தயாநிதி மாறனால் ஏற்பட்டது மாபெரும் நிதியிழப்பு மட்டுமல்ல!

-எஸ்.குருமூர்த்தி

திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி  ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில்  எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும்  (2015, 2022) வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது முதல் கட்டுரை)...

மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனும், சன் நெட்வொர்க் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனும், பிஎஸ்என்எல் பெயரைச் சொல்லி சட்ட விரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதை 4 ஆண்டுகளுக்கு முன்னரே  ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழும் ‘தினமணி’யும் அம்பலப்படுத்தின.

இந்த மோசடியை 2011-இல்  ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளிப்படுத்தியபோது இரு வகைகளில் சிறு பிழைகள் நிகழ்ந்தன. கள்ளத்தனமான பிஎஸ்என்எல் இணைப்புகள் மூலம் சென்னை போட் கிளப்பில் உள்ள மாறன் சகோதரர்களின் இல்லத்தில் இயங்கிய சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தில் 323 அதிவேக தொலைபேசி இணைப்புகள் இருந்ததாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால், அந்த எண்ணிக்கை அதைப்போல இரு மடங்கு- 764 என்பது பின்னர் தெரியவந்தது. அடுத்ததாக, இந்த சட்ட விரோத தொலைபேசி இணைப்பகம் 6 மாதங்கள் இயங்கியதாக 2011-இல் தொடங்கிய விசாரணையின்போது குறிப்பிடப்பட்டது. ஆனால், தற்போது அந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் இயங்கிய காலம் ஜூலை 2004 முதல் ஜூலை 2007 வரையிலான 36 மாதங்கள் என்பது தெரியவந்துள்ளது.

அப்போது கிடைத்த இந்த இரு தகவல்களின் அடிப்படையில் 2011-இல் விசாரணை நடந்ததால் மோசடியின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் மூல விசாரணை இந்த மோசடியைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. அவ்வாறு குறைத்து மதிப்பிட்டபோதிலும் அதுவே மாபெரும் அளவில் இருந்தது. இந்த மோசடியின் அளவு, 2011-இல் மதிப்பிட்டதைவிட தற்போது மேலும் பூதாகரமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சிலர் இந்த மோசடியின் மதிப்பைக் குறைத்துக் காட்ட முயன்று, இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ. 1.8 கோடி மட்டுமே என்ற செய்தியைப் பரப்புகின்றனர். இவ்வாறு மோசடியின் மதிப்பை அவர்கள் குறைத்துக் காட்டுவதற்கு, இந்த இணைப்புகள் அனைத்தும்  ‘அலுவலகப் பயன்பாட்டுக்காகவே’ உபயோகிக்கப்பட்டன என்ற தயாநிதி மாறனின் வாதமே அடிப்படையாக உள்ளது. இந்த இணைப்புகள் அனைத்தும் தீர்க்கமான திட்டத்துடனேயே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கள்ளத்தனமாக சன் டி.வி.யின் வர்த்தகப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமைச்சர் மாறனின் இல்லத்திலிருந்து சன் டி.வி. அலுவலகம் வரை பூமிக்கடியில் ரகசியமாகப் புதைக்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் கொண்டுசெல்லப்பட்ட 764 பிஎஸ்என்எல் இணைப்புகளே உறுதியான ஆதாரங்களாக உள்ளன.

இதனால் ஏற்பட்ட இழப்பை வர்த்தகரீதியாகக் கணக்கிட்டால் பல நூறு கோடிகளாக இருக்கும். இந்த இணைப்புகள் அலுவலகப் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டவை என்பது உண்மையெனில், இங்கே குற்றம் எங்கும் நிகழவே இல்லையே? இந்த இணைப்புகள் அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டன என்பது உண்மையெனில், தயாநிதி மாறன் எந்தக் கவலையுமின்றி கையை வீசிக்கொண்டு செல்லலாமே? அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டிற்கென அமைத்த 764 அதிவேக தொலைபேசி இணைப்புகளுடன் கூடிய இணைப்பகம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சென்னை டெலிபோன்ஸ் தலைமைப் பொது மேலாளர் (சிஜிஎம்) பெயரில் ஏன் நடத்தப்பட்டது? இதில் ரகசியம் பேணப்பட்டதும், “அலுவல் பயன்பாட்டுக்கு’ அதிகாரப்பூர்வமற்ற வகையில் தொலைபேசி இணைப்பகம் இயங்க அனுமதிக்கப்பட்டதும் ஏன் என்பது முதல் கேள்வி.

