சநாதனத்தை அழிக்கக் கிளம்பிய உதவாக்கரை

-ஆதிசைவன் இரா.இராம்குமார்

சட்டப்பேரவையில்  எதிர்கட்சித் தலைவராகப்  பொறுப்பேற்ற முதல் நாளிலேயே (மே 12)  ‘சநாதன தர்மத்தை ஒழிப்பேன்’ என்ற சர்ச்சையாகப் பேசியுள்ளார் உதயநிதி. நாட்டின் பலதரப்பிலிருந்தும் எதிர் விமர்சனம் வரத் தொடங்கிய சூழலில் தனது பேச்சின் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றொரு வேடிக்கை விளக்கம் வேறு கொடுத்தார்  வாய்ச்சொல்  வீரராகிய உதயநிதி. “சநாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் யாரும் கோயிலுக்குப் போகக் கூடாது என்று அர்த்தம் இல்லை, கோயிலில் மட்டுமல்ல சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை வேண்டும்” என்று பம்மினார். 

இவ்வாறு மாற்றிப் பேசும் வித்தையில் கலைமாமணி பட்டம் பெற்றவர்கள் இவர்கள் என்பதை நாடறியும்.

சநாதனம் என்ற சொல்லிற்கு  ‘என்றுமே அழியாத’ என்று பொருள். ஆகவே என்றுமே அழியாத எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தர்ம நெறியை நான் அழித்து விடுவேன் என்று சொல்வது இயலாத காரியம் மட்டுமன்றி  “கடலைப் பார்த்து நரி ஊளையிடுவதற்கு சமானம்”.

இதை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை என்று நினைத்து ஒருசாரார் ஏதும் செயலற்ற நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது “உடல் பலஹீனமானால் கிருமிகள் வேலை செய்யத் தொடங்கிவிடும்”. ஆரம்பத்திலேயே தேவையான தடுப்பூசிகளை போடத்த வறினால் கிருமிகள் பெருக்கம் வலுவடைந்து நாளடைவில் செல்களில் தொற்றுகள் ஏற்பட்டு உடல் பலஹீனப்படும் நிலையேற்படும்.

ஆகையால் நம் தேசத்தின் ஆதார சக்கரத்தை பலஹீனப்படுத்தும் இச்செயலுக்கு ஆரம்பத்திலேயே தக்க தடுப்பு மருந்து கொடுத்தாக வேண்டும். உதவாக்கரைகளின் உளறல்களுக்கு சரியான பதிலடி கொடுப்பது காலத்தின் கட்டாயம்!

கபீர்தாஸர் எழுதிய புகழ்பெற்ற  ‘தோஹா’ ஒன்றில்,  “தாமரை மலர நீர் தேவையா? அல்லது சூரிய ஒளி தேவையா? என்று ஆராயும் போது இவை இரண்டையும் விட தாமரை மலர அதன் தண்டே அடிப்படைத் தேவையானது” என்று பொருள்பட அமைந்திருக்கும். அதேபோல நமது தேசம் ஒளி பெற்று விளங்கிட பொருளாதாரம் மற்றும் போர் வலிமையை விட சநாதன தர்மமே அடிப்படைத் தேவை என்பதனை நாம் உணர வேண்டும்.

சநாதன ஒழிப்புத் தொற்றுக்கான தடுப்பு மருந்து என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.” (குறள் எண்- 948) என்ற திருக்குறளுக்கு இணங்க, சநாதன தர்மத்திற்கு எதிரான கருத்து எழுந்த மூலத்தையும், அது வலுவடைந்ததற்கான காரணத்தையும், தக்க பரிசோதனை மூலம் அந்நோய் தீர்வதற்கான வழியையும் ஆராய்ந்து செயல்படுதல் மிக முக்கியம்.

