பாரதியும் பாரதிதாசனும் -4இ

-பேரா.அ.ச.ஞானசம்பந்தன்

4 இ. பாரதிதாசன்



கவிதைத் தொகுதி – 3

மூன்றாவது கவிதைத் தொகுப்பில் கடல் மேல் குமிழிகள்’, ‘அமிழ்து எது?’ என்ற இரண்டு பகுதிகள் பெரியனவாக அமைந்துள்ளன. ‘கடல் மேல் குமிழிகள்’ என்ற காப்பியத் துணுக்கு அவருக்கு மிகவும் பிடித்த மான சாதி, சமய வேற்றுமைகளால் விளைந்த தீமையை உணர்த்துவதே யாகும். இப்பாடலில் அவருடைய ஆசானாகிய பாரதியைப் பின்பற்றி ஆளப்பிறந்த சமுதாயம் ஆளப்படுகின்ற சமுதாயம் என்ற இரண்டினிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டி இறுதியாகத் திறல் நாட்டில் குடியரசை அமைக்கிறார் கவிஞர். கவிஞர் அமைக் கின்ற அந்தக் குடியரசு நாட்டில்,

ஒரு கடவுள் உண்டு என்போம்
உரு வணக்கம் ஓப்போம்

என்று பேசுகின்றார். பார்ப்பனரும் கையில் செங்கோல் ஏந்தும் பிறரும் மக்களைச் சார்ந்தோரே என்று பாடும் பொழுது பழைய வெறியோடு கூடிய கற்பனை இல்லாமல் அமைதியடைந்த மனநிலையில் என்ன செய்ய வேண்டுமென்று சிந்தித்து இருப்ப வற்றையெல்லாம் எழுதிக் காட்ட வேண்டுமென்று நினைக்காமல் இருப்பவற்றை எங்ஙனம் செம்மை செய்து பண்படுத்திப் பயன் அடைய வேண்டுமென்ற மனநிலை நன்கு காட்சி அளிக்கிறது. அடுத்து அமிழ்து எது?’ என்ற பாடலில் வள்ளுவன் மறையை அமிழ்து என்று கூறிய காரணம் விரிவாக ஆராயப்படும் கிறது. இவை இரண்டும் அல்லாமல் திராவிடர் திருப்பாடல்’, ‘சமத்துவப் பாட்டு’ முதலியவையும் இடம் பெறுகின்றன.

குடும்ப விளக்கு

இப் பெருந்தொகுதிகளை அடுத்துக் குடும்ப விளக்கு’ என்ற ஒரு நூலும், கவிஞர் படைப்புக்களுள் தலைசிறந்து நிற்கிறது. குடும்ப விளக்கு’ நூல் ஐந்து பகுதிகளாகப் பல்வேறு காலங்களில் ஆக்கப் பெற்றதாக அறிகிறோம். பெருமக்களையும் வீரதீரச் செயல்களையும் வைத்துக் கவிதை பாடினால் தான் மக்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள் என்று பழைய நம்பிக்கையைப் புரட்சிக் கவிஞர் குடும்ப விளக்கு இயற்றியதால் தகர்த்தெறிந்திருக்கிறார். சாதாரண மளிகைக்கடைக்காரன் ஒருவனுடைய அன்றாட வாழ்வை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது, குடும்ப விளக்கு’. செயற்கரிய செயல்களோ, நம்ப முடியாதவையோ, வியப்பை விளைவிக்கின்றவையோ ஆகிய எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனுடைய சுவையற்ற வாழ்க்கையை எடுத்துக்கொண்டு சுவை மிகுந்த காப்பியத் துணுக்காக ஆக்க முற்பட்டு, அந்த முயற்சியில் மாபெரும் வெற்றியையும் அடைந்தார் என்று சொன்னால் அதைவிடச் சிறந்த ஒரு புகழ்மாலை கவிஞருக்கு யாரும் தர இயலாது.

இத்தகைய ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு பாடவே ஏனையோர் அஞ்சியிருப்பர். அப்படியே பாடியிருப்பினும் அது நின்று நிலவும் ஆற்றலைப் பெற்றிராது. ஒரு கவிதை சிறப்படையக் கவிதையால் குறிக்கப்பெற்ற பொருளும் அப் பொருளைப் பாடும் கவிதையும் சிறப்பு உடையன் வாக இருத்தல் வேண்டும். இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை; அங்ஙனம் அல்லாமல் உள்ளீடே இல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டு கவிதை புனைய முற்படுவது மாபெரும் துணிச்சல் தான். அதுவும் ஒன்று இரண்டு துண்டுப் பாடல்களா. யினும் சரியே. அவ்வாறு இல்லாமல் நீண்ட நெடுங் கதையாக அதனைச் செய்ய முற்படுவது புரட்சிக் கவிஞரின் புரட்சி மனப்பான்மைக்கும் அவருடைய பேராற்றலுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அம்முயற்சியின் பயனே ‘குடும்ப விளக்கு’ என்ற நூல்.

‘குடும்ப விளக்கு’ என்ற நூல் தோன்றுவதற்குப் பல்லாண்டுகள் முன்பே இதன் கரு கவிஞர் உள்ளத்தில் தோன்றியிருக்கவேண்டுமென்று நினைக்க வேண்டி யிருக்கிறது. 1936-ல் தகுந்த குடும்பம் சர்வகலா சாலை’ என்ற தலைப்பில் 34 கண்ணிகள் பாடியிருக்கிறார். அதில்,

பிள்ளைகளைக் கூட்டிப்போய்ப் பீடத்திலே யமைத்துப்
பள்ளிக்கு வேண்டிய நற் பாடங்கள் சொல்லிவிட்டு
நல்ல கதையுரைத்து ஞாலப் புதுமைகளைச்
சொல்லி மகிழ்வித்தாள் தாயன்பு நாதன் முதல்
எல்லாரும் இன்ப உணவுண்டார் மக்களெலாம்
கல்விச் சாலை செல்லக் கட்டும் உடைப் பொத்ததெல்லாம்
இல்லக் கிழத்தி எழில் தையற் காரியாய்த்
தைத்துடுத்தி விட்டாள் தனது கணவனிடம்
அத்தினத்தில் ஆன பல ஆலோ சனை பேசி

