-ச.சண்முகநாதன்
தமிழகத்தில் பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக (உபயம்: அமைச்சர் துரை முருகன்) என்று திமுகவினரே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிகிறது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு நாள் செய்தியாளர் சந்திப்பும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், அவரை முடக்க முனை மழுங்கிய பல ஆயுதங்களைப் பிரயோகித்துப் பார்க்கிறது ஆளும் திமுக. அதன் கடைசி முயற்சி, சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தை அண்ணாமலைக்கு எதிராகப் பேச வைத்திருப்பது. இதற்குப் பொருத்தமான பதிலை அளிக்கிறது இக்கட்டுரை...

துக்காச்சி, கும்பகோணம்.
சுகி சிவம் சன் டிவியின் மைக் முன்னால் நின்று சற்றே தடுமாறியிருக்கிறார். ஆன்மிக சொற்பொழிவாளரின் சொல் பொலிவிழந்து காணப்படுகிறது. அரசியல் நெடி மூக்கைத் துளைக்கிறது. சில ஆதீனங்களையே வளைத்துப் போட்ட திராவிடத்துக்கு சுகி சிவம் is an easy target.
“அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆவது போல இருக்கு அண்ணாமலை ஆட்சியை பிடிப்பேன் என்பது” என்கிறார் சுகி சிவம். அத்தைக்கு மீசை முளைக்கிறதோ என்னவோ தெரியவில்லை, ஆனால் சில நல்ல சித்தப்பாக்கள் மீசை இழந்து அத்தையாக மாறிவிட்டனர். அவர்களில் சிலர் ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் என்பது வருத்தம்.
அறநிலையத் துறையை கட்டமைத்தது ஓமந்தூரார் என்றும் அது புனிதமானது என்றும் பேசுகிறார் சுகி சிவம். எந்த ஒரு வரையறையும் காலம் சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. அன்றைய நிலையில் அறநிலையத் துறை தேவைப்பட்டிருக்கும். யாரிடமிருந்தோ கோவில் சொத்துக்களைக் காப்பாற்ற அரசிடம் தஞ்சம் புகவேண்டிய நிர்பந்தம் அன்றைக்கு இருந்திருக்கலாம். ஆனால் இன்று திருடனுக்குப் பயந்து கொள்ளையனிடம் ரொக்கத்தை கொடுத்த கதையாகிப் போனது. ஒருவேளை ஓமந்தூரார் இன்று இருந்திருந்தால் இன்றைய திராவிட அரசு கோவில்களை கையாளுவதைப் பார்த்து வருத்தப்பட்டிருப்பாரோ என்னவோ! சட்டங்கள் கூட திருத்தப்பட்டிருக்கின்றன – காலத்தின் கட்டாயத்தால் – என்று ஞாபகப்படுத்த வேண்டும் இவருக்கு.
சரி. அறநிலையத் துறையை அரசிடம் இருந்து மீட்டு யாரிடம் கொடுப்பீர்கள், எப்படிக் கையாளுவீர்கள், என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். Honestly இதையெல்லாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. எங்களிடம் நேரடி பதில்கள் இப்போதைக்கு இல்லை. ஆனால் இந்தக் கேள்விகள் கேட்க வேண்டிய தருணம் இது.
“ஆலயம் எவருடையது?” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அருமையான கட்டுரை இருக்கிறது. அறநிலையத் துறையின் அயோக்கியத்தனத்தை எழுதிவிட்டு இதே கேள்விகளைக் கேட்கிறார். தமிழக அறநிலையத் துறையை விட மத்திய தொல்லியல் துறை மற்றும் கேரள அரசின் அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் கோவில்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை சுட்டிக் காண்பிக்கிறார். தமிழக அறநிலையத் துறை பாழ்படுத்துகிறது என்கிற எண்ணம் இல்லாதவர் இங்கு யாருமே இல்லை – சுகி சிவம் போன்றோர்களைத் தவிர்த்து.
