-ராகுல் பண்டிதா

அந்தக் காணொளியை முதலில் பார்த்தபோது சிறப்பாக எதுவும் தெரியவில்லை. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் நடத்தும், டெலிகிராம் தளங்களில் வழக்கமாக வெளியாகும் காணொளி என்று புலனாய்வுத் துறையினரும் பயங்கரவாதத்தைப் பற்றி எழுதும் செய்தியாளர்களும் நினைத்தனர். பாகிஸ்தானில் தலை முதல் கால் வரை புர்கா அணிந்த பெண்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி. அதன் பின்னணியில் இஸ்லாமிய சமயப் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தது அந்தக் காணொளியில்.
சில நிமிடங்களுக்குப் பிறகு கேமரா ஒரு பெண்ணிடம் நின்றுள்ளது. அவள் கைவிரலில் இரண்டு மோதிரங்கள் போட்டிருந்ததைக் காட்டியது. அதுவரை சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த புலனாய்வுத் துறையினர் கவனமாகப் பார்க்கத் தொடங்கினர். அவர்களிடையே ஒரு அமைதியின்மை, சலனம் ஏற்பட்டது.
இந்திய புலனாய்வுத் துறையினர் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ‘லஷ்கர் –இ- தொய்பா’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஹாரிஸ் தார் – இன் மனைவிதான் அவள்.
பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் –இ- தொய்பா , ஜெய்ஸ் –இ- முகமத் ஆகியவற்றின் மூத்த தலைவர்களின் மனைவிமார்கள் இப்போது அந்த அமைப்புகளின் செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்கள் என்பதை காஷ்மீர் காவல் துறை உயரதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
அந்த அதிகாரியின் கூற்றுப்படி முஸ்லிம் பெண்களின் தற்கொலைப் படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டுக் கிடங்குகள், ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களைத் தாக்குவது, காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளைச் செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்குத் தருவது, ஆதரவாளர்களைத் திரட்டி அவர்களைப் பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்தப் பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஜெய்ஸ், லஷ்கர் அமைப்பினர் பெண்கள் படைக்கு ஆள் சேர்க்க பாகிஸ்தான் முழுக்கவும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சிகளை பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தினரே முன்னின்று நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத வலைப் பின்னலை உடைத்தெறிந்து வருகிறது இந்திய அரசு . அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தப் பெண்கள் படை தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் ஒப்பிட்டளவில் பாதுகாப்புப் படையினரின் கண்ணுக்குத் தெரியாதபடி மறைவாக உள்ளனர் . குறிப்பாக ஆசிரியர், மருத்துவர் போன்ற சமூகப் பணியாளர் போர்வையில் அவர்கள் பாதுகாப்புப் படையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சுலபமாக நகர்கின்றனர்.
பெண்கள் என்ற சுலபமான போர்வையைப் பற்றி பயங்கரவாத அமைப்புகள் நீண்ட காலமாகவே நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எல்டிடிஇ.யின் பெண் புலிகள் படை தொடங்கி, பூக்கோ ஹராம் (நைஜீரியாவை மையமாகக் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு) வரை உள்ள பெண்கள் படை இதை வெளிப்படுத்துகின்றது. ஆனால் காஷ்மீரில் பழமைவாத சமூக அமைப்பு இதற்கு எதிராக இருந்தது. காஷ்மீரில் ஊடுருவல் செய்யும் பயங்கரவாதிகள் தொடங்கி கல்லெறிபவர்கள் வரை அனைவரும் ஆண்களே. அவர்கள் பயங்கரவாத அமைப்புகளின் வலைப்பின்னலில் வெளிப்படையான முகமாக இருப்பார்கள். பின்னர் ஒரு நாள் அவர்கள் திடீரென காணாமல் போவார்கள். பிறகு சமூக வலைதளங்களில் நீண்ட துப்பாக்கிகளை ஏந்திய படங்கள் வெளியாகும். அவர்கள் தீவிரவாதியாக திரும்பி வந்ததை அறிவிப்பார்கள்.
