அதிகமான் நெடுமான் அஞ்சி-8

-கி.வா.ஜகந்நாதன்

8. இயலும் இசையும்

முடியுடை மன்னர்கள் தம் படைக்கு வலிமை போதாதென்று கருதினால் துணையாக வரவேண்டுமென்று காரியை அழைப்பார்கள். காரியின் துணை யிருந்தால் வெற்றி தமக்கே கிடைக்குமென்று நினைப்பார்கள். அத்தகையவனுடைய வீரத்தையும் படை வலிமையையும் எப்படி அளந்து சொல்ல முடியும்? அந்தப் பெரு வீரனை ஊரை விட்டு ஓடச் செய்தான் அதிகமான் என்ற செய்தியை முடி மன்னர்கள் கேட்டார்கள். சோழன் அதிகமானைப் பாராட்டி மகிழ்ந்தான். பாண்டியன் தன் நண்பன் இத்துணை வலிமையுடையவனாக இருக்கிறானே என்று எண்ணிப் பெருமிதம் கொண்டான். பெருஞ்சேரல் இரும்பொறையோ ஒன்றும் தோன்றாமல் மயங்கினான்; வருந்தினான். வீரருலகம் அதிகமானைக் கொண்டாடிப் போற்றியது. புலவர்கள் அவன் வெற்றியைப் பாடினார்கள்.

பரணர் என்னும் பெருங் கவிஞர், அதிகமான் திருக்கோவலூரைத் தாக்கிக் காரியை ஓடச் செய்தான் என்பதைக் கேள்வியுற்று அவனைப் பார்க்க வந்தார். அவனுடைய மகனையும் கண்டு மகிழ்ந்தார். அதிகமானுடைய வீரத்தைப் பல பாடல்களால் பாடினார். அந்தப் பாடல்களைக் கேட்டவர்கள் அவற்றின் சுவையிலே ஆழ்ந்து இன்புற்றார்கள். அதிகமானுடைய நல்லியல்புகள் எல்லாவற்றையும் பல வகையில் பாராட்டிப் பாடிய ஒளவையாருக்கு இப்போது என்றும் இல்லாத இன்பம் உண்டாயிற்று. தம்முடைய தம்பியாகவே எண்ணி அன்பு பாலித்த அதிகமானைப் பெரும் புலவர்கள் பலர் பாட வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது. இப்போது திருக்கோவலூரில் அவன் பெற்ற வெற்றியை பரணர் பாடியதைக் காதாரக் கேட்டு அவர் மனம் நிறைவு பெற்றது. ஒரே மாதிரி அணிகளையும் மாலைகளையும் அணிந்து புனைவதைவிட, பலவகை மணிகளையும் அணிகளையும் பல வண்ண மாலைகளையும் அணிந்து கோலம் செய்வதுதானே சிறப்பாக இருக்கும்? அது போன்ற சிறப்பு இப்போது அதிகமானுக்கு உண்டாகி விட்டது என்று அந்தத் தண்டமிழ்ச் செல்வியாருக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவரும் ஒரு பாட்டுப் பாடினார்.

