-தஞ்சை வெ.கோபாலன்

பாகம்-2: பகுதி 26
தற்காலிக இந்திய சுதந்திர சர்க்கார் பிரகடனம்
முந்தைய சில பகுதிகளில் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது தமிழகத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகள் பற்றி பார்த்தோம். இவை இந்த நாடு முழுதும் நடந்த புரட்சி எப்படி நடந்தது என்பதை விளக்குவதற்காக நமக்குப் பழக்கமான ஊர்களில் நடந்தவற்றை மட்டும் எடுத்துக் காட்டினோம். இனி நாட்டின் நிலை என்ன, காங்கிரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன, பிரிட்டிஷ் பேரரசின் திட்டங்கள் என்ன என்பதைப் பற்றியும் சிறிது பார்க்கலாம்.
1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் நாடு பற்றி எரிந்து கொண்டிருந்தது. முன்பு எப்போதும் இதுமாதிரியான கலவரங்கள் நடந்ததில்லை என்பதால் பிரிட்டிஷ் அரசு திணறிக் கொண்டிருந்தது.
1943-ஆம் வருஷம் பிறந்தது. ஆகாகான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி அங்கு 21 நாள் உண்ணாவிரதத்தை பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கினார். நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலைமைகள் அனைத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கமே காரணம் என்று காந்திஜி தில்லி சர்க்கார் மீது குற்றம் சாட்டினார்.
காந்திஜியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. வங்கத்தைச் சேர்ந்த தேசபக்தர் டாக்டர் பி.சி.ராய் காந்திஜியை ஒரு டாக்டர்கள் குழுவுடன் தினமும் கவனித்துக் கொண்டு வந்தார். நாளாக ஆக காந்திஜியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது என்பதை டாக்டர்கள் அறிவித்தார்கள்.
இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபடும் தேசபக்தர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கையாண்ட முறைகளைக் கண்டித்து வைசிராயின் நிர்வாக சபை உறுப்பினர்கள் சர் ஹெச்.பி.மோடி, என்.ஆர்.சர்க்கார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டார்கள்.
பிப்ரவரி 18, உண்ணாவிரதத்தின் ஒன்பதாம் நாள் காந்திஜியின் உடல்நிலை மோசமடைந்தது. இன்னும் 12 நாட்கள் அவர் உண்ணாவிரதத்தைத் தொடரவேண்டும் எனும் நிலையில், அவரால் தாக்கு பிடிக்கமுடியுமா என்று டாக்டர்கள் கவலை அடைந்தனர்.
அப்படியேதும் காந்திஜியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்குப் பின் ஒரு நிமிஷம்கூட பிரிட்டிஷார் இந்த நாட்டில் இருக்க முடியாது. பிப்ரவரி 21-இல் அவர் நிலைமை மோசமடைந்து விட்டது. உண்ணாவிரதத்தைக் கைவிடாவிட்டால் அவர் உயிர் பிழைக்கமுடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
அரசாங்கமும் எதற்கும் இருக்கட்டும் என்று ராணுவத்தையும், போலீசையும் தயார் நிலையில் வைத்திருந்தது. ஒரு கேலிக்கூத்து, ஒருக்கால் காந்திஜி இறந்துவிட்டால் அவரை எரிக்க சந்தனக் கட்டைகளைக் கூட வாங்கி தயார்நிலையில் வைத்திருந்தார்களாம்.
74 வயதைக் கடந்த காந்திஜி தன்னுடைய மன உறுதியால் அந்த 21 நாள் உண்ணா நோன்பை முடித்து விட்டார். உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது காந்திஜியின் உண்ணாவிரதத்தை. மிகுந்த எதிர்பார்ப்புடன் சந்தனக் கட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருந்த பிரிட்டிஷ் அரசுக்கு பெருத்த ஏமாற்றம்.
1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி அன்னை கஸ்தூரிபாய் ஆகாகான் அரண்மனையில் காந்திஜியின் மடியில் தலைவைத்து தன் கடைசி மூச்சை விட்டுவிட்டார். மறுநாள் காந்திஜியின் குமாரர் தேவதாஸ் காந்தி அன்னையின் சிதைக்கு தீமூட்டினார்.
1944 மே மாதம் 6-ஆம் தேதி காந்திஜி விடுதலையானார். அவர் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்படும்போது அவருடன் மகாதேவ தேசாயும், கஸ்தூரிபாயும் இருந்தனர். விடுதலையாகி வெளியே வரும்போது அவ்விருவருடைய சமாதிகள் அந்த மாளிகையின் தோட்டத்தில் இருக்க, இவர் மட்டும் வெளியே வந்தார்.
பின் ஜூலை மாதத்தில் தேசபக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘தலைமறைவாக ஒளிந்து வாழும் தேசபக்தர்கள் வெளியில் வரவேண்டும், கைது செய்ய நேர்ந்தால் தைரியத்துடன் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை கூறியிருந்தார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்திஜி முகமது அலி ஜின்னாவை பம்பாயில் மலபார் ஹில்ஸ் பகுதியில் இருந்த அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பில் ஜின்னா சொன்னார்:
“முஸ்லீம்களும் இந்துக்களும் வெவ்வேறு இனத்தவர்கள். தேசத்தை இரு கூறாகப் பிளப்பதே சமரசத்துக்கான வழியாகும். அதுவும் பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் உருவாகிவிட வேண்டும்.”
