிதிருக்கிறார்கள்.

திருவள்ளுவர் கல்வி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு பின்வருமாறு இலக்கணம் வகுக்கிறார்.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

(திருக்குறள் : 391)

கற்க வேண்டிய நூல்களை ஐயந்திரிபறக் கற்று , அதன்படி ஒழுக்கநெறியில் நிற்க வேண்டும்.

கற்பவை கற்க (ஆன்மிகக் கல்வி)

நம் பாரத தேசத்தில் உள்ள அறிவுச் செல்வங்களில் ஒரு சிலவற்றை மேலோட்டமாக கற்பதற்குக்கூட நம் வாழ்நாள் போதாது.

வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அவற்றை ஒட்டி எழுந்த தர்ம சாஸ்திரங்கள் என் அனைத்து மொழிகளிலும் ஒப்புயர்வற்ற, வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்களைக் கூறுகின்ற நூல்கள் எண்ணிலடங்காதவை.

மனிதனின் துன்பத்திற்கு காரணத்தை எடுத்துக் கூறி, அதனை அடியோடு நீக்குவதற்கு வழியையும் கூறி , மனிதன் தன்னைப் பேரின்ப வடிவமாக உணர்ந்துகொள்ளச் செய்வதே பண்டைய பாரத தேச பண்பாட்டுக் கல்வியின் நோக்கமாகும்.

‘ஸா வித்யா யா விமுக்தயே:’ எது மனிதனை அனைத்து தளைகளினின்றும் விடுவிக்குமோ , அதுவே கல்வி என்கிறது விஷ்ணு புராணம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அத்தகைய அமரத்துவம் வாய்ந்த நூல்கள் இன்று நூலகங்களிலும் , குறுந்தகடுகளிலும் வலைத்தளத்திலும் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் கற்கின்ற மாணவர்களும் , நம் தேசத்தின் மக்கள் தொகையில் வெகு சிலரே ஆவர்.

இன்று பெரும்பாலான பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. திருக்குறள் முதலான நீதி நூல்கள் பெயரளவுக்குத் தான் கற்பிக்கப்படுகின்றன.

எத்தகைய கல்வி நமக்கு வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறுகிறார்.

வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்விவாழ்க்கையை வளப்படுத்துகின்றமனிதனை உருவாக்குகின்ற , குணத்தை மேம்படுத்துகின்ற , கருத்துக்களை ஜீரணம் செய்யக்கூடிய கல்வியே நாம் வேண்டுவது.

(ஞான தீபம் 5.239)

அறிவுநலம், மனநலம் , சொல்நலம், செயல்நலம் , உடல்நலம், உறவுநலம் , பொருள்நலம் ஆகிய அனைத்து நலன்களும் இணைந்தது தான் ஆன்மநலம். உடலில் வாழ்கின்ற உயிராகிய ஆன்மா நலமாக வாழவேண்டுமானால் ஆன்மிகக் கல்வியை பெறுவது மிக முக்கியமாகும்.

சுவாமி விவேகானந்தரின் கூற்றைக் காண்போம்: 

மதம் என்பதுதான கல்வியின் உட்சாரம் என்றே நான் கருதுகிறேன்.

(ஞான தீபம் 8.192)

அடிப்படையானது ஆன்மீகமேஆன்மீகமே சோறுமற்றவை அனைத்தும் கறிகள்.

(ஞான தீபம் 6.295)

ஆன்மிக ஞானத்தை போதித்தால் , அதன் பின்னர் உலக அறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும்ஆனால் மதத்தை விலக்கி விட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் உங்கள் முயற்சி வீண் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

(ஞான தீபம் 5.157-8)

மதச்சார்பின்மை என்ற பெயரில், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அறிவைத் தரும் நூல்களைக் கற்காமல் இருப்பது நம் தேசத்து மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை நாம் உணர வேண்டும்.

கசடறக் கற்க

கற்க வேண்டிய நூல்களை ஐயத்திரிபறக் கற்றால் மட்டும் போதாது.நுனிப்புல் மேய்வதல்ல.அகராதியையே மனப்பாடம் செய்யும் பழக்கம் பாரதப் பண்பாட்டுக் கல்வித்திட்டத்தில் இருந்தது.எதையும் ஆழமாகக் கற்க வேண்டும். மிகுந்த தெளிவோடு பொறுமையாக கற்க வேண்டும்.

மனிதனில் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது தான் கல்வி.

(ஞான தீபம் 9.240)

சங்கல்பத்தின் போக்கையும் வெளிப்பாட்டையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து , பயனளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி.

( ஞான தீபம் 11.175)

-என கல்விக்கு இலக்கணம் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.