முதலாவதாக, சநாதன ஒழிப்பு கருத்து எழுந்த மூலக் காரணம் யாதெனில்…… ஹிந்து மதத்தை வேரறுத்து, பாரத தேசத்தில் கிறிஸ்தவ மதத்தை ஊன்றச் செய்வதே முக்கிய நோக்கமாகக் கருதிய ஆங்கிலேய பாதிரிகள், ஹிந்து மதத்துக்கு பிராமணர்களே பாதுகாவலர்களாக இதுவரை இருந்து வருதல் கண்டு, ஒட்டுமொத்த தேசமும் ஒரு பண்பட்ட தர்மத்தில் நிலைகொண்டு நிற்பதைக் கண்டு, பிராமணர்களை மற்றவர்கள் பகைக்கும்படி செய்தாலும் பாரதவாசிகள் கடைப்பிடிக்கும் தர்மத்தை ஏளனமாக பேசச் செய்தாலும் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள்.

அதற்கு அவர்கள் செய்த முயற்சி மிக விநோதமானது. வரலாற்றுச் செய்திகளுக்கும் புராணச் செய்திகளுக்கும் வேறுபாடு தெரியாமல் புராணத்தில் உள்ள சில விஷயங்களை மக்கள் பிளவுக்கு உட்படும் வகையில் ஆரிய – திராவிட இன பேதமாக கற்பித்து ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தது போல ஒரு பக்கம் பிராமணர்களையும் மற்றொரு பக்கம் நமது தேசத்தின் ஆதாரமாகிய தர்மத்தின் மீதும் தங்களது வன்மத்தை கக்கத் தொடங்கினார்கள். அவர்கள் எண்ணியது போல் இச்சநாதன எதிர்ப்புத் தொற்று நன்றாகவே பரவத் தொடங்கின. குறிப்பாக தமிழகத்தில் ஆரிய- திராவிட இனவாதமாக வேரூன்றியது.

அதன் நீட்சியாக நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் தோன்றின. இவ்விரு அமைப்புகளும் ஆங்கிலேயருக்கு செய்துவந்த அடிவருடித்தனம் அனைத்தும் உலகறிந்த உண்மை.

ஆங்கிலேயர்களின் ஊதுகுழலாக விளங்கிய இவர்களால் எடுக்கப்பட்ட முதல் முயற்சி திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில் இருந்து தொடங்கியது.  திருக்கழுக்குன்றம் மகாநாட்டில் தான்  ‘கம்ப இராமாயணத்தை எரிப்பதா? அல்லது வைத்து போற்றுவதா?’ (சான்று:- C.N.அண்ணாத்துரைஎழுதிய தீப்பரவட்டும் நூல், பக்கம்-35) என்ற பிரச்சினை முதன்முதலில் எழுப்பப்பட்டது. பின்பு ஈவேரா, அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்றவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு தற்போது அவர் பேரன் உதயநிதி ஸ்டாலின் வரையிலும் புற்றீசல் போல இந்து எதிர்ப்பு மனநிலை வளர்ந்து வந்து நிற்கிறது.

இவையே மூல  காரணமும் அத்தொற்று வளர்ந்து வந்த விதமும் ஆகும்.  இந்நிலையில்  தமிழர் அறம் வேறு, சநாதன தர்மம் வேறு என்று கூறி‌ சநாதன ஒழிப்புத் தொற்றினை  சமுதாயத்தில் இருந்து எவ்வாறு விரட்டியடிப்பது என்ற அருமருந்தினைக் ஆராய்ந்து கையாள வேண்டியது அவசியம். அதற்கு முதலில் செய்ய வேண்டியது தான்   ‘பரிசோதனை’.

