திராவிட இயக்க வரலாறு: பகுதி -6

-தஞ்சை வெ.கோபாலன்

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி, அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 6…

6. இரு பல்கலைக்கழகங்கள் உதயம்

நீதிக்கட்சியின் தமிழ் மற்றும் தெலுங்கு உறுப்பினர்களிடையே நிலவிய போட்டி இரு பல்கலைக்கழகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. கட்சி  தொடங்கப்பட்ட நாட்களிலிருந்து நிலவிய இப்போட்டி, முதல் நீதிக்கட்சி அரசில் தெலுங்கு உறுப்பினர்கள் மட்டும் அமைச்சர்களானதால் மேலும் அதிகமானது. ஆந்திரப் பல்கலைக்கழகம் அமைக்க நீண்ட நாட்களாக  தெலுங்கு தலைவர்கள் கொண்டா வெங்கடபய்யா, பட்டாபி சீதாராமையாஆகியோர் வேண்டி வந்தனர். 1921 இல் நீதிக்கட்சி அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற ஒரு முன்மொழிவைத் தயார் செய்தது.

சி. நடேச முதலியார் இதனை எதிர்த்தார். ஆந்திரம் / ஆந்திரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றை வரையறுப்பது கடினமென தமிழ் உறுப்பினர் வாதிட்டனர். அதிருப்தி கொண்டிருந்த ஜே.என்.ராமநாதன், ராமநாதபுர அரசர் ராஜேசுவர சேதுபதி ஆகியோரை திருப்திப்படுத்த தியாகராய செட்டி தமிழரான டி.என்.சிவஞானம் பிள்ளையை அமைச்சராக்கினார். இதற்குப் பிரதிபலனாக ஆந்திரப் பல்கலைக்கழக சட்டம் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் நவம்பர் 6, 1925 இல் நிறைவேற்றப்பட்டது.

1926 இல் ஆந்திரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு சி.ஆர்.ரெட்டி அதன் முதல் துணை வேந்தரானார். இதனால் தமிழர்களுக்காக தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. சென்னை பல்கலைக் கழகத்தில் பிராமணர்  அதிகம் இருப்பதால் பிராமணரல்லாதோருக்கு அங்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மார்ச் 22, 1926 இல் சிவஞானம் பிள்ளையின் தலைமையில் தமிழ் பல்கலைக்கழகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பலனாக 1929 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்குப் பெரிய தொகை ஒன்றை உதவித்தொகையாக வழங்கிய  செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரின் பெயர் அதற்கு இடப்பட்டது.

நீதிக்கட்சியின் இரண்டாவது முதல்வர் பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் சென்னை நகரின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக தற்போதைய தியாகராய நகர் பகுதி உருவாக்கப்பட்டது. பனகல் அரசரின் அரசு நகரின் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்குப் போதிய குடியிருப்பு வசதிகள் செய்து தரச் செப்டம்பர் 7, 1920 அன்று சென்னை நகரத் திட்டச் சட்டத்தை நிறைவேற்றியது.  5 கி.மீ. நீளமும் 2 கி.மீ. அகலமும் உடைய  ‘நெடுங்குளம்’என்ற நீர்நிலை அக்காலத்தில் நகரத்தின் மேற்கு எல்லையில் நுங்கம்பாக்கம் முதல் சைதாப்பேட்டை வரை நீண்டிருந்தது. 1923 இல் இந்நீர்நிலை நீரகற்றப்பட்டு மேடாக்கப்பட்டது. 1911 இல் நெடுங்குளத்துக்கு மேற்கே பிரிட்டிஷ் அரசு மாம்பலம் கிராமத்தில் ஒரு  பேருந்து நிலையத்தைக் கட்டியிருந்தது. பனகல் அரசர் 1923 இல் அதன் அருகே ஒரு குடியிருப்புப் பகுதியை உருவாக்கினார். அதற்கு  தியாகராய செட்டியின் நினைவாக  ‘தியாகராய நகர்’ (அல்லது தி.நகர்) என்று பெயரிட்டார். பனகல் பூங்கா என்ற பூங்காவைச் சுற்றி தி.நகர் அமைக்கப்பட்டது. இப்புதிய பகுதியின் சாலைகளுக்கும் பிற பகுதிகளுக்கும் நீதிக்கட்சி பிரமுகர்களின் பெயர்கள் இடப்பட்டன. (கான் பகதூர் முஹம்மது உஸ்மான், முகமது ஹபிபுல்லா, ஓ.தணிகாசலம் செட்டியார், நடேச முதலியார், டபிள்யூ.பி.ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் ஆகியோர் இதில் அடக்கம்). இவர்கள் பெயரிலுள்ள தெருக்கள் இப்போதும் இருக்கின்றன. அவை உஸ்மான் ரோடு, ஹபிபுல்லா ரோடு, தணிகாசலம் தெரு, நடேசன் தெரு ஆகியவை.

