அமிர்தம் தேடுதல்

-மகாகவி பாரதி

 “நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கின்றது. மகத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நான் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வர வேண்டும் ” - இதனைச் சொல்பவர் மகாகவி பாரதி. இதற்கான வழிமுறையையும் சொல்கிறார்...

“காக்க கின்னருட் காட்சியல்லாதொரு போக்குமில்லை’’

-தாயுமானவர்.

பல வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான்.

“தூங்கையிலே வாங்குகிற மூச்சு–அது
சுழிமாறிப் போனாலும் போச்சு’’


இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாகி விட்டது. என்னடா இது இந்த உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுகத்தில் நான் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும்? ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய்கிறான். அறிவே தமது வடிவமாக அமைத்திருக்கிறான். அறிவு, இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்பமும் கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போதும் இவ்வுலகம் இன்பம். இந்த உலகம் கவலையற்ற தாகும்; இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின் மீதுதான் நம்மால் சஞ்சரிக்க முடிகிறது. இது போல் கணக்கில்லாத மண்டலங்கள் வான்வெளியிலே சுழல்கின்றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினாலே காண்கிறோம். அவற்றிலே ஒரு பகுதியின் வடிவங்களைக் கண்ணாலே தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுதும் ஒரு மேற்கட்டி போல் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி; சூரியன் செய்கிற ஆயிர விதமான ஒளியினங்கள், மலை, காடு, நதி, கடல்- அழகு.

தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் அறிவினாலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர், குளித்தால் இன்பம்: குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாலே இன்பம்; மண், இதன் விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம், இதன். தாங்குதல் இன்பம்; காற்று, இதைத் தீண்டினால் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினால் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக்கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல் இன்பம்; உழைத்தல் இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம், கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல், அறிதல்- எல்லாம் இன்பந்தான்.

துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை. ஆனால் இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன. துன்பங்களை அறிவினால் வெட்டி எறிந்து விட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ள வேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டி எறியத் திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால், அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.

நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கின்றது. மகத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நான் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வர வேண்டும்.

நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத் தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானால் அதற்குக் காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். ‘’பொறுத்தவன் பூமியாள்வான்”. “பதறின. காரியம் சிதறும்’’. இடையே குறுக்கிடும் மரணம் இங்ஙனம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மால் இயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டு நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது. இதனிடையே மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது?

தூங்கையிலே வாங்குகிற மூச்சு அது சுழிமாறிப் போனாலும் போச்சு! என்ன ஹிம்ஸை இது? நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். ‘அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை’ என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டி வராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம். அதுவரை நாம் சாக மாட்டோம் நம் இச்சைகள் நம்முடைய தர்மங்கள் நிறைவேறும் வரை நமக்கு மரணமில்லை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s