மாறன் சகோதரர்களுக்கு உதவும் நீதிமன்றத் தாமதம்

–எஸ்.குருமூர்த்தி

திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி  ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில்  எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022)வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது இரண்டாம் கட்டுரை)…

சட்டவிரோத தொலைபேசி நிலையம் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சன் டி.வி. உரிமையாளர்களான மாறன் சகோதரர்கள் தொடர்ந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வருகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் அம்பலமான இந்த மோசடி தொடர்பான வழக்கில் இன்னமும் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியவில்லை.

இந்நிலை மேலும் தொடரும் போலத் தெரிகிறது. இந்த மோசடி முதன்முதலாக 2007இல் கண்டறியப்பட்டது. ஆயினும் 2011வரை கண்டுகொள்ளப்படவில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு 2016இல் வழக்குப் பதியப்பட்டது. அதன் பிறகும் தடைகள் பல தொடர்ந்தன.

இதில் தொடர்புடையவர்கள், தங்கள் மாபெரும் அரசியல் செல்வாக்கு, பணபலம் மூலமாக, இவ்வழக்கில் முதல் தகவல் பத்திரிகை தாக்கல் (எஃப்ஐஆர்) செய்யவிடாமல் மத்திய புலனாய்வுத் துறையையே (சிபிஐ) முடக்கினர். இறுதியாக எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டபோது, விசாரணையைக் குலைக்க நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தாமதப்படுத்தினர்.

பல்வேறு தடைகளையும் தாண்டி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், மிக முக்கியமான நீதிமன்ற அமைப்பின் தாமதத்தால், இவ்வழக்கில் குற்றவாளிகள் தப்புவதற்கான வழி ஏற்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவரச் செய்த முயற்சிகள் அனைத்தையும் நினைவுகூரும்போது, ஏமாற்றமே மிகுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் ஆறு முறை வழக்கு:

உண்மையிலேயே இது மிகவும் துணிவான குற்றம். மத்திய தொலைதொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, சென்னையிலுள்ள அவரது இரு வீடுகளுக்கு ரகசியமான, கட்டண வரம்பில் வராத  756  பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி (மல்டிமீடியா) இணைப்புகள் வழங்கப்பட்டன. அவரது இல்லத்தில் சட்டவிரோதமான தொலைபேசி நிலையமே முறையற்ற வகையில் இயக்கப்பட்டது. 

இது அவர் அமைச்சராக இருந்த துறையிலேயே, அவரது அரசுப் பொறுப்பை மீறி செய்யப்பட்டது. தவிர, கணக்கில் வராத தொலைபேசி நிலையத்தை அதிக இணைப்புகளுடன் இயக்கியதன் மூலமாக தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. 

2007இல் ஒரு நேர்மையான சிபிஐ அதிகாரி இந்த மோசடியைக் கண்டறிந்தார். எனினும் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதனைக்  கண்டுகொள்ளவில்லை. 2011இல்  “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்த மோசடியை அம்பலப்படுத்திய பிறகே, பலருக்கும் இது தெரியவந்தது. அதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறன் விலக நேர்ந்தது.

ஆயினும், அனைவரும் கண்டு மிரளும் தங்கள் ஊடக வலிமை, அரசியல் செல்வாக்கு, பணபலத்தால், இந்த மோசடியில் வழக்குப் பதிவு செய்வதை மாறன் சகோதரர்கள் பலவகைகளில் முறியடித்து வந்தனர். இது கிட்டத்தட்ட இத்தாலியின் அரசியல் பிரபலம் சில்வியோ பெர்லுஸ்கோனி ஊழல் வழக்குகளிலிருந்து தப்பச் செய்த முயற்சிகளுக்கு ஒத்திருக்கிறது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் 2013இல் இதுதொடர்பாக நான் வழக்குத் தொடுத்தேன். சட்டவிரோத தொலைபேசி நிலையம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடுமாறு நான் கோரினேன். நீதிமன்ற உத்தரவுப்படி வேறு வழியின்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதாவது மோசடி கண்டறியப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த பின்னர்,   ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எனது கட்டுரை வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பின்னர், இந்த வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கில் 2016இல் மாறன் சகோதரர்கள்மீது சிபிஐ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆனால், அதன்பிறகு பினாமி மனுதாரர்கள் வாயிலாக இந்த வழக்கை திசைதிருப்ப எரிச்சலூட்டும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வழக்கில் தடை கோரி, உச்ச நீதிமன்றத்தை அவர்கள் 2015இல் ஒரு முறை, 2018இல் இரு முறை, 2019இல் ஒரு முறை என நான்கு தடவை வழக்குத் தொடுத்தனர்.

