-இசைக்கவி ரமணன்
.
உலகம் முழுவதும் ஒவ்வொரு வர்க்கும்
உலை கொதிக்கட்டும்!
ஒவ்வொரு வீட்டிலும் நலமெனும் இசையே
ஓங்கி ஒலிக்கட்டும்!
கலகம் அனைத்தும் கனவாய் மறைந்து
கருணை பெருகட்டும்!
கடவுள் நமக்குக் காணும் நிசமாய்க்
கண்முன் தெரியட்டும்! 1
.
உதிரும் ஒவ்வொரு வியர்வைத் துளியும்
உரமாய்ப் பயிர்விளைத்து
உணவைக் கொடுத்துநம் உயிரைக் காக்கும்
உழவன் வாழட்டும்!
கதிர்கள் தலையை அசைக்கக் காற்றில்
கவிதை பரவட்டும்!
கனவுகள் கண்முன் நனவாய்க் காணும்
காலம் பிறக்கட்டும்! 2
.
ஒவ்வொரு நாளையும் திருநா ளாக்கும்
உணர்வே நம் பொங்கல்!
உழைப்பும் விளைவும் ஒன்று கலக்கும்
உன்னதம் நம் பொங்கல்!
செவ்விய தமிழரின் சேலையும் வேட்டியும்
சிறந்திடும் நம் பொங்கல்!
சீறும் காளையைச் செம்மைக் காளைகள்
வெல்வதே நம் பொங்கல்! 3

.
அகன்ற பானைகள் அடுப்பில் அமர்ந்த
அழகைப் பாடுவதா?
அத்தனை பெண்களும் அழகுற நொடிக்கும்
அற்புதம் பாடுவதா?
புகல முயன்ற வாய்க்குள் பொங்கல்
புகுவதைப் பாடுவதா?
புதியன எழுந்து பழையன மறையும்
புகழைப் பாடுவதா? 4
.
வந்தது பொங்கல் வந்தது வாழ்வெனும்
வாசலில் கோலங்கள்!
வானம் கொடுத்த தானம் எனும்படி
வளரும் வளமைகள்!
பந்தல் போட்டுப் பந்தி விரித்துப்
பலவித மேளங்கள்!
பல்குக உறவுகள்! பரவுக தொடர்புகள்!
பாரே வாழியவே! 5
.
$$$
One thought on “காலம் பிறக்கட்டும்! (கவிதை)”