என்ற வரிகள் இடம்பெறுகின்றன. இக் கருத்தே ‘குடும்ப விளக்கில்’ விரிக்கப் பெறுகிறது. இவ்வழகிய நூல் தோன்றுவதற்கே கவிஞரின் அருமை மகள் திருமதி சரஸ்வதி அம்மையார்தான் காரணம் என்று நூலின் முன்னுரை பேசுகிறது. முதற் பகுதியில் நல்ல குடும்பத்தின் ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ பேசப்படுகிறது. இப் பகுதி எழுதப்பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் பகுதியும், அதனை அடுத்துச் சில காலங் கழித்து மூன்றாம் பகுதியும் எழுதப்பெற்றதாக அறிகிறோம். இறுதியாக உள்ள ஐந்தாம் பகுதி ‘முதியோர் காதல்’ என்ற தலைப்பில் கடைசியாக எழுதப்பெற்றது. இவ்வைந்து
மறது. இவ்வைந்து பகுதிகளையும் ஒருசேரப் படிக்கிறவர்கள் ஒன்றை உணராமல் போக முடியாது. முதற் பகுதியாகிய ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ பிறர் தூண்டுதல் இல்லாமல் கவிஞர் உள்ளத்தில் நிறைந்த கற்பனையின் வெளியீடாகும். ஏனைய பகுதிகள் பிறருடைய வேண்டுகோளுக்கு இணங்கிச் செய்யப்பெற்றவை என்பதை அறியமுடிகிறது. முதற் பகுதியிலுள்ள கற்பனை ஓட்டம், சொல்லாட்சி, ஓசை நயம். உவமை நயம் முதலியவை பிற பகுதி களில் தொய்வடைந்து விடுகின்றன. இவ்வாறு கூறுவதால் பிற பகுதி சிறப்புடையன அல்லவோ என்று நினைக்கவேண்டாம். இரண்டையும் ஒப்பு நோக்கும் பொழுது – ஒன்றையொன்று தரத்தால் எஞ்சி நிற்கும் அளவை நோக்கும்போது – முதற்பகுதி பிற பகுதிகளைவிடத் தரத்தால் பல மடங்கு உயர்ந்து நிற்கக் காண்கின்றோம்.

ஒரு புலவன் பல காலம் கவிதைகள் இயற்று வானேயானால் முதன் முதலில் அவன் இயற்றிய கவிதைகளுக்கும் பிற்காலத்தில் இயற்றிய கவிதை களுக்கும் உள்ள வேறுபாட்டைத் திறனாய்வாளர் ஓரளவு அறிய முடியும். ‘செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் கவிஞன் மேன்மேலும் பாடப்பாட அதில் புது மெருகு ஏறிப் பலமுறை சுட்டெரித்த பொன்னைப்போல் விளங்குதல் இயல்பு. இதை விளங்கிக் கொள்ள வேண்டுமேயானால் கம்ப நாடனுடைய பால காண்டத்தையும் யுத்த காண்டத் தையும் பார்ப்பதே போதுமானது. கம்பனுடைய வளர்ச்சி பால காண்டத்தில் தொடங்கிச் சுந்தர காண்டத்தில் முற்றுப் பெறுகிறது. அதன் பின்னர் உள்ள யுத்த காண்டத்தில் அந்த வளர்ச்சியின் நளினம் வெளிப்படுகிறது. இத்தகைய ஓர் அளவுகோல் ஏறத்தாழ எல்லாக் கவிஞர்களிடத்திலும் காணக் கூடிய ஒன்றுதான்.
இந்த அளவுகோலைப் புரட்சிக் கவிஞரிடம் பயன் படுத்த முடியாது என்பதை நாம் அறிதல் வேண்டும். அவருடைய கவிதைகள் தொடக்கத்திலும் இடைக் காலத்திலும் இருந்த அளவு பின்னர் நிலைக்கவில்லை என்பதை அவர் மாட்டு அன்பு கொண்டிருந்தும் அவர் கவிதைகளைத் திறன் ஆய்வுக் கண்கொண்டு படிக் கின்றவர்கள் யாரும் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கு யாது காரணம் என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்கத் தேவை யில்லை. இறங்கினாலும் நல்ல விடையைக் காண்பது இயலாத காரியம். தொடக்கத்திலிருந்து. இடைக் காலம் வரையில் மிகச் சிறந்த முறையில் வளர்ந்திருக் கிறார் கவிஞர். தொடக்கத்தில், ஓசை நயம் கருதி எழுந்த அவருடைய கவிதை வடசொற்கள் மிகவும் கலந்து அற்றை நாளில் கவிதைகளுக்குரிய மரபோடு விளங்கக் காண்கிறோம். நாளாக நாளாக வட சொற்களைத் தவிர்த்து அழகிய தமிழ்ச் சொற்களாக ஓசை நயத்துடன் பயன்படுத்திய முறையையும் காண முடிகிறது. 1940க்கு மேல் தோன்றிய கவிதைகள் இவ்விரண்டாம் தொகுப்பைச் சேரும். 1950க்குப் பிறகு வந்த கவிதைகள் மறுபடியும் கீழ்நோக்கி இறங்கத் தொடங்கிய நிலையையும் காண முடிகிறது. சிறந்த கவிதைகள் என்று சொல்லத்தக்கவை பலவும் ஏறத்தாழ 1935லிருந்து 1950க்குள் தோன்றி விட்டன.

இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு குடும்ப விளக்கைக் காண்டல் வேண்டும். கவிச் சக்கரவர்த்தி என்று போற்றப் பெறும் கம்பனுடைய கவிதையில் காண முடியாத ஒன்று ‘குழந்தைச் செல்வத்தைப் பற்றிய பாடல்களாகும். தமிழ் இலக்கியத்தில் குழந்தை செல்வத்தைப் பாட வந்த பிள்ளைத் தமிழ் இலக்கியங் கூட மரபுக்கு அதிகம் அடிமையாகிவிட்ட காரணத் தால் ஓரளவு சுவையிழந்து நிற்கக் காண்கிறோம். இதனெதிராகக் கவிஞர் பாடலாம். குடும்ப விளக்கில் குழந்தைச் செல்வம் பாடப்படுகிறது.

