-ராம் மாதவ்

அண்மையில் (24.05.2026) லட்சக்கணக்கான பழங்குடியினர் புதுதில்லியில் குவிந்தனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150 ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் கூடினர் . சுமார் 500 மாவட்டங்களில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பேரணி, மாநாட்டில் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்ட பழங்குடியினரை ‘பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ , மதம் மாறியவர்களுக்கு பழங்குடியினர் ‘சலுகைகள் கொடுக்கக் கூடாது’ என்று அவர்கள் கோரினர். இதற்காக அரசமைப்பு சட்டம் 342 பிரிவை திருத்தம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன்முதலில் எழுப்பினார்.
‘கிறிஸ்தவ மதத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாறிய பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய மரபுகளைப் பின்பற்றுவதில்லை. எனவே அவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ என்று அவர் வாதித்தார். அரசமைப்பு சட்டப்பிரிவு 342 துணை பிரிவு 3 இல் திருத்தம் செய்ய வேண்டும் என்று 235 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் இந்திரா காந்தியிடமும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடமும் சமர்ப்பித்தார். தங்கள் பழங்குடி மரபுகளைக் கைவிட்டு கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை பழங்குடியினராக கருதக்கூடாது என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக, இந்திரா அம்மையார் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. எனவே பிரச்சினை தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டது. பழங்குடியினரின் மரபுகளையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான உருவான ‘ஜனஜாதி சுரக்ஷா மன்ச்’ என்ற அமைப்பு கடந்த இரண்டு தசாப்தங்களாக கார்த்திக் ஓரானின் கோரிக்கையை முன்னெடுத்து வருகிறது. தில்லியில் நடந்த பேரணியும் அந்த அமைப்பினால்தான் திரட்டப்பட்டது.
ஓரான் வெளிநாட்டில் படித்த வெகு சில பழங்குடியினரில் ஒருவர். இந்திரா அம்மையாரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். அவர் இந்த சிக்கலான விஷயத்தை ஆழ்ந்து அலசி உள்ளார். மதம் மாறிய 10 சதவீதத்தினர் பழங்குடியினருக்கான சலுகைகளில் எழுபது சதவீதம் அனுபவிக்கின்றனர். 90 சதவீதத்தினருக்கு வெறும் முப்பது சதவீதம் தான் கிடைக்கிறது. அதனால் 90 சதவீதத்தினர் ஏழ்மையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் பழங்குடி பண்பாட்டு பின்பற்றுகிறார்கள்.
கடந்த பல தசாப்தங்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளது. இன்று சுமார் 20 சதவீதத்தினர் மதம் மாறி உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மதம் மாறியவர்கள் பழங்குடியினருக்கான சலுகைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான சலுகைகள் இரண்டையும் அனுபவிப்பதால் மதம் மாறாதவர்களிடையே இது அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினையின் வேர்கள் அரசமைப்பு சட்டத்தில் உள்ளன. பிரிட்டிஷ்காரர்கள் 1936 இல் இந்திய அரசு (பட்டியலின மக்கள்) ஆணையை அறிவித்தனர். மக்கள்தொகை கணக்கீட்டு ஆணையராக இருந்த டாக்டர் ஜே.எச். ஹட்டன் என்பவர் ஜாதிகளின் பட்டியலைத் தயாரித்து அளித்திருந்தார். பிரிட்டிஷ் அரசின் ஆணை ‘கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களை பட்டியல் இனத்தவர்களாகக் கருத முடியாது’ என்று தெளிவாக வரையறுத்து விட்டது.
1950 இல் இந்திய அரசமைப்பு உருவானபோது பட்டியலினத்தார்க்கும் பழங்குடியினருக்கும் தனித்தனியாக இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. பட்டியலினத்தவருக்கான சட்டத்தில் , 1936 அரசாணையைப் பின்பற்றி, ஹிந்துயிசத்தைத் தவிர வேறு சமயத்தைப் பின்பற்றுவர்களை பட்டியலினத்தவராகக் கருத முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியது. துரதிர்ஷ்டவசமாக, அதே நேரத்தில் இயற்றப்பட்ட பழங்குடியினர் சட்டத்தில் இந்த விஷயம் தெளிவாக இல்லை. இதனால் பழங்குடியினர் இடையே அதிருப்தி ஏற்பட்டது.