யார் நிர்வகிக்கப் போகிறார்கள்? இதற்கான பதில் எங்களிடம் இல்லை. பதில் இல்லை என்று வருத்தப் படுவதைவிட இப்பொழுது இந்தக் கேள்வி கேட்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி.
“ஆலயம் எவருடையது?”, “யார் நிர்வகிக்கப் போகிறார்கள்?” என்று ஒரு blueprint செய்ய வேண்டிய /சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதே நல்ல முன்னேற்றம். என்ன திட்டம் வகுத்தாலும் திராவிடம் சாதியை உள்ளே புகுத்தி குழப்பம் செய்யும். பார்ப்போம்.
“37 லக்ஷம் பேர் வந்திருக்கிறார்கள் திருவண்ணாமலை திருவிழாவுக்கு. அரசு கோவில் என்பதால் அரசு பாதுகாப்பு கொடுத்தது மாவட்ட ஆட்சியாளர் தலைமையில். கோவில்கள் அரசாங்கத்தின் கீழ் இல்லையென்றால் இது சாத்தியமா?” என்று குழந்தைத்தனமாக கேள்வி கேட்கிறார். வேளாங்கண்ணி சர்ச்சுக்கு வரும் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவில்லையா? வேளாங்கண்ணி கோவில் அரசுடையதா? Come on Sir. Crowd management, irrespective of the event, is administration’s responsibility.
மேலும் “எங்கள் ஊரில் கொள்ளை போகிறது” என்று முறையிட்டால் “முதலில் கர்நாடகாவில் சரி செய்யுங்கள்” என்கிறார். ஏன் தமிழ்நாடு எல்லாவற்றிலும் கடைசியாகத்தான் இருக்க வேண்டுமா? உங்களுக்கு தலைவலி என்றால், பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கும் தலைவலி அவனுக்கு மருந்து கொடு என்பீர்களா?
கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டம் இருக்கிறது, இங்கேயும் செய்து விடலாமா?
இந்த அரசு வந்த நாள் முதல் கோவில் சொத்துக்கள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பது தெரியாதா என்ன? எம்குலப் பெண்கள் எங்கள் இறைவனிடம் தாலிப்பிச்சை கேட்டு அதை நிறைவேற்ற தாலி செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினால், அதையெல்லாம் மொழுக்கட்டி என்று தங்கமாக உருக்கி வைக்க முயற்சிக்க வில்லையா? பக்தியை, உணர்வை, வாழ்க்கையை மொழுக்கட்டி தங்கமாகப் பார்க்கும் ஆணவம் கொள்ளவில்லையா, நீங்கள் அங்கம் வகிக்கும் அறநிலையத் துறை? அதைத்தான் கேள்வி கேட்கிறோம்.
கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட பசுக்கள் எங்கே என்று கேட்கிறோம்.
கிராமத்தில் இருந்து கால் கடுக்க நடந்து வந்து ஒட்டிய வயிற்றுடன் சேமித்து வைத்த பணத்தை முருகனுக்கு காணிக்கை செலுத்தினால், அதில், நீங்கள் அங்கம் வகிக்கும் அறநிலையத் துறை அதிகாரிகள், உல்லாச கக்கூஸ் கட்டிக்கொள்வது நியாயமா என்று கேட்கிறோம்.
தவறா?
கோடிக் கணக்காய் பணம் வருகிறது கோவிலுக்கு. ஆனால், சுட்டெரிக்கும் மொட்டை வெயிலில், பாதம் கொப்பளிக்க நடக்க, பல கோவில்களில் பக்தர்கள் நடந்துபோவதைத் தவிர்க்க ஒரு பாய் போடக்கூடாதா என்று கேட்கிறோம்? இதையெல்லாம் செய்யத் தவறிய அரசுக்கு மனசாட்சி இருக்கிறதா என்று கேட்கிறோம். இல்லையென்று தெளிவாகிவிட்ட நிலையில் கோவில் நிர்வாகத்தை நடத்த என்ன தார்மீகம் இருக்கிறது என்று கேட்கிறோம்?
