-வ.மு.முரளி

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், அடையாறு பகுதியில், சர்தார் வல்லபபாய் படேல் சாலையில் அமைந்துள்ள நினைவகங்களும் மணிமண்டபங்களும், தலைவர்களின் சிலைகளும் பார்க்க ஆளின்றி, பராமரிக்க அக்கறையின்றி பரிதாப நிலையில் இருக்கின்றன.
நாம் இன்று சுகமாக வாழ்வதற்காக தமது வாழ்க்கையையே ஒப்படைத்த தியாகியரின் போராட்டங்கள் தான் நமது வரலாறு. சுய வரலாற்றை அறியாத பேதைகளால் எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல வரலாற்றை உருவாக்கிச் செல்ல முடியாது. எனவேதான் ஒவ்வொரு நாடும், சுதந்திரத்திற்காகவும் பண்பாட்டைக் காக்கவும் சமூக விடுதலைக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் சிலைகளை நிறுவி, அவர்களின் நினைவிடங்களைப் பாதுகாத்து வருகின்றது.




பாரதம் முழுக்க, எண்ணற்ற வீரர்கள், தலைவர்கள் நமது நினைவிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்கின்றனர். அவர்களை எக்காலத்திலும் நினைவில் இருத்திப் போற்றுவதற்காகவே, நினைவிடங்கள், மணி மண்டபங்கள், சிலைகளை அரசுகள் அமைக்கின்றன. அந்த வகையில், சென்னை, அடையாறு பகுதியில் உள்ள நினைவிட வளாகம் மிகவும் முக்கியமானது. 18.42 ஏக்கர் பரப்பளவிலான இந்த வளாகம் மிகவும் அமைதியாக, ஆளரவமற்ற நிலையில் காணப்படுகிறது.




இங்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரின் நினைவகங்கள் உள்ளன. தவிர, சுதந்திரத்திற்கு முந்தைய சென்னை மாகாண முதல்வரான ப.சுப்பராயனுக்கு முழு உருவச் சிலையும் உள்ளது.
இந்த வளாகத்தில் முதன்முதலில் அமைக்கப்பட்டது மகாத்மா காந்தி மண்டபம். 1956ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மண்டபம், திருக்கோயில் கோபுரத்துடன், அரைவட்ட வடிவில் கல்தூண்களுடன் அழகு மிளிர அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்குரிய அரங்கம் அரைவட்ட வடிவில் உள்ளது.



அதன்பிறகு பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட நினைவகங்கள், மணிமண்டபங்கள், அமைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் என, காந்தி மண்டப வளாகமே நினைவகங்களின் வளாகமாக மாறி இருக்கிறது.
இங்கே அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள்:
- மகாத்மா காந்தி மண்டபம்
- காமராஜர் நினைவகம்
- பக்தவத்சலம் நினைவிடம்
- ராஜாஜி மண்டபம்
- பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம்
- இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம்
- தியாகிகள் மணிமண்டபம்
- மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம்
- வ.உ.சி. நினைவகம் (சிலை, அவர் ஆட்டிய செக்குடன்)
அமைக்கப்பட்டுள்ள தனி சிலைகள்:
- தியாகி செண்பகராமன்
- ப.சுப்பராயன்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- மருது பாண்டியர்கள்
- ராணி வேலு நாச்சியார்
- ஆர்யா (எ) பாஷ்யம்
- தியாகி சங்கரலிங்கனார்



தியாகிகள் மணிமண்டபத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகியர் மாவட்டவாரியாக புகைப்படப் பதிவுகளாக காட்சி தருகின்றனர். அதேபோல, மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோரின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் இந்த வளாகத்தில் சிலை அமைப்பதோ, மணிமண்டபம் அமைப்பதோ ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அதில் காட்டும் அக்கறையை, வளாகப் பராமரிப்பில் அரசாங்கங்கள் காட்டுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நினைவிடம் என்பதாலோ என்னவோ, இங்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. எனவே, அரசு நிர்வாகம் இதனைப் பராமரிப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.


செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வளாகத்திற்கு அதன் உயரதிகாரிகள் வருகின்றனரா என்பதே கேள்விக்குறி. அவர்களின் கண்காணிப்பில் இருந்தால், இவ்வளவு மோசமாகவும் அலட்சியமாகவும் பராமரிக்கப்படாது. இங்குள்ள காந்தி அருங்காட்சியகமும் நூலகமும் பரிதாப நிலையில் காட்சி அளிக்கின்றன. மண்டபங்களின் வண்ணப் பூச்சுகள் உதிர்ந்து காணப்படுகின்றன.

போட்டித் தேர்வு எழுதுவோர், காதல் ஜோடிகள் என மிகச் சிலர் மட்டுமே தற்போது இந்த வளாகத்தைப் பயன்படுத்துகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் வருகின்றனர். இங்குள்ள அடிப்படை வசதிக் குறைபாடுகளால் அவர்களின் ஆர்வமும் குறைந்து போகிறது.
காந்தி மண்டப வளாகத்தில் உள்ள செயற்கை நீரூற்றுகள் செயல்படுவதில்லை; அல்லிக்குளம் வற்றிக் கிடக்கிறது. நடைபாதைகளில் பாவுக்கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. புல்வெளிகள் காய்ந்து கிடக்கின்றன. ஆங்காங்கே குவிக்கப்பட்ட இலைதழைகள். இவை அனைத்தையும் விட வேதனை தருவது, ஒழுங்கான கழிப்பறை வசதி கூட இங்கே இல்லை என்பதுதான்.


இங்கு மூன்று கழிப்பறைகள் உள்ளன. இடதுகோடியில் இருக்கும் கழிப்பறை மிகவும் பழமையானது. உள்ளேயே நுழைய முடியாது. வலதுகோடியில் அண்மையில் கட்டப்பட்ட கழிப்பறையோ பூட்டப்பட்டிருக்கிறது. வளாகத்தின் ஒரு மூலையில் உள்ள கழிப்பறை தான் ஒரே ஆறுதல். அங்கும் போதிய தண்ணீர் இல்லை. கழிப்பறைக்குச் செல்ல வழிகாட்டும் பெயர்ப்பலகை உடைந்து கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தவும் கூட பணியாளர்கள் எவருக்கும் தோன்றவில்லை.




காந்தி மண்டப வளாகத்தின் முன்பகுதியில் சுமார் 20 அடி தூரத்திற்கு படேல் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் அளிக்கப்பட்டிருப்பதால், சாலை அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் தண்ணீர் வசதி இல்லை என்று துப்புரவுத் தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார். வளாகத்தின் இரு நுழைவாயில்களும் இனி புதிதாக அமைக்கப்பட வேண்டி இருக்கும். அப்போதேனும், இந்த வளாகத்தைப் புத்துயிரூட்டும் பணி நடைபெற வேண்டும்.


கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் பலகோடி செலவில் இந்த வளாகம் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தொடர் பராமரிப்பு இல்லாததால், நினைவிட வளாகம் பொலிவிழந்து காணப்படுகிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த வளாகத்துக்கு புத்துயிரூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களை இங்கு வரவைத்து, தியாகியரின் சரிதங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், இவற்றை அமைத்ததன் நோக்கம் முழுமை பெறும்.
அண்ணா – கருணாநிதி சமாதி, எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா சமாதி ஆகியவற்றை மட்டும் நன்றாகப் பராமரித்தால் போதாது என்பதை பொதுப் பணித்துறையும் செய்தி, மக்கள் தொடர்புத் துறையும் உணர வேண்டும்.
“தவெக அரசின் கொள்கைத் தலைவர்களான வேலு நாச்சியார், ஈ.வெ.ரா., அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள் ஆகியோருக்கு சென்னையில் ஒருங்கிணைந்த கோட்டம் அமைக்கப்படும்” என்று சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் 25ஆம் தேதி அறிவித்திருக்கிறார். அவரிடம், அடையாறில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தியாகியரின் நினைவக வளாகங்கள் கேட்பாரற்றுக் கிடப்பது பற்றி யாராவது சொன்னால் நல்லது!
$$$