பார் போற்றும் பரிதிக் கடவுள்

-பத்மன்

தமிழர் திருநாள் என்று சிறப்பித்துப் போற்றப்படும் தைப் பொங்கல் விழா, அடிப்படையில் ஒரு தேசியத் திருநாள் ஆகும். மகர மாதம் என்று அழைக்கப்படும் இந்தத் தை மாதத்தின் முதல் நாளன்றுதான், சூரியனின் ஒளி மிகுந்த வடதிசைப் பயணமான உத்தராயண புண்யகாலம் தொடங்குகிறது. ஆகையால் தைப் பொங்கல், மகர சங்கராந்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகவும் திகழ்கிறது. நமது ஹிந்து தர்மத்தின்படி, பண்பாட்டின்படி ஞாயிறு பிரத்யட்சக் கடவுளாக -  அதாவது கண்ணால் காணப்படும் கடவுளாகத் திகழ்கிறார். “ஞாயிறு போற்றுதும்” என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டுள்ள அந்த சூரியக் கடவுள், காயத்ரி ஜபத்தின் மூலம் துதிக்கப்படும் அந்தக் கதிரவத் தெய்வம், எவ்விதம் உலகமெல்லாம் வணங்கப்படும் தெய்வமாக விளங்குகிறார் என்பதை, தைப் பொங்கல் திருநாளை ஒட்டி விளக்கும் விதமாக,  மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் இந்தக் கட்டுரையை வழங்கி உள்ளார்.
“அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோ மா அம்ருதம் கமய”

– அதாவது,

“பொய்மையிலிருந்து என்னை உண்மைக்கு அழைத்துச் செல்க!
இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்க!
இறப்பிலிருந்து என்னை இறவாத்தன்மைக்கு அழைத்துச் செல்க!”

என்று பரம்பொருளிடம் நம் சார்பாக இறைஞ்சுகிறது ப்ருஹதாரண்யக உபநிஷதம்.

ஸத் என்றால் என்றுமுள்ள உண்மை என்று பொருள். பரமாத்மாதான் அந்த ஸத். அகத்திலே அந்த உண்மை ஒளி தோன்றும்போது அஞ்ஞானமாகிய இருள் அகன்று, மீண்டும் பிறந்திறவாத அமரத்தன்மையை அடைந்துவிடுவோம். எவ்வித உருவமும் இல்லாத அந்தப் பரம்பொருள், நமக்காக எல்லா வடிவங்களையும் எடுக்கக் கூடியவர். அவ்விதமாக பக்தர்களால் உபாசனை செய்யக் கூடிய இறைவனின் சகுண வடிவங்களிலே மிகவும் தொன்மை வாய்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமான தெய்வ வடிவம் சூரியன். எக்காலத்திலும் பிரத்யட்சமாக விளங்கும் அந்த பரிதிக் கடவுள், அறிவியல் ரீதியிலும் நமது அண்டத்தின் தோற்றத்துக்கு காரணமாய் நிற்கும் பரம்பொருள். நமது பூமி,  ‘சோலார் ஃபேமிலி’ எனப்படும் சூரியக் குடும்பத்தைச் சார்ந்ததுதானே!

இதனை ஆன்மிக ரீதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அறிந்துகொண்ட நம் முன்னோர்கள், சூரியனை முக்கிய வழிபடு தெய்வமாக வரித்துக்கொண்டனர். அவ்வகையில், சனாதன தர்மத்தின் ஷண்மதங்களிலே சூரியனை வணங்கும்  ‘சௌரம்’ முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. மிகப் பழமையான ரிக் வேதத்தில் சூரிய பகவான், உலகின் தோற்றத்துக்குக் காரணமான சவிதா (சவித்ரன்), எல்லாவற்றிற்கும் ஒளிபாய்ச்சும் சூர்யன், சகல உயிரினங்களையும் செழிக்கச் செய்யும் பூஷண், கடவுள்களுக்கெல்லாம் அரசராகவும் பிரபஞ்சத்தின் தலைவராகவும் விளங்கும் வருணன், உலக நடப்புகளின் கண்காணிப்பாளர் என்று பலவிதங்களில் போற்றப்படுகிறார்.

