பழைய உலகம்

-மகாகவி பாரதி

 “அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிக சிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு” - மகாகவி பாரதியின் யதார்த்தமான சிந்தனையும் லாகவமான எழுத்து நடையும் பிணைந்த கட்டுரை இது... 

இந்த உலகம் மிகப் பழமையானது. இதன் வடிவம் புதிதாகத் தோன்றும். இயற்கை பழமை; தனி வேப்பமரம் சாகும்; ஒற்றை வேப்பமரம் இறக்கும்; வேம்புக்குலம் எந்நாளுமுண்டு. பூமியுள்ளவரை வெயில் என்றைக்கும் இப்படி அடிக்கும். மழை, காற்று, பிறப்பு, வளர்ப்பு, நோய், தீர்வு, இன்பம், கட்டு, விடுதலை, தீமை, இன்பம், துன்பம், பக்தி, மறதி, நரைப்பு, துயரம், கலக்கம்– எல்லாம் எக்காலத்திலுமுண்டு.

கருவிகள் மாறுபடுகின்றன; இயற்கை செல்கின்றது. ஏன் சொல்லுகிறேன், தெரியுமா? நமக்கெல்லாம் தெரியாமல் ஆகாசத்திலிருந்து புதிய நாகரீகம் ஒன்று குதித்திருப்பதாகப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். நான் அதை நம்பவில்லை. உலகமே பழைய உலகம்.

ஏழை பாடு எப்போதும் கஷ்டம். பணக்காரனுக்குப் பல வித செளக்கியங்களுண்டு. கோயில் காத்தவனுக்குப் பஞ்சமில்லை. சாமிகள், முக்கால்வாசிக்குக் குறையாமல், பாதி கல், பாதி சாமி. முழுச்சாமி இருந்து கோயில் நடத்தினால், உடனே கிருதயுகம் பிறந்துவிடாதா?

எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் இதே கதை தான் நடந்து வருகிறது. எவன் கை ஏறியிருக்கிறதோ அவன் பாடு கோலாஹலம். ஏழைக்குக் கஷ்டம்.

பணக்காரன்– ஏழை என்ற பிரிவு முன் காலத்தில் எப்படி உண்டாயிற்று? குடி, படை என்ற இரண்டாக மனித ஜாதி ஏன் பிரிந்தது? எல்லாரும் ஒன்றுகூடி உழுது பயிரிட்டுப் பிழைக்கும் கிராமத்தில் வேற்றுமை எந்தக் காரணத்தினால் வந்தது? இவை யெல்லாம் எஜமானன். விசாரணைகள். இந்த நிமிஷம் ஸெளகர்யமில்லை. ஏழை பணக்காரன் விஷயத்தை மாத்திரம் இப்போது கருதுவோம்.

ஒரு செட்டி வியாபாரத்தில் ஏழையாய் நொந்து போய்த் தனது வீட்டுப் பஞ்சாங்கத்தையரிடம் ‘பணக்காரனாவதற்கு என்ன செய்யலாம்?’ என்று கேட்டான். நவக்ரஹபூஜை நடத்த வேண்டும் என்று அய்யர் சொன்னான். எவ்வளவு பணம் செலவாகுமென்று செட்டி கேட்டான். பத்துப் பொன்னாகுமென்று பார்ப்பான் சொன்னான். அதற்குச் செட்டி சொல்லுகிறான்:–“என்னிடம் இப்போது கொழும்புக்காசு, தென்னைமரம் போட்டது, ஒற்றைக் காசுக்கூடக் கிடையாது. இந்த நிலைமையில் என்ன செய்தால் பணம் கிடைக்குமென்று உம்முடைய சாஸ்திரம் பேசுகிறது. அதைச் சொல்லும்’’ ஏன்றான்.

அப்போது பார்ப்பான் சொன்னான்–‘’நீ போன ஜன்மத்தில் பிராமணருக்கு நல்ல தானங்கள் செய்திருக்க மாட்டாய். அதனால் இந்த ஜன்மத்தில் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. உனக்குப் பிராயச்சித்தம் நம்முடைய சாஸ்திரத்தில் கிடையாது. இந்த ஜன்மத்தில் இனியேனும் புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் உனக்குச் செல்வமுண்டாகலாம்.’’

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸப் படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிக சிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு.

எவ்விதமான மிருக பக்ஷியும் கூட்டம் கூடி கக்ஷி கட்டித் தன் குலத்தைத் தானே அழிப்பது வழக்கமென்று தோன்றவில்லை. மனித ஜந்து ஒன்றுக்கே இவ்வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஹோமர் கால முதல் கான்ஸ்டண்டைன் ராஜா காலம் வரையிலும் யவன தேசத்தில் போர் நிற்கவில்லை. புயற் காற்றடித்த இரவிலே கூடக் களவு நிற்கவில்லை. தீமை எக்காலத்திலுமுண்டு. விஷத்துக்கு மாற்றும், நோய்க்குத் தீர்வும், மிடிமைக்குச் செல்வமும், மடமைக்குக் கல்வியும் எக்காலத்திலும் தேடலாம். தேடவேண்டுமானால், அதற்கு உபாயங்களும் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே யிருப்பதன்றி மாறுபடுவதில்லை. மனிதர் கருவிகளையே மாற்றுகின்றனர். மற்றப்படி பழமையை விடாமல் நடத்தி வருகின்றார்கள்.

ஒரு வியாபாரத்தில் ஒரு லாபம் கிடைக்கவேண்டுமானால், ஒரேடியாக ஸூர்ய மண்டலத்துக்குத் தாவிப்போக முடியாது. பழைய வழக்கப்படி மெதுவாக ஒவ்வோர் அடியாகத்தான் போகவேண்டும். பதறின காரியம் சிதறும். மெதுவாகச் செல்வோனே குறியடைவான். பழைய வழி தான் நல்ல வழி. அதுதான் எப்போதுமே நடக்ககூடிய வழி. உலகத்தில் எல்லாக் காரியமும் படிப்படியாகத்தான் ஏறுகிறது. படீலென்று ஏறினால், படீலென்று விழ நேரிடலாம். காற்றாடி துள்ளிப் பாய்கிறது. சூரியன் ஒரே கணக்காக நடக்கிறான். அவன் நெறி மாறுவதில்லை, தாழ்ப்பதில்லை, செல்லுகிறான்; எப்போதுமே ஏறிச் செல்லுவான், பழைய வழிதான் வியாபாரத்துக்குச் சரியான வழி.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s