நம்பிக்கையூட்டும் பிரதமரின் சுதந்திர தின உரை!

-வ.மு.முரளி

தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய இந்த ஆண்டின் சுதந்திர தின உரை (2026, ஆகஸ்டு 15), இதுவரை ஆற்றிய சுதந்திர தின உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. முந்தைய ஆண்டுகளில் பேசிய உரைகளின் காலத்தை விடக் குறைவாக இருந்த போதும் (75 நிமிடங்கள்), இந்த ஆண்டின் உரை எதிர்கால இந்தியாவுக்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பதாக இருந்தது.

2014-இல் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் உரையில் நரேந்திர மோடியிடம் தன்னம்பிக்கை வெளிப்பட்டது. அப்போது நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்களையே பிரதமர் குறிப்பிட்டார். குறிப்பாக, சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் கழிந்தும்கூட, வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் சிரமப்படும் பெண்களின் நிலையை அவர் வெளிப்படுத்தினார். அத்தியாவசியத் தேவைகளுக்கே, அவரது அடுத்தடுத்த ஆண்டு சுதந்திர உரைகள் கவனம் கொடுத்தன.

ஆனால், கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில், பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை தனது அரசு நிறைவேற்றிவிட்டதை புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்த பிரதமர், இனிவரும் 20 ஆண்டுகளுக்கான பெரும் இலக்குகளை முன்வைத்து, நம்பிக்கையூட்டும் உரையாற்றி இருக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடப்பட்ட முதல் சுதந்திர தின விழா பெருமையையும் 2026 சுதந்திர தின விழா பெற்றிருக்கிறது. இப்பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடந்துவரும் நிலையில், தேசியப் பாடலுக்கு அடுத்து தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் பாடப்பட்டிருப்பது, இந்தியாவின் தேசிய மறுமலர்ச்சி உச்சநிலையை நோக்கி விரைவதை உறுதிப்படுத்தியது.

அவர் பேசும்போது, இளைஞர் முன்னேற்றம், தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, குடிமக்கள் பாதுகாப்பு, குறைகடத்திகள், அணுசக்தி தொடர்பான 6 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது உரையின் முக்கியமான அம்சங்களை இங்கே காண்போம்…

2047இல் ‘வளர்ந்த இந்தியா’:

“இந்தியா சுதந்திரம் பெற்றதன் 100-வது ஆண்டான 2047-க்குள்   ‘விக்‌ஷித் பாரத்’ – அதாவது வளர்ந்த பாரதமாக நாம் ஆக வேண்டும் என்பதே நமது மைய இலக்கு; இந்த இலக்கை 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் அடைய வேண்டும். சிறிய கனவுகள் போதாது; பெரிய கனவுகளைக் காண வேண்டும்”  என்று, தன் அது உரையில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. வளரும் நாடு என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு சிகரம் நோக்கிச் செல்வதற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

கடந்த 12 ஆண்டுகளில்,  நாடு முழுவதும் 25 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியிலிருந்து வெளியேறியுள்ளனர். 2014-இல்  ‘உடையும் பலவீனமான பொருளாதார நாடுகள்’ ஐந்தில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்ட இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் நமது பாதுகாப்புத் துறையின் உற்பத்தி 4 மடங்காகப் பெருகி உள்ளது. கதர் மற்றும் கிராம வினைபொருட்களின் உற்பத்தி 5 மடங்கு பெருகி உள்ளது. மின்னணுப் பொருட்கள் (7 மடங்கு), நவீன ரயில் பெட்டிகள் (21 மடங்கு), திறனறி அலைபேசிகள் (33 மடங்கு) என உற்பத்தியில் பெருகி உள்ளன.