குழந்தைகட்குத் தொண்டு

பிள்ளைகள் என்றனள்; கிள்ளைகள் வந்தனர்.
தூய பசும்பொன் துளிகளைப் போன்ற
சீயக் காய்த்துகள் செங்கையால் அள்ளிச்
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீராட்டி நலஞ் செய்த பின்னர்ப்.
பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல் –
ஓவியக் குழந்தைகள் உடலின் நீர்த் துளிகளைத்
துடைத்து, நெஞ்சில் சுரக்கும் அன்பை
அடக்கா தவளாய் அழகுமுத் தளித்தே
பறப்பீர் பச்சைப் புறாக்களே என, அவர்
அறைக்குள் ஆடை பூண் டம்பலத் தாடினார்.

கற்றறிந்த பெரியோர் முதல் பட்டி தொட்டிகளில் வாழும் பாமரர் வரை இப்பகுதியைப் படித்தால், தம்மை மறந்து சில நிமிடங்கள் இருக்க நேரிடும். புரட்சிக் கவிஞரின் ஒப்பற்ற பாடல் திறத்திற்கு இப்பகுதி ஓர் எடுத்துக்காட்டாகும்.

‘அச்சம்’ என்ற மெய்ப்பாட்டைத் தொல். காப்பியர் பேசுகிறார், மெய்ப்பாட்டியலில் ‘அச்சம் என்ற இச்சுவைக்குப் பொருள் கூற வந்த பேராசிரியர், குழந்தைக்கு நோய் இல்லையாயினும் உள்வாங் கொல்’ என்று ஏற்படும் அச்ச உணர்ச்சி தாய்மாருக் குரியது. என்று பேசுகிறார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் தோய்ந்தெழுந்த கவியரசர் பாரதி தாசனார் இக்கருத்தை மனத்தில் கொண்டு குடும்ப விளக்கில் வரும் தாய், தேவையில்லாமலும் பள்ளிக்குச் சென்று இருக்கும் குழந்தை பற்றி அஞ்சுகிறாள் என்ற மனோதத்துவக் கருத்தை இதோ பாடிக் காட்டுகிறார்:

பிள்ளைகள் நினைவு

பள்ளிக்குச் சென்றி ருக்கும்
பசங்களில் சிறிய பையன்,
துள்ளிக் குதித்து மான்போல்
தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று)
உள்ளத்தில் நினைத்தாள்; ஆனால்,
மூத்தவன் உண்டென் றெண்ணித்
தள்ளினாள் அச்சந் தன்னை
தாழ்வாரம் சென்றாள் நங்கை.

தாய் அன்பின் தனிச் சிறப்பு என்னவென்றால், தன் குழந்தைகட்கோ கணவனுக்கோ தொண்டு செய்யும் பொழுது தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடியாய் அவரவர்கள் விருப்பத்தைப் பெரிதென மதித்துப் பணி புரிவதாகும். அவரவர் கட்கு விருப்பமான கறிகளைச் சமைக்கும் பொழுது சமைக்கப்பட்ட கறி, காய்களில் கேவலம் உணவுப் பொருளைக் காணாமல் அதனை விரும்பி உண்பவர் களின் முகத்தையே அக்கறிகளில் காண்கின்றாள் என்றும், சிறிய குழந்தை சப்புக் கொட்டிக் கொண்டு அக்கறியை உண்ணுகின்ற காட்சியைக் காதில் கேட் கின்றாள் என்றும் பாடுவது தாய் மனத் தத்துவத்தை நன்கு அறிந்திருந்த கவிஞரின் ஒப்பற்ற கவிதைத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

என்ன கறி வாங்கலாம்?

கொண்டவர்க் கெதுபி டிக்கும்
குழந்தைகள் எதை விரும்பும்,
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன,
உண்பதில் எவரு டம்புக்(கு)
எதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள், கறிகள் தோறும்
உண்பவர் தம்மைக் கண்டாள்.

பிள்ளைகள் உள்ளம் எப்படி ?

பொரியலோ பூனைக் கண்போல்
பொலிந்திடும்; சுவைம ணக்கும்
அருந்துமா சிறிய பிள்ளை ?
என எண்ணும் அவளின் நெஞ்சம்
இருந்தந்தச் சிறிய பிள்ளை - இச்சென்று
சப்புக் கொட்டி அருந்தியே மகிழ்ந்த தைப்போல்,
அவள் காதில் ஒசை கேட்கும்.

மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள், அந்த நாட்டில் திருமணங்கள் முறிவுற்று மணநீக்கம் அதிகம் தோன்றுவதற்குக் காரணம், திருமணமான சில நாட்கள் கழித்து ஒருவரைப்பற்றி யொருவர் கவலைப் படாமல் ஒருவருக்கொருவர் இன்பம் தர வேண்டும் மென்று நினையாமல், ஏனோ தானோ என்று இருப்பது தான் மண முறிவுக்குக் காரணம் என்றும், இதனெதிராகக் கணவனும் மனைவியும் எத்துணை ஆண்டுகளாயினும் தங்கள் நடத்தைகளால் ஒருவரை யொருவர் கவரத்தக்க முறையில் புதுக் கோலம். கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார்கள். இவ் அருமைப்பாட்டை இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே அறிந்த தமிழன்,

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

என்று கூறிப்போனான். எனவே, திருமணமாகிப் பல்லாண்டுகள் கழித்துப் பல குழந்தைகளைப் பெற்ற பின்னரும் குடும்ப விளக்கில் வரும் தலைவனும் தலைவியும் இன்றைக்கு மணம் புரிந்தோர் என்று சொல்லும்படியாக இருந்தார்களாம். இவ் அழகிய காட்சியைக் கவிஞர் இதோ பாடுகிறார்:

