வாசக ஞானம்

-மகாகவி பாரதி

 “கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது. 

இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து! தற்கால அசெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் சம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும்.” - மகாகவி பாரதியின் இனிய அறிவுரை இது....

வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜனசமூகத் திருத்தம் முதலிய லெளகிய விவகாரங்கள் எல்லாவற்றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்துவிட்டனர். ஒரு துறை அல்லது ஒர் இலாகாவைப் பற்றிய ஸூக்ஷ்ம தந்திரங்கள் மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறிந்திருக்கலாம். ஆனால் அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.

பொதுவாகக் கூறுமிடத்தே, மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷ்மமான பரம சத்தியங்களையெல்லாம் கண்டுபிடித்து முடித்து விட்டனர். ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமை யற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது. எனவே அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்கு மிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர்.

“வாசக ஞானத்தினால் வருமோ ஸுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே


என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார்.

இதன் பொருள் “வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த முடியவில்லையே? என் செய்வோம்? பாழ்பட்ட மனம்ஒயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்’’ என்பதாம். இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்,

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்’’


என்ற குறளால் உணர்த்துகிறார்.

இதன் பொருள் “வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்” என்பது.

திருஷ்டாந்தமாக, ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும், ஆத்ம குணங்களும் உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகத் கருதுதல் பிழை என்ற கொள்கை ஐரோப்பாவில் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண்களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்தரம் வேண்டும் என்றுகேட்டால், அதைப் பெரும்பான்மையான ஐரோப்பிய ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.

“விஷ்ணுபக்தி யுடையோர் எந்த குலத்தோர்ஆயினும் எல்லா வகையிலும் சமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ஸ்ரீ ராமானுஜாசார்யருடைய பரம சித்தாந்தம்” என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டி லும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை–தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.

“எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனாக இருக்கிறேன்’’ என்று கண்ணன் கீதையால் உணர்த்திய உண்மையையும், ‘’எல்லா உயிர்களிடத்தும் தன்னையும் தன்னிடதே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சி யுடையவன்’’ என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையையும் வேதோப நிஷத்துகளின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள் உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதிவேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிறார்கள்.

“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது”


என்ற குறளின்படி, ‘இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவது கண்டு மானிடர் ஒருவருக்கு ஒருவர் கொடுஞ்சொற்கள் வழங்குவது மடமை’ என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக்கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும் கொடுஞ் சொற்களும் கோபச் செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது.

“மரணம் பாவத்தின் கூலி என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் எவரையும் காணவில்லை. ‘நாமெல்லோரும் பாவிகள்’ என்பதைப் பல்லவிபோல சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிறார்கள்.

இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! சாதாரணமாக வியாபாரம், விவசாயம் முதலிய காரியங்களிலே கூட மனிதர் நிச்சயமாக லாபங் கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை அநுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய சக்தி ஹீனத்திற்கு மாற்றுக் கண்டு பிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.

கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.

இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து! தற்கால அசெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் சம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண் துன்பங்களும் அநாவசியக் கஷ்டங்களும் பட்டுப் பட்டு உலகம் அலுத்துப் போய்விட்டது.

வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பி மார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள், உலகத்தீரே கூட்டங் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.

ஆண் பெண் சமத்வமே தர்மமென்று தெரிகிறதா, அப்படியானால் வாருங்கள்; மாதர்களை லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா? நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள் கோடிக்கணக்காக. சமத்வ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.

‘அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும்’என்று தெரிந்தோமோ? நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம். சத்யத்தை நாட்டுவோம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s