அதற்கு காந்திஜி சொன்ன மறுமொழி: “இந்த நாட்டில் மதம் மாறிய ஒரு கூட்டத்தாரும், அவர்களுடைய சந்ததியாரும் தாங்கள் வேறு வேறு தேசிய இனத்தவர்கள் என்று கூறிக்கொள்வது சரித்திரத்தில் தான் கண்டறியாத புதுமை” என்றார்.
இப்படியொரு பிரிவினை வாதம் இங்கு தோன்றி வேரோடி, நாட்டின் பிரிவினை வரை கொண்டு செல்லக் காரணமாய் இருந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் என்பதை அனைவரும் அறிவர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், அப்படி ஒருக்கால் இந்த நாட்டைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டால் இங்கு வாழும் இவ்விரு பிரிவினரும் ஒற்றுமையின்றி அடித்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியே நல்ல ஆட்சி என்று நினைக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட சூழ்ச்சி வலையைப் பின்னி வைத்தனர்.
***
இந்த இடத்தில் காந்திஜியையும் முகமது அலி ஜின்னாவையும் இப்படியே விட்டுவிட்டு, இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஜப்பானின் உதவியுடன் இந்தியா நோக்கி ‘தில்லி சலோ’ என்று வந்து கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைச் சிறிது பார்க்கலாம்.
உலக அரங்கில் யுத்த களத்தில் ஜப்பான் கிழக்காசிய பிரதேசத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்று முன்னேறிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷாரின் படைகளில் சேர்ந்து யுத்த களத்தில் பிரிட்டிஷாருக்காகப் போராடிய இந்திய போர் வீரர்கள் ஆங்காங்கே தனித்து விடப்பட்டு விட்டனர். இப்படி இந்திய வீரர்களை தவிக்க விட்டுவிட்டு பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கிப் போனதைக் கண்டு நேதாஜி வருந்தினார். அப்படி பிரிட்டிஷ் படையிலிருந்து அநாதைகளாகிப் போன இந்திய வீரர்களை ஒன்று திரட்டி அவர்களை இந்திய தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கச் செய்தார்.
நேதாஜியின் ஐ.என்.ஏ.வுக்கு ஜெர்மனியும், ஜப்பானும் ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலை அளித்தனர். ஜெர்மனி சென்றிருந்த நேதாஜி அங்கிருந்து ஜப்பானில் டோக்கியோ வந்தார். அங்கு அவருக்கு கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து மலேயா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
சென்ற இடங்களில் எல்லாம் இவருக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. ஜப்பானியர்கள், சீனர்கள், மலேயாக்காரர்கள், பர்மியர்கள், இந்தியர்கள் என்று இவருக்குக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது.
இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜப்பானில் வசித்து வந்த ராஷ் பிஹாரி கோஷ் என்பவரை இவர் சந்தித்து அவரிடமிருந்து ‘இந்தியா லீக்’ எனும் அமைப்பைத் தனதாக்கிக் கொண்டார். இப்படி பலதரப்பட்டவர்களையும் சேர்த்து ‘இந்திய தேசிய ராணுவம்’ ஒன்றை அமைத்து, அதில் காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், ஆசாத் பிரிகேட், ஜான்சிராணி பிரிவு என்று ராணுவ அமைப்புகளை உருவாக்கினார்.
ஜான்சிராணி பிரிகேட் பெண்களுக்கான படை, அதற்குச் சென்னையைச் சேர்ந்த கேப்டன் லக்ஷ்மி என்பார் தலைவராக இருந்தார். இவர் ஒரு மருத்துவர். பின்னாளில் ஷேகல் என்பவரை மணந்து லட்சுமி ஷேகல் என்று கான்பூரில் வாழ்ந்து, நமது அப்துல் கலாமை எதிர்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்று தோற்றுப் போனார். இவரது மகள் சுபாஷினி அலி என்பார் மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
1943-இல் அக்டோபர் மாதம் இந்தியாவை சுதந்திர நாடாக அன்னிய மண்ணில் பிரகடனப் படுத்தினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அந்த அரசுக்கு நேதாஜி தான் பிரதம மந்திரி.
அப்படி அந்நிய மண்ணில் உருவான இந்திய சர்க்கார் பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் யுத்தப் பிரகடனம் செய்தனர். அந்த சுதந்திர இந்திய சர்க்காரை ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், மங்கோலியா, சயாம், குரோஷியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. இந்த சர்க்காரின் தலைமை அலுவலகம் சிங்கப்பூரிலிருந்து பர்மாவுக்கு மாற்றப்பட்டது.