ராமாயண காவியத்தில்,  ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஸ்தோத்திரத்தில் ‘‘ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்’ச சிவ: ஸ்கந்த ப்ராஜபதி:” என்று சூரிய பகவானே பிரும்மா, விஷ்ணு, சிவன், ஸ்கந்தன், பிரஜாபதி என சகல தேவர்களாகவும் காட்சியளிப்பதாக ஸ்ரீ ராமபிரானுக்கு அகத்திய முனிவர் உபதேசித்திருக்கிறார்.

இவ்வாறாக சூரியனை முழுமுதற் கடவுளாக வணங்கும் வழக்கம், இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் முற்காலத்தில் பரவியிருந்தது. சூரிய பகவானை நமது முன்னோர் எப்படி தரிசித்தார்களோ, ஏறத்தாழ அதேபோன்ற சிந்தனை வெளிநாட்டினருக்கும் முன்னர் இருந்திருக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடிய வணிகர்கள் மூலமாக பண்டைய பாரதத்துடன் அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்பு இதற்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களைப் போலவே, தற்போது ஈரான் என்றழைக்கப்படும் பாரசீக நாட்டவர்களுக்கும் (பார்ஸிகள்), சூரியனும் அக்னியும் முக்கியக் கடவுள்களாவர்.

பாரசீகர்களின் அஹுரா மஸ்தா கடவுள்

இஸ்லாம் திணிக்கப்படுவதற்கு முன்  பல நூற்றாண்டுக் காலமாக,  பாரசீகத்தின் முக்கிய மதமாக விளங்கிய ஜொராஷ்ட்ரியத்தில் அஹுரா மஸ்தா (ஓர்மஸ்த்) எனப்படும் ஒளிக் கடவுளே முக்கியமான தெய்வம். இவர் ஏறத்தாழ தேவர்களின் தலைவனான இந்திரன் போன்றவர். அஹுரா மஸ்தாவுக்கு நேர் எதிரான சக்தி, தீமை மற்றும் இருளின் உருவகமான அஹிர்மான். விண்வெளியில் கோள்களின் வடிவிலும், மனிதர்களின் மனங்களில் எண்ணங்களின் வடிவிலும் இவ்விரு சக்திகளுக்கும் இடையே எப்போதும் போர் நடைபெற்று வருவதாக ஜொராஷ்ட்ரியம் கருதுகிறது. (இது நமது வேதம் கூறும் கருத்தை ஒத்திருக்கிறது.) இந்தப் போரில் அஹிர்மானின் அசுரப் படைகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றி ஓர்மஸ்த் என்னும் கடவுளின் பக்கம் அழைத்துச் செல்லும் தெய்வம் மித்ரா. இந்த மித்ரா, நமது சூரிய பகவானின் திருநாமங்களில் ஒன்றான ‘மித்ர’ தான்.

‘மித்ர’ என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு நண்பன், இணைப்பவன் என்று பொருள் உண்டு. அதேபோருளில்தான் மித்ரா, நன்மையின் வடிவாகிய கடவுளிடம் நம்மை இணைக்கும் நண்பராக, ஓர் பாலமாகச் செயல்படுகிறார். (யோக ஆசனங்களின் சிகரமான சூரிய நமஸ்காரத்தில் பயன்படும் மந்திரங்கள் 13-இல் முதலாவதாக ‘ஓம் மித்ராய நம:’ உள்ளது).

பார்ஸிகளின் ஆலயங்களில் இன்றும்கூட எப்போதும் அக்னி எரிந்து கொண்டிருக்கும் (நித்ய அக்னிஹோத்திரம்). தீ, பார்ஸிகளின் சமயச் சின்னம். இந்தத் தீ, நமது ஹிந்து மதத்தில் அக்னி பகவானாகப் போற்றப்படுகிறது. பார்ஸிகளின் ஜொராஷ்ட்ரிய மதத்தில் அக்னி, ஒருசேர அஹுரா மஸ்தா மற்றும் மித்ரா எனப்படும் சூரியக் கடவுளின் உருவகமாகக் கூறப்படுகிறார்.