“உன்முன்னோர்கள் அரிய செயல்கள் பல செய்தவர்கள் . அமரர்களை வழிபட்டு வேள்விகளைச் செய்து ஆகுதி அளித்தார்கள். பெறுவதற்கரிய உயர்ந்த வகையான கரும்பை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து விளையச் செய்தார்கள். கடல் புடை சூழ்ந்த உலகில் தம் ஆழியைச் செலுத்தி வழிவழியாக ஆண்டுவந்தார்கள். அவர்களைப் போலவே நீயும் பல அரிய செயல்களைச் செய்தாய். அவர்களைப் போலவே வீரத்துக்கு அடையாளமாகப் பொன்னாலாகிய வீரக்கழலை அணிந்திருக்கிறாய். உன் குலப்பெருமையைக் காட்டும் பனைமாலையைப் புனைந்திருக்கிறாய். அவர்கள் தேவர்களை நிறுவி விழாவெடுத்து வழிபட்ட அழகிய மலர்ப் பொழிலை நீ இன்றும் காத்து வருகிறாய். அவர்கள் ஏந்தியது போலவே வேலை ஏந்தி நிற்கிறாய். அவர்கள் ஏழு மன்னர்களை வென்றதற்கு அடையாளமாக அம்மன்னர்களின் அடையாளக் கொடிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்களிடமிருந்து நீ உரிமையைப் பெற்ற பின்பு, நீயும் ஏழு பேரோடு பொருது வென்றாய். இவ்வளவு சிறப்புடைய நீ அன்றோ பாடுவதற்குரிய பெரும் புகழோடு நின்றாய்? இன்று உன் புகழ் பின்னும் மிகுந்திருக்கிறது. திருக்கோவலூரில் காரியோடு மலைந்து பெற்ற வெற்றி எல்லோருக்கும் கிடைக்குமா? இப்போது நீ ஏந்தும் ஆழி எவ்வளவு வலிமையுடையது! இப் பெருமையைப் பெரும் புலவராகிய பரணர் பாடினார். அவரே பாடுவதற்குரியவர்” *1  என்று தம் இன்ப உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

இயல், இசை, நாடகம் என்று தமிழ் மூன்று வகைப்படும். இலக்கண இலக்கியங்கள் யாவும் இயல் தமிழைச் சார்ந்தவை. பண்ணும் பண் அமைந்த பாட்டும் இசைத் தமிழைச் சார்ந்தவை. கூத்தும் அதற்கு இனமாகிய வரி முதலியனவும் நாடகத் தமிழைச் சார்ந்தவை. ஒளவையார், பரணர் முதலிய பெரும்புலவர்கள் அதிகமானுடைய புகழை அருமையான பாக்களால் பாடினார்கள். அவை இயற்றமிழ்ப் பாடல்கள். வேறு பலர் அதிகமானை இசைத்தமிழ்ப் பாடல்களால் பாடினர். தாளத்தோடும் பண்ணோடும் அமைந்த அந்தப் பாடல்கள் கேட்க இனியனவாக இருந்தன. பண் அமைந்த பாடலை இக் காலத்தில் உருப்படிகள் என்று சொல்கிறார்கள். பழங்காலத்தில் ‘உரு’ என்றே கூறினர். உரு என்பதிலிருந்து உருப்படி என்பது வந்தது.

அதிகமான் வீரத்தைப் பாடும் பல உருப்படிகளை இசைத் தமிழ் வல்லுநர்கள் பாடினார்கள். அவன் ஈகையைச் சிலர் பாடினார்கள். அவன் குலப் பெருமையைச் சிலர் போற்றினார்கள். இயற்றமிழ்ப் பாடல்களைத் தமிழறிவுடையவர்கள் யாவரும் பார்த்துப் பொருள் தெரிந்து இன்புறலாம். ஆனால் இசைத் தமிழ்ப் பாடல்கள் பொருள் அறிந்து மகிழ்வதோடு நிற்பதற்கு உரியன அல்ல. அவற்றை வாயாரப் பாடி இன்புற வேண்டும். அதிகமானைப் பற்றிய இசைப் பாடல்கள் மிகுதியாக வந்தன. அவற்றை வாங்கி வாங்கி வைத்துக் கொண்டார்களேயன்றி எப்படிப் பாட வேண்டும், அவற்றிற்குரிய பண் எவை என்று தெரிந்து கொள்ளவில்லை.

