ஆன்மிகமும் தேசியமும்

-மகரிஷி அரவிந்தர்

இந்தியாவின் அடையாளம் ஆன்மிகமே என்பார் சுவாமி விவேகானந்தர். அவரது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி எழுதும் மகரிஷி அரவிந்தர், இந்திய ஆன்மிகத்தின் புதிய ஒளியாக ராமகிருஷ்ணரை வர்ணிக்கிறார். அவரது அற்புதமான கட்டுரை, இங்கே இனிய தமிழில்…

நாயக வழிபாடு மனித இனத்தின் இயல்பு. மனித நாகரிகத்திற்கு அளப்பரிய பங்களித்த மாமனிதர்கள் எதிர்காலத்தினருக்கும் உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஹிந்துக்களாகிய நாம் ஆன்மிகத்தை நமது இயல்பாக கொண்டுள்ளோம். மனித இனத்திற்கு ஆன்மிகத்தை அளிப்பதே நம்முடைய பணி. இதை வேறந்த தேசமும் செய்ய முடியாது. எனவே நாம் யாரைப் போற்றுகிறோமோ அவர்கள் மனித இனத்தின் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவியவர்களாகவே இருக்கிறார்கள்.

அவநம்பிக்கை இல்லாவிட்டால் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படாது. ஏனெனில் கேள்விகளற்ற நம்பிக்கை என்பது ஆன்மிகப் பயணத்தில் முதலடி மட்டுமே. நமக்கு ஆன்மிக அனுபவம் வேண்டும். நாம் அனுபவத்தில் கண்டதைத்தான் கேள்வி கேட்காமல்,  அவநம்பிக்கை கொள்ளாமல், சந்தேகப்படாமல் ஏற்றுக்கொள்வோம். ஆன்மிக அனுபவம், சஞ்சலமற்ற அமைதியின் மூலம் இறைவனுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படும். அந்த விதமான தொடர்பும் அதன்மூலம் ஏற்பட்ட அனுபவமே நம்மை ஆன்மிகப் பாதையில் அவநம்பிக்கை அற்றவர்களாக்கும்; தெளிவுடன் முன்னேற வைக்கும். பண்டைய மகரிஷிகள் இன்றைய நவீன அறிவாளிகளைப் போலவே மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் வேத மதத்தைப் பற்றி எந்த விதமான முன்முடிவுகளும் இல்லாமல் முழுமையான அவநம்பிக்கையுடன் அதில் மூழ்கி உண்மையைக் காண முயற்சித்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சந்தேகித்தார்கள். தங்கள் புலன்கள் காட்டும் சான்றுகளையும், உலகின் நம்பகத்தன்மையையும், கடவுளின் இருப்பையும், தங்களது சொந்த இருப்பையும் கூட அவர்கள் நம்பவில்லை; சந்தேகித்தார்கள்.

இந்த அவநம்பிக்கைகளின் உச்சம், புத்தரின் போதனைகள். அவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த முன்முடிவுகளையும் செய்யவில்லை. எதையும் வெறித்தனமாக வலியுறுத்தவில்லை. சுய கட்டுப்பாடு, தன்னை உணர்தல், தன்னுடன் தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே அறிவு மற்றும் புலன்களின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க ஒரே வழி என்று அவர் வலியுறுத்தினார்.

நம்பிக்கையின்மை அதனுடைய உச்சத்தை எட்டிய போது ஆன்மிகம் தன்னை வெளிப்படுத்துவதற்கான வேளை பிறந்தது. சைதன்யத்தின் வெளிப்பாடு இந்த  உலகம்; மனிதப் புலன்கள் ஏற்படுத்திய குழப்பத்தின் ரகசியம்; மகத்தான மனித சாத்தியங்கள் மற்றும் இறைவனின் வர்ணனைக்கு எட்டாத அழகு. இந்தப் பணியை துவங்கவே ஸ்ரீ ராமகிருஷ்ணர் வந்தார். அதற்கு இரண்டாயிரத்துக்கும் மேலாக ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் தோன்றி அதற்கான களம் அமைத்தார். அந்தப் பின்புலத்தில் ஆன்மிகக் கருத்துக்களை மனித அனுபவமாக்க தக்ஷிணேஸ்வர  அவதாரமாக அவர் தோன்றினார்.

நீண்ட காலமாக இந்தியா மேற்கொண்ட ஆன்மிக சோதனைகள் முடிவுக்கு வரும் காலம் வந்தது. கிழக்கில் ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளியின் பிரகாசம் தொடுவானத்தில் தெரியத் தொடங்கியது. புதிய நாள் பிறந்தது. ஹிந்து ஆன்மிகத்தின் தெளிவான வெளிப்பாடு. கிழக்கின் மறுபிறப்பின் அடையாளம். அதன் பெருமையை இதற்கு முன்பு தோன்றிய அவதாரங்களா ல் கூட விளக்க முடியாது. ஆனால்  ‘அவன்’ இல்லாமல் இது சாத்தியமில்லை.

நீண்ட காலமாக மனித இனம் பல்வேறு நற்சிந்தனைகள், ஒழுக்கக் கோட்பாடுகள், பொற்காலக் கனவு, பொருளியல் மூலம் முழு நிறைவை அடைய முடியும் என்ற வினோதமான கனவுகள், மனிதநேயம் மிக்க நம்பிக்கைகள் என பலவற்றைச் சோதித்து வந்துள்ளது. ஆனால் வாழ்வின் உன்னத ரகசியத்தை அது எங்கும் கண்டதில்லை. கவலை, வறுமை, துன்பம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க, அது பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு சரியான வழியை எந்த சமுதாயமோ, அரசியலோ எங்குமே கண்டறியவில்லை. அதற்கான வழியை பொருளியல் மூலமாக அடைய முயற்சிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தோல்வி அடைவது திண்ணம்.