உண்மை என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிஜிஎம் பெயரில் 764 இணைப்புகளை சேவை இணைப்புகளாகக் கொண்டு மாறன் சகோதரர்கள் இவற்றை தங்கள் பயன்பாட்டுக்கு கடத்திச் சென்றுள்ளனர். அதற்காகவே சென்னை, போட் கிளப் பகுதியிலுள்ள மாறனின் இல்லத்தில் இந்த இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. “அலுவலகப் பயன்பாட்டுக்கானதாகக் கூறப்படும்’ இந்த 764 சேவை இணைப்புகளைப் பதிக்க ஆன செலவுதான் ரூ. 1.8 கோடி. இந்தத் தொகையைத்தான் மோசடியின் சிறு இழப்பாகக் குறைத்துக்காட்ட முயல்வோர் தெரிவித்துள்ளனர். 764 அதிவேக இணைப்புகளும் அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்காகவே பதிக்கப்பட்டன என்று முட்டாள்கள் மட்டுமே நம்புவர்.

மாறன் சகோதரர்களின் வாதம் மோசடியானதாகும். இந்த 764 பிஎஸ்என்எல் இணைப்புகளும் வர்த்தகப் பயன்பாட்டிற்காகவே உபயோகப்படுத்தப்பட்டன என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு இயல்பான ஆதாரமாக இருப்பது, சென்னை- ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தயாநிதி மாறனின் போட் கிளப் இல்ல சந்திப்பிலிருந்து அண்ணா சாலையிலுள்ள சன் டி.வி. அலுவலகத்திற்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் ஆகும். இந்த கேபிளில் இருந்தே 764 அதிவேக தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டுள்ளன. எனவே, இந்த இணைப்புகள் அனைத்தும் அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டுக்கானவை என்றும், இதன் இழப்பு ரூ. 1.8 கோடி என்றும் முட்டாள்கள் மட்டுமே கூறுவர். இது சதி, வஞ்சகம், ஏமாற்றுதல், லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றை உள்ளடக்கிய குற்றம்.

சன் டி.வி. லாபம் பெறுவதற்காக, பொதுமக்களை பல நூறு கோடி ரூபாய் இழப்புக்கு உள்ளாக்கிய குற்றம் இது. இந்த 764 இணைப்புகளும் வர்த்தக நோக்கில் மோசடியாக உபயோகிக்கப்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. இல்லையெனில் இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வுக்கு அவசியம் என்ன வந்தது?

இந்த 764 அதிவேக இணைப்புகளையும் சன் டி.வி.க்கு பிஎஸ்என்எல் வர்த்தக ரீதியாக வழங்கியிருந்தால், அதனால் என்ன இழப்பு ஏற்பட்டிருக்கும்? சன் டி.வி உபயோகித்துவரும் ஒவ்வொரு அதிவேக தொலைபேசி இணைப்புக்கும் ஆண்டுக் கட்டணமாக ரூ. 10 லட்சம் செலுத்துகிறது. இது அதிகபட்ச இலவச அழைப்புகளுக்கு மட்டுமே. அதற்கு மேல் வரும் அழைப்புகளுக்கு தனிக் கட்டணம் உண்டு. இந்த அடிப்படையில் கணக்கிட்டால் 764 அதிவேக இணைப்புகளுக்கு சன் டி.வி. ஆண்டுக்கு ரூ. 76.4 கோடி செலுத்தியிருக்க வேண்டும். 2004 முதல் 2007 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் இந்த இணைப்புகளுக்கு மும்மடங்காக ரூ. 229.2 கோடி செலுத்தியிருக்க வேண்டும். இந்த இணைப்புகளுக்கு உரிய கட்டணம் மட்டுமே இத்தொகையாகும்.