எங்கள் கேள்வி புரிகிறதா?
எங்கள் கோவில்கள் எங்களுக்கு தாய் போல. சீதையை ஏமாற்றிய மாரீசன் போல “எல்லாம் நல்லா இருக்கு” என்ற குரல்கள் எங்களை ஏமாற்றி வருவதை உணர முடிகிறது. லக்ஷ்மணனாய் “இது ஏமாற்று வேலை” என்று எச்சரிக்கிறார் அண்ணாமலை. மாரீசனுக்கும் லக்ஷ்மணனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களலல்ல நாங்கள்.
கோவில்களைக் காப்பதற்கு உயிர் துறந்த மன்னர்கள் வாழ்ந்த மண் இது. அந்த உணர்வின் நீட்சி இன்றும் இருக்கக் கூடாதா?
அண்ணாமலையைப் பற்றி எழுப்பியுள்ள கேள்விகளைப் பற்றிய உங்கள் எண்ணத்துக்கு ஒரே ஒரு புறநானூற்றுப் பாடல் சொல்லி வைக்கிறேன், குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின், மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளிமிகின், வலியும் இல்லை ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி... (புறநானூறு -பாடல் 51)
நீர் மிகுந்து வெள்ளமாய் மாறினால் அதை சிறை வைக்க முடியாது.
தீயிடம் இருந்து தப்பிக்க நிழல் கிடையாது.
காற்றை நிறுத்தும் வலிமை இங்கு யாருக்கும் கிடையாது.
அதேபோல எதிர்த்து நிற்க யாரும் இல்லாதவன் வழுதி.
காலம் பதில் சொல்லட்டும்.
$$$
“அரசியல் நெடி மூக்கைத் துளைக்கிறது.”
இது முழுக்க முழுக்க உண்மையான அவலத்தை மறைத்து, தகுந்த ஆதாரங்க்களோடு கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலை வேண்டாம் அவரின் அபிப்ராயத்தைக் கூட மனசாட்சியோடு பேசாது, அவர் பேசியது. இதுவரை அவர் பேசிய ஆன்மீகச் சொற்பொழிவு வழியே முன்வைத்த நியாய தர்மத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையையே கேள்வி குறியாக்கி இருக்கிறது.
கெளரவர்களோடு சேர்ந்த கர்ணனின் குணம் குறி சுயநல செயல்பாடுகளாகவே இவரின் செயல் பாடுகளை நாம் காண வேண்டியும் உள்ளது.
திராவிட அரசியல் ஒருபோதும் சனாதன தர்மத்தை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம், துவேசிக்காமல் இருந்த வரலாறு உண்டா? இவர் தான் எந்நிலையிலும் அவர்களோடு சேர்வது இதற்கு முந்திய இவரின் மேடை பேச்சுக்கள் முன் வைத்த கருத்துக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பொருந்துமா?
ராவணனுக்கு வரம் தந்த இறைவனே தான் ராமனுக்கும் துணை நின்று அருளினான். இங்கே இந்த திராவிடர்கள் தாம் யார்? பலவேளையில், இவர் இதனை சற்றும் சிந்தியது, ஈ.வே.ரா வையே பாராட்டியதெல்லாம், தந்து இரு கைகளிலும் புரையோடிப் போன சீழ் வைத்த பழைய புண்களைக் கொண்டவன் தனது வேற்றுக் கைகளிலே பிசைந்து சுட்ட சப்பாத்திகளை சுவைத்துச் சாப்பிடுவது போலாகாதா?
மேடையில் பேசுவது வேறு, சுய லாபத்திற்காக இப்படி இயல்பாய் இருப்பது வேறு?!
தீயாரோடு இணங்குதலும் தீதே!!
LikeLike