-மகாகவி பாரதி

மகாகவி பாரதி சூரியக் கடவுள் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தவர். அவரது இந்தப் பற்றுதலுக்கு சூரியன் மீதான வேதப் பாடல்களும் காரணமாக இருக்கலாம். சூரியனைப் போற்றும் காயத்ரி மந்திரத்தை தமிழில் வழங்கியவர்; வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழை ஓங்கி ஒலித்தவர் பாரதி. அவரது பக்திப் பாடல்களில் மூன்று (69, 70,71) சூரிய வணக்கப் பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...
பக்திப் பாடல்கள்
69. சூரிய தரிசனம்
ராகம் – பூபாளம்
சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 1
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 2
$$$
70. ஞாயிறு வணக்கம்
கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வான்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்.
உடல் பரந்த கடலுந் தன்னுள்ளே
ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச்
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே. 1
என்ற னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திட செய்குவை யையா,
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 2
காதல் கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன். 3
$$$
71. ஞான பாநு
திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு. 1
கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்,
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள். 2
அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்,
தினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3
பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின். 4
$$$