ரிக் வேத காலத்தில் இந்திரன், சூரியன், அக்னி ஆகிய மூன்று  தேவர்களும் முப்பெரும் தெய்வங்களாகப் போற்றப்படுவதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அடிப்படையில் மூன்றுமே ஒளியைக் குறிக்கும் ஒரே தெய்வமே. இந்திரன் வளி மண்டலத்திலும் நமது மனங்களிலும் பிரகாசிப்பவர், அவரே சூரியனாக ஆகாயத்திலும், அக்னியாக பூமியிலும் பிரகாசிக்கிறார். காலைச் சூரியனை மித்ரன் என்றும் மாலைச் சூரியனை வருணன் என்றும் நமது வேதங்கள் வர்ணிக்கின்றன. இறவாத்தன்மையை (அமரத்துவம்) நல்கும் இந்த வருணன், ஜலங்களின் அதிபதியாகவும் போற்றப்படுகிறார். இதேபோலத்தான், ஜொராஷ்ட்ரிய மதத்திலும் மித்ராவுடன் வருணனையும் சேர்த்து இரட்டைக் கடவுளாகக் கூறுகின்றனர்.

இந்த மித்ர வழிபாடு, மித்ராயிஸம் என்ற பெயரில் பண்டைய ரோமானியப் பேரரசிலும் (இன்றைய இத்தாலி) பரவியிருந்தது. குறிப்பாக ரோமானியப் படைவீரர்கள் மித்ரா எனப்படும் சூரியக் கடவுளின் தீவிர பக்தர்களாக விளங்கினர். நமது இந்தியாவிலும் சூரிய வம்சத்தைச் சேர்ந்த க்ஷத்திரிய குலத்தினர் இருப்பதை நோக்க வேண்டும். ரோமானியர்கள் மித்ராவுக்கு குகைகளில் ஆலயங்கள் எழுப்பினர். தீமையின் உருவகமான அஹிர்மானால் அனுப்பப்பட்ட காளையை அழிக்கும் தோற்றத்தில் மித்ராவின் திருவுருவச் சிலை கருவறையில் வீற்றிருக்கும். இந்தக் கருவறையின் முன்பு எப்போதும் அக்னி எரிந்து கொண்டிருக்கும்.

சூரியனுக்கு வைதீகர்கள் முக்காலமும் சந்தியா வந்தனம் செய்வதுபோல ரோமானியப் படைவீரர்களும் மித்ராவை மூன்று காலங்களில் மூன்று வெவ்வேறு திசை நோக்கி வழிபட்டனர்.  சூரியன் உதிக்கும் காலையில் கிழக்கு நோக்கியும், உச்சியில் தோன்றும் நண்பகலில் தெற்கு நோக்கியும், அஸ்தமனம் ஆகும் மாலையில் மேற்கு நோக்கியும் மித்ராவை வணங்கினர். மித்ர தேவனை கௌரவிக்கும் வகையில் அவரது தினமான ஞாயிற்றுக்கிழமை (சண்டே) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலும் ஞாயிற்றுக்கிழமை, வாரத்தின் முதல் தினமான ஆதி வாரமாக கௌரவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் 16-ஆம் தேதியையும் மித்ராவுக்குரிய புனித தினமாக ரோமானியர்கள் கருதினர்.

மேலும், ஐரோப்பாவில் பனிக்காலத்தின் ஆதிக்கம் முடிவடைந்து, சூரிய ஒளி அதிகரிக்கத் தொடங்கும் டிசம்பர் 25-ஆம் தேதி, மித்ராவின் அவதார தினமாகக் கருதப்பட்டு வீடுகள் தோறும், வீதிகள் தோறும் தீபங்கள் ஏற்றி கோலாகலமான கொண்டாட்டம் நடைபெற்றது. (இதுதான் பிற்காலத்தில் கிறிஸ்துமஸ் தினமாக ஆனதாகவும், இன்றைய கிறிஸ்தவ மதம் மித்ராயிஸத்தின் மறுபதிப்பு என்றும் மேலைநாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர்). சூரியனின் ஒளி அதிக நேரம் நீடிக்கும் உத்தராயண புண்யகாலம் தொடங்கும் ஜனவரி 14 அல்லது 15-ஆம் தேதி, இந்தியாவில் ‘மகர சங்கராந்தி’ என்றும் தைப் பொங்கல் திருநாள் என்றும் கொண்டாடப்படுவதை இது ஒத்திருக்கிறது.