இதற்கு நேர் எதிராக பெண்கள் வன்முறைக்கு அருகில், அதேசமயம் அதில் ஈடுபடாமல் அவற்றின் ஆதரவாளராக, வன்முறையாளர்களுக்கு செய்தித் தொடர்பாளராக இருப்பார்கள். காஷ்மீரில் நடக்கும் கிசுகிசுப்பில் அந்த வீட்டுக்கு அடிக்கடி வரும் காதலன், காதலனால் மனமுடைந்த பெண்கள், அவர்களது குமுறல்கள் பல நேரங்களில் பாதுகாப்புப் படையினருக்கு உதவியாக இருந்து பயங்கரவாதிகளை கைது செய்யவும் சுட்டுக் கொல்லவும் உதவி உள்ளன.
லஷ்கர் பயங்கரவாதி அபு தூஜானா, ஜெய்ஸ் உயர்மட்டத் தலைவன் சாகித் சௌகத் போன்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது, அவர்களுடன் தொடர்பிலிருந்து பெண்கள் கொடுத்த துப்பால். 2019 இல் இஷ்ரத் முனீர் ஷா என்ற இளம்பெண்ணை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவளது துரோகத்தால்தான் ஜீனத்துல் இஸ்லாம் என்ற பயங்கரவாதத் தலைவன் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டான் என்பது அவர்களது குற்றச்சாட்டு.

புல்வாமா தாக்குதலை விசாரணை செய்த என்ஐஏ சம்பவ இடத்தில் உமர் பாரூக் என்பவனது அலைபேசியைக் கண்டெடுத்தனர். அவன்தான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன்; ஜெய்ஸ் பயங்கரவாத அமைப்பை ஆரம்பித்த மசூத் ஹசாரின் சகோதரி மகன். அலைபேசியில் இருந்த படங்களில் 22 வயதுள்ள ஒரு உள்ளூர்ப் பெண்ணான இன்சா ஜான் என்பவளுடன் நெருக்கமாக இருக்கும் படமும் இருந்தது. அதைக் கொண்டு அவளைப் பிடித்தனர். அந்தப் பெண்ணின் சகோதரி மகளுடனும் அவன் நெருக்கமாக இருந்த படங்களை காட்டிய போது அவள் மனம் மாறி அவனைப் பற்றி பேசத் தொடங்கினாள்.
அவளுடன் உறவில் இருந்த போது பாரூக் வாட்ஸ்அப் விடியோ அழைப்பில் பாகிஸ்தானில் உள்ள தனது தாய் , மனைவி அபீரா பிவியை அறிமுகம் செய்தானாம். அவளுக்கு இன்சா ஜானிடம் பொறாமை வருவதற்கு பதிலாக, ‘பாரூக்கின் தேவைகள் எல்லாவற்றையும் அவன் விரும்பியபடி நிறைவேற்றித் தருவது உன் கடமை’ என்று அபீரா கூறினாள் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலையும் சொன்னாள் . பின்னாளில் உமர் பாரூக் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டான்.
உமர் பாரூக்கின் மனைவி அபீரா பிவி, மசூத் ஹசாரின் சகோதரியான சதியா அசார் (இவளது கணவன் யூசுப் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்டான்) ஆகியோர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட பெண்களுக்கு மூளைச் சலவை செய்யும் பணியில் முன்னணியில் உள்ளனர்.

ஜெய்ஸ் அமைப்பு 2025 அக்டோபரில் ‘ஜமாத் உல் மோமினத்’ என்ற பெயரில் பெண்கள் பிரிவை அறிவித்தது. தில்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பந்தப்பட்ட டாக்டர் ஷாஹீன் சயீத் என்ற லக்னோவைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபீரா பிவியுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவள் மேலும் பல பெண்களை அபீராவுக்கு அறிமுகம் செய்து பெண்கள் தற்கொலைப் படையை தயார் செய்துள்ளாள் . அவள் கைது செய்யப்பட்ட பின் இது தெரிய வந்துள்ளது. எத்தனை பெண்கள் என்பது தெரியவில்லை.
பாகிஸ்தானில் சுமார் 5,000 பெண்களை தங்கள் படையில் ஜெய்ஸ் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. தற்கொலைப் படையினராகவும் வெளிப்படையான பணியில் சந்தேகம் வராதபடி அவர்கள் செயல்படுகிறார்கள். கராச்சி, பஹவல்பூர், முஷாபராபாத், கோட்லி, மான்சீரா பகுதிகளில் பெண்கள் அமைப்பின் மையங்கள் உள்ளதாக, உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்ஸ் அமைப்பைப் போலவே லஷ்கரும் அதே பாணியில் பெண்கள் படையை ஆரம்பித்துள்ளது. ‘தாயீபத்’ என்ற பெயரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூரில் தொடங்கப்பட்டுள்ளது. இபாத் சயீத் என்ற பெண்மணி அதன் உஸ்தாஹ – வாக (தலைவி) செயல்படுகிறார்.
