-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
12. பக்தி இருந்தால் இடமும் பொருட்டல்ல
.
குஹாயாம் கேஹே வா பஹிரபி வனே வாsத்ரிசி’கரே
ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வதபலம்/
ஸதா யஸ்யைவாந்த: கரணமபி ச’ம்போ தவ பதே
ஸ்திதம் சேத்யோகோsஸௌ ஸ ச பரமயோகீ ஸ ச சுகீ//
.
குகையோ வீடோ காடோ மலையோ
புனலோ அனலோ புரிதவத்தால் என்பயன்?
எப்போதும் மனமே சிவபதம் பற்றிடுவான்
எவனவன் யோகி சுகியும் அவனே.
.
பக்தி செய்வதற்கு எது உகந்த இடம்? குகையா? வீடா? இல்லையேல் காடா? மலையா? எது சிறந்த இடம்? ஆழமான நீர்நிலையில் நின்று கொண்டோ, தன்னைச் சுற்றி தீயை வளர்த்துக்கொண்டோ கடுமையாகத் தவம் புரிவது சிறந்ததா? இல்லையில்லை. பக்தி இல்லாமல் இவ்வாறு செய்வதால் எந்தப் பயனுமில்லை.
புறத்தில் எப்படி இருக்கிறோம் என்பதல்ல, அகத்தில் எப்படி இருக்கிறோம் என்பதுதான் பக்திக்கு முக்கியம். புறத்தூய்மை, கடுமையான அனுஷ்டானங்கள் ஆகியவற்றால் இறைவனை அடைந்துவிட முடியாது. எப்போதும் தனது மனத்தால் எவனொருவன் சிவனுடைய திருவடித் தாமரைகளையே பற்றிக் கொண்டிருக்கிறானோ, அவனே யோகி. மற்றபடி கடுமையான யோகாசனங்களாலோ, தவத்தாலோ சிவன் அகப்படுவதில்லை. மனத்தில் பக்தி இருந்தால் மட்டுமே சிவயோகம் கைகூடும். அப்படிப்பட்ட பக்தன் மட்டுமே எவ்விதத் துன்பமுமின்றி சுகியாக இருக்க முடியும்.
$$$