இப்பரிசோதனை முறையை ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு கண்டறிந்து தந்துள்ளார் நமது தேச மகரிஷி சி.சுப்பிரமணிய பாரதி.  துரதிர்ஷ்டம் என்னவென்றால், மருந்து நம் அருகில் இருந்தும் அதை நாம் பயன்படுத்த மறந்து விட்டோம், அல்லது பாராமல் இருந்து விட்டோம்._

பாரதி கூறிய பரிசோதனை முறை யாதெனில், சநாதன எதிர்ப்பு பேசும் இவர்களை இனம் கண்டுகொள்ள வேண்டும் என்பதே.  தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!! தமிழ்  எங்கள் மூச்சு!!! என்று மூச்சுக்கு முன்னூறு தரம் கூறிக் கொள்ளும் இவர்கள் உண்மையில் தமிழர்களா? தமிழ் அபிமானிகளா? அல்லது தமிழினத்தை வேரறுக்கக் காத்திருக்கும் கயவர்களா? என்பதைக் கண்டறியும் உபாயமே இப்பரிசோதனை.

தமிழபிமானியை சோதிக்கும் வழி:

  • அறிவியல் சாஸ்திரங்களை தமிழ் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்பவனாக இருக்கிறானா?
  • தமிழனாகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபைகளிலும், தமிழராகப் பிறந்தோர் ஒருவருக்கொருவர் பேசும்போதும், இதர பாஷைகள் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவனாக இருக்கிறானா?
  • தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர் தோன்றும்படி செய்கிறானா?

-நான்காவதாக மிக முக்கியமான இறுதி பரிசோதனை ஒன்றைக் கூறுகிறார் பாரதி:

  • ஹிந்து தர்மத்தை கடைபிடித்து நிற்கிறானா?

மேற்கண்ட இந்நான்கு சோதனை கேள்விகளுக்கும்  “ஆம்”* என்ற பதில் நமக்கு கிடைத்தால் அவனை உண்மையான தமிழன் நேர்மையான தமிழபிமானி என்று கொள்ளலாம் என்கிறார் பாரதியார்.

மேலும் அவர் கூறுகிறார்…..

“தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான். தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய்மொழியிலும், திருக்குறளிலும், கம்ப ராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை” என்கிறார்.

மேலும், “மேற்படி நூல்களை நன்றாக உணர்ந்தவன் ஹிந்து தர்மத்தாலேயே இந்த உலகம் நிலைபெற்று நிற்கும் என்பதை அறிவான். ஸர்வ தர்மங்களுக்கும் ஹிந்து தர்மமே வழிகாட்டி என்பதை காண்பான். ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்தினால் இத்தேசத்தார் அனைவருக்கும் நல்ல காலம் பிறக்கும். ஆதேசம் (தெய்வக் கட்டளை) சொல்கிறது:- “வேத வழியே வழி. வேறு வழியில்லை”

-என்று சொல்கிறார் மகாகவி பாரதியார்.

தமிழ், தமிழ் என்று கூவி தமிழினத்தையே வேரறுத்த கயவர்களை, திருக்குறளை ‘தங்கத் தட்டிலே வைக்கப்பட்ட மலம்’ என்று சொன்னவர்களை, கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிலிட்டு எரிக்க முற்பட்டவர்களையெல்லாம் யார் எனத் தெரிந்துகொள்ள மேற்கூறிய சோதனை அம்சங்களைக் கைக்கொண்டு பரிசோதித்தால், அவர்களெல்லாம் யார் யார் என நாம் தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் பின்னால் மதிமயங்கிச் சென்றால் பேரிழப்பு நம்மினத்திற்கே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

உலகத்தின் உச்ச ஸ்தானத்தில் இருக்கும் நமது தேசத்தில் தோன்றிய சநாதன தர்மத்தை நம்தேசத்தாரே கைவிடும் செயல் எவ்வாறு இருக்கிறது என்றால்  ‘மரத்தின் மேல் நுனிக் கிளையில் இருந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவது போல்’ உள்ளது. சநாதனத்தை அழிப்பேன் என்று சொல்வது நம்மை நாமே அழித்து விடுவதற்கு சமானம்.