முஸ்லிம் பெண்கள் லீக், முஸ்லிம் கேர்ள்ஸ் லீக் என்ற இரண்டும் லஷ்கரின் முன்னணி அமைப்புகள். மரியம் ரஹ்மான் என்பவள் பெண் கல்வி என்ற போர்வையில் இளம்பெண்களைக் குறி வைத்து செயல்படுவதாக உளவுத்துறையினர் கூறுகின்றனர். ஆன்லைனில் நடக்கும் இந்த வகுப்புகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது, நேரடியாக பயங்கரவாதச் செயல்களில் பங்கேற்பது பற்றி பெண்களுக்கு போதிக்கப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மோசமாகக் காட்டப்படுகின்றன.
முன்பு போல ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்வது, கூட்டங்கள், கருத்தரங்குகளை நடத்துவது, ஆயுதம் மற்றும் இதர பயிற்சிகளை முகாம்களில் சொல்லித் தருவதெல்லாம் மாறிவிட்டது. தினசரி வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட டிஜிட்டல் கட்டமைப்பு , மறைமுக குறியீட்டு செய்தி பரிவர்த்தனை மூலம் இளைஞர்களும் இளைஞிகளும் இஸ்லாமிய பயங்கரவாதக் கருத்தியலுக்கு ஆதரவாக மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். மூடிய அல்லது அனுமதி வரையறுக்கப்பட்ட இறுகிய குழுவில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த குழுக்களில் ஊடுருவதும் கண்காணிப்பதும் கடினம்.

புலனாய்வு துறையின் அறிக்கையில் மீண்டும் மீண்டும் இரண்டு பெயர்கள் தென்படுகின்றன. ஒருவன் அப்துல்லா எனப்படும் அபு ஹூரைரா. மற்றவன் கர்கோஸ் (முயல்) என்று சொல்லப்படும் உமர் ஹாரிஸ். உமர் ஹாரிஸ் லக்சர் பயங்கரவாதி என்பதால் மட்டுமல்ல சாதாரண சமுதாயத்தில் கலந்து மறைந்து விடுபவன். இவன் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா பகுதியைச் சேர்ந்தவன் . இவன் லஷ்கரில் சேர்ந்தது கருத்தியல் காரணத்தால் அல்ல. பல கலவரங்கள், அடிதடி வழக்குகளில் பாகிஸ்தான் காவல்துறையினரால் தேடப்படுபவன். பாதுகாப்புக்காக லஷ்கரில் சேர்ந்தான் என்று சொல்லப்படுகிறது. தங்கக் கடத்தல்காரர்களையும், தனி வாழ்வில் தோல்வியுற்றவர்களையும் , தேடப்படும் கிரிமினல் குற்றவாளிகளையும், லஷ்கர் அமைப்பு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றங்களிலிருந்து மீட்பு தருவதாகவும் கூறி பயங்கரவாத கருத்தியலுக்குள் இழுத்துக் கொள்கிறது.
ஹாரிஸ் 2016 இல் காஷ்மீருக்குள் நுழைந்தான். ஆயுத வன்முறைச் செயல்களால் தன்னை தற்கொலைப் படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலைப் பின்னலை ஏற்படுத்தினான் . காஷ்மீரின் இரண்டு பக்கங்களுக்கும் அடிக்கடி போய் வருவான். ஸ்ரீநகருக்கும் வருவான். ஆதரவாளர்களின் உதவியால் மறைவிடத்தில் தங்குவான். பாதுகாப்புப் படையினரின் கண்களில் படுவதற்குள் வேறொரு இடத்துக்கும் முயல் போல எகிறி விடுவான். எனவே அவனுக்கு கர்கோஸ் (முயல்) என்ற பட்டப் பெயர்.