துணைவி சொன்ன புதுச் செய்தி

அன்றைக்கு மணம்புரிந்த
அழகியோன் வீடு வந்தான்;
இன்றைக்கு மணம்புரிந்தாள்
எனும்படி நெஞ்சில் அன்பு
குன்றாத விழியால் , அன்பன்
குளிர்விழி தன்னைக் கண்டாள் ;
'ஒன்றுண்டு சோதி' என்றாள்;
'உரை' என்றான் 'அம்மா அப்பா
வந்தார் என் றுரைத்தாள், கேட்டு
'வாழிய' என்று வாழ்த்தி
'நொந்தார்கள்' என்று கேட்டு
நோயுற்ற வகைய றிந்து
தந்தைதாய் கண்டு 'உங்கள்
தள்ளாத பருவந் தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
நடந்திட லாமா?' மேலும்

அன்றன்று புதுமை

'அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்,
ஆருக்கு வேண்டுமடி என்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்த மலர்க் கொடியே மண்ணில்
குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்
ஒன்றொன்றும் சில நாளில் தெவிட்டிப் போகும்
அன்றன்று புதுமையடி , தெவிட்ட லுண்டோ ?
ஆருயிரே நீ கொடுக்கும் இன்பம்' என்றான்.

இப் பாடற் பகுதியிலுள்ள மற்றொரு சிறப்பையும் காண்டல் வேண்டும். கணவன் வீடு வந்தவுடன் இன் முகங் காட்டி அவனை உபசரிக்காமல் குடும்பச் செய்தி களைப் பேசுவது முறையன்று என்று மனத் தத்துவர் கூறுகிறார்கள். இதை நன்கு மனத்தில் பதித்துக் கொண்ட கவிஞர். வீட்டினுள் வந்த கணவனை அன்பு குன்றாத விழியால் வரவேற்று உபசரித்து, உடனே மாமன் மாமியார் வந்த செய்தியைக் கூறுகிறாள் என்று பாடிச் செல்வது இப் பழுத்த கவிஞனின் எல்லையற்ற பேராற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பழந்தமிழ் நூலாகிய பத்துப்பாட்டில் பட்டினப் பாலையில் வணிகர் பற்றிப் பேசுகின்றபோது,

கொள்வதும் மிகைகொளாது கொடுப்பதும் குறை கொடாது

என்று கூறப்படுகிறது. இவ்வழகிய கருத்தை மனத்துள் வாங்கிய கவிஞர் ‘குடும்ப விளக்கின் தலைவி கடை யில் வியாபாரம் செய்வதைச் சொல்லும் பொழுது எடுத்துப் பேசுகிறார்:

இளகிய நெஞ்சத் தாளை
இளகாத வெல்லம் கேட்பார்
அளவாக இலாபம் ஏற்றி
அடக்கத்தை எடுத்து ரைப்பாள்
மிளகுக்கு விலையும் கூறி
மேன்மையும் கூறிச் சற்றும்
புளுகாமல், புகன்ற வண்ணம்
புடைத்துத் தூற்றிக் கொடுப்பாள்.

இரவு நேரத்தில் மனைப் பணிகள் அனைத்தையும் முடித்து, குழந்தைகளை உறங்கவிட்டுப் பின்னர்க் கணவனுடைய படுக்கையண்டை வந்து நிற்கின்றாள் ‘குடும்ப விளக்கின் தலைவி. கணவன் உறங்கி விட்டானோ என்று ஐயம் கொண்டு நிற்கின்ற தலைவிக்கு தலைவன் தான் உறங்கவில்லை என்பதை எடுத்துக்காட்டக் கையாள்கின்ற முறையைக் கவிஞர் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார்:

தொண்டையினில் ஒன்றுமே அடைக்கவில்லை
துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்
அண்டையிலே மங்கைபோய் 'அத்தான்' என்றாள்
அத்தானா தூங்கிடுவான்? "உட்கார்' என்றான்.

சிறந்த கவிஞனை அறிவதற்குக் கவிஞனுடைய உவமைகளையே அளவுகோல்களாகக் கொள்ளுவர் திறனாய்வாளர். அறி ந் த தைக் கொண்டு அறியாததை விளக்கவே உவமை தோன்றிற்று எனினும், ஒரு கவிஞன் கையாள்கின்ற உவமையை வைத்து அவனுடைய மேதையை அறிய முடிகிறது. இரவு மெல்ல மறைகின்றது என்பதைச் சொல்லவந்த கவிஞர்.

ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
நல்லிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது

என்றும்,

புன்னை இலை போல் புதையடிச் செருப்புகள்

என்றும்,

பழந் தமிழ்ப் பொருளை யள்ளிப்
படித்தவர் விழுங்குதல் போல்

என்றும்,

பெரியோரின் உள்ளம் எங்கும்
பெருகல் போல் பெருகச் செய்தான்

என்றும் கூறும் உவமைகள் இணையற்றவையாய்ப் புரட்சிக் கவிஞரின் கவித் திறனுக்குக் கட்டியம் கூறும். பகுதிகளாய் அமைந்து நிற்கின்றன.

உவமையின் வளர்ச்சியாகிய உருவக அணியும், கவிஞருக்குக் கவினுறப் பணிபுரிகின்றது.

தெளி தமிழ் பவனி வந்தாள்,
செவிக்கெலாம் காட்சி தந்தாள்

என்ற உருவகமும், ‘இரவுக்கு வரவேற்பு’ என்ற இடத்தில்,

மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை
        விருந்துண்டு, நீல ஆடை
மாற்றுடை யாய்உ டுத்து
        மரகத அணிகள் பூண்டு,
கோற்கிளை ஒடுங்கும் புட்கள்
        கோட்டிடும் இறகின் சந்தக்
காற்சிலம் பசையக் காதற்
        கரும்பான இரவு தன்னை

என்ற பகுதியும் ஈடு இணையற்று விளங்குகின்றன. இரண்டாவது பகுதியாகவுள்ள விருந்தோம்பலில் ‘மக்கட் பேறு’, ‘பிறர் நலம்’ என்ற தலைப்புகளில் அவர் கவிதை ஊற்றின் ஆணிவேராக உள்ள திருக் குறளைச் சாறாகப் பிழிந்து தருகின்றார்.