இதை ஒளவையார் உணர்ந்தார். அந்தப் பாடல்களை யெல்லாம் ஒரு சேரத் தொகுத்தார். தாம் அறிந்த பெரிய பாண் புலவர் ஒருவரை அழைத்து வரச் செய்தார். அவர் வந்து அந்தப் பாடல்களை யெல்லாம் நன்கு ஆராய்ந்து, எந்த எந்தப் பண்ணில் அமைத்தால் நன்றாக இருக்குமோ அந்த அந்தப் பண்ணை அமைத்துத் தாமே பாடிக் காட்டினார். அந்தப் பாடல்களைக் கேட்கப் பலர் கூடினர். இயற்றமிழ்ப் புலவரும் இசைத் தமிழ் வல்லுநர்களும் அமைச்சர்களும் சான்றோர்களும் கூடிய அந்தப் பேரவையில் இயலும் இசையும் கைவந்த ஒரு பெண்மணியும் இருந்தாள். அவளுக்கு நாகை என்று பெயர். அவள் அதிகமான் நெடுமான் அஞ்சியின் அத்தை மகள். அந்தப் பாண்மகனார் பாடப் பாட அவற்றைக் கேட்டு இன்புற்றுச் சுவைத்தாள் அவள். அந்த இசைப் புலவர் தாமே சில புதிய உருப்படிகளைப் பாடினார். ஏழு சுரங்களையும் உடையவற்றைப் பண் என்றும், அந்தக் கணக்கில் குறைப்பவற்றைத் திறம் என்றும் சொல்வது இசைத்தமிழ் மரபு. புதிய பாடல்களைப் பாடிய புலவர் சில திறங்களில் அமைத்த உருப்படிகளையும் பாடினார். அவை மற்ற எல்லாப் பாடல்களிலும் சிறந்தனவாக, உள்ளத்தை ஈர்ப்பனவாக அமைந்தன.

அஞ்சியின் அத்தை மகளாகிய நாகைக்கு இந்தத் திறங்களின் இனிமையைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அவள் தான் பாடிய அகப்பொருட் பாட்டு ஒன்றால் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டாள்.

ஒரு பெண்மணி தன் கணவன் தனக்கு மிகவும் இனியவனாக இருக்கின்றான் என்று சொல்ல வருகிறாள். “அவன் திருமணம் புரிந்து கொண்ட நாளில் எவ்வளவு ஆர்வத்தோடு இனியனாக இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறானா?” என்று தோழி கேட்கிறாள். “அதைவிட மிக்க இனியவனாக இருக்கிறான். வேகமான ஓட்டத்தையுடைய குதிரையையும் உயர்ந்த தேரையும் உடைய அதிகமான் நெடுமான் அஞ்சியினுடைய நல்ல புகழை நிலைநிறுத்திய, யாவரும் விரும்புதற்குரிய பாடல்களுக்குப் பழைய மரபில் வரும் இசையை அமைத்த புகழ்பெற்ற பாண் புலவன், கணக்குப் பண்ணி அமைத்த பண்களுக்குள்ளே, தானே புதியதாகப் புனைந்து அமைத்த திறங்கள் மிக்க இனிமை யுடையன. அவற்றைக் காட்டிலும் இனிமையுடையவன் என் கணவன்” என்று சொல்கிறாள். இந்த உவமை வாயிலாகப் பாண்மகனார் இசை வகுத்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தாள் நாகை.

கடும்பரிய் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல் இசை நிறுத்த நயவரு பனுவல்
தொல் இசை நிறீஇய உரைசால் பாண்மகள்
எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்,
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.
*2

[கடும்பரி- விரைவான நடையையுடைய. இசை நிறுத்த. புகழை நிலை நிறுத்திய . நயவரு- விருப்பம் உண்டாகின்ற. பனுவல்- உருப்படிகளின் தொகுதி. தொல் இசை நிறீஇய- பழைய முறைப்படி அமைந்த இசையை வகுத்த. உரைசால்–  புகழ்மிக்க; எண்ணு முறை நிறுத்த- எண்ணின் வரிசையாக வகுத்த. திறத்தினும் இனியன், வதுவை நாளினும் இனியன் என்று தனித்தனியே கூட்ட வேண்டும்.]
அதிகமான் அத்தை மகளாகிய நாகையும் அவனைப் பாடிப் பரவினாள்.அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  புறநானூறு 99.

2.  அகநானூறு 352.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s