தொழிலன்றி இருப்போருக்குள்ளே தான் கம்யூனிசக் கொள்கைகள் வேகமாகப் பரவி வருகின்றன. அதேபோல தேசியக் கல்வி இல்லாத சமுதாயத்தில் தான் அத்தேசத்திற்கு எதிரான கருத்து மேலோங்குகிறது. “ஒரு நாட்டில் உள்ள சகல விதமான குறைகளுக்கும் புத்திக் குறைவே ஆதாரம். இது சரியான கல்வியை போதிப்பது தவறியதால் வந்தக் குறைவு” என பாரதியார் கூறி இத்தீங்கினை நீக்குவதற்கு ஓர் அருமருந்தாகிய  ‘தேசியக் கல்வி’ என்ற உபாயமும்  சொல்கிறார். இக்குறையை நீக்குவதில் நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. இப்பெருமுயற்சியில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடுதல் மிகவும் அவசியம். 

ஸ்ருதிக்கும் ஸ்ம்ருதிக்கும் வேறுபாடு தெரியாததால் வந்த விளைவு. புராணத்திற்கும் வரலாற்றிற்கும் வேறுபாடு தெரியாததால் வந்த விளைவு. பழக்கவழக்கத்திற்கும் கலாச்சார பண்பாட்டிற்கும் வேறுபாடு தெரியாததால் வந்த விளைவு தான் சநாதன தர்ம ஒழிப்பு என்ற உளறல்.

பழக்கவழக்கங்கள் வீட்டிற்கு வீடு, இனத்திற்கு இனம், தேசத்திற்கு தேசம் மாறுபாடு உடையன, மாறுதலுக்கும் உள்ளாவன. ஆனால் கலாச்சாரப் பண்பாடு பொருத்தவரையில் உலகம் முழுவதும் இரண்டு வகையினர் தான் இருக்க முடியும்.  ஒன்று, கலாச்சாரப் பண்பாடு உடையவர்கள், இரண்டு கலாச்சார பண்பாடு அற்றவர்கள். இதைத் தெரிந்து கொள்ளாமல் விருப்பு வெறுப்பு அரசியலை வளர்த்தெடுப்பவர்களால் இன்று நம் தமிழ் சமுதாயத்திற்கு, நல்லது எதிலும் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பகை நெருப்பு எரிந்தால் தான் தங்களால் குளிர் காய முடியும் என்று நினைப்போரின் செயலை முறியடிக்க  ‘தேசியக் கல்வி’ என்ற ஒரு ஆயுதமே போதும். 

தம் வீட்டைத் தானே தீ மூட்டுபவன் முட்டாள் அன்றோ? தமிழினமே விழித்துக் கொள். உன் பொக்கிஷங்களை இனியாவது பாதுகாத்துக் கொள். பாசாங்கு நடிப்பு, போலிப் பாவனைகள், ஏமாற்றுத்தனம், வஞ்சனை, மோசடி, நம்பிக்கை வறட்சி இவற்றிற்கெல்லாம் நாமே காரணம். செய்யாத ஒன்று நமக்கு வராது. ஒழிக்க வேண்டியன ஒழித்து செய்ய வேண்டியன செய்வது அறிவுடையோரின் செயல். அகில் கள்ளி வயிற்றில் பிறந்தது என்று இகழப்படுவதில்லை. ஆகையால் நம் தேசத்தில் பிறந்த அரிய பொக்கிஷமான உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றதான இந்த சநாதன தர்மத்தை ஒருக்காலும் கைவிட்டு விடாதே!. நல்ல மாம்பழச் சாற்றினை அதன் சுவையை சுவைத்தறியாது வீணே கடலுக்குள் ஊற்றுவது போன்ற அறிவற்ற செயலினை மறந்தும் செய்து விடாதே!

நெல்லைப் பயிரிடும் போது அதன் வலிமையால் அதனுடன் முளைக்கும் சிறு புல் தானே அழிந்து போகும். அதேபோல் தமிழினமே,  உன் புத்தி வலிமையால் எழுந்து நின்று சிறு புல்லறிவு படைத்தோரை எழவிடாமல் செய்வீர்களாக!

வாழ்க தமிழர் இனம்! வளர்க தமிழர்தம் சநாதன அறம்! வெல்க பாரதமணித்  திருநாடு!

$$$

Leave a comment