ரோமானியர்கள் வழிபட்ட ஸோல் கடவுள்

மித்ர தேவனைத் தவிர,  ‘ஸோல், அப்பல்லோ’ என்ற பெயர்களிலும் சூரியனை ரோமானியர்கள் வழிபட்டனர். ஸோல் (SOL) என்ற சொல்லிலிருந்துதான் ஆங்கிலத்தில் சன் என்ற சொல் உருவானது. நமது புராணங்கள் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் (வாரத்தின் 7 நாட்களைக் குறிப்பது) சஞ்சரிப்பதாக வர்ணிப்பதைப் போல, கிரேக்க, ரோமானிய புராணங்கள் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஸோல் பயணிப்பதாக வர்ணித்துள்ளன. இக்கடவுள், ஹெலியாஸ் என்றும் அழைக்கப்பட்டார். பொது யுக ஆண்டுக்குப் பிந்தைய (பொ.யு.பி.) 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரோபஸ் (PROBUS) என்ற ரோமானிய மன்னன் வெளியிட்ட நாணயத்தின் பின்புறத்தில் ஸோல் கடவுள், நான்கு குதிரைகளில் செல்வதைப் போன்ற சித்திரம் செதுக்கப்பட்டுள்ளது. அதன்கீழே ரோமானிய மொழியில் “SUN INVICTO” அதாவது ‘வெல்லப்பட முடியாத சூரியன்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

நமது புராணங்களில் ஞானம், பேராற்றல், அழகு ஆகியவற்றின் உறைவிடமாக சூரியன் போற்றப்படுவதுடன், பல்வேறு வியாதிகளைத் தீர்த்து நீண்ட ஆயுளைத் தருபவராகவும் வர்ணிக்கப்படுகிறார். அதேபோலத் தான் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களும் மற்றொரு சூரியக் கடவுளான அழகுமிகு அப்பல்லோவை அறிவு, கவிதை, கணக்கு, சிகிச்சை ஆகியவற்றுக்கான கடவுளாக வணங்கினர். இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த அப்பல்லோ, பெலினஸ் என்ற பெயரில் வணங்கப்பட்டார். இந்த அப்பல்லோ வழிபாடு கிரேக்கத்தில் தோன்றி ரோமாபுரிக்குள் நுழைந்ததாகும்.

இதேபோல கிரேக்கர்களின் ஹெலியாஸ் என்ற சூரியக் கடவுள்தான் ரோமானியர்களின் ஸோல் ஆகும். ரோமிலிருந்து இது போன்ற சூரியக் கடவுள் மற்றும் இதர கடவுள்களின் வழிபாடுகள், ரோமானியர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் இங்கிலாந்து நாட்டிலும் பின்னர் பரவின.  எனினும், கிறிஸ்தவ மதம் பரவியபிறகு, இயற்கை ஆற்றல்கள் உள்ளிட்ட அனைத்தையும் கடவுளாக பாவிக்கும் இதுபோன்ற வழிபாடுகள் மேலைநாடுகளில் நசியத் தொடங்கின. ‘பேகனிஸம்’ அதாவது நாட்டுப்புற வழிபாடு என்று கூறி அவை ஒதுக்கப்பட்டன, ஒடுக்கப்பட்டன.

சூரிய பகவானே அனைத்து தெய்வங்களாகவும் வடிவெடுத்திருப்பதாக ஆதித்ய ஹ்ருதயம் எப்படிப் புகழ்கிறதோ அதேபோல, எகிப்தின் பண்டைய மதமும் அனைத்துக் கடவுள்களும் சூரிய பகவானின் அம்சம் என்றே வணங்கியது.  எகிப்தின் அனைத்துக் கடவுள