டிஜிட்டல் இந்தியா உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. நமது பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல்மயமாகி 100 மடங்கு அதிகரித்திருக்கின்றன. இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 4 மடங்கு பெருகி இருக்கிறது. அறிவுசார் காப்புரிமை பெறுவோரின் எண்ணிக்கையும்  4 மடங்காகி இருக்கிறது. குடிநீர் இணைப்பு வழங்குதல் (15 மடங்கு), சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல் (6 மடங்கு), ஏழைகளுக்கு கழிப்பறை அமைத்தல் (4 மடங்கு), பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (3 மடங்கு) ஆகியவையும் அதிகரித்திருக்கின்றன.

ஆத்ம நிர்பர் பாரத்- அதாவது சுயசார்பு பாரதம் திட்டத்தில், இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) சுதேசி (Swadeshi), உள்லூர்ப் பொருட்களுக்கு ஆதரவு (Vocal for Local) போன்ற செயல்பாடுகளின் மூலமாக, இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது குறைந்திருக்கிறது. தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி போன்ற துறைகளில் அன்னிய சார்பைக் குறைப்பது அவசியம் என்ற பிரதமரின் கருத்து தொலைநோக்குடன் கூடியதாகும்.

கடந்த 12 ஆண்டுகளில் 6 கோடி பெண்கள் இந்தியாவில் லட்சாதிபதி ஆகியுள்ளனர். இதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அடுத்து, பெண்களுக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் 33 % பிரதிநிதித்துவம்  வழங்கப்பட உள்ளது.

மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் விற்பனை 2009-10இல் 1.54 லட்சமாக இருந்தது, தற்போது 25 லட்சமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பசுமைப் பொருளாதாரம் (சூழலைப் பாதிக்காத பொருளாதாரம்) 2014க்கு முன் 60,000 கோடியாக இருந்தது, தற்போது 20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

13 ஆண்டுகள்… ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வண்ணம்!

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி தொடர்ச்சியாக 13-வது சுதந்திர தின உரையை ஆற்றினார். அப்போது அவர் பாரம்பரியமான சிவப்பு நிற டை-அண்ட்-டை தலைப்பாகையை சூடியிருந்தார். ராஜஸ்தான், குஜராத் மாநில மக்கள் அணியும் இந்த கவர்ச்சிகரமான தலைப்பாகையை, வெள்ளை நிற குர்தா மற்றும் பழுப்பு நிற மேலாடையுடன் பிரதமர் அணிந்திருந்தார்.சுதந்திர தின விழாக்களில் பிரதமர் மோடி அணியும் தலைப்பாகைகள், அவரது தனித்துவமான அடையாளமாகவே மாறி விட்டன. இதுவரை அவர் அணிந்துவந்த தலைப்பாகைகள் விவரம்…

2026: வெள்ளை நிற குர்தா மற்றும் பழுப்பு நிற மேலாடையுடன்,  பாரம்பரியமான சிவப்பு நிற டை-அண்ட்-டை தலைப்பாகை அணிந்திருந்தார்.

2025:  வெள்ளை நிற குர்தா-சுரிதார் செட், காவி நிற பந்த்காலா ஜாக்கெட்,  மூவர்ணத் துண்டுடன் காவி நிறத் தலைப்பாகை அணிந்திருந்தார்.

2024: வெள்ளை நிற குர்தா-சுரிதார் மற்றும் வெளிர் நீல நிற பந்த்காலா ஜாக்கெட்டுடன் இணைக்கப்பட்ட ராஜஸ்தானி லெஹரியா-அச்சு தலைப்பாகை அணிந்திருந்தார்.

2023: கருப்பு நிற வி-கழுத்து ஜாக்கெட்டுடன் அணியப்பட்ட மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிற பந்தானி-அச்சு தலைப்பாகை அணிந்திருந்தார்.

2022: சிவப்பு வடிவங்கள் மற்றும் நீண்ட முனையைக் கொண்ட காவி நிறத் தலைப்பாகையுடன் நீல நிற ஜாக்கெட் மற்றும் துண்டு அணிந்திருந்தார்.

