-கவியரசு கண்ணதாசன்
மகாத்மா காந்திக்கு கவியரசரின் அஞ்சலிக் கவிதை இது...

(இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்)
காட்டினுள் தேடித் தேடிக்
கற்பகத் தருவைக் காண்போம்!
வீட்டினுள் தேடித் தேடி
விளக்கையோர் இடத்திற் கண்டோம்!
ஏட்டினுள் தேடித் தேடி
இணையிலாக் கவிதை கண்டோம்!
நாட்டினுள் தேடுகின்றோம்,
நாயக! நின்னைக் காணோம்…!
.
நாற்பது கோடிக் கென்று
நடுங்கிய தடியை ஊன்றி
ஏற்பதை ஏற்று வாழ
இருப்பினும் தொடர்ந்து சென்று
நூற்பது முதலாய் நன்மை
நுவல்வது வரையிற் சொல்லி
வேற்படை திரட்டி வென்றாய்,
வீரனே நின்னைக் காணோம்…
.
காந்தியின் பெயரைக் கண்டோம்
காலடிச் சுவடைக் கண்டோம்
காந்தமென் றொன்றைக் கண்டோம்
தனியறம் தழைக்கக் கண்டோம்
மாந்தருள் நின்னைப் போல
மற்றொரு வைரம் காணோம்…
ஏந்திய தீபம் நின்சொல்
இன்னொளி போதும் தேவா!
.
நன்றி: கண்ணதாசன் கவிதைகள் (தொகுதி- 6) கண்ணதாசன் பதிப்பக வெளியீடு
$$$