-வ.மு.முரளி
‘வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதி. அதனை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றனர். பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் நின்றபடி, நம் நாட்டையே அளந்து கொண்டிருக்கிறது இஸ்ரோவின் ‘இஓஎஸ்-05’ செயற்கைக்கோள். இதற்கு 'வானத்தின் கண்' என இஸ்ரோ செல்லப்பெயர் சூட்டியுள்ளது. எங்கிருந்தோ நம்மைக் கண்காணிக்கும் இந்தக் கண்கள் சாமானியமானவை அல்ல!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் ஒரு மகத்தான சாதனையைச் செய்திருக்கிறது. அதிநவீன புவி படப்பிடிப்பு செயற்கைக்கோளை வானில் நிலைநிறுத்தி இருப்பதன் மூலமாக, நமது நாட்டின் பகுதிகளை ஒவ்வொரு நிமிடமும் படம் பிடித்துக் கண்காணிக்க இஸ்ரோ ஏற்பாடு செய்திருக்கிறது. அதுவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இதனை நமது விஞ்ஞானிகள் சாதித்திருக்கிறார்கள்.
1969இல் தொடங்கிய இஸ்ரோவின் பயணம், சாதனைச் சிகரங்களை அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை. நிறுவனரான விஞ்ஞானி விக்ரம் சாராபாய் முதல் இன்றைய இஸ்ரோ தலைவர் நாராயணன் வரை எண்ணற்ற இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த அளப்பரிய சாதனைகளின் பின்னணியில் உள்ளன.
கடந்த 2026 செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு இந்தச் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி., எஃப்.17 ராக்கெட் விண்ணைச் சாடியது. இந்த ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும், 420.5 டன் எடையும் கொண்டது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் மேல் நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘கிரையோஜெனிக்’ தொழில்நுட்பம் என்பது திட நிலையிலுள்ள எரிபொருளைக் கொண்டு இயங்குவதாகும். இத்தொழில்நுட்பத்தை நமக்கு அளிக்க வல்லரசு நாடுகள் மறுத்த நிலையில், ரஷ்ய உதவியுடன் இத்னை உள்நாட்டிலேயே உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதித்தனர். அதன் தொடர்ச்சியாக இதுவரை இஸ்ரோவால் 19 ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் ஏவப்பட்டுள்ளன.

‘ஜியோ சிங்க்ரோனஸ் லாஞ்சிங் வெஹிகிள்’ என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட், புவி ஒத்திசைவு சுற்றுப்பாதை வரை செயற்கைக்கோளைக் கொண்டுசெல்லும் திறன் படைத்தது. பூமியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில், ராக்கெட்டுடன் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளை தனியே பிரித்து நிலைநிறுத்துவது மற்றொரு சவாலான பணி. இதனையும் நமது விஞ்ஞானிகள் மிகவும் துல்லியமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான 'இஓஎஸ்-05'-ஐ சுமந்தபடி 'ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரோவின் மற்றொரு சிறப்பான சாதனை மற்றும் நாட்டின் பெருமைக்குரிய தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் பல புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்பட்டு வந்தாலும், அவை தாழ் புவி சுற்றுப்பாதையில் (எல்.இ.ஓ.) இயங்கி வருபவை. எனவே, பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவை அவற்றால் படம் பிடித்து அனுப்ப முடியும். மாறாக, தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘இ.ஓ.எஸ்-05’ செயற்கைக்கோளானது, புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில், அதிகமான உயரத்தில், புவியின் திசைவேகத்துடன் இணையும் புள்ளியில் நிறுவப்பட்டுள்ளது. அதாவது இந்த செயற்கைக்கோள் பூமியின் சுழற்சி வேகத்துக்கு இணையாகச் செயல்படும். எனவே, இந்த செயற்கைக்கோளால் ஒவ்வொரு நிமிடமும் இந்தியாவையும் அண்டை நாடுகளையும் படம் பிடித்து அனுப்ப முடியும். இதனை ‘நிகழ்நேரக் கண்காணிப்புத் திறன்’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அது மட்டுமல்ல, இதுவரை விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே 2,369 கி.கி. எடையிலான இந்தச் செயற்கைக் கோள் தான் அதிக எடை கொண்டதாகும். இதற்கு முன்னர் ஜிஎஸ்எல்வி–டி1 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 1,536 கி.கி. எடையுள்ள செயற்கைக் கோளையே 2001இல் இஸ்ரோ அனுப்பியிருந்தது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட 107வது செயற்கைக்கோள் இதுவாகும். விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட ராக்கெட், 18 நிமிடங்கள் 34 வினாடிகள் பயணித்த நிலையில், தனது மூன்று நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்து, செயற்கைக்கோளைப் பிரித்தது. 14.09.26 அதிகாலை 3:14 மணியளவில், 19.8 டிகிரி சாய்வுடன், பூமியில் இருந்து சுமார் 36,000 கி.மீ., உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் இ.ஓ.எஸ்.-05 நிலைநிறுத்தப்பட்டது.
இதில், ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல்’ எனும் சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் 30 நிமிட இடைவெளியில் துல்லியமான நிகழ்நேரப் படங்களை சிறப்பான தரத்தில் தொடர்ந்து வழங்கும் திறன் படைத்தவை.
வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிக்கவும், விரைவாக மீட்புப் பணிகளைத் திட்டமிடவும் இது உதவும். காலநிலை மாறுபாடு, விவசாயம் மற்றும் வானிலைக் கணிப்புகளுக்கும் இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ராணுவப் பாதுகாப்பு விஷயங்களிலும் இந்தச் செயற்கைக்கோள் மிகவும் வியூக ரீதியிலானது. மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள், இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக, இந்தியாவையும் எல்லையை ஒட்டிய அண்டை நாடுகளையும் கண்காணிக்கும்.

இதன் பணிக் காலம் 7 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், 10 ஆண்டுகள் வரை பணியாற்றும் வகையில், மிகவும் சக்தி வாய்ந்த 2,280 வாட்ஸ் ‘சோலார் பேனல்’கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட இதன் முந்தைய வடிவமான ‘ஜிசாட்-1’ (இஓஎஸ்-03) செயற்கைக்கோள், ராக்கெட்டின் கிரையோஜெனிக் அடுக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுப்பாதையை அடையாமல் தோல்வியடைந்தது.
கடந்த ஜனவரி 12-இல் பிஎஸ்எல்வி- சி62 ராக்கெட், 16 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டபோதும், உடன் அனுப்பிய செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.
இஸ்ரோவின் இவ்விரு தற்காலிகத் தோல்விகளைக் கண்டு உள்நாட்டிலேயே குதூகலித்த துரோகிகள் உண்டு. ஆனால், இந்த இரு தோல்விகளாலும் நமது விஞ்ஞானிகள் சோர்வடையவில்லை. தற்போது, தோல்விகளை ஆராய்ந்து சரிசெய்து, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த ஜிசாட்-1ஏ திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது.
மேலும் 6 ராக்கெட்கள் ஏவப்படும்! -இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் இஸ்ரோவின் சாதனை வெற்றி குறித்து அதன் தலைவர் வி. நாராயணன் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி –எஃப்17 வாகனம், மேம்பட்ட இஓஎஸ்-05 புவி படமெடுக்கும் செயற்கைக்கோளை திட்டமிடப்பட்டபடி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகவும் துல்லியமாகவும் நிலைநிறுத்தியுள்ளது. ஜி.எஸ்.எல்.வி., - டி 1 ராக்கெட்டின் வாயிலாக, 1,536 கிலோ எடை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி, தன் முதல் சாதனையை 2001இல் இஸ்ரோ படைத்தது. தற்போது, இயந்திரக் கட்டமைப்பு மேம்பாட்டின் வாயிலாக, 2,367 கிலோ எடையை விண்ணில் செலுத்தி, மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. புவி சுற்றுப்பாதையில், இந்த இ.ஒ.எஸ். - 05 செயற்கைக்கோள் முழுமையாக இயங்கத் தொடங்கும்போது, இந்தியாவின் முதல் நிகழ்நேரத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட படம் பிடிக்கும் செயற்கைக்கோளாக, தரவுகளை அளித்து பெருமை சேர்க்கும். தற்போது, செயற்கைக்கோளின் அனைத்து அமைப்புகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன. வரும் நாட்களில், அதன் சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டு, துல்லியமான இடத்தில் நிலைநிறுத்தப்படும். இந்த வெற்றி, இஸ்ரோ குழுவினர், தொழில் துறை அங்கத்தினர் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டான உழைப்பிற்கும், இஸ்ரோவின் வெளிப்படையான பணிக் கலாசாரத்திற்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் இஸ்ரோ, இந்த நிதியாண்டில், மேலும் ஆறு ராக்கெட்களை ஏவத் தயாராக உள்ளது. இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான, 'ககன்யான்' திட்டத்திற்காக கடுமையாகவும், அர்ப்பணிப்புடனும் உழைக்கிறோம். அதற்கு முன், மூன்று மனிதரில்லா விண்வெளிப் பயணங்களை சாத்தியமாக்கும் பணி உள்ளது. இந்த ஆண்டுக்குள், அதன் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அடுத்ததாக, 'நேவிகேஷன்' எனும், வழிசெலுத்தல் செயற்கைக்கோளான என்விஎஸ் - 03 ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில், மூன்றாவது ஏவுதளத்தை தயார்படுத்தி வருகிறோம். அதேபோல, தமிழகத்தின் குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தயாராகி விடும். பிரதமர் மோடியின் விண்வெளி சீர்திருத்தக் கொள்கையால், 440 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் வந்துள்ளன. இந்தக் கொள்கை, நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியளித்துள்ளது, என்றார்.
கடந்த 7 மாதங்களாக இஸ்ரோ எந்தவொரு செயற்கைக்கோளையும் ஏவாமல் தற்காலிக இடைவெளி விட்டிருந்தது. இந்த ஏவுதலின் மூலம் தனது விண்வெளிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. தோல்விகளை படிக்கட்டுகளாக்கும் வித்தகம் நமது விஞ்ஞானிகளின் வெற்றியால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
‘வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதி. அதனை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றனர். பூமியில் இருந்து 36,000 கி.மீ உயரத்தில் நின்றபடி, நம் நாட்டையே அளந்து கொண்டிருக்கிறது இஸ்ரோவின் ‘இஓஎஸ்-05’ செயற்கைக்கோள். இதற்கு ‘வானத்தின் கண்’ என இஸ்ரோ செல்லப்பெயர் சூட்டியுள்ளது. எங்கிருந்தோ நம்மைக் கண்காணிக்கும் இந்தக் கண்கள் சாமானியமானவை அல்ல!
- நன்றி: விஜயபாரதம்
$$$