முஸ்லிம்களிடையில் தீண்டாமையும் ஜாதிமத பேதமும் இல்லையா?

-ஆசிரியர் குழு

சமத்துவமின்மை உலெகெங்கும் உள்ளது. அதைக் களையவே சமயங்கள் தோன்றின. ஆயினும் சமயங்களினுள்ளும் சமத்துவமின்மை தாண்டவமாடுகிறது. ஹிந்து சமயத்தில் உள்ள சமத்துவமின்மைக்கு எதிராக பல மகான்கள் போராடி, சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளனர்; சீர்த்திருத்தங்கள் தொடர்கின்றன. அதே சமயம், ஹிந்து சமயத்தைப் புறம் பேசும் இஸ்லாம் மதத்திலும் குறைகள் இல்லையா? இக்கேள்வியை 1935இல் கேட்டிருக்கிறது ஒரு பத்திரிகை. நமது காலப் பெட்டகத்தில் அந்தப் பத்திரிகையின் கட்டுரை இடம் பெறுகிறது…

திரு. சுப.முஹமது இஸ்மாயில் என்பவர் ஆசிரியராகப் பெறுப்பேற்று நடத்திவந்த ‘ஸாந்தி’ எனும் ஹிந்து- முஸ்லிம்- கிறிஸ்தவ மத ஆராய்ச்சி இதழ் 1935களில் வெளிவந்துள்ளது. இந்த இதழின் ஒரு பிரதி மட்டும் கிடைத்துள்ளது. அதிலுள்ள ஒரு கட்டுரை இது…

ஹிந்துக்களுடைய மதத்தில் இருக்கும் தீண்டாமைப்பழக்கத்தைக் கண்டு முஸ்லிம்கள் கண்ட கண்ட விதமெல்லாம் ஹிந்துக்களையும் ஹிந்து மதத்தையும் இகழ்கின்றார்கள். ஹிந்துக்கள் தங்கள் மதத்தினரில் ஒரு சிலரைத் தங்கள் கோவில்களுக்குள் நுழையவோ, தங்கள் தெய்வங்களைத் தரிசித்து ஆதரிக்கவோ விடுவதில்லை. இது மூடப்பழக்கமென்றும், ஜாதி இருமாப்பென்றும், இதனால் ஹிந்துமதம் க்ஷிணித்து வருகின்றதென்றும், இன்னும் என்னென்ன விதமாகவோவெல்லாம் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் இழிவுபடுத்திக் கூறவோ அவையனைத்தையுங் கொண்டு தூற்றிப்பெருமையடித்துக் கொள்ளுகின்றனர்.

இதேபோல் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ மதத்தையும் முஸ்லிம்கள் இழிவாகக் கருதுகின்றனர். கிறிஸ்தவக் கோவில்களில் எல்லா ஜாதிக் கிறிஸ்தவர்களும் நுழைந்து பிரார்த்தனை செய்ய முடியாது. நுழைந்தால் சிலவிடங்களில் மண்டை உடைந்து விடுகின்றது. ஹிந்துக்களிடமிருப்பதே போல் இவர்களிடையில் சம பந்திபோஜனம் கிடையாது; கலப்பு மணம் கிடையாது. எல்லாம் அந்தந்த ஜாதியாருக்குள்ளேதான் ஆகவேண்டும். இதை எடுத்துக்காட்டி முஸ்லிம்கள் கிறிஸ்தவாகளை இழிவுபடுத்திக் கூறி வருகின்றனர்.

ஆனால், தங்கள் கண்களை முஸ்லிம்கள் கண்ணாடி முன் நின்று பார்ப்பதில்லை; பார்க்கப் பிரியப்படுவதில்லை. ஆனதால் முஸ்லிம்கள் தாங்கள் பிரியப்படாவிட்டாலும் அவர்களின் முன் விலையில் இந்த சிலைக்கண்ணாடியை வைக்கின்றோம். அப்பொழுதாவது அவர்கள் அதைப்பார்த்து உண்மைத்தோற்றம் என்னவென்பதைத் தெரிந்துகொண்டு, தங்களைத் திருத்திக் கொள்ளட்டும். இதரர்களை இழிவுபடுத்திக் கூறுவதையாவது நிறுத்திக் கொள்ளட்டும்.

