-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
அநுபந்தம் 3
பிறர் வரைந்து அனுப்பிய கடிதங்கள் [§]
[§] பிள்ளையவர்களுக்குப் பிறர் எழுதிய கடிதங்கள் சில எனக்குக் கிடைத்தன. அவற்றுள் முக்கியமான சில கடிதங்களும், சிலவற்றின் பகுதிகளும் இங்கே வெளியிடப்படுகின்றன.
மேலகரம் சுப்பிரமணிய தேசிகர்
(சின்னப்பட்டத்தில் இருந்தபோது எழுதிய திருமுகம்)
உ
சிவமயம்
“சுவாமி அம்பலவாண சுவாமி திருவுளத்தினாலே இகபரசவுபாக்கிய வதான்னிய மூர்த்தன்னிய சதுஷ்டய சாதாரண திக்குவிஜய பிரபுகுல திலக மங்கள குணகணாலங்கிருத வாசாலக பரிபாக சிரோரத்ந மஹா புருஷச் செல்வச் சிரஞ்சீவி மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களுக்குச் சிவஞாநமுந் தீர்க்காயுளுஞ் சிந்தித மனோரத சித்தியுந் தேவகுருப் பிரசாதமுஞ் சகல பாக்கியமு மேன்மேலு முண்டாகுக.
நாளது விபவ ஆண்டு மீனரவி 14ஆம் தேதி வரையும் தெய்வப் பொன்னித் திருநதிசூழ்ந்த நவகோடி சித்தவாசபுரமாகிய ஞானக்கோமுத்திமாநகரத்தி லெம்மை யாண்ட ஞானசற்குருதேசிக சுவாமிகளாகிய மஹா சந்நிதானத் திருவடி நீழலின்கண் தங்களுடைய க்ஷேமாபிவிருத்தியையே சதா காலமும் பிரார்த்தித்து வாசித்திருப்பதில் ஞானநடராஜர் பூசையு மஹேசுவர பூஜையும் வெகு சிறப்பாக நடந்துவருகின்றன. இவ்விடத்து வர்த்தமானங்களெல்லாம் இதற்கு முன்னெழுதியிருக்கிற லிகிதத்தாலுஞ் சுப்பு ஓதுவார் முகவசனத்தாலும் விசதமாகுமே. மேற்படி யோதுவாரிட மனுப்பிய வலிய மேலெழுத்துப் பிள்ளை யவர்கள் லிகிதங்களுங் காகிதப் புஸ்தகங்களும் வந்து சேர்ந்த விவரமும் மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி அப்பாத்துரை முதலியாரவர்கள் பிரார்த்தனைப்படி நல்ல சுபதினத்தில் நாகைப்புராணம் அரங்கேற்றி வருவதும் தெரிந்து கொண்டோம். வலிய மேலெழுத்துப் பிள்ளையவர்கள் செய்யுட்களைத் திருத்தியனுப்பி யிருப்பதில் இதுவரை சிறப்புப் பாயிரமுமமைத்தனுப்பியிருக்கக்கூடுமே. அதற்குத் தொகையும் இதுவரை சேர்ந்திருக்கலாம். கந்தசாமி முதலியாருக்குக் காஞ்சிப் புராணம் முற்றுப்பெறச் செய்யும்படிக் கெழுதியதும் மற்றக் காரியாதிகளும் தெரிய விவரமா யெழுதியனுப்ப வேண்டும். ஆவராணி மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி முத்தைய பிள்ளையவர்கள் இவ்விடந் தரிசனத்திற்கு வருவதில் அவரைப் போன்ற கனவான்களைப் பார்க்க நாமும் விருப்பத்தோ டெதிர்பார்த் திருக்கிறோம். ஆசாரிய சுவாமிகளை அவ்விடந் திருக்கூட்டத்தார்களுடன் தாங்களும் போய்க் கண்டு தரிசித்த விவரமும் தெரிந்து மகிழ்ச்சியானோம். அவ்விடம் நம்முடைய மடத்து இரண்டு கொட்டடியையுந் திறந்துவிடும்படி மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சிவி திருவாரூர் ஐயாப் பிள்ளையவர்களுக்கும் எழுதியனுப்பியிருக்கிறது. நமச்சிவாயத் தம்பிரானுந் திருவெண்ணெய்நல்லூரிலிருந்து இன்னும் வந்து சேரவில்லை. பனசைத்தம்பிரானும் இவ்விடத்தில் வந்து தரிசித்துக் கொண்டுபோயிற்று. காசி இரகசியத்தைப் பற்றியும் நாச்சியார் கோவில் முதலியாரவர்கள் ……… மேற்படி சாஸ்திரியாரை யழைத்துக் கொண்டு வருவதாகவும் எழுதியிருக்கிறார்கள். வந்த விவரம் பின்பெழுதுவோம். மற்றுள்ளன பின்பு எழுதுவதாயிருக்கும். நமது இருதய முழுவது நிறைந்து நற்றவமனைத்துமோர் நவையிலா வுருப்பெற்ற குருபுத்திர சிரோமணியாய் விளங்குகின்ற தாங்கள் அரோக திடகாத்திரரா யிருந்தின்னும் பெரிதாயிருக்கிற திகந்த விச்ராந்த கீர்த்திப் பிரதாப ஜயகர பிரபல பெரும் பாக்கியங்க ளெல்லாம் மேன்மேலும் வந்து சிவக்ஷேத்ர குருக்ஷேத்ரங்களைப் பரிபாலனஞ் செய்து கொண்டிருக்க வேண்டுமென்று சிவபூஜா காலங்களிலு மஹேஸ்வர பூஜை வேளைகளிலும் வேண்டு-கொண்டிருக்கிறோம். மஹதைசுவரிய விபூதியனுப்பினோம். வாங்கித் தரித்துக்கொண்டு நித்தியானந்த சிரஞ்சீவியாயிருந்து பெருவாழ்வின் வளர்ந்தேறி வர வேண்டும்.
அம்பலவாணர் துணை”
விலாஸம்.
“இது நாகபட்டினத்தில் மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி நமதாதீன மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களுக்குக் கொடுக்கற்பாலது.”
***
(பெரியபட்டத்தில் இருந்தபொழுது எழுதிய திருமுகம்)
சிவமயம்
“நாளது சுக்கில வருடங் கடகரவி 17 – ஆம் தேதி வரையும் ஞான நடராஜர் பூஜையும் மகேசுவர பூஜையும் வெகுசிறப்பாக நடந்து வருகின்றன.
# # #
” புராணம் அரங்கேற்றி முடிவு செய்து கொண்டு விரைவில் நமதாதீ னாந்தரங்கமான பத்திபுத்தி பாகப் பண்புரிமையிற் சிறந்த விவேக சிரோமணியாய் விளங்குகின்ற தாங்கள் இவ்விடம் வந்து நமது நேத்திரானந்தம் பெறச்செய்து கண்டு கலந்து கொள்வதை எதிர்பார்த்திருக்கிறோம். மற்றுள்ளன பின்பு எழுதுவதாக இருக்கும்.
# # #
” புராணம் முற்றுப்பெற்று வரும்போது மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி ஓவர்சியர் முதலியாரவர்களையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும்.
நமஸ்ஸிவாயம்.”
$$$
தி. சுப்பராய செட்டியார்
உ
சிவமயம்
“அருளொரு வுருவா மாரியன் கழற்கீழ்
மருளறப் புகுது மனங்குது கலித்தே”
தங்களைத் தரிசித்து வந்த செகநாத பிள்ளை முதலியோர் தங்கள் க்ஷேமலாபங்களையும் கருணையையும் சொல்லும்போது தங்களை எப்போது பார்ப்போமென்று மனம் பதையா நின்றது. அடியேன் பாவியா யிருந்ததனாலேதான் தங்களை விட்டுப் பிரியும்படி நேரிட்டதே தவிர வேறு அன்று.