இந்த இணைப்புகள் அனைத்தும் கணக்கீட்டு வளையத்துக்குள் வராத வகையில் அமைக்கப்பட்டதால் இதன் உண்மையான உபயோகக் கட்டணத்தை கணக்கிட முடியாது. உபயோகக் கட்டணத்தைக் கணக்கிட முடியாத வகையில் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. எனினும், 30 இணைப்புகள் கொண்ட ஒரு தொகுப்புக்கு மாதம் 45 நிமிடங்கள் என்று உபயோகத்தைக் கணக்கிட்டாலும் அவற்றின் மதிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பல நூறு கோடி ரூபாயாக இருக்கும். தவிர, இந்த பிரத்யேக தொலைபேசி இணைப்பகத்தின் இலவச தொலைபேசி சேவையை விரும்பிய பலருக்கும் மாறன் சகோதரர்கள் அளித்துள்ளனர். இது ஒருவகையில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட தொலைபேசி சேவையாகும்.

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய புலனாய்வில், சன் டி.வி.யின் அலுவலர்கள் பலருக்கு மாறன் சகோதரர்களின் இந்த இலவச தொலைபேசி அமைப்பில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இந்த சட்டவிரோதமான, கள்ளத்தனமான தொலைபேசி இணைப்புகள், அரசுக் கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய சட்டரீதியான மோசடி மட்டுமல்ல. கண்காணிப்பில்லாத தனியொரு தொலைபேசி இணைப்பே தேசியப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் விசாரணைக்கு உரியதாகும். அவ்வாறிருக்க, இங்கு எந்தக் கண்காணிப்பிலும் இல்லாத 764 அதிவேக தொலைபேசி இணைப்புகள்- அதாவது கட்டுப்பாட்டிலேயே இல்லாத முழுமையான தொலைபேசி இணைப்பகத்தின் நிலையை என்னென்பது? அதுவும் தனியார் ஒருவரின் இல்லத்தில் அதிகாரியின் பெயரில் கள்ளத்தனமாக இந்த இணைப்பகம், அதன் பயன்பாட்டை மறைத்து இயங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அப்போது பிஎஸ்என்எல்லின் சென்னை டெலிபோன்ஸ் தலைமைப் பொது மேலாளராக இருந்தவர் யார் தெரியுமா? அவர்தான் எம்.பி.வேலுசாமி. மத்திய முன்னாள் அமைச்சரும், எல்டிடிஈ பயங்கரவாதிகளுக்கு உதவியதாக தடா வழக்கில் கைதானவருமான சுப்புலட்சுமி ஜெகதீசனின் நெருங்கிய உறவினர் இவரது மனைவி.

பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்த மூத்த அதிகாரி ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய சிஜிஎம் பதவி உயர்வை மாற்றி, வேலுசாமியை அந்த இடத்தில் அமர வைத்தவர் அமைச்சர் தயாநிதி மாறன். எனவே இந்த மோசடி தொலைபேசி இணைப்பகத்தால் ஏற்பட்ட பாதிப்பு, நிதி இழப்பு, பாதுகாப்புப் பிரச்னைகள் மட்டுமல்லாது, வேறு கவலைகளையும் ஏற்படுத்துகிறது.

சிஜிஎம் ஆக இருந்த வேலுசாமி இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தை தனது பெயரில் இயக்கியதுடன், இதன் அழைப்புகளைக் கண்காணிப்பதைத் தவிர்த்திருப்பது புதிரானதாக உள்ளது. இந்த மோசடியான இணைப்பகத்தை தேசவிரோத சக்திகள் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதால் இதை தீவிரமாக விசாரிப்பதும் அவசியம் அல்லவா?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தொலைபேசி இணைப்பகம் நடத்தப்பட்ட அதே 2004- 2007 காலகட்டத்தில் தான் இலங்கையில் எல்டிடிஈ-க்கு எதிரான யுத்தம் உச்சத்தை அடைந்திருந்தது. எனவே, எல்டிடிஈ-யின் ஆதரவாளர்களான திமுகவின் ஊதுகுழலாக விளங்கிய சன் டி.வி.யால் பயன்படுத்தப்பட்ட- தடா கைதியுடன் நெருங்கிய தொடர்புடைய, சென்னை டெலிபோன்ஸ் சிஜிஎம் பெயரில் நடத்தப்பட்ட- இந்த 764 அதிவேக தொலைபேசி இணைப்புகள் குறித்து தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் ஏன் விசாரணை மேற்கொள்ளக் கூடாது? 

  • நன்றி: தினமணி (ஜூலை 2015)
  • தமிழில்: வ.மு.முரளி

$$$

Leave a comment