மறுபடியும் அவருடைய உணர்ச்சியால் உந்தப் பெற்று இடைப்பிறவரலாகச் சாதி வேற்றுமையைக் கண்டிக்கத் தொடங்கித் தமிழ்நாட்டில் சமையல் முறை முன்னேற்றமின்றிப் போனதற்கும் காரணம் சாதி சமய வேறுபாடுதான் என்ற முறையில் பேசத் தொடங்கிவிடுகிறார். ‘விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்’ என்ற பகுதியில் இடைப்பிறவரலாக உள்ள இப் பகுதி காணப்படுகிறது. மூன்றாம் பகுதியாக உள்ள திருமணம்’ என்ற பகுதியில் பழைய தமிழ் மண முறையாகிய களவு முறையையும் ஒருவாறு புகுத்தித் தமிழ்நாட்டில் உறவினர்களுக்குள் இயல்பாக ஏற்படுகின்ற குடும்பப் பகை முதலிய எல்லாவற்றையும் புகுத்திக் காட்டிக் குழந்தைகள் பொருட்டாக அவற்றை மறக்கவேண்டிய இன்றியமை யாமையும் பாடிச் செல்கிறார். உறவினருள் ஏற்படும் பகை; காரண காரியமின்றி ஏற்படும் பயித்தியக் காரத்தனமான ஒன்று என்பதையும் இப் பகுதியில் விளக்கியுள்ளார். நான்காம் பகுதியாகிய ‘மக்கட் பேற்றில் தமிழ்நாட்டில் சூல் கொண்ட மகளின் தாய் தந்தையராலும், மாமன் மாமியாராலும் கணவனா லும் அதிகமாகப் போற்றப்படுகின்ற சூழ்நிலையை யும் சூல் கொண்ட மகளிரின் வளர்ச்சி முறையையும் மிக அழகாக எடுத்துக்காட்டிச் செல்கிறார்.

ஐந்தாம் பகுதியாக உள்ள முதியோர் காதல் என்ற பகுதியில் மறுபடியும் கவிஞர் மிக உயர்ந்த கவித் திறத்தை அதாவது முதல் பகுதியில் இருந்தது. போன்ற ஒரு தரத்தை எட்டிப் பிடிக்கின்றார். அன்புள்ளம் கொண்ட இரு முதியவர்களின் அன்றாட வாழ்க்கையை, மனத் தத்துவம் மாறாமல் எடுத்துப் பேசுகிறார். இவ்விரண்டு பகுதிகளிலும் கவிஞரின் நகைச்சுவை பெரிதும் இடம் பெறக் காண்கிறோம். முதல் பகுதியாகிய ‘ஒருநாள்’ நிகழ்ச்சியில் மாமன் மாமியார், மகன் வீட்டிற்குச் சாமான்களுடன் வந்திறங்கும் சிறப்பைச் சொல்ல விரும்புகிறார் கவிஞர். வண்டியிலிருந்து சாமான்கள் எல்லாம் இறக்கப்பட்ட பிறகு அவற்றின் அளவு கண்டு வியந்த தலைவி ‘வண்டிக்குள் இவையெல்லாம் இருந்தன வென்றால் நீங்கள் இருவரும் எங்கே இருந்தீர்கள்’ என்று கேட்கின்ற அழகும் அதற்கு மாமி தருகின்ற விடையும் மிக அழகாக நகைச்சுவையோடு வெளிப் படுத்தப்படுகின்றன.

மருமகள் வினா

இவையெல்லாம் வண்டிக்குள்ளே
இருந்தன என்றால், அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குத்தான் அமர்ந்தி ருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்புறத்தில்
கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமி ராதே

மாமி விடை

என்றனள். மாமி சொல்வான் :
இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்;
என் தலை நிமிர, வண்டி ,
முடிமேல் பொத்த லிட்டார்;
உன் மாமன் நடந்து வந்தார்
ஊரெல்லாம் சிரித்த தென்றாள்

இதே தலைவி ஐந்தாம் பகுதியில் கிழவியாக மாறித் தன்னுடைய இளமைக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறாள்:

முன்னால் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள்

ஒருநாள் மாலை பெருமு தாட்டி
நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம்
மிகுமகிழ்ச்சியுடன் விளம்ப லுற்றாள் :
செம்பில் எண்ணெயும் சீயக் காயும்
ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன்
'உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை
எண்ணெய் தேய்க்க அனுப்புக' என்றார்.
நானே அப்பணி நடத்துவேன் என்றேன்.
'மானே, மெல் இடை வஞ்சியே, நீ போய்க்
கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும்
களியுடன் இருப்பாய் கவலை ஏன்?' என்றார்.
அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன்.
பின்னர் ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே
எண்ணெய் இட்டுத் தண் சீயக்காய்
தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி
சிக்கறுத் திருந்தாள். திடும் என அங்கே
என்றன் மாமியார் 'என்னன்பு மகனே.
ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை
உனக்கு முழுக்காட்ட ஒப்பிய 'தென்றார்.
அதற்கென் மணாளர் ஆம் அவள் என்னை
எண்ணெய் இட்டுக்கொள் எழுந்திரும் என்றாள்
ஒப்பேன் என்றேன் உடனே உட்சென்று
இப்பணிச்சியை அனுப்பினாள்' என்றார்.
அப்படி யாஎன் றன் புது மாமியார்.
இப்புறம் திரும்பி எதிரில் நோக்கி
முக்கா டிட்டே முகம்மறைத் தபடி
சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியை
'தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே
இங்கே அனுப்படி என்றார். பணிச்சி
அகலும்போது முக்கா டகன்றது.
தங்கமே பணிச்சி என்பதை
அங்கென் மாமியார், அன்பர், கண்டனரே.