இறுதியாக விசாரணை துவங்கியது. ஆனால், இந்த வழக்கில் விசாரணையை சிபிஐ தொடரவும், இந்த மோசடியில் பயனடைந்த குற்றவாளியாக சன் டி.வி.யைச் சேர்க்கவும் தடை கோரி போலி நபர்கள் மூலமாக மறுபடியும் வழக்குகள் தொடரப்பட்டன. சட்டப்படி, இவ்வழக்கில் சன் டி.வியை குற்றவாளிப் பட்டியலில் சேர்ப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் குற்றத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியாது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நிலைகொண்டது. கடந்த எட்டாண்டுகளில் இது ஆறாவது முறை. இதுதொடர்பான சிபிஐ மனு கடந்த 9 மாதங்களாக வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாமல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் காத்திருக்கிறது.

பத்தாண்டுகளாக இழுக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் இதற்கு முன்னர் என்ன நடந்தது என்ற பூர்வ கதையை அறிந்தால் நமக்கு மேலும் சோர்வு மிகும்.

அரசியல் செல்வாக்கால் தாமதமான வழக்கு:

இந்த மோசடியை உலகிற்கு அம்பலப்படுத்திய நேர்மையான சிபிஐ அதிகாரி எஸ்.பி. சங்கர், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்பவர். சென்னை, பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில் ஒற்றைப் படுக்கையறை கொண்ட சிறிய வீட்டில் வசிக்கும் இவர், 11 கி.மீ. தொலைவில் சாஸ்திரி பவனிலுள்ள தனது அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் தான் செல்கிறார். எத்தனையோ நேரடியான, மறைமுகமான மிரட்டல்கள் இவருக்கு விடுக்கப்பட்டுவிட்டன. ஆயினும் இவர் அச்சமின்றி தனது கடமையைச் செய்கிறார்.

இந்த மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரியான சங்கர் 4 முக்கியமான விஷயங்களைக் கண்டறிந்தார். அவை:

1. தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, 400 அதிவேக தொலைபேசி இணைப்புகளை அரண்மனை போன்ற தனது வீட்டில் பெற்றிருக்கிறார். மேலும், இதற்கு இணையான எண்ணிக்கையில் தனது பூர்விக வீட்டிலும் இணைப்புகளைப் பெற்றிருக்கிறார்.

2. மோசடியான இந்த இணைப்புகள் அனைத்தும்,  சென்னை டெலிபோன்ஸ் அமைப்பின் தலைமைப் பொது மேலாளர் பெயரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன்மூலமாக, கட்டண வரம்புக்குள் வராமல், முழுவதும் இலவசமாக இவை செயல்பட்டுள்ளன.

3. புதிய வீட்டில் கொடுக்கப்பட்ட 400 அதிவேக தொலைபேசி இணைப்புகளும் தரைவழியில் புதைக்கப்பட்ட கேபிள்கள் வாயிலாக மிக அருகிலுள்ள சன் டி.வி. நெட்ஒர்க் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. அதாவது சன் டி.வி. தனது தொலைக்காட்சி வர்த்தக சேவைகளுக்கு இந்த அதிவேக தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தி உள்ளது.

4. இந்த மோசடியான தொலைபேசி இணைப்புகளால் அரசுக்கு ரூ. 440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

2011, ஜூன் 11-இல் சங்கரின் இந்த புலனாய்வு அறிக்கையை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டது. ‘கொள்ளைடிக்கப்படும் பிஎஸ்என்எல்: தொலைபேசி இணைப்புகளைத் திருடும் அமைச்சர்’ என்ற தலைப்பிலான செய்தி அது.

மறுநாள் அமைச்சர் மாறன் இதனை அப்பட்டமாக மறுத்தார். மட்டுமல்ல, தனது புகழுக்கு இழுக்கு விளைவிப்பதாகக் கூறி, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’  மீது ரூ. 10 கோடி மான நஷ்ட வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டினார். ஆனால் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’  மசியவில்லை; மாறனின் வழக்கை வரவேற்பதாக அறிவித்தது.