யுத்தத்தில் ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை வென்றது அவற்றை ஜப்பான் இந்திய சுதந்திர சர்க்காரிடம் ஒப்படைத்தது. 1943-ஆம் வருஷம் டிசம்பர் 30-ஆம் தேதி அந்தமான் தீவுக்கு விஜயம் செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அங்கு சுதந்திர இந்திய தேசிய கொடியை ஏற்றி, ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டு, இந்தியா இருக்கும் திசை நோக்கி நின்றுகொண்டு ஒரு சுதந்திர தின உரையாற்றினார். வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படும் உரை அது.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிப்பாய்களும் அதிகாரிகளுமாக இருந்தனர். ஆங்காங்கே ராணுவ முகாம்கள் ஜப்பானியர் வெற்றி கண்ட ஊர்களில் எல்லாம் அமைக்கப்பட்டன. செலவுக்கு நிதி தேவைப்பட்டது என்றதும் நேதாஜி ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகளாவிய இந்திய மக்கள் அனைவரும் வாரிவாரி வழங்கினர்.
சொந்தமாக சுதந்திர இந்திய சர்க்கார் ஒரு வங்கியைத் தொடங்குவதற்காக ஒரு இஸ்லாமியர் ஐம்பது லட்சம் ரூபாயை நன்கொடை கொடுத்தார். இந்தியப் பெண்கள் மலேயா, சிங்கப்பூர், பர்மா ஆகிய இடங்களில் தங்க நகைகளை ஏராளமாக வாரி வழங்கினர்.
நேதாஜி செல்லுமிடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு கிடைத்தது. அவருக்குப் போடப்பட்ட மாலையொன்று பன்னிரெண்டு லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1945-இல் இவர் ஆரம்பித்த வங்கியில் அப்போது முப்பத்தியாறு கோடிக்கும் மேல் இருந்தது. நேதாஜி சிங்கப்பூர், பர்மா ஆகிய இடங்களிலிருந்து ரேடியோ மூலம் இந்திய மக்களுக்கு உரையாற்றினார். ஐ.என்.ஏ.வுக்கு ஆயுதங்களை ஜப்பானிலிருந்து விலைக்கு வாங்கினார். ‘ஜெய் ஹிந்த்’ என்பது ஐ.என்.ஏ.வின் கோஷமாக இருந்தது.
ஐ.என்.ஏ, இந்தியாவின் இம்பால், மணிப்பூர், கொஹிமா ஆகிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறியது.
இதற்கிடையில் ஜப்பான் போரில் தொய்வு ஏற்பட நேதாஜி 1945-ஆம் வருஷம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஜப்பான் செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானம் 1945 ஆகஸ்ட் 18-இல் பார்மோசா தீவின் தலைநகருக்கு அருகில் நொருங்கி விழுந்து அவரை பலிவாங்கிவிட்டது. அவருடன் பயணம் செய்த ஐ.என்.ஏ.வின் தளபதி கர்னல் ஹபிபுர் ரஹ்மான் இந்த செய்தியை உறுதி செய்திருக்கிறார். என்றாலும் இந்தியாவில் ஒரு பகுதியினர் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தின் ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டு தேசமக்களுக்கு ஆற்றிய உரை இது:
“தோழர்களே, ராணுவ அதிகாரிகளே, வீரர்களே! உங்களுடைய அயராத உழைப்பினாலும், ஆதரவினாலும், அசைக்கமுடியாத நம்பிக்கையினாலும், இந்திய தேசிய ராணுவம் இந்தியாவை சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துவதற்கான ஒரு ஆயுதமாக இன்று உருவெடுத்திருக்கிறது. ‘தில்லி சலோ’ (தில்லியை நோக்கி நட) எனும் மந்திரத்தை நம் உதடுகள் முணுமுணுக்க நாம் போராடி முன்னேறிச் சென்று டெல்லியிலுள்ள வைஸ்ராய் மாளிகையில் இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, பழமை வாய்ந்த தலைநகராம் தில்லி செங்கோட்டையில் நமது இந்த இந்திய தேசிய ராணுவத்தின் அணிவகுப்பை நடத்துவோம்.”
தற்காலிக இந்திய சர்க்கார் ஆசாத் ஹிந்த் 1943 அக்டோபர் 21-இல் துவக்கப்பட்டது. இப்படி இந்த இந்திய தற்காலிக சுதந்திர சர்க்கார் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை சிங்கப்பூரிலுள்ள சாத்தே சினிமா கட்டடத்தில் கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் இந்திய சுதந்திர சர்க்காரின் பிரதம மந்திரியாகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நேதாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கையெழுத்திட்டார்.
அந்தப் பிரகடனத்தின் ஆங்கில வரிகளை அப்படியே இங்கே தருகிறோம்:
“In the name of God, I take this sacred oath that to liberate India and the thirty eight crores of my countrymen, I, Subash Chandra Bose, will continue this sacred War of Freedom until the last breath of my life. I shall always remain a servant of India and look after the welfare of the 38 crores of Indian brothers and sisters. This shall be for me my highest duty. Even afer winning freedom, I will always be prepared to shed the last drop of my blood for the preservation of India’s freedom.”
-மேற்கண்ட நேதாஜியின் உறுதிமொழியுடன் இந்தப் பகுதியை நிறைவு செய்துவிட்டு அடுத்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
(கர்ஜனை தொடர்கிறது)
$$$