உண்மையைப் பற்றி ஓரளவு அறிவு பெற்றது கிழக்கு மட்டுமே. கிழக்கு மட்டுமே மேற்கிற்கு சொல்லிக் கொடுக்க முடியும். கிழக்கினால் மட்டுமே மனித இனத்தைக் காப்பாற்ற முடியும். இத்தனை காலமாக ஆசியா தனக்குள்ளே ஒளியை தேடிக் கொண்டிருந்தது. அவளுக்கு ஒளியின் கீற்று ஆசீர்வதிக்கப்பட்ட போது புத்த மதம், கன்ஃபியூஷியனிஸம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் அவற்றின் பல்வேறு பிரிவுகள் தோன்றின. ஆனால் ஆன்மிக அனுபவத்தின் மிகப் பெரிய சோதனைக்களமாக, ஆய்வுக்கூடமாக இருந்தது இந்தியா. ஒவ்வொரு தலைமுறையிலும் ஆயிரக்கணக்கான மாமனிதர்கள் பிறந்து, தங்கள் ஆன்மாவில் பணியைச் செய்து, தங்கள் அனுபவ அறிவை முழுமை செய்தனர். தங்கள் சோதனையின் விளைவுகளை தங்கள் சீடர்களிடம் கொடுத்தனர். அவர்கள் மூலம் அதைத் தொடர்ந்து முன்னேற்றி பூர்த்தி செய்யும் பணி தொடர்ந்தது.

அவர்கள் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. தங்களை முன்னிறுத்தவும் இல்லை. ஆனால் தங்கள் அனுபவம் என்ற பங்களிப்பைச் செய்துவிட்டு எங்கிருந்து வந்தார்களோ அந்த மூலத்திற்குத் திரும்பிச் சென்றனர். சுய கட்டுப்பாட்டின் மூலமாகத் தேக்கிச் சேர்க்கப்பட்ட ஆன்மிக சக்தியே இந்த அவதாரங் கள் தோன்றக் காரணம். இறைத்தன்மை மிக்க அந்த மாமனிதர்கள் பேரானந்தத்தை – தாங்கள் மட்டுமே பெற்ற அனுபவத்தில் திருப்தி அடையாமல் – உலகிற்கு வழங்கினார்கள். மற்றவர்களை மதம் மாற்றும் நோக்கத்துடன் அல்லாமல் தாங்கள் அடைந்த பேரானந்த அனுபவத்தைப் பெற தகுதி உள்ளவர்களுக்கு – அவர்கள் முன்பு செய்த  ‘தவத்தின்’ பயனாகவோ அல்லது தங்கள் தூய்மையான ஆவலின் காரணத்தாலோ அதை அடையத் தகுதி பெற்றவர்களுக்கு – தர வேண்டும் என்ற ஆவலினால் அளித்தார்கள்.

அப்படிப்பட்ட மாமனிதர்களின் வரிசையில் கடைசியாக வந்தவர், மிகவும் மகத்தானவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். மற்றவர்கள் எல்லாம் கடவுளை ஒரு பரிமாணத்தில் அல்லது குறிப்பிட்ட வடிவில் உணர்ந்தபோது, அவர் மட்டுமே கடவுளை எல்லா வடிவிலும் தனித்தனியாகவும், அனைத்தும் ஒருசேரவும் கண்டவர். அவரது ஆன்மிக அனுபவம் அவருக்கு முன்னிருந்த லட்சக்கணக்கான மகான்களின் அனுபவங்கள் அனைத்தும் ஒருசேர இணைந்து ஏற்பட்டது. அவை அனைத்தையும் மீண்டும் மெய்ப்பித்தது. உலகிற்கு ஹிந்து மதம் மூலம் அளிக்க வேண்டிய இறுதிச் செய்தியை இந்தியாவுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் கொடுத்தார்.

அவரது பிறப்பின் மூலம் ஒரு புதிய யுகம் பிறந்தது. அதன்மூலம் ஆன்மிகம் வாழ்வின் மையமானது. உலக மக்கள் இறைத் தொடர்பை நோக்கி உயர்த்தப்பட்டார்கள். எதை கிறிஸ்தவம் செய்யத் தவறியதோ, எதை இஸ்லாம் செய்ய முயற்சித்து முதிராமல் போனதோ, எதை புத்த மதம் குறுகிய காலத்திற்கு சிறு கூட்டத்தினரிடையே மட்டுமே நிலைநிறுத்தியதோ, அதனை ஹிந்து மதம் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை மூலமாக உலகின் முன்பு நிலைநாட்டியது.

இந்தக் காரணத்திற்காகத் தான் இந்தியா புத்துயிர் பெறுகிறது. இதற்காகத் தான் கடவுள் இந்தியாவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். இதற்காகத் தான் மகத்தான ஆன்மாக்கள் அவளது விமோசனத்திற்காகப் பாடுபட்டன. இந்தியாவின் மைந்தர்களின் மனதில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டதற்கு இதுவே காரணம். இந்த மாற்றத்தின் முதல் வெளிப்பாடு அரசியலாக இருக்கலாம்; முடிவு ஆன்மிக முழுமை, நிறைவுதான்.

  • தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

$$$

One thought on “ஆன்மிகமும் தேசியமும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s