-கவிஞர் பெ.சிதம்பரநாதன்
கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன், வானம்பாடி இயக்க கவிஞர்களுள் ஒருவர்; கோவையில் வசிக்கிறார். ‘ஓம் சக்தி’ ஆன்மிக, இலக்கிய மாத இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்; ‘அரண்மனைத் திராட்சைகள், வைகறை, பொய்கை’ஆகிய கவிதை நூல்களையும், ‘சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள்’ என்ற கட்டுரை நூலையும் எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது….

நூற்று இருபத்து ஐந்து*
ஆண்டுகளுக்கு முன்பு
.
பாரத மாதாவின்
கர்ப்ப வாசல் கதவுகள்
பிரளய உதிரத்தில்
பிய்த்தெறியப்பட்டு
.
பொங்கியோடிய
குங்கும வெள்ளத்தில்
சிக்கிக்கொண்ட
சிங்கக் குட்டியொன்று
புரண்டு புரண்டு
கர்ஜனையோடு கரையேறியது.
.
ஆம்- அது
சிசுக்களுக்கு உரிய
சிணுங்கல் அல்ல
கர்ஜனை.
.
ராணுவத் தளபதிகளின்
அணிவகுப்பைப் பார்வையிடும்
ராஜ ரௌத்ரம்.
.
ஆணவம்- அலட்சியம்
இரண்டின் குடல்களையும்
உருவி மாலைபோட்டு
நிற்பது போன்றதொரு
காம்பிரியக் காட்சி.
.
விளையாட்டு மைதானம் போன்ற
விசால மார்பு-
.
அலைகள் குமுறிக் கொந்தளிக்கும்
அட்லாண்டிக் சமுத்திரத்தை
அப்படியே தூக்கிவரக் கூடிய
இரண்டு இமயத் தோள்கள்-
.
இங்கே இப்படி
வருணிக்கப்பட்டுக் கொண்டிருப்பது
ஈட்டி கேடயத்தோடு
இருபது வயதில் புறப்பட்டு வந்தானே
மாவீரன் அலெக்சாண்டர் அல்ல.
.
கட்டிக் கொண்டிருந்த
காவியோடும் – உடலில்
ஒட்டிக் கொண்டிருந்த
ஆவியோடும் – அதே
அலெக்சாண்டரின் வயதில்
அமெரிக்காவுக்குப் புறப்பட்ட
விவேகாநந்தரை.
.
அவன் புறப்பட்டது
அகிலமெல்லாம் ஆள்வதற்கு!
.
இவன் புறப்பட்டது
சந்யாசியாய் வாழ்வதற்கு!
.
பரமஹம்சரை மட்டும் – இவர்
பார்க்காமல் இருந்திருந்தால்
.
வங்கத்திலும்
வரலாறு
மற்றுமொரு
மராட்டிய சிவாஜியை
சந்தித்திருக்கும்!
.
இந்த சிவாஜியோ
இந்து மதத்திற்கு
அத்வைதச் செங்கோலை
வழங்கியவர்.
.
தேவகுமாரன்
கன்னி மேரியை
தேர்ந்தெடுத்து – அவளுக்குள்
ஒரு சிசுவாக
சிருஷ்டியானதைப் போல
.
நமது தாய் ஒருத்திக்குள்
நரேந்திரனும் பிரதிஷ்டையானான்.
.
முப்பத்து இரண்டு வயதுக்குள்
கப்பல்களே சுமக்க முடியாத
ஞானப் பொக்கிஷங்களைச்
சுமந்து வந்ததால் தான்
நரேந்திரன் – விவேக
நந்தனானார்.
.
எழுந்து நிற்கவே சக்தியற்ற
பாமரனைப் பார்த்து
எழு எழு என்றார்
.
அவனோ
எழுந்த பிறகும்
தூங்குவதைப் பார்த்துத் தான்
விழி விழி என்றார்.
.
ஆனாலும் பலர்
திரு திரு என்று தான் விழித்தார்கள்
கருத்து விழிப்பு அவனுக்கு
கைவரவே இல்லை.
.
உழையுங்கள்! உழையுங்கள்!
என்றார்- காரணம்
சுபிட்சத்திற்கான
சூத்திரமே உழைப்புத் தானே!
.
நாமோ
எழுந்தது உண்மை
விழித்ததும் உண்மை
விழித்த வினாடி முதல்
உழைக்க மறந்து
பேசவே தலைப்பட்டோம்.
.
அங்கிங்கெனாதபடி
எங்கும் எதிலும் எப்போதும்
பேச்சு பேச்சு பேச்சு
பொழுது விழுந்தால் போதும்
பொதுக் கூட்டம் தான்.
.
மைதானங்களிலே அரசியல் பேச்சு
வீடுகளிலோ சினிமா பேச்சு
கோவில்களிலோ சமயப் பேச்சு
கல்லூரிகளிலோ கீச்சு மூச்சு..
எல்லாம் போச்சு
அதனால்
எல்லாம் போச்சு.
.
ஆரம்பப் பள்ளிகளில்அன்றைக்கு
பேசாதே பேசாதே என்று
அடிக்கடி ஆசிரியர் சொன்னதற்கு
அர்த்தம் புரிகிறதா இப்போதாவது?
.
இனியாவது
மேடைகளை விட்டிறங்கி
காடுகரை செல்வோம்.
.
திண்ணைகளை விட்டிறங்கி
பண்ணைகள் செல்வோம்.
உழைப்போம் உயர்வோம்.
.
குறிப்பு: * சுவாமி விவேகானந்தரின் 125-வது ஜெயந்தியின் போது எழுதப்பட்ட கவிதை இது. கவிஞரின் ‘வைகறை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது இக்கவிதை. வெளியீடு: அகரம், தஞ்சாவூர்.