அதற்கு 4 நாட்கள் கழிந்த பின்,  அமைச்சர் வீட்டில் மோசடியான தொலைபேசி நிலையம் செயல்பட்டதற்கான ஆதாரங்களுடன் பிஎஸ்என்எல் தொடர்பான ஆவணங்களை   ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’  வெளியிட்டு, மாறனின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஆயினும் அரசு இதனைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. எனவே,  இது தொடர்பான ஆதாரங்களுடன் அப்போதைய சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்கிற்கு மின்னஞ்சலில் 15.12.2012 அன்று கடிதம் எழுதினேன். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு அதில் கோரியிருந்தேன். ஆனால், எனது மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புவதைக் கூட சிபிஐ இயக்குநர் தவிர்த்துவிட்டார்.

எனவே சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த மோசடியின் தீவிரம் குறித்து விளக்கினேன். அதனால் பயனேதும் விளையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நான் இதுதொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்த பிறகே, முதல் தகவல் அறிக்கையை  சிபிஐ தாக்கல் செய்தது. அதன்பிறகும், மாறன் சகோதரர்களின் அரசியல் செல்வாக்கால்  மேலும் ஆறு ஆண்டுகளுக்கு இந்த வழக்கு தாமதம் செய்யப்பட்டது.

எரிச்சலூட்டும் மனுக்களால் வழக்கு தாமதம்:

சிபிஐயின் தயக்கம் மிக மெதுவாக அகன்றது. அதன் செயல்பாடுகள் காரணமாக, தயாநிதி மாறன் பெற்ற முன் ஜாமீன் 2015 ஆகஸ்டில் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 

உடனே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தன்னைக் கைது செய்வதிலிருந்து தயாநிதி மாறன் தடையாணை பெற்றார். அதன்மூலமாக, இவ்வழக்கில் சிபிஐக்கு மிகவும் தேவையான நேரடிக் காவல் விசாரணையிலிருந்து தயாநிதி மாறன் தப்பினார். 
இவ்வாறாக கைகள் கட்டப்பட்ட நிலையில், இறுதிக்கட்டமாக முழுமைபெறாத குற்றப்பத்திரிகையை 2016 ஆண்டின் கடைசியில் சிபிஐ தாக்கல் செய்தது.

மறுபுறம், மாறன் சகோதரர்களோ வேறு திட்டங்களில் ஈடுபட்டனர். பினாமி மனுக்கள் மூலமாக இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த மனுக்களை ஏற்று விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமான விபரீதமான தீர்ப்பை 2018 மார்ச்சில் அளித்தது. அதனை மாறன்  சகோதரர்கள் கொண்டாடினர். அதுமட்டுமல்ல,  ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’  நாளிதழையும் என்னையும் மிக இழிவாக வசை பாடினர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி குறைந்த காலமே நீடித்தது.

விசாரணை நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக சிபிஐ செய்த மேல் முறையீட்டு மனு, நேர்மையான, துணிச்சலான உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அவர் நீதித் துறையின் மனசாட்சியாகத் தீர்ப்பளித்தார். மாறன்  சகோதரர்களுக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவது ‘பிழையானது, சட்ட விரோதமானது, விபரீதமானது’  என்று அவர் குறிப்பிட்டார்.

அதன் பிறகும், மாறன் சகோதரர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.  மீண்டும் பினாமிகள் மூலமாக உச்ச நீதிமன்றத்தை நாடினர். 2018 ஜூலையில் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. ஆகஸ்டில் நீதிமன்ற விசாரணை துவங்கியது.

அதே ஆண்டு செப்டம்பரில் நீதிமன்றத்தில் பினாமிகள் செய்த மனுக்களும் தள்ளுபடி ஆயின. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தை நவம்பரில் நாடினர். அவை 2019 ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2019 மார்ச்சில் துவங்கியது. மீண்டும் பினாமிகள் உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தனர். அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் பலிக்கவில்லை.

பினாமி மனுக்களால் இந்த வழக்கை தாமதப்படுத்துவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் பினாமிகளின் தற்போதைய கடைசிமுயற்சி, வழக்கை தாமதப்படுத்துவதாக மட்டுமல்லாது, கொள்ளையர்கள் தப்புவிக்க உதவுவதாகவும் இருக்கிறது.