நீதிக்கட்சி அரசுகள் பல குடிசை மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளையும். பொதுக் குளியலிடங்களையும் கட்டின. 1924 இல் ஆயுர்வேதம், சித்த, யுனானி மருத்துவ முறைகளை ஆராய்ந்து பரப்ப இந்திய மருத்துவப் பள்ளியை நீதிக்கட்சி அரசு நிறுவியது.

நீதிக்கட்சி சென்னை மாகாணத்தின் முன்னணி பிராமணரல்லாதோர் அரசியல் அமைப்பாகச் செயல்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி முதலே பிராமணரல்லாதோர் இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும், நீதிக்கட்சியே முதல் பிராமணரல்லாதோர் அரசியல் இயக்கமாகும். இரட்டை ஆட்சி முறையின்போது அது நிர்வாகத்தில் பங்கேற்றமை, சென்னை மாகாணத்தின் படித்த மேல் ஜாதி மக்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் 1967 முதல் தொடர்ச்சியாக தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தற்கால திராவிட கட்சிகளின் அரசியல் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.

பிராமணர் குறித்த நிலைப்பாடு

பிராமணரல்லாதோருக்கான அரசியல் அமைப்பாகவே நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் அது பிராமணர்கள் உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. ஆனால் ஐரோப்பியர் போன்ற பிற வகுப்பினர்களைப் போலவே பிராமணர்களும் பார்வையாளர்களாக கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  1926 தேர்தல் தோல்விக்குப் பின்னர் இக்கொள்கையைக் கைவிட்டு அனைத்துத் தரப்பினரையும் கட்சி அனுமதிக்க வேண்டும் என்றும் தேசியவாத நிலையை எடுக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் இக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு (குறிப்பாக ஈ. வே. ராமசாமியின் ஆதரவாளர்களிடமிருந்து) இருந்தது.

1929 இல் நடைபெற்ற ஒரு மும்முனைக் கூட்டத்தில் (நீதிக்கட்சி தவிர மேலும் இரு காங்கிரசல்லாத குழுக்கள்) பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையை நீக்க ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது. அக்டோபர் 1929 இல் நெல்லூரில் நடைபெற்ற கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் கட்சி செயற்குழு இதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது.  அதனை ஆதரித்து முனுசாமி நாயுடு பின்வருமாறு பேசினார்:

“ஒரு குறிப்பிட்ட சாதியினரை நாம் தடை செய்யும் வரை, மாகாணத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளாக நாம் நம்மைக் கருத முடியாது. நாம் எதிர்பார்ப்பது போல அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு மாகாணங்களுக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டால், நாம் அனைத்து சாதிகளுக்காகப் பேசும் அமைப்பாக மாறும் நிலையில் இருக்க வேண்டும். நமது அமைப்பின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பிராமணர்களை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம்?  ஒரு வேளை நாம் தடையை நீக்கினாலும் கூட பிராமணர்கள் நம் அமைப்பில் சேராது போகலாம். ஆனால் அதற்குபின் நாம் அவர்களைச் சேர விடாது செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு இராது.”

முன்னாள் கல்வி அமைச்சர் ஏ. பி. பாட்ரோ, நாயுடுவின் கருத்தை ஆதரித்தார். ஆனால் இத்தீர்மானம் ஈ.வே.ராமசாமியாலும் ஆர்.கே.சண்முகம் செட்டியாராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் தோல்வியடைந்தது. பிராமணர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பதை எதிர்த்துப் பேசிய ராமசாமியின் கருத்து:  பிராமணர்களது செயல்பாட்டால் கோபம் கொண்ட பிராமணரல்லாதோர் அதிக அளவில் மெல்ல நீதிக்கட்சியின் பக்கம் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் பிராமணர்களைக் கட்சி உறுப்பினர்களாக அனுமதிப்பது முட்டாள்தனம்.”

