-நரேந்திர மோடி
2012, ஜூலை 4-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில், குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இருந்தபோது தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரை இது...

பிரியமான தோழர்களே!
இந்த ஜூலை 4ம் நாள் அன்றுதான் 110 ஆண்டுகளுக்கு முன்பு 1902ம் வருடம் பாரதத்தின் மகத்தான மைந்தன் சுவாமி விவேகானந்தர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். அத்தகைய புனித நாளை ‘நிர்வாண தினம்’ என்ற சிறப்புப் பெயருடன் கொண்டாடும் இந்த நாளில், “நான் இந்த பூதவுடலை விட்டு பிரிந்து சென்றாலும் என் பணி இன்னும் 1500 ஆண்டுகள் தொடரும்” என்று அவர் கூறிய வார்த்தைகள் நம் நெஞ்சில் அலை மோதுகின்றன. தான் வாழ்ந்த 39 வருடம் 5 மாதங்களில் தன் வாழ்வின் மூலமாகவும் தன் செய்திகள் மூலமாகவும் சுவாமிஜி இவ்வுலகில் வெற்றிக்கொடி நாட்டிச் சென்றுவிட்டார்.
சென்ற நூற்றாண்டுகளில் நம் பாரதத்தின் விதியை மாற்றி அமைக்கப் போராடிய பல இயக்கங்களின் நற்சிந்தனைகளுக்கு சுவாமிஜி ஒரு உந்துசக்தியாக விளங்கி இருந்தார். இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற இயக்கங்களுக்கு அவரே உந்துசக்தியாகத் திகழ்வார். நமது விடுதலைப் போராட்டங்களின் பொழுது ஆயுதம் ஏந்தியோரும் அஹிம்சாவாதிகளும் சுவாமிஜியின் எண்ணங்களால் ஒன்று போலவே உந்தப்பட்டனர்.
கடந்த நூற்றாண்டுகளில் தங்கள் கொள்கை, செயல், வழிமுறை போன்றவற்றில் மற்றவருடன் கருத்து வேறுபாடு உடையவர்களாக இருந்த தனிப்பட்ட பலரும், பொதுவில் சுவாமிஜியின் கொள்கைகளால் தூண்டப்பட்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
மகாத்மா காந்தி கூறுகிறார். “நான் விவேகானந்தரின் படைப்புகளை ஆழ்ந்து படித்தேன். அவற்றைப் படித்த பிறகு, எனது தேசபக்தி ஆயிரம் மடங்காகப் பெருகியுள்ளது…”
இதற்கு பதில் நேதாஜி இவ்வாறு கூறுகிறார்: “…விளைவைப் பற்றி சிந்திக்காத தியாகம், ஓய்வற்ற செயல்பாடு, எல்லையற்ற அன்பு, ஆழமானதும் பரந்துபட்டதுமான அறிவு, பொங்கிப் பெருகும் உணர்ச்சிகள், இரக்கமற்ற தாக்குதல்கள், குழந்தை போன்ற களங்கமின்மை – நமது உலகில் அவர் அபூர்வமானவர். நாடி நரம்புகளில் ரத்தம் கொதித்துப் பாய்கின்ற ஆண்மகன் அவர்…”
அரவிந்தர் “அவரது தூண்டுதல் இன்னமும் அசுரத்தனமாக வேலை செய்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எப்படி என்று தெரியாது. எங்கே என்று தெரியாது. பூர்த்தியாகாத எந்த ஒன்றின் மேல் என்று தெரியாது. அந்த ஒன்று சிம்ம கம்பீரமாகவோ, உள்ளுணர்வாகவோ, மிகச் சிறந்ததாகவோ, புரட்சிகரமானதாகவோ இருக்கலாம். கவனித்துப் பாருங்கள்! சுவாமி விவேகானந்தர் வாழ்கிறார்! பாரதத் திருநாட்டின் அந்தராத்மாவிலும் பாரத மக்களின் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று கூறுவார்.
நம் நாட்டிற்காக குறிப்பாக ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஒவ்வொரு இந்தியனின் தூண்டுதலாகவே சுவாமிஜி இருந்து வருகிறார். அவரது முயற்சியாலேயே ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிறுவப் பட்டது. அதேபோல நாட்டிற்குத் தொண்டு புரிய தம்மை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல நிறுவனங்களின் உந்து சக்தியும் அவர்தான்.