அதற்குத் தக நிற்க

கற்க வேண்டிய நூல்களை ஐயத்திரிபறக் கற்றால் மட்டும் போதாது அதன் படி ஒழுக வேண்டும். அவற்றில் கூறியிருப்பவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். ”உணவு உடல் மயமாவது போன்று நற்கருத்துக்கள் வாழ்க்கை மயமாக வேண்டும்.” என்பார் தெய்வீக பண்பாட்டுச் செல்வரும் , சிறந்த கல்வியாலருமான சித்பவானந்தர்.

ஓதிஉணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்காப்

பேதையில் பேதையார் இல்.

(திருக்குறள் -834)

நூல்களை ஓதியும், அவற்றின் பொருள் உணர்ந்தும் , பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதை போல் வேறு பேதையில்லை என்றார் திருவள்ளுவர்.

நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துக்களை நன்கு கிரகித்துஅவை உங்கள் வாழ்க்கையாக , நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால் , ஒரு புத்தக சாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனை விட நீங்கள் அதிகமாகக் கல்வி கற்றவர்செய்திகளைச் சேகரிப்பது தான் கல்வி என்றால் , நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள்கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள்!

(ஞான தீபம் 5.239)

-என்றார் சுவாமி விவேகானந்தர்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்ற யவை

(திருக்குறள் – 400)

ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியைத் தவிர மற்ற பொருட்கள் செல்வங்கள் அல்ல என்று கல்வியின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் திருவள்ளுவர்.

அது எத்தைகைய கல்வியாக இருக்க வெண்டும்? விளக்குகிறார் வீரத்துறவி விவேகானந்தர்.

சிறந்த குணத்தை உருவாக்குகின்ற , மன வலிமையை வளர்க்கின்ற , அறிவை விரியச் செய்கின்ற , ஒருவனை சொந்தக் காலில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை.

(ஞான தீபம் 6.236)

சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்கு தயார் செய்யாத கல்வி , ஒழுக்க வலிமையைத் தராத கல்விபிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி , சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்விஅதைக் கல்வி என்று சொல்ல முடியுமாஒருவனைத் தன் சொந்தக் காலிலேயே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி.

(ஞான தீபம் 6.125)

கல்வி என்பது பல்வேறு பரிணாமங்களை உடையது. “கற்றலின் கேட்டல் நன்றே”  என்பது ஆன்றோர் வாக்கு.அறிவை வளரச் செய்வதே அருமையான கல்வி. உள்ளத்தை மலரச் செய்வதே உண்மையான கல்வி. ப்ண்பை வளர்ப்பதே பயனுள்ள கல்வி.

ஆசிரியரின் பங்கு

அத்தைகைய கல்வியை வெறும் சொற்களில் புகட்டிவிட முடியாது. சொற்களைக் காட்டிலும் வாழ்ந்து காட்டுதல் மிக முக்கியம். மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி தேவைப்படுகிறார். ஆசிரியர் தான் மாணவர்களின் முன்மாதிரியாகத் திகழவேண்டும்.  அவரது நடை , உடை , பாவணை , சொற்கள் அனைத்தையும் மாணவர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனம்தூய்மை தூவா வரும்.

(திருக்குறள் – 455)

மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே வரும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆசிரியருடைய வாழ்க்கையின் தாக்கல் இல்லாதது கல்வியாகாது.

(ஞான தீபம் 8.79)

நெருப்பைப் போல கலங்கமற்ற ஒழுக்கம் உடையவர்களுடன் இளமையிலிருந்தே சிறுவர்கள் வாழ வேண்டும். அத்தகைய உதாரண புருஷர் ஒருவரை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்.

(ஞான தீபம் 6.298)

-எனக் கூறி சுவாமி விவேகானந்தர் ஆசிரியர் பண்பில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுருத்துகிறார்.

இத்தகைய கல்வியை இன்றைய இளைய தலைமுறையினருக்கு அளிப்பதற்கு அரசாங்கமும் கல்வியாளர்களும் இணைந்து முயற்சி செய்தல் வேண்டும். நம் தேசத்தின் அறிவுப் பொக்கிஷங்கள் நமக்குப் பயன்பட வேண்டும்.

பாரத தேசத்து மாணவ மாணவியர் அனைவரும் உண்மையான ஆன்மிகக் கல்வியை கசடறக் கற்று , அதன்படி நின்று வையத்துள் வாழ்வாங்கு வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

$$$

குறிப்பு:

மறைந்த பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தர், தேனி ஸ்ரீ சித்பவானந்த ஆசிரமத்தின் நிறுவனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s