-சௌந்தரா கைலாசம்
திருமதி சௌந்தரா கைலாசம் (1927- 2010), கரூரைச் சார்ந்தவர்; மறைந்த முன்னாள் நீதிபதி கைலாசம் அவர்களின் மனைவி; எழுத்தாளர்; இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு, அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழு போன்றவற்றில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தவர். யாப்பிலக்கணத்துடன் மரபுக் கவிதைகள் புனைவதில் வல்லவர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது…

மோகத்தை யகற்றி, இன்ப
..முகத்தினைக் கண்டே, அந்த
ஏகத்தை, இணையில் லாத
..எழிலினை எண்ணி எண்ணிச்
சோகத்தை மாற்று; நெஞ்சுள்
..சுகத்தினைக் காண்என் றார்த்த
வேகத்தை, விவேகா னந்த
..வெள்ளத்தை வியவார் யாரே?
தொடுவது பாவ மென்று
..துரத்திடில் சிலரை, நீங்கள்
கெடுவது உறுதி யென்று
..கிளர்ந்தவன், புரட்சிச் சாது!
படுவது எதுவோ நெஞ்சில்
..பயமிலா அதனைச் சொல்லி
விடுவதே தொழிலாய்க் கொண்டு
..விளங்கினான் நிகரில் லாது!
நினதடி தஞ்ச மென்று
..காளியின் நினைவில் வாழும்
தனதொரு குருவை, ராம
..கிருஷ்ணராம் சாந்தத் தேவை
உனதெனக் கொள்ளென் றிந்த
..உலகினுக் குவந் தளிக்கும்
மனிதனை, விவேகா னந்த
..மணியினை, மறவோம் நாமே!

பலமதப் பார்வை தன்மேல்
..படிந்திடத் தன்ம தத்தின்
நலமதை எடுத்து வேற்று
..நாட்டிலும் முழக்கி, மக்கள்
குலமது உயர ஞானக்
..கொடியினைப் பிடித்த வங்கத்
தலைமகன் விவேகா னந்தன்
..தாளிணை போற்றி! போற்றி!
வயிறதே உணவில் லாமல்
..வாடிடும் போது ஞானப்
பயிரதோ வேர்பி டிக்கும்?
..பசியிலே வெற்று சாகும்
உயிரது தழைக்க எண்ணி
..உழைத்திடு முதலில்; தானே
துயரறும் எனவு ரைத்த
..துறவி தாள் போற்றி! போற்றி!
நன்றி: தமிழர் கண்ட விவேகானந்தர் (தொ.ஆ: திரு. பெ.சு.மணி), வானதி பதிப்பகம், 1974
$$$