இப் பகுதியில் தான் மணாளன் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து விடுவதற்குத் தன் மனைவி வேண்டா மென்றும், பணிப் பெண்தான் வேண்டுமென்றும் கேட்டதாகவும் பிறகு வீட்டுத் தலைவியே பணிப் பெண்ணாக வேடமிட்டு அப்பணியை முடித்தாள் என்றும் நகைச்சுவைபடப் பேசுகிறார்.

கவிஞருடைய கவிதை நூல்கள் அனைத்தையும் படித்து முடித்த பிறகு அவற்றை நினைவில் நிறுத்தி ஒரு கண்ணோட்டம் விட்டால், சிறந்த கவிதைக்கு ஓர் எடுத்துக்காட்டாய்ப் பல்வேறு உணர்ச்சிகளை வெளியிடுகின்ற சுவைப் பெட்டகமாய் அமைந் திருப்பது கவிஞரின் ‘குடும்ப விளக்கு’ என்ற நூலே யாகும் என்பது அறிய முடியும்.

சமுதாயத்திலுள்ள குறைபாடுகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றில் மனத்தை உழலவிட்ட கவிஞர் தம் பாடல்களில் அம் மன உழற்சியை வெளியிட்டுப் பலவிடங்களிலும் பாடியிருப்பதைக் காண்கின்றோம். இத்தகைய சூழ்நிலைக்கு எதிராக ‘அழகின் சிரிப்பு’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள 16 கவிதைத் தொகுப்புகளும் 1944 – க்கு முன்னர் வெளியிடப் பெற்றது. ஆதலின் மேலே கூறிய குழப்பங்கள் எதுவுமில்லாமல் ஒப்புயர்வற்ற கவிதைகளாக விளங்கக் காண்கின்றோம். மேலும் அழகு , கடல், தென்றல், காடு, குன்றம், வான், கிளி ஆகிய இயற்கை பொருள்கள் பற்றியே இக் கவிதைகள் புனையப்பட்டு இருத்தலின் மிகச் சிறப்புடையனவாக விளங்குகின்றன. கலை நோக்கம் படைத்த ஒருவன் எல்லாப் பொருள்களிடத்தும் அழகைக் காண்கிறான். நம் போன்றவர்கள் கண்டும் காணாத பொருள்களிலும், அங்கே என்ன அழகு இருக்க முடியும் என்று எள்ளி நகையாடுகின்ற பொருள்களிலும் கவிஞர் அழகைக் காண்கிறார்.

காலை இளம் பரிதியில், கடல் பரப்பில், சோலை யில் எல்லாம் அழகைக் கண்ட அவர். நறுமலரைத் தொடுக்கின்ற மங்கை ஒருத்தியின் விரல் வளைவிலும், கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையிலும் அழகுவழியக் காண்கின்றார். அழகைப்பற்றிக் கூற வந்த கவிஞர், ‘பழமையினால் சாகாத இளையவள் காண்” என்று பேசிச் செல்கிறார்: “தென்றலைப்’ பற்றிப் பேசும்போது,

திண் குன்றைத் தூள் தூளாகச்
செய்யினும்செய் வாய்நீ ஓர்
துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்

என்று பாடுகிறார். இதனைப் படிக்கும் பொழுது “இமயமும் துளக்கும் பண்பினை” என்ற குறுந் தொகைப் பாடல் நினைவுக்கு வருகிறது.

நம் போன்றவர்களும் இரவில் விண்மீன்கள் , நிறைந்த வானத்தைத் தினந்தோறும் காண் கின்றோம். ஒரோவழி திங்கள் செல்வன் ஆகாயத் தில் பவனி வருகின்ற காட்சியைக் காண்பதும் உண்டு. ஆனால், கவிஞர் கண்ட இத்தகைய ஒரு காட்சி என்றேனும் நம் மனத்தில் தோன்றியது உண்டா?

பாற்புகை முகிலைச் சீய்த்துப்
        பளிச்சென்று "திங்கட் சேவல்
நாற்றிக்கும் குரல்எ டுத்து
        நல்லொளி பாய்ச்சிப், பெட்டை
ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப்
        பொடி விண்மீன் குஞ்சு கட்கும்
மேற்பார்வை செலுத்திப், 'பூனை
        இருட்டையும்" வெளுத்துத் தள்ளும்.

கிளியின் அழகில் ஈடுபட்டுத் தம்மை மறக்கிறார் கவிஞர். அதனைப் பார்க்கும் பொழுது இயற்கை அன்னையின் ஆற்றலும் அவர் நினைவுக்கு வருகிறது. இயற்கை அன்னை ஒவ்வொரு பொருளைப் படைக்குந்தோறும் தன்பால் உள்ள அழகு என்னும் பொருளை அளவாகப் பயன்படுத்திப் படைக் கின்றாளே தவிரத் தன்பால் உள்ள அழகுப் பொருள் முழுவதையும் எந்தப் பொருளிடத்தும் கொடுத்து விடுவது இல்லையாம்; ஒரு சிறிது அழகையும் ஏனைய பொருள்களையும் கலந்தே படைக்கின்ற இயற்கைப் பெருமாட்டி கிளியை மட்டும் அன்பால், அழகு என்ற பொருள் அனைத்தும் கொட்டிப் படைத்துவிட்டாளாம்!

கொள்ளாத பொருள்க ளோடும்,
        அழகினிற் சிறிது கூட்டிக்
கொள்ளவே செயும் இயற்கை
        தான் கொண்ட கொள்கை மீறித்
தன்னரும் கையிருப்பாம்
        அழகெனும் தலைச்ச ரக்கைக்
கிள்ளியமைத் திட்ட கிள்ளாய்
        கிட்டவா சும்மா வாநீ..