இங்ஙனம்,
விபவ தை 5-ஆம் தேதி தி. சுப்பராயன்
1869 தங்களூழியன்
——–
சுப்பராய செட்டியார் பிள்ளையவர்களுக்கு எழுதும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் குரு வணக்கமாக இவ்விரண்டடி அமைந்த ஒவ்வொரு செய்யுள் எழுதுவது வழக்கம். கிடைத்த சில கடிதங்களில் உள்ள செய்யுட்கள் வருமாறு :
1. சிந்தை யிருள்பருகிச் சேர்ந்தொளிரு மீனாட்சி
சுந்தரமாஞ் செய்ய சுடர். (பிரபவ வருடம் ஆடி மாதம் 28ஆம் தேதி)
2. தண்ணிய கருணை தந்தெனை யாண்ட
புண்ணிய போதகன் பொலிந்துவா ழியவே.
(விபவ வருடம் புரட்டாசி மாதம் 16ஆம் தேதி)
3, குருபரன் றாளைக், கருதுவை மனனே.
(விபவ வருடம் மார்கழி மாதம் 19ஆம் தேதி)
4. எனையும் புலவ ரிருங்குழாத் தொருவனா
நினைதரச் செய்தோ னிருசர ணினைகுவாம். (விபவ வருடம் மாசி மாதம் 6.)
5. நீக்கமி லின்ப நிறுவுங் குருமணிதாள்
ஆக்கமொடு சேர்வா ரகத்து. (சுக்கில வருடம் சித்திரை மாதம் 2ஆம் தேதி.)
6. என்பிழை பொறுத்தரு ளெழிற்குரு ராயன்
தன்பத மலரிணை தழைத்துவா ழியவே.
(சுக்கில வருடம் வைகாசி மாதம் 5ஆம் தேதி.)
7. குலவிய பெரும்புகழ்க் குருமணி யிணையடி
நிலவிய வுளத்திடை நினைதரு வாமே.
(சுக்கில வருடம் வைகாசி மாதம் 26ஆம் தேதி)
8. திருந்திய வுண்மைத் திறந்தரும் போதகன்
பொருந்திய பூங்கழற் போதுபுனை தானே.
(சுக்கில வருடம் ஆனி மாதம் 3 ஆம் தேதி)
$$$
சாமிநாத தேசிகர்
உ
சிவமயம்.
அன்புள்ள அம்மானவர்களுக்கு விண்ணப்பம்.
இவ்விடத்தில் யாவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமம் அறிவிக்கச் சொல்லவேண்டும். மணியார்டர் செய்தனுப்பிய கடிதத்திற்கும், பதில் வரவில்லையென்று மனவருத்தத்தோடு பின் எழுதிய கடிதத்திற்கும் பதில் வரவில்லை. இந்தக் கடிதங் கண்டவுடன் மணியார்டர் வந்து சேர்ந்த செய்திக்குப் பதிலெழுதச் சொல்லவேண்டும். மணியார்டர் கெடு தப்பிப்போகுமுன் பணம் வாங்கிவிட வேண்டும். கடிதம் வந்து சேரும் என்ற நம்பிக்கையினால் இதை [*] நட்பயிட்டாக அனுப்பினேன்.
சுக்கில வருடம் இங்ஙனம்,
ஆடி மாதம் 27ஆம் தேதி. 1870. சி. சாமிநாத தேசிகன்.”
திருவனந்தபுரம்.
——
[*] notpaid ஆக
விலாஸம்.
“இது நாகபட்டணத்தில் வந்திருக்கும் தமிழ் வித்வான் திரிசிரபுரம் ம- ள- ள- ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சமுகத்திற் கொடுக்கப்படுவது.“””
$$$
திருமங்கலக்குடி சேஷையங்கார்
உ
ஸ்ரீமது சகலகுண சம்பன்ன அகண்டித லஷ்மீ அலங்கிருத ஆசிருத ஜன ரக்ஷக மகாமேரு சமான தீரர்களாகிய கனம் பொருந்திய மகா ராஜமான்ய ராஜஸ்ரீ பிள்ளையவர்கள் திவ்விய சமுகத்திற்கு ஆசிருதன் திருமங்கலக்குடி சேஷையங்கார் அநேக ஆசீர்வாதம்.
