ஞாயிறு போற்றுதும்:  மோதேரா சூரியன் கோயில்

-மது.ஜெகதீஷ்

இயற்கையில் சூரியனே முதன்மையானது என்பதால் சூரியனை வழிபடும் முறை உலகெங்கும் பண்டைக்காலம் முதலே இருந்து வருகிறது.

“…ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்”

          (நற்றிணை: 283)

-என மதுரை மருதன் இளநாகனார், சூரியன் பழந்தமிழர் வழிபட்ட தெய்வமாக இருந்ததைக் கூறுகிறார்.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது.

 “…ஞாயிறு போற்றுதும்! ஞாயிறுபோற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொன்கோட்டு
மேரு வலந்திரிதலான்...”

         (சிலப்பதிகாரம் - புகார்க்காண்டத்தின் முதல்காதை)

சிலப்பதிகாரத்தில் (புகார்க் காண்டம் / கனாத்திறமுரைத்த காதை) தமிழகத்தில் ‘பகல்வாயில் உச்சிக் கிழான் கோட்டம்’ என்ற பெயரில் சூரியனுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.

சூரிய வழிபாட்டுக்கென பாரதத்தில் பண்டைய காலத்தில் சிற்பக்கலைச் சிறப்புடன் பல ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.அவற்றுள் புகழ் பெற்றவை:

தமிழகத்தில் இருக்கும் சூரியனார் கோயில், ஒடிசா மாநிலத்தில் இருக்கும் கொனார்க் கோயில், காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் மார்தாண்ட் சூரியன் கோயில் (இக்கோயில் தற்போது முழுமையாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது) மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள ‘மோதேரா சூரியன் கோயில்.

மொதேரா சூரியன் கோயில்- பிரதான வாயில்
மொதேரா சூரியன் கோயில்- சுவர்களெங்கும் சிற்பக் கருவூலம்.


சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், பொ.யு. 1026 இல் கட்டி முடிக்கப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தோற்றப்பொலிவுடன் வரவேற்கும் தோரண வாயில்கள், நட்சத்திர வடிவ ஆலயக் கட்டுமானம்,  கலை நுணுக்கங்களுடன் கூடிய நெடிய தூண்கள் தாங்கி நிற்கும் சபா மண்டபம், பேரழகு பொருந்திய சிற்பங்கள், 108 சிறு ஆலயங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ‘சூரிய குண்டம்’ படிக்கிணறு என கோயிலின் ஒவ்வோர் அம்சமும் ஆச்சரியமூட்டுகிறது.

கண்களைக் கவரும் சூரிய குண்டம் படிக்கிணறு
கண்களைக் கவரும் சூரிய குண்டம் படிக்கிணறு

வெளிப்புறச் சுவர்களெங்கும் அழகிய தெய்வச் சிற்பங்கள் நிறைந்திருக்கும் இவ்வாலயம் அன்னியர் படையெடுப்புகளினால் சிதைக்கப்பட்டிருந்தாலும், அழிவின் மிச்சங்களிலும் அழகு கொட்டிக் கிடக்கிறது.   இக்கோயில் அமைக்கப்பட்ட காலகட்டத்தில் முழுமையாக எத்தகைய எழிலுடன் இருந்திருக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

ஆப்கானிய மன்னர் கஜினி முகமதுவின் பல்வேறு படையெடுப்புக்களின் போது, சோமநாதபுரம் சிவன் கோயிலை இடித்து, அங்குள்ள செல்வங்களைக் கவர்ந்து செல்லும் வழியில்,  மோதேராவில் இருந்த சூரியன் கோயிலும் அவரது தாக்குதலுக்கு உள்ளானது.

அழகிய சபா மண்டபம்
அற்புதமான தோரண வாயில்


சௌராஷ்டிர தேச மன்னர்களாலும், வணிகர்களாலும் மோதேரா சூரியன் கோயில் மீண்டும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டாலும், பொ.யு. 1299 இல் அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின் போது மோதேராவில் உள்ள சூரியன் கோயிலின் பகுதிகள் திரும்பவும் சேதப்படுத்தப்பட்டன.

இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட நாட்களான 21 மார்ச், 21 செப்டம்பர் ஆகிய நாட்களில், இக்கோயில் கருவறையில், கிழக்கு நோக்கி அருள் புரியும் சூரிய பகவான் விக்ரகம் இருந்த இடத்தின்மீது, காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பு. ஆனால் இப்போது கருவறையில் சூரியன் சிலையே இல்லை. வெகுகாலத்திற்கு முன்னரே விக்ரகம்  அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

குஜராத்தின் புகழ்பெற்ற படிக்கிணறுகளை நினைவூட்டும் வகையில் செவ்வக வடிவிலான ‘சூரிய குண்ட’ குளத்தில், விநாயகர்,  நடனமாடும் சிவன், ஆதிசேஷ சயன விஷ்ணு, ஷீதலா மாதா உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 சிற்றாலயங்கள்,  பக்தர்கள் நீராடிய பின்பு ஆலயம் சென்று வழிபடும் வண்ணம் குளத்தின் நாற்புறங்களிலும் பக்கவாட்டு படிக்கட்டுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய சன்னிதிகளில் உள்ள பல சிற்பங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டன.

இன்று வழிபாடு இல்லாத இவ்வாலயம், இந்திய தொல்லியல் துறையினரால் சிறப்பாகப் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

ஆலயம்: மோதேரா சூரியன் கோயில், மேஹ்சனா மாவட்டம், குஜராத் மாநிலம்.
காலம்: பொ.யு. 1026  (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் கட்டப்பட்டது.
புகைப்படப் பதிவுகள்: மது.ஜெகதீஷ்

$$$






One thought on “ஞாயிறு போற்றுதும்:  மோதேரா சூரியன் கோயில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s