-நா.சடகோபன்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்; மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளராகவும், விஜயபாரதம் வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் திரு. நா.சடகோபன். சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…

நவீன இந்தியாவின் மகத்தான சிற்பிகளுள் முதன்மையான இடத்தை அலங்கரிப்பவர் சுவாமி விவேகானந்தர். மிகச் சிறந்த அறிவாளியும் செயல்வீரருமான அவர் நம் நாட்டினரை ஆன்மிக, தார்மிக, அறிவியல் உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பியவர். மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் தெய்விக சக்திகளை வலியுறுத்தும் அவரது கருத்துகள் இன்றைக்கும்கூட ஒரு நம்பிக்கையையும் தேசபக்தியையும் சேவை மனப்பான்மையையும் படிப்போர் மனத்தில் தோற்றுவித்து வருகின்றன.
பாரத நாட்டின் தொன்மையான வரலாற்றில் துறவிகளும் ஆன்மிகவாதிகளும் மிகப் பெரிய பங்காற்றியுள்ளனர். இது தொன்றுதொட்டு வருகின்ற மரபாக நீடித்து வருகிறது. நாடும், சமுதாயமும் பெரும் நெருக்கடிகளில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் ஓர் ஆன்மிக சக்தி தான் உந்து சக்தியாக எழுந்து நமது நாட்டை, பண்பாட்டை, சமயத்தை, பாரம்பரியத்தைக் காப்பாற்றியுள்ளது.
விஜயநகரப் பேரரசின் தோற்றத்துக்கு வித்யாரண்யர் ஆற்றியுள்ள பங்கு அளவிட முடியாதது. சத்ரபதி சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்து நல்லாட்சி புரிவதற்குப் பின்னணியில் சுவாமி சமர்த்த ராமதாசரின் பங்களிப்பு இருந்ததை யாவரும் அறிவர். பண்டைய பாரதத்தின் வடமேற்குப் பகுதியில் முகலாயர்களின் அடக்குமுறையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக சீக்கிய குருமார்களான குருநானக் முதல் குரு கோவிந்த சிங் வரை செய்துள்ள தியாகங்கள் தான் மக்களிடையே தைரியத்தையும் தியாக உணர்வையும் ஏற்படுத்தின. குரு கோவிந்த சிங்கையே சுவாமி விவேகானந்தர் இந்த தேசத்தின் மாபெரும் முன்னுதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே சுவாமி விவேகானந்தர்.
பாரதத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவதற்காக நடைபெற்ற நீண்டதொரு சுதந்திரப் போராட்டத்தில் சுவாமி விவேகானந்தர் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
ஸ்ரீ ஹேமசந்திர கோஷ் வங்கத்தின் மிகப் புகழ்பெற்ற ஒரு மனிதர். அவர் அடிக்கடி சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து வந்தார். ஒருமுறை சுவாமிஜியை சந்தித்துவிட்டு விடைபெறும்போது சுவாமிஜி அவரை ஆசிர்வாதம் செய்ததுடன், ‘ஹேமச்சந்திரா உன்னுடைய கடமை உன்னுடைய தாய்த் திருநாட்டுக்கு சேவை செய்வதே ஆகும். அரசியல் ரீதியாக இந்தியா விடுதலை பெற வேண்டும். மனிதர்களை உருவாக்குவதே என் வாழ்க்கையின் லட்சியமாகும்’ என்று கூறினார்.
சுவாமி விவேகானந்தர் ஒரு துறவி மட்டுமல்ல, தேசபக்தரும் கூட. அவர் சமூகநலனில் அக்கறை கொண்டவர். ஏழைகளைப் பற்றியே சிந்தித்து வந்தவர். அவரது சொற்கள் ஒவ்வொன்றும் சாதாரண மக்களின் உள்ளத்தில் தேசபக்திக் கனலை கொழுந்துவிட்டு எரியச் செய்தன. விவேகானந்தர் மறைந்து 110 (2012-இல் எழுதிய கட்டுரை இது) வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அவர் பாரத நாட்டின் மறுமலர்ச்சிக்காக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
‘ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஏற்ற ஆர்வமிகு செயல்வீரராக விளங்கும் மறுபிரதியே விவேகானந்தர்’ என்று சுவாமி நிர்வேதானந்தா குறிப்பிடுகிறார்.
பரம்பொருளே வடிவான ஸ்ரீ ராமகிருஷ்ணர் தீர்க்கதரிசனமாக- விவேகானந்தர் இளம் பருவத்தில் நரேந்திர நாத் ஆக இருந்தபோதே- ‘நரேன் தன்னுடைய மதி நுட்பத்தாலும், ஆன்ம பலத்தாலும் உலகத்தின் அடித்தளத்தையே ஆட்டுவிப்பார்’ என்று உரைத்துள்ளார்.
அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியரான டாக்டர் ஜான் ஹென்றி ரைட் என்பவர், சுவாமிஜியை ஒருமுறை சந்தித்தார். அவரிடம் பல நாட்கள் உரையாடிய பிறகு, உங்களுடைய எண்ணங்கள் இந்த நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுப் போய்விடக் கூடாது. சிகாகோவில் நடைபெறும் உலகளாவிய சர்வ மத மகா சபையில் தாங்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தன்னிடம் தகுதிச் சான்றிதழ் இல்லை என்று விவேகானந்தர் பதிலளித்தபோது, பேராசிரியர் ரைட், “சுவாமி உங்களை தகுதிச் சான்றிதழ் கேட்பது கதிரவன் தனது ஒளியை வீசிட தனக்குள்ள உரிமைகளைக் கேட்பதற்கு நிகராகும்” என்று பதிலளித்ததோடு, தேர்வுக்குழுவின் தலைவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார். ‘இங்கு ஒரு மனிதர் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து பேராசிரியர்களும் கற்றறிந்ததை விட மிக அதிகமாகக் கற்றறிந்தவர் ஆவார்..
சிகாகோ சர்வ மத மகாசபையில்விவேகானந்தரின் சிறிய உரையைக் கேட்ட பிறகு அந்நாட்டுப் பத்திரிகைகள் இவ்வாறு எழுதின. ‘நம்முடைய கிறிஸ்தவ மத போதகர்களை அந்த அறிவார்ந்த நாட்டுக்கு அனுப்புவது நாம் முட்டாள்கள் என்று பறைசாற்றுவதாகும். நம்முடைய பேராசிரியர்கள் சுவாமிஜியின் முன்பு மிகச் சிறியவர்களாகவே காட்சி அளிப்பர்’.
***
‘நான் விவேகானந்தரின் புத்தகங்களை மிகவும் ஆழ்ந்து படித்துள்ளேன். அவ்வாறு ஆழ்ந்து படித்ததனால் என்னுடைய தாய்த் திருநாட்டின் மீது உள்ள அன்பு கலந்த பக்தி ஆயிரம் மடங்கு பெருகிவிட்டது’ என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
‘நீங்கள் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் விவேகானந்தரைப் படியுங்கள். அவரது அனைத்து கருத்துகளும் ஏற்புடையவையே. அதில் எதிர்மறையானது எதுவும் இல்லை’ என்று ரவீந்தரநாத் தாகூர் கூறியுள்ளார்.
‘சுவாமி விவேகானந்தர் நவீன பாரதத்தின் எழுச்சி மற்றும் ஆன்மிகத்தின் தந்தை ஆவார். அவர் மட்டும் உயிரோடு இன்று இருந்திருப்பாரேயானால் நான் அவரது காலடியில் அமர்ந்திருப்பேன்’ என நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.
‘நாம் நம் பாரம்பரிய சொத்தில் பெருமை அடையும்படியான ஒரு தன்மையை சுவாமி விவேகானந்தர் தோற்றுவித்தார். நம்பிக்கை இழந்து மனமொடிந்து கிடந்த இந்து மனத்துக்குத் தெம்பூட்டும் அருமருந்தாக அவர் விளங்கினார். இந்துவின் மனத்துக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து கடந்த காலத்தில் வேறூன்ற உதவினார்’ என்று பண்டிட் ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்.
‘சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றினார். இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறார். அவர் இல்லாவிட்டால் நாம் நம்முடைய மதத்தை இழந்திருப்போம். சுதந்தரத்தைக் கூட அடைந்திருக்க மாட்டோம். எல்லாவற்றுக்கும் சுவாமி விவேகானந்தருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார் ராஜாஜி.
‘சுவாமிஜியின் அளவறியா அன்பைப் பெற்றது இந்தியா. இந்தியா அவருடைய இதயத்தில் துடித்தது; இந்தியா அவரது நாடி நரம்புகளில் அடித்தது. இந்தியா அவருடைய பெருங்கனவு. அதுமட்டுமல்ல அவரே இந்தியாவாக உருவெடுத்தார்’ என்று சகோதரி நிவேதிதை குறிப்பிடுகிறார்.
***
சுவாமி விவேகானதரின் பெருமைகளை வெறுமனே புகழ்வதும் பாராட்டிப் பேசுவதும் போதாது. அவருடைய திருவுருவச் சிலைகளை நிறுவுவதாலோ அல்லது அவற்றை அலங்கரித்து வழிபடுவதாலோ மட்டும் அவருடைய பெருமை வெளிப்பட்டுவிடாது. மாறாக அவர் நமக்கு கூறிச் சென்றுள்ள கருத்துகளை மனத்தில் நிறுத்தி அவரது லட்சியங்களை முழு மனதுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாம் நமது சமுதாயம் முழுவதற்கும் அவரது ஆன்மிக, சமூக, தேசியக் கருத்துகளைக் கற்பிக்க வேண்டும். விவேகானந்தரின் லட்சியங்களின்படி நடந்துகொள்ள,சமுதாயத்தை ஒருங்கிணைக்க, நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவருடைய 150வது பிறந்த ஆண்டின் லட்சியமாக இதுவே இருக்க வேண்டும்.
- நன்றி: ‘ஆழம்’ மாத இதழ் (2012).
$$$