ஈடு இணையற்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் புலமைத் திறத்தை வெளியிடும் உவமைகளும் உருவகங்களும் கவிதை தோறும் தாண்டவமாடும் காட்சியைக் காண முடிகிறது. கடலின் அலைகள் விளிம்பில் ‘ஓஹோ’ என்ற முழக்கத்தோடு குழப்பம் விளைவிக்கின்றனவே தவிர, நடுக் கடலில் அமைதி பொலிகின்ற காட்சியை நாட்டில் ஏற்படும் “புரட்சிக்கும் அமைதிக்கும்” உவமை செய்கின்றார்.

புரட்சிக்கப் பால் அமைதி
பொலியு மாம், அது போல், ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைவிக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட் கப்பால்
கடலிடை அமைதி அன்றோ !
பெருநீரை வான்மு கக்கும்;
வான்நிறம் பெருநீர் வாங்கும்!

குன்றின் சிகரங்களின் மேல் மின்னல் பாய்வது, எருது களின் மேல் பாயும் வேங்கைக்கு உவமையாகப் பேசப் படுகிறது. ஆற்று ஓட்டத்தில் தண்ணீர் பாய்ந்து பாய்ந்து மணலால் ஆகிய கரையை உள்ளீடற்றுப் போகும்படியாக அறுத்து விடுவதால் அக்கரை எதிர்பாரா நேரத்தில் திடீரென்று உடைந்து வீழ்கிறது. அந்த அழகிய உவமை இதோ பேசப் பெறுகிறது :

பெருஞ்சிங்கம் அறைய வீழும்
யாளைபோல் பெருகிப் பாய்ந்து
வரும் வெள்ளம், மோத லாலே
மணற்கரை இடிந்து வீழும்
மருங்கினில் இருந்த ஆலும்
மல்லாந்து வீழும் ஆற்றில்
பருந்து, மேற் பறக்கும்! நீரில்
பட்டாவைச் சுழற்றும் வாளை !

‘காதல் நினைவுகள்’ என்ற சிறு நூலும் மிக அழகிய சுவையுடைய பாடல்களைப் பெற்று விளங்கக் காண்கிறோம். இருள் இன்னும் வரவில்லை என்று வருந்துகிறான் தலைவன். அந்த அழகிய மனநிலையை,

தங்கத்தை உருக்கிவிட்ட வான் கடலில் பரிதி
தலைமுழ்க மறந்தானோ! இருள் என்னும் யானை
செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ

என்றும்,

மேற்றிசையில் அனல் காட்டில் செம்பரிதி, வீழ்ந்தும்
வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே

என்றும் வரும் உவமைகள் கவிஞர் புரட்சிக் கவிஞரே என்பதைப் பறை சாற்றுகின்றன.

ஏறத்தாழ இதே காலத்தில் எழுதப் பெற்ற ‘பாண்டியன் பரிசு’ என்ற சிறு காப்பியம் மிகச் சிறந்த பெருமையுடையதாகும். நல்ல ஓசை நயமும், விருத்தப்பாவில் துள்ளு நடையும், கலந்து வீறுநடை போடுகின்றது பாண்டியன் பரிசு . புலவர்கள் பாடு கின்ற அணிகளில் தற்குறிப்பேற்றம் என்ற ஒன்றுண்டு. கொடி பறக்கின்ற இயற்கை நிகழ்ச்சியில், பகைவரைப் “போ போ” என்று கூறுவதாகவும், பொருளை விரும்பிப் பாடுபவர்களை ‘வா வா’ என்று அழைப்ப தாகவும் சொல்வது பழங்கவிதை மரபு. ஆனால், புரட்சிக் கவிஞர் “பாண்டியன் பரிசில்’.

கதிர்நாட்டின் நெடுங்கோட்டை மதிலின் மீது
கைகாட்டி “வா பகையே' என அழைக்கும்
புதுமைபோல் கொடி பறக்கக் கண்டார் மன்ளோ

என்று பேசுகிறார். மேலும்,

........ ....... ... … … சாவு
கொற்றவர்கள் இருவர்பால் மாறிமாறி நெருங்கிற்று வெற்றி மங்கை
நூறு முறை ஏமாந்தாள் ஆளைத் தேடி

என்பன போன்ற பகுதிகளில் மிகச் சிறந்த கவிதை நயத்தைக் காண்கிறோம்.

இராவணன் அடிபட்டுக் கிடக்கும் பொழுது அவ்வுடலைக் கண்ட இராமன் அவன் புறமுதுகில் புண்பட்டு விழுந்தானே என்று வருந்துவதாகவும், அதனைக் கண்ட வீடணன் ‘ஐய, சீரிய அல்ல செப்பலை’ என்று கூறி, இராவணன் புறமுதுகில் ஏற்பட்டு இருப்பது புண் அல்ல என்றும், திக்கு யானைகளின் தந்தங்கள் ஒடிந்து உள்ளே இருப்பதன் அடையாளமே என்றும் கூறினதாக ஒரு பகுதி வருகிறது. அதை நினைவூட்டுகின்ற முறையில் “பாண்டியன் பரிசில்’ கதிர்வேல் மன்னன் இறந்த காட்சி பேசப்படுகிறது. இப் பகுதியின் உட்பொரு ளோடு மட்டுமல்லாமல் கவிதையின் நடையும், ஓசையுங்கூடக் கம்பனை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

அனைவருள்ளும் எவரேனும் பகைவன் வாளை
அருமார்பில் முன் தோளில் ஏற்ற தின்றித்
தினையளவும் திரும்பிப்பின் முதுகில் ஏற்ற
சேதியினை இவ்வையம் கேட்ட துண்டோ?
எனக்கூவித் திரும்புங்கால், எதிரில் நின்ற
இளவேழ நாட்டரசன், இரக்க மிஞ்ச ;
"மனைவிளக்கே, நின் துணைவன் கதிரை வேலன்
வாட்போரை என்னோடு நிகழ்த்துங் காலை,