சன் டி.வி.யை சேர்க்காமலேயே விசாரணை- வழக்கின் முரண்:

இதுவரை இவ்வழக்கில் சிபிஐ முழுமையாக விசாரிக்க முடியவில்லை. சட்டப்படி அதற்குண்டான சர்ச்சைக்கு அப்பாற்பட்ட உரிமை, வழக்கிற்கான கூடுதல் ஆதாரங்களை உறுதிப்படுத்துவதாகும். 

நேர்மையான அதிகாரியின் கீழ் இயங்கும் சிபிஐ, தற்போது இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சன் டி.வி.யைச் சேர்க்கவும் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டவும், மேலும் விசாரணை நடத்த விசாரணை நீதிமன்றத்தில்  அனுமதி கோரியது. ஆரம்பத்தில் மாறன் சகோதரர்களின் செல்வாக்கால் சன் டி.வி. வழக்கில் சேர்க்கப்படாமல் விடுவிக்கப்பட்டதை சரிசெய்ய சிபிஐ முயன்றது.

ஆனால் மாறன் தரப்பு வழக்குரைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிபிஐயால் கூடுதல் ஆதாரங்களைக் காட்ட முடியாத நிலையில் விசாரணையே தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.

ஆனால் விசாரணை மேற்கொண்டால்தான் கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட முடியும் என்பது நிதர்சனம். சன் டி.வி.யை இந்த வழக்கில் சேர்க்க கூடுதல் ஆதாரங்களைத் திரட்டத் தேவை உள்ளதாகக் கூறிய நீதிபதி, சிபிஐயின் மனுவை ஏற்று, அதற்கான காரணங்களை விளக்கி 26 பக்க உத்தரவை வெளியிட்டார். இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.

இதனால் பீதி அடைந்த மாறன் சகோதரர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமோ, கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு விசித்திரமாக உத்தரவிட்டது. 

மோசடி வழக்கை மேலும் விசாரித்தால் தான் கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட முடியும் என்பதே இந்த வழக்கின் முரண். அதாவது இவ்வழக்கில் சன் டி.வியை சேர்க்கத் தேவையான வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொள்ள இயலாது. சிபிஐயின் மேல் விசாரணை  நிறுத்தப்படுகிறது; அதனால் சன் டி.வி. தப்புகிறது; ஆனால் நீதிமன்ற விசாரணை தொடர்கிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தாலும், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட முடியும்.

உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக சிபிஐ மேல் முறையீடு செய்தது. வழக்கில் உள்ள முரணை சுட்டிக்காட்டி, இவ்வழக்கில்  சன் டி.வி. சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான அனுமதியைக் கோரி சிபிஐ மனுச் செய்தது.

ஆனால், அந்த மனு இது வரையிலும் – கடந்த 9 மாதங்களாக – வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர் அறையில் காத்திருக்கிறது. இதனிடையே சென்னையிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. 

இதற்கு முன், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பதைத் தாமதப்படுத்த பல வகைகளில் முயன்ற மாறன் சகோதரர்கள், தற்போது இவ்வழக்கை விரைவாக விசாரிக்குமாறு ஆர்வம் காட்டுகிறார்கள். 

சிபிஐயோ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்குப் பட்டிலிடப்படும், உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு மோசடி வழக்கில் மேல் விசாரணைக்கு அனுமதி கிடைக்கும் என்று காத்திருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்றப் பதிவாளர் அசைந்துகொடுப்பதாகத் தெரியவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ வர்த்தகம் தொடர்பான மனுக்களை வழக்கு விசாரணைக்கு பதிவாளர் அலுவலகம் அனுமதித்துள்ளது. அவை விசாரிக்கப்பட்டு, தீர்வும் கிடைத்துள்ளன. ஆனால் தமிழகத்தில் ஆட்சியிலுள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு பட்டியிலிடப்படுவதற்கு முன்னரே, விசாரணை நீதிமன்றத்தில் விடுவிக்கப்படுவதை நோக்கி மாறன் சகோதரர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

இதில் அவர்கள் வெற்றி பெற்றால், குற்றம் சாட்டப்படுவதிலிருந்து சன் டி.வி.  தப்பிவிடும்; மாறன் சகோதரர்களும் சிறை செல்வதிலிருந்து தப்பி விடுவார்கள். நீதிமன்ற நடைமுறைத் தாமதம் மாறன் சகோதரர்களுக்கு உதவப் போகிறதா?

$$$

Leave a comment