இந்தக் காலகட்டத்தில் அவரது லட்சியங்கள் மூலமாகவும், அவரது கொள்கைகளின் மேல் அமைக்கப்பட்ட லட்சியங்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்ட அதி தீவிர அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட தனிநபர்களின் முயற்சிகளிலும் சுவாமிஜி இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னையில் உள்ள விக்டோரியா கூடத்தில் ‘எனது பிரசார திட்டம்’ என்ற தலைப்பின் கீழ் பேசும்பொழுது கூறுகிறார்.
“குழந்தைகளே! உங்களிடம் என் திட்டங்களைப் பற்றி விரிவாகக் கூறவே வந்திருக்கின்றேன். நீங்கள் செவி மடுத்துக் கேட்பதாக இருந்தால் உங்களுடன் செயலாற்றத் தயாராக இருக்கிறேன். இல்லை, செவி மடுக்க மாட்டோம் என்று கூறி என்னை வெளியே உதைத்து அனுப்பினாலும் நான் மீண்டும் மீண்டும் உங்கள் மத்தியில் தான் வந்து நிற்பேன்”.

அவரது கொள்கைகளை நமது அன்றாட வாழ்வில் நடைமுறைக்குக் கொண்டு வருவதே சுவாமிஜிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். சுவாமிஜி தனிப்பட்ட முறையில் எனது உந்துசக்தியாக விளங்குகிறார். ஒவ்வொரு நாளும் அவர் கொள்கைகளின் படி வாழ்வதையே முயற்சியாகக் கொண்டுள்ளேன்.
“இந்தியா இந்த அகிலம் முழுவதையும் வாகை சூட வேண்டும் என்பது ஒன்றைத் தவிர வேறு லட்சியம் எனக்கில்லை” – இது சுவாமிஜியின் பிரபலமான முழக்கங்களில் ஒன்று. அவருக்கு இந்தியாவின் மீது தீவிரமான தொலைநோக்குப் பார்வை இருந்தது. அவருடைய கனவுகளை நனவாக்கி அவரது தொலைநோக்குப் பார்வையை நிதர்சனமாக்க வேண்டியது நமது கடமையாகும்.
எந்த சங்கல்பம் அவர் கனவு கண்ட இந்தியாவை நோக்கிக் கொண்டு செலுத்துகிறதோ, அந்த சங்கல்பம் மூலமே நாம் அவரது கொள்கைகளின்படி வாழ்கிறோம் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒரு சமர்த்த பாரதத்தை, ஒரு சாம்ராட் பாரதத்தை (வலிமையான, வளர்ச்சியடைந்த பாரதம்), சமரச பாரதத்தை (சமூக நல்லிணக்கம் மிகுந்த பாரதம்), அதற்கும் மேலாக ஒரு ஜகத்குரு பாரதத்தை (உலகிற்கு தலைமை வகிக்கும் பாரதம்) அவர் கனவு கண்டார்.
நமது தேசத்தின் ஒற்றுமை மீண்டும் ஒரு முறை உள்ளூர் குதர்க்க வாதிகளாலும் அண்டையில் உள்ள கூடா நாடுகளாலும் சோதித்துப் பார்கப்ப்படுகிறது.
இந்த நேரத்தில் சுவாமிஜி நிதானமின்மை குறித்தும், மூட நம்பிக்கைகள் குறித்தும் சிகாகோ நகரில் ஆற்றிய பிரபலமான உரையிலிருந்து ஒரு பகுதி:
“பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்! அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்”.
அப்பொழுதே அவர் இந்திய இளைஞர்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்தார். தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள படைபலத்துடன் அவர்களை ஆயத்தப் படுத்தினால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்வதோடு, நாட்டின் வேர்களை பலப்படுத்தி தங்கள் நோக்கங்களையும் பூர்த்தி செய்வார்கள்.
அவர் மேலும் கூறுகிறார்:
“என் நம்பிக்கை இளைஞர் சமுதாயத்திடம் தான் உள்ளது. நவீன சமுதாயம் அது. அதிலிருந்துதான் எனது சேவகர்கள் எழுவார்கள். சிங்கங்களைப் போல எழுந்து வந்து எல்லா பிரச்னைகளையும் அவர்கள் தீர்த்துவைக்கப் போகிறார்கள்”.
இந்த நாளில் அவருக்கு நமது இதயம் கனிந்த அஞ்சலியை செலுத்துவோம்.
உங்கள்,
நரேந்திர மோடி.
.
தமிழில்: இரா.சத்தியப்பிரியன்
$$$
One thought on “அவரது கனவுகளை நனவாக்க உழைப்போம்!”