அவன் இந்தியப் பகுதியில் நுழைந்த பிறகு இங்குள்ள லஷ்கர் ஆதரவாளரின் பெண்ணை மணந்து கொண்டான். இதன்மூலம் குடும்பக் கட்டமைப்புக்குள் நுழைந்தான். அவனது செயல்கள் எல்லாம் மோசடியானவை, மறைமுகமானவை. அவனது திருமணம் காஷ்மீரில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஜெய்ப்பூரில் (ராஜஸ்தான்) நடந்தது. ‘சஜத்’ என்ற பெயரில் அவன் திருமணம் செய்து கொண்டான். பயங்கரவாதிகள் துப்பாக்கி , பயங்கரவாத கருத்தியல் மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கையில் உள்ளதாக திட்டமிட்ட ரீதியில் நாடகமாடுகின்றனர் என்பதற்கு உதாரணம் இது.
இவன் இந்தியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் இந்தோனேசியாவுக்குப் போனான். 2004 – 25 இல் சவுதி அரேபியாவில் வெளிப்பட்டான். இவை அனைத்தும் உளவு அமைப்பினரின் தகவல்கள் மற்றும் விசாரணையில் பின்னால் தெரியவந்தன. பயங்கரவாதிகள் எப்படி சாதாரண சிவில் சமூகத்தின் ஊடாக புகுந்து போலி அடையாளங்கள், ஆதரவாளர்கள் மூலம் எல்லைகளை சுலபமாகக் கடந்து சென்று விடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.
அபு ஹூரைரா பஞ்சாபில் பிடிபட்டான். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் , ராஜஸ்தான் அதற்கும் அப்பால் பல்வேறு மாநிலங்களில் அவனுக்கு ஆதரவாளர்களும் மறைவிடங்களும் நம்பிக்கைக்குரியவர்களும் இருப்பதால்தான் அவன் தன் அடையாளத்தை மறைத்து பயணிக்கவும், பயங்கரவாத வலை பின்னலை உருவாக்கவும் முடிந்துள்ளது. பிடிபட்ட அவனது கூட்டாளி ஒருவனால் அவன் 2010இ ல் இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவன் காஷ்மீரில் செயல்பட்டதும், காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தவுடன் தப்பிச் சென்றதும், பல மாநிலங்களுக்குப் பயணித்ததும், அங்கு அவனுக்குத் தேவையான எல்லா விதமான வசதிகளையும் செய்தது, முஸ்லிம் பெண்களின் உதவியால் தான்.
காஷ்மீர் காடுகளில் ஆண் பயங்கரவாதிகளுக்குப் பதிலாக துப்பாக்கியும் வெடிகுண்டும் ஏந்திய பெண் பயங்கரவாதிகள் தோன்றுவதும், பயங்கரவாதத்தின் முகம் இப்போது ஆண் முகத்திலிருந்து பெண் முகமாக மாறுவது கவலை அளிக்கும் விஷயம். ஆனால் அதைவிட கவலை அளிக்கும் விஷயம், பயங்கரவாத அமைப்புகளில் அமைதியான, சாதாரண வாழ்க்கையில் உள்ள பெண்கள் உள்ளிழுக்கப்படுவதால் மோதல் கடினமாகவும் சிக்கலாகவும் மாறி வருகிறது.
காஷ்மீர் காடுகளில், பூந்தோட்டங்களில், மலைகளில் மறைந்திருந்து ஊடுருவல் மூலம் பயங்கரவாதம் வெளிப்பட்டது. இப்போது கிடைத்துள்ள கள நிலவரம் குறித்த தகவல்கள் மற்றும் காணொளிகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், இனி சாதாரண சமூக வாழ்க்கையில் இருந்து பயங்கரவாத முகம் வெளிப்படும். டாக்டர் ஷாஹீன் சயத் , அபு ஹூரைரா போன்றவர்கள் இதை தான் சொல்கிறார்கள் . சாதாரண சமூக வாழ்க்கை அசாதாரணமாக மாறி வருகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
இதுவரை பயங்கரவாதத்தின் முதுகெலும்பாக இருந்த (ஆண்) பயங்கரவாதிகள் என்ற நிலை மாறி, இவர்களை அடையாளம் காண்பதும் கண்காணிப்பதும் தடுப்பதும் ஓரளவுக்கு சுலபமானது. டாக்டர் சாஹின் சயத் போன்ற மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் என்று சமூக அந்தஸ்துடன் கூடிய பெண்கள் வருவது மிகவும் ஆபத்தான விஷயம் என்று உளவுத்துறையினர் கூறுகிறார்கள்.
- நன்றி : ஓப்பன் மேகஸின் (29.05.2026) – Kitchen to Kalashnikov: Islamist Terrorist Organisations in Pakistan are Now Recruiting Women
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$