2021: அரைக் கை குர்தாவுடன் இணைக்கப்பட்ட கிரீம் , காவி நிறத் தலைப்பாகை அணிந்திருந்தார்.

2020: கரோனா பெருந்தொற்று நோயின் மத்தியில், பிரதமர் மோடி காவி விளிம்புகளுடன் கூடிய வெள்ளை நிறத் துண்டை அணிந்திருந்தார், அது முகக் கவசமாகவும் இருந்தது.

2019: ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சாயல்களில் ராஜஸ்தானி பாணி தலைப்பாகையுடன், வெள்ளை அரை கை குர்தா அணிந்திருந்தார்.

2018: வெள்ளை நிற குர்தாவுடன், சிவப்பு மற்றும் காவி நிறத் தலைப்பாகை அணிந்திருந்தார்.

2017: பாரம்பரியமான மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத் தலைப்பாகை அணிந்திருந்தார்.

2016: நீண்ட தொங்கும் முனை கொண்ட இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு டை-அண்ட்-டை தலைப்பாகை அணிந்திருந்தார்.

2015: சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்புடன் கூடிய கடுகு மஞ்சள் தலைப்பாகை அணிந்திருந்தார்.

2014:  பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின உரைக்காக, நரேந்திர மோடி பச்சை நிறத்துடன் கூடிய சிவப்பு ஜோத்புரி தலைப்பாகை அணிந்திருந்தார்.

நாட்டின் தலைவர் அணியும் ஆடைகளும் தேசத்திற்கு ஒருவித கௌரவத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்த பிரதமராக, மோடி தனது செயல்பாடுகளில் தனித்துவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆற்றலில் தன்னிறைவு:

குறை கடத்திகள் (Semi Conductor) இன்றைய உலகின் ஆணிவேர். ஏற்கனவே 3 குறைகடத்தி ஆலைகள் உற்பத்தியைத் தொடங்கி, அவற்றிலிருந்து ஏற்றுமதியும் நடந்து வருகிறது. மேலும்   8 ஆலைகள் விரைவில் தொடங்க உள்ளன.

அரிய தனிமங்கள் (Critical Minerals) நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான இடம் வகிக்கின்றன. அதற்காக தேசிய மிஷன் தொடங்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தியில்  தன்னிறைவு பெறும் நோக்கத்தில் 99 % பகுதிகள் தடையற்ற பகுதிகளாக (Go-Ahead Areas) மாற்றப்பட்டுள்ளன.  கடல் பகுதியில் எண்ணெய்/ எரிவாயு வளங்களைத் தேடும்  ‘சமுத்ர மந்தன்’ திட்டத்திற்கு ரூ. 85,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

2047-இல்  100 கிகா வாட்ஸ் அணு ஆற்றலை அடையும் வகையில், அடுத்த 6–7 ஆண்டுகளில் 5 புதிய  அணு உலைகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் கல்பாக்கம் ஈணுலை தனது சிகர ஆற்றலை (Criticvality) இந்த ஆண்டு எட்டிவிட்டது.

கடந்த 12 ஆண்டுகளில்,  குழாய் வழியாக இயற்கை எரிவாயு 700 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  சுமார் 1.75 கோடி பயனாளிகள் இதில் இணைந்துள்ளனர். இத்திட்டம் மேலும் விரிவாகிக் கொண்டே செல்கிறது.

சூரிய ஒளி மின்னாற்றல், 2 கிகா வாட்ஸிலிருந்து, 160 கிகா வாட்ஸாக உயர்ந்துள்ளது. பிரதமரின் சூரிய இல்லம் திட்டத்தில் 50 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் இணைந்துள்ளன.