முகமறைத்த ஒரு தீயன் எவனோ பின்னே
முடுகி வந்து நடு முதுகில் எறிந்தான் ஈட்டி!
திகைத்தேன் நான்! சாய்ந்தான் அம் மறவோர் மன்னன்
திகழிமய மலைபோலும் அவன் கொண்டுள்ள
புகழ்க்கென்ன? உன் குடிக்கு வாய்த்த மானம்
போனதெனப் புலம்புவதும் என்ன? பெண்ணே !
அகத்துன்பம் நீங்கியிரு! செல்க உன்றன்
அரண்மனைக்கே" என்றுரைத்தான் ; சென்றாள் பெண்ணான்

தொல்காப்பியத்தில் பேசப் பெறும் எண் சுவைக்கும் எடுத்துக்காட்டுத் தரும் முறையில், பாண்டியன் பரிசில் பல பாடல்கள் உள்ளன. ‘வீரச் சுவைக்கு’ 5 – ஆம் இயலின் நான்காவது பாடலையும், பெருமிதச் சுவைக்கு 29 ஆம் இயலின் முதலாவது பாடலையும், ‘அவலச் சுவைக்கு 38 – ஆம் இயலின் நான்காவது பாடலையும், “அச்சச் சுவைக்கு’ 49 – ஆம் இயலின் மூன்றாவது பாடலையும், “இளிவரல் சுவைக்கு 57- ஆம் இயலின் பதினொன்றாம் பாடலையும், நகைச் சுவைக்கு 87 – ஆம் இயலின் மூன்றாம் பாடலையும் எடுத்துக்காட்டலாம்.

இனி இறுதியாகக் காணவேண்டிய பகுதி பாரதி தாசனின் நாடகங்கள் என்ற பகுதியே ஆகும். ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நூல் அவருடைய மிக இளமைக் காலத்தில் இயற்றப்பட்ட தாகும். இந் நாடகம் பாவேந்தர். திராவிடக் கட்சியில் சேர்ந்து, அதில் முற்றிலுமாக மூழ்கியிருந்த நிலையில் ஆரிய – திராவிடப் போராட்டத்தை வெளியிடுவதற்குக் கருவியாகக் கொண்ட ஒரு நாடகம் ஆகும். எனவே, இதனைப் பிரசார நாடகம் என்று சொல்லலாமே தவிர, நாடகப் பாணிக்குரிய சிறப்பு அதிகம் இருப்பதாகச் சொல்லமுடியாது. இதனையல்லாமல் பாரதிதாசன் நாடகங்கள் என்ற பெயரில் நான்கு சிறு நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. நாடகத்திற்குரிய இலக்கணமோ சூழ்நிலையோ எவையும் இந் நூல்களில் காட்சி அளிக்கவில்லை. பாவேந்தர் பொழுதுபோக்கிற்காக இவற்றை இயற்றியிருத்தல் வேண்டுமென்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உண்மையில் நாடகம் எழுதவேண்டும் மென்று அவர் முயன்று எழுதியது ‘பிசிராந்தையார் ” என்ற நாடக நூலாகும். இந்த நூலும் இவர் நினைத்த வெற்றியைத் தரவில்லை. பிசிராந்தையார் என்ற சங்கப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு கற்பனை நாடகமாக இது ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னர்க் கூறிய படி நாடக இலக்கணம் – எதற்கும் அதிகம் ஒத்துவாராமல், சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளையும் போராட்டங்களையும் ஓரளவு அறிவிக்கின்ற கருவி யாக அமைகின்றதே தவிர வேறு சிறப்பு ஒன்று மில்லை. நாடகத்திற்கு உயிர் நாடியாக இருக்க வேண்டிய முரண்பாடு எதுவும் இதில் இல்லை. பாத்திரப் படைப்பிலும், பாத்திரங்களின் வளர்ச்சி யிலும் எவ்விதமான தனிச் சிறப்பும் இல்லை.

ஒருவாறு அவருடைய நூல்கள் பலவற்றையும் ஒரு கண்ணோட்டம் விட்ட நிலையில், பாவேந்தரின் நிலை இன்றைய உலகில் என்ன என்ற வினாத் தோன்றுகிறது. ஈடு இணையற்ற கவிஞராகிய அவர் ஒரு கவிஞனுக்குரிய கற்பனை வளம், சொல் வளம், ஓசை வளம் ஆகியவற்றை மிக மிக அதிகமான அளவு பெற்றிருக்கிறார் என்பதும், காலத்தின் போக்கில் அரசியல் சூழ்நிலையில் அகப்பட்ட காரணத்தால் ஒரு சில இடங்களில் தம் கவிதைத் திறத்தைக் குறைத்துக் கொண்டு கூடப் பிரசார நோக்கத்தில் ஒருசில கவிதைகள் இயற்றியிருக்கிறார் என்பதும், காலாந் தரத்தில் பிரசார நோக்கத்தில் எழுந்த இக்கவிதைகள் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்படும் நிலை ஏற்பட்டாலும், நூற்றுக்கு 85 விழுக்காடு உள்ள அவருடைய உயிர்த் துடிப்புள்ள கவிதைகள் என்றும் நின்று நிலவிப் புரட்சிக் கவிஞரின் தரத்திற்கு எடுத்துக் காட்டாக இலங்கும் என்பதில் ஐயமில்லை என்பதும் இச்சொற்பொழிவின் முடிப்பாகக் கொள்ளலாம்.

குருவும் சீடருமாக அமைந்துள்ள இவ்விரண்டு பெருமக்களும் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய் கின்ற முறையில் நாட்டுப் பாடல்களும், சமுதாயப் பாடல்களும் முறையே இயற்றினர். என்றாலும், தமிழ் இலக்கியம் உள்ளளவும் நின்று நிலவக் கூடியவை அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்த இப்பாடல் மட்டுமல்ல என்பதும், காலத்தை வென்று நிலவக் கூடிய கருத்தாழம் சொல் ஆழம் உடையவையுமான பல்வேறு ஒப்பற்ற கவிதைகள் இயற்றியுள்ளனர், இந்த இரண்டு பாவேந்தர்களும். ஆதலால், தமிழ் இலக்கிய உலகில் இருவருக்கும் அழியாத இரண்டு இடங்கள் உண்டு என்பதும் மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும்.

(நூல் நிறைவு)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s