சுன்னிகளுக்கு காதியானி பள்ளன்.

இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள். இவர்களிடையில் பல ஜாதிகளும், பிரிவினைகளும் உண்டு. ஆராய்ச்சிக்காரர்கள் 200-க்கு மேற்பட்ட ஜாதிகள் இவர்களிடையில் இருப்பதாகக் கணக்கெடுத்துக் கூறுகின்றனர். இவர்களின் பிரிவுகள் ஹிந்துக்களில் உள்ளதேபோல் 4 பிரதானமான பிரிவுகள் இருக்கின்றன. சுன்னத் ஜமாத் என்னும் பிரிவு எண்ணிக்கையில் நிறைந்தது. இவர்களை ஹிந்து பிராமணப்பிரிவுக்கு ஒப்பிடலாம்.

இவர்களுக்கு ஆச்சாரிகளாக விளங்கும் உலமாக்களும் புரோகிதர்களும் சொல்லுவதேதான் இவர்களுக்கு வேதவாக்கு  இவர்கள் வணங்குவதும் இந்த மௌலானாக்களையேதான். அல்லா(ஹ்)வை வணங்குவது இரண்டாவதாகத்தான். இவர்கள் பின்பற்றுவது ஒன்றுமில்லை. தாடிவைப்பதும் மௌலானாவைப் பின்பற்றியேயன்றி முஹம்மதைப் பின்பற்றியல்ல. முஹம்மதைப் பின்பற்றுவதானால் நூற்றுக் கணக்கானவிதமாய் தாடிகள் காணப்பட இடமில்லை. மௌலானா ஒரு அங்குல தாடி வைத்தார் என்றால் அதுதான் சரி. ஒரு சீர்திருத்த சங்க ஆபீஸில் 3 மௌலானாக்கள் இருக்கின்றனர். பிரதம மௌலானா படர்ந்த தாடியை வைத்திருக்கின்றார். அடுத்தபடியிலுள்ள மெளலவிசாஹிப் தன் தாடியைக் கீழ்நோக்கி வளரவிடாமல் வாராவாரம் அதைக் கத்தரித்து அங்குலத்துக்குள்ளேயேதான் நிறுத்திவிடுகின்றார். மற்றோர் ஹஜ்ரத் முகத்தின் பக்கங்களைக் காலி செய்துவிட்டு வாய்க்குக் கீழேயுள்ள மோவாய்க்கட்டையில் மட்டும் அங்குலமயிரை வைத்துக்கொள்கின்றார். இவர்கள் அனைவரும் சேர்ந்து தாடி வைக்காத முஸ்லிம்களைக்கண்டு இகழ்வார்கள்.

முன்னெடுத்துக்காட்டிய  3 வகைத் தாடிக்காரர்களும் முஹம்மதைப் பின்பற்றுவார்களானால் அவர் வைத்திருந்த முறையில் தாடி வைத்திருக்க வேண்டும். அதை விடுத்து முஹம்மதை ஏமாற்றிவிடலாமென்று அவர்கள் பின்பற்றிய மௌலானாக்களை ஒட்டியே தாடி வைக்கின்றார்கள்.