2010 இல் இந்திய ஜனாதிபதியாக இருந்த திருமதி பிரதீபா பாட்டீலிடம் மூத்த பழங்குடி தலைவர்கள் மனு சமர்ப்பித்தனர். அதில் 26,253 பழங்குடி கிராமங்களில் இருந்து 27.67 லட்சம் பழங்குடியினர் கையெழுத்திட்டிருந்தனர். மதம் மாறியவர்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். சலுகைகள் கொடுக்கக் கூடாது என்று அந்த மனுவில் கேட்டிருந்தனர்.
மதம் மாறிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரச்சினை குறித்து பலமுறை உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் சட்டம் தெளிவாக இருந்ததால் நீதிமன்றங்கள் பட்டியல் இனத்தவர் சலுகைகளை ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினரைத் தவிர மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று உறுதிப்படத் தெரிவித்து விட்டன. பழங்குடியினருக்கான சட்ட வரைவு தெளிவாக இல்லாததால் நீதிமன்றங்கள் உறுதியான தீர்ப்பை வழங்காமல் ஆலோசனையாகச் சொல்லி வந்தன.
2004 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ‘மதம் மாறியதாலேயே ஒருவர் பழங்குடியினர் அந்தஸ்தை இழந்து விடுவார் என்று உறுதியாகக் கூற முடியாது. ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரித்து அததற்கு ஏற்பவே தீர்ப்பு சொல்ல வேண்டும். ஒருவர் மதம் மாறியதால் தன்னுடைய பழங்குடி மரபுகளை கைவிட்டு விட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும்’ என்று சொல்லி உள்ளது.
ஹிந்து, புத்த, சீக்கிய சமயத்திற்கு வேறான மதங்களைச் சார்ந்தவர்களை பட்டியலினத்தவர்களாகக் கருத முடியாது என்று தெளிவாக வரையறுத்தது போல, பழங்குடியினருக்கும் திட்டவட்டமான வரையறை தேவை என்பதே பிரச்சினையின் மையக் கரு. 1950 இல் இந்திய அரசியல் பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஜாதிகளின் பட்டியலை மறுபரிசீலனை செய்ய ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்தது. அந்தக் குழு ‘ஹிந்து அல்லாதவர்களை பட்டியலினத்தவராகக் கருத முடியாது’ என்று கூறியது. அதேவேளையில் பழங்குடியினரைப் பொருத்த வரையில் அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து தான் பழங்குடியினரா இல்லையா என்று கூற முடியும் என்ற தெளிவற்ற பதிலைக் கூறியது.
ஆனாலும் 1965 – 66 இல் நீதிபதி பி.பி. லோகூர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலைத் தயாரிக்க பரந்த அளவிலான வரையறையைச் சொல்லியுள்ளது. “பழங்குடியினருக்கான பழக்க வழக்கங்கள், அவர்களுக்கே உரிய கலாச்சாரம், புவியியல் ரீதியாக தனித்து இருப்பது, மற்ற சமூகத்தினருடன் பழகக் கூச்சப்படுவது, பின் தங்கிய சமூகநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்குடியினரை வகைப்படுத்தலாம்” என்று லோகூர் குழு கூறியது.
லோகூர் குழு பரிந்துரைகள், கார்த்திக் ஓரானின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு பழங்குடியினரின் பாரம்பரிய நம்பிக்கைகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சடங்குகள், மரபுகளைக் கருத்தில் கொண்டு, பழங்குடியினரை அடையாளம் கண்டு பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இவற்றைக் கைவிட்டு விட்டு, வேறு மதத்திற்குச் சென்றவர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும். இது எந்த மதத்திற்கோ மதமாற்றத்திற்கோ எதிரானது அல்ல. மதம் மாறிய பட்டியலின, பழங்குடியினருக்கு சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய பழங்குடியினர் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
இந்திய அரசமைப்பு பாரம்பரியமான பழங்குடியினருக்கு சட்டபூர்வமாக வழங்கியுள்ள உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. அவர்களது தனித்துவமான கலாச்சாரம், சமய அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த கோரிக்கைகளின் சாரமான விஷயம்.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (29.05.2026) – Ram Madhav writes: Should converted tribals retain reservation benefits? The debate is on
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
- குறிப்பு: கட்டுரையாளர் தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேஷனின் தலைவர்.
$$$