அக்டோபர் 1934 வரை நீதிக்கட்சியில் பிராமணர் உறுப்பினராக இருந்த தடை நீடித்தது. . நீதிக்கட்சியின் செயல்பாடுகள் நடப்பில் இருந்த சமூக அடுக்கமைப்பைக் குலைத்ததுடன் பிராமணர் – பிராமணரல்லாதோர் இடையே நிலவிய வெறுப்பினை அதிகரித்தது.

தேசியவாதம்

நீதிக்கட்சி, பிரிட்டிஷ் பேரரசுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. தனது ஆரம்ப நாட்களில் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்தது. இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்துக்கும் உறுப்பினர்களை அனுப்பவில்லை. 1916–20 காலகட்டத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு பெற்று அரசியல் முறையில் பங்கேற்பதில் தனது கவனத்தைச் செலுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தின்போது  ‘மெட்ராஸ் மெயில்’ போன்ற ஐரோப்பிய ஆதரவு இதழ்களுடன் இணைந்து காந்தியடிகளையும் தேசியவாதிகளையும் கடுமையாக எதிர்த்தும் சாடியும் வந்தது.

ஆனால் 1920 களின் நடுப்பகுதியில் தேசியவாதக் கொள்கைகளைத் தனதாக்கத் தொடங்கியது. காதி மற்றும் சுதேசி இயக்கங்களுக்கு தாங்கள் காட்டிய எதிர்ப்பைக் கைவிட்டு ஆதரவளிக்கத் தொடங்கியது. 1925 இல் கட்சி வருடாந்திர மாநாட்டில் உள்ளூர் தொழிற் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் இயற்றியது. இந்த மாற்றம் சென்னை மாகாணத்தில் அதிகரித்து வந்த சுயாட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் செல்வாக்குடன் போட்டி போட நீதிக்கட்சிக்கு உதவியது. 

‘சுயாட்சி’ என்ற சொல் நீதிக்கட்சியின் சட்ட அமைப்பிலும் சேர்க்கப்பட்டது. கட்சியின் சென்னைப் பிரிவு சி.ஆர்.ரெட்டியால் இம்மாற்றம் ஏற்பட்டது. நீதிக்கட்சியைப் பொருத்த வரை சுயாட்சி என்பது முழு விடுதலை அல்ல; பிரிட்டிஷ் அரசின் மேற்பார்வையின் கீழ் பகுதி தன்னாட்சி உரிமை பெறுவதே. அதன் சட்ட அமைப்பில்“அமைதியான சட்டத்துக்கு உட்பட்ட முறையில் முயன்று விரைவில் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு தன்னாட்சி பெற [முயல வேண்டும்]”  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜாலியன்வாலா பாக் படுகொலையை நீதிக்கட்சி கண்டித்ததா என்பது பற்றித் தெளிவான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. வரலாற்றாளர்களிடையே இதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தேசியவாதக் கொள்கையை நோக்கி 1920 களில் தொடங்கிய கட்சியின் பயணம் 1930 களில் முனுசாமி நாயுடு மற்றும் பொப்பிலி அரசரின் தலைமையில் தடைபட்டது. 

சட்டமறுப்பு இயக்கத்தின்போது பிரித்தானிய அரசின் கடுமையான நடவடிக்கைகளை நீதிக்கட்சி அரசுகள் கண்டிக்கவில்லை. ஆனால் நாடெங்கும் தேசியவாத உணர்ச்சிகள் மிகுந்ததால், காங்கிரசு உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிப் பெறுவதைக் கண்டபின்னால், 1934 இல் மீண்டும் நீதிக்கட்சி தேசியவாதக் கொள்கைகளைக் கையில் எடுத்தது. காங்கிரசின் செல்வாக்கை எதிர்கொள்ள ஈ.வே.ராமசாமி மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் உதவியை நாடியது. 1930களில் நீதிக்கட்சியிலிருந்து தூரச் சென்ற ராமசாமி, அக்கட்சி தனது சோசலிசக் கருத்துகள் நிறைந்த ஈரோட்டு செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்டவுடன் மீண்டும் அதனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இப்புதிய திட்டத்தில் மதுவிலக்கு போன்ற காங்கிரசின் கொள்கைகளும் இடம் பெற்றிருந்தன.

(தொடர்கிறது)

$$$

Leave a comment