தாடியைப்பற்றி முஹம்மது கவலைப்படவில்லை. “தாடி மறைத்துக்கொண்டு நிற்கும் நெஞ்சின் கீழ் உள்ள மனது எப்படி இருக்கின்றது என்றுதான் அல்லா(ஹ்) ஒவ்வொருவரையும் பார்க்கின்றார்” என்று உணர்ந்த முஸ்லிம் தாடிக்காரர்களால் இகழப்படுகின்றான். குடிகாரக் கூத்திக்கள்ளனும் கொலைபாதகனுமாயிருந்தாலும் அவன் பூணூல் போட்டிருந்தால் பிராமண ஜாதியான் என்று கௌரவிக்கப்படுவதேபோல், தாடி வைத்தவரெல்லாம் முஹம்மதைப் பின்பற்றுவதாகக் கொள்ளப்படுகின்றது. இது கிடக்கட்டும், இதைப் போன்ற உதாரணங்கள் எடுத்துக்காட்ட எண்ணிறந்தவை உள்ளன; இதைப்பற்றிப் பின்னர் வெளியிடுவாம்.

இதுபோல் மௌலானாக்களைப் பின்பற்றும் சுன்னத்து ஜமாத்தார், மெளலானாக்கள் கூறும் எதையும் அப்படியே விழுங்கிவிடுகின்றார்கள். இந்த மௌலானாக்கள் தங்களைப் பின்பற்றாதவர்களையும், எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும், சந்தேகங்கொண்டு பகுத்தறிவை உபயோகிப்பவர்களையும், மௌலானாக்களின் கூற்றுக்களை ஆராயத் துணிபவர்களையும் ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுகின்றனர். இல்லை, லக்ஷக் கணக்கானவர்களைத் தீண்டாத ஜாதியினருடன் சேர்த்து விட்டனர்.

ஹிந்துமத சம்பிரதாயப் படி தீண்டப்படாத பள்ளுபறையனும் ஹிந்துவே. ஆனால், இந்த மௌலானாக்களின் சம்பிரதாயப்படி இவர்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்தவர்களில் பெரும்பாலார்கள் ‘காபிர்கள்’ அதாவது இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டவர்கள். அந்தக் கோஷ்டியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டவர்கள்

அவர்கள் இவர்களுடைய கோவில் (மசூதி ) களுக்குள் நுழைந்துவிடவோ, இவர்களுடன் நின்று தெய்வப்பிரார்த்தனை செய்யவோகூடாது. மிஞ்சினால் மண்டை உடைந்துபோகும். கொலையும் செய்துவிடுவார்கள். பிரிட்டிஷ் ராஜ்ஜியமாகையால், இந்த மௌலானாக்களின் சட்டம் அமுலிலில்லை. இருந்தால் கொலைதான். இவர்களுடைய பெண்டுபிள்ளைகளும், சொத்து சுதந்திரமனைத்தும் சூறையாடப்படும். காதியான்கள், அஹ்மதிகள் என்னும் (பல ஹைக்கோர்ட்டுகளின் தீர்ப்பின்படி தீவிர நோக்கமுள்ள ஆர்த்தடக்ஸ்- வைதீக) முஸ்லிம்கள் இவர்களின் கோவில்களுக்குள் கால் வைத்துவிடக் கூடாது.  

அப்படியே வஹாபிகள் என்னும் (அதிதீவிர வைதீக) முஸ்லிம்களும் தீண்டாத ஜாதியினராய் நடாத்தப்படுகின்றனர். ஷியாக்களென்னும் முஸ்லிம் ஜாதியார் முன்கூறிய அனைவரையும் ஜாதிப்பிரஷ்டர்கள் என்று மதிக்கின்றனர். தண்ணீர் கேட்டால் ஷியாக்கள் அதில் எச்சிலை மறைவில் உமிழ்ந்து கலக்கிக்கொண்டுவந்து கொடுக்கின்றார்கள் என்று ‘சுன்னி’கள் குறை கூறுகின்றனர். இவர்கள் பெண் கொடுத்தல் கொள்ளல் வைத்துக்கொள்ளுவதில்லை.

முஸ்லிம்காள்! இதுதானா இஸ்லாமிய சமத்துவம்! விஸ்வ சகோதரத்துவம்! 

ஹா!! ஹா!!! பலே பலே!

$$$

Leave a comment