இவ்விடம் தஞ்சையில் தங்கள் பெருங்கருணையால் க்ஷேமமாயிருக்கின்றேன். தங்கள் க்ஷேம சுபாதிசயங்கட்கெழுதியனுப்பும்படி உத்தரவு செய்யப் பிரார்த்திக்கின்றேன். தாங்களன்புடன் வரைந்தனுப்பிய நாளது மாதம் 2ஆம் தேதி உள்ள கடிதம் கிடைத்தது. கோயிலுக்கும் இதற்குமாயலைந்து கொண்டிருந்ததால் பங்கியனுப்பத் தவக்கப்பட்டது. அதை மன்னிக்க வேண்டும். [§] இவ்விடம் வேந்திருக்கைக் கலைமகள் விளக்க இல்லிடத்திலிருந்து எழுதுவித்த ஸ்ரீ அம்பர் க்ஷேத்திர புராணக் கிரந்த புத்தகம் 1- க்கு ஏடு 40; மேற்படி புத்தகத்தை இத்துடன் பங்கி மார்க்கமாய்த் தங்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன். வந்து சேர்ந்ததற்குப் பதில் கடிதமனுப்பப் பிரார்த்திக்கிறேன். சென்னையிலிருந்து ஹைகோர்ட்டு வக்கீல் ஸ்ரீநிவாசாசாரியரும், மற்றொரு துரையும் தரும் நூல் சில வேண்டி அங்ஙனம் பெருநீதியிடத்து உத்தரவு இவ்விடம் கலெக்டருக்குப் பெற்று வந்து ஒரு திங்கள் பிரயாசைப்பட்டுப் பார்த்தும் அகப்படாமையாற் போய்விட்டார்கள். பின்னும் மாயூரம் கலெ. அவர்கள் சில ஸ்தலக் கிரந்தங்களைத் தாம் பார்க்க வேண்டி 200 கிரந்தங்களைக் குறித்து அனுப்ப 40 கிரந்தம் அகப்பட்டு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாய் இன்ன பின்ன பக்கத்திலிருக்கிறதென்றறிய ஒரு நூறு அசாமிகளாய் ஒரு ஆண்டு பிரயாசைப்படினும் அமையாத மிகுதியுள்ள தாயும், பகிரங்கத்திற் கிடைக்கக்கூடாமல் பிரைவேட்டிலாக வேண்டியதாயுமிருந்தும், அத்தல மகாதேவனருளினாலும், கனம் பொருந்திய தங்கள் கீர்த்திப் பிரதாபத்தினாலும் இப்படிப்பட்ட அருமையான தல அபிமானிகள் முப்பணிகளிற் சிறந்த பணி யிஃதேயென்று கருதித் துணிந்த பத்திப் பொருளினாலுமே இந்தக் கிரந்தம் அகப்பட்டதேயன்றி, ஏகதேசம் வழங்கிய பொருட் செலவினாலென்று நினைக்கத் தகாது. வெகு பிரயாசைப்பட்டு 4 – மாதகாலமாய்ப் பரிசீலனை செய்து பார்த்ததில் இனியகப் படாதென்றே நினைத்துவிட்டோம். ஏதோ அகஸ்மாத்தாய் ஒரு பெரும் புத்தகத்தின் மத்தியிலிருப்பதாய்ப் பார்த்து வந்ததில் அகப்பட்டது. ரூ. 20 செலவாயிருக்கிறது.
பிரயாசைப்பட்ட பிராமணருக்கு உயர்ந்த [$] பட்டம் தருவதாயுஞ் சொல்லியிருக்கிறேன். இந்தச் சங்கதியை அத்தல அபிமானிகளுக்குச் சொல்லி அவ்வேதியருக்கு நடப்பித்தால் மிக்க புண்ணியமாகும்.
சுக்கில வருடம் இங்ஙனம்,
மார்கழி மாதம் 7ஆம் தேதி தங்களாசிருதன்,
தஞ்சை . தி. சேஷையங்கார்.
“இந்தப் பங்கியை ரயில் ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள்ளச் செய்ய வேண்டும்.”
——
[§] தஞ்சை அரண்மனைச் சரஸ்வதி மகால் புத்தகசாலை.
[$] பட்டம் – ஆடை
விலாஸம்.
“இது நாகபட்டணம் கட்டியப்பர் கோவில் சந்நிதானம் திருவா வடுதுறை மடத்தில் விஜயமாயிருக்கிற திரிசிரபுரம் மகாவித்துவான் ம-ள-ள- ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திவ்விய சமுகத்திற்கு வருவது”.
$$$