2014 வரையிலான 67 ஆண்டுகளில் ரயில்வே மின்மயமாக்கம் 30 % மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1914 முதல் இது வரையிலான காலத்தில் மீதமிருந்த 70 % மின்மயமாக்கமும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் டீசல் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

2014க்குப் பிறகு இந்தியா சுமார் 40 நாடுகளுடன் FTA எனப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித் துறை, உயந்திர உற்பத்தி, மருந்து, கடலுணவு, விவசாய விளைபொருட்களுக்கு  கூடுதலான உலகச் சந்தை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இந்தியாவின் 7 வளர்ச்சிப் பாதைகள்: 

2047 இலக்கை நோக்கி அடுத்த 5–7 ஆண்டுகளில் ஏழு துறைகளில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவை:

1. உற்பத்தி: உலகளாவிய உற்பத்தி / விநியோகச் சங்கிலியில் இந்தியா முன்னிலை பெறுவோம்.

2. விவசாயம்: நமது உணவு, சிறு தானியங்கள், வாசனைப் பொருட்கள், பழங்கள், உணவுப் பொருட்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்வோம்.

3. தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள்: தரவு மையங்கள், ரோபோட்டிக்ஸ், 6 ஜி வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்களில் கவனம் கொடுப்போம்.

4. போக்குவரத்து: கிராமப்புற வளர்ச்சிக்கு உதவும் இணைப்புச் சாலைகள், நெடுஞ்சாலைகள், அதிவிரைவு சாலைகள், அதிவேக ரயில், துறைமுக வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்போம்.

5. பாதுகாப்பு: ஆயுத உற்பத்தியில் தற்சார்பு, டிரோன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கவனம் அளிப்போம். 

6. பசுமை, நீலப் பொருளாதாரம்: பசுமை ஹைட்ரஜன்,  புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கடல்சார் மீன்பிடி தொழில்நுட்பத்தில் வளர்ச்சி காண்போம்.

7. மென்சக்தி: யோகக் கலை, கைவினைப் பொருட்கள், திரைப்படங்கள், அனிமேஷன், படைப்புத் துறைகளில் உச்சம் காண்போம்.

மேற்கண்ட துறைகளில், கடந்த 5 – 7 தசாப்தங்களில் சாதிக்க முடியாததை அடுத்த 5 – 7 ஆண்டுகளில் சாதிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் என்றார் பிரதமர்.

கருத்தியல் நக்சல்களை களையெடுப்போம்!

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பயன்படுத்திய  ‘திமாகி நக்சல்கள்’ (Dimagi Naxals) என்ற சொல்லாடல் தற்போது விவாதப்பொருளாகி வருகிறது. திமாக் என்றால் ஹிந்தியில் அறிவு என அர்த்தமாகும். திமாகி நக்சல் என்றால்  ‘அறிவுஜீவி நக்சல்’ என்பது பொருள்.  ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நகர்ப்புற நக்சல்களை பிரதமர் பகடியாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதம் ஏந்திய நக்சலிசம் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், ஆயுதங்கள் இன்றி அறிவுசார்ந்து, இளைஞர்களை திசை திருப்பி குழப்புபவர்களே இந்த  ‘திமாகி நக்சல்’கள்.  கருத்தியல் / சித்தாந்த நக்சல்கள் என்றும் இவர்களைக் குறிப்பிடலாம்.

காடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களை விட அறிவுஜீவி நக்சல்கள் ஆபத்தானவர்கள்; வக்கிர சிந்தனையாளர்கள். இவர்கள் நாட்டுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்.  திமாகி நக்சல்கள் அடர்ந்த வனப்பகுதிகளிலோ, காடுகளிலோ வாழ்வது இல்லை, ஆயுதங்களை ஏந்துவது இல்லை. அவர்கள் நகரங்களில் பேராசிரியர்களாக, தன்னார்வலர்களாக, கவிஞர்களாக, எழுத்தாளர்களாகச் செயல்படுகிறார்கள். அதன்மூலமாக தங்களின் வன்முறை சித்தாந்தங்களை குறிப்பாக இளைஞர்களிடம் பரப்புகிறார்கள்.

அரசியல் களத்தில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட இடதுசாரிகள் இந்தச் சதியில் முன்னிலையில் இருக்கிறார்கள். இவர்களால் மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிறது. அண்மையில் தில்லியில் நடந்த மாணவர் போராட்டம், சித்தாந்த நக்சல்களால் வழிநடத்தப்பட்டது தான். தேசபக்தியை மாணவர்களிடம் பரப்புவதே இவர்களை அழிக்கும் வழி.

இளைஞர்களின் வளர்ச்சியே தேச வளர்ச்சி:

பிரதமர் தனது உரையில் 50 முறை  ‘இளைஞர்’ என்ற சொல்லை இம்முறை பயன்படுத்தி இருக்கிறார். இதுவே அவரது முன்னுரிமை எதற்கு என்பதைக் காட்டுகிறது.

நீட், யு.பி.எஸ்.சி.  உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிகள், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி (artificial Inteligence), விளையாட்டுத் திறமையைக் கண்டறியும் திட்டம் ஆகியவற்றை அரசு வழங்கு என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, Free Online Coaching Network, Digital Public Infrastructure ஆகியவை மூலமாக, இணையவழியில் இலவசப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று மோடி அறிவித்திருக்கிறார். அடுத்த ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.

2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவை தனது உரையில் பிரதமர் வெளிப்படுத்தினார். மாணவர்களிடையே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துவருவது குறித்து  வேதனை தெரிவித்த அவர், போதை இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் செயல்பட வேண்டுகோள் விடுத்தார்.

உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்களின் பட்டியலில் 50 இந்திய நிறுவனங்கள் இடம் பெறு வகையில் நமது வளர்ச்சி அமைய வேண்டும் என்றார் பிரதமர். இந்திய வங்கிகளுள் ஒன்று உலக வங்கிகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் வர வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இளைஞர்களின்  வளர்ச்சியை முன்னெடுக்க, 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள், ரூ. ஒரு லட்சம் கோடி கண்டுபிடிப்புக்கான நிதி, பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர்.

உள்நாட்டுப் பாதுகாப்பு:

நவீன உலகில் புதிய வகை போர்கள் எல்லையில் மட்டும் நடைபெறுவதில்லை; எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், பங்குச்சந்தைகள், வங்கிகள், தரவு மையங்கள் மீதும் மறைமுக தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.  எனவே நவீன  உள்நாட்டு பாதுகாப்பு வலைப்பின்னல் (Civil Defence network)  உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர்.

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த, பிரத்யேகமாக, குடிமை தன்னார்வலர் பாதுகாப்புப் படை (voluntary civil-defence force ) அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகும். 

கடந்த கால நக்சல் வன்முறையால் 3,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் உயிரிழந்துள்ளனர்.  ஆயுதம் தாங்கிய  நக்சலிசம் தற்போது பெருமளவில் வீழ்த்தப்பட்டு விட்டது. ஆனால்  ‘திமோகி நக்சல் எனப்படும் கருத்தியல் (சித்தாந்த)  நக்சல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் எச்சரிக்கை செய்துள்ளார்.

மொத்தத்தில், தனது 12 ஆண்டுகால ஆட்சியின் பலன்கள் நாட்டு மக்களுக்குச் சென்றடைந்துவிட்ட திருப்தியுடன், இது வரையிலான முயற்சிகளை விட பிரமாண்டமான இலக்குகளை நிர்ணயித்து உரையாற்றி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஒரு நல்ல தலைவன் குடிமக்களின் உயர்வை மட்டுமே கருத்தில் கொண்டிருப்பான்;  தனது நாட்டின் வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பான். பிரதமர் நரேந்திர மோடியின் 13வது சுதந்திர தின உரை நமக்கு காட்டுவது, இவற்றைத்தான்.

  • நன்றி: விஜயபாரதம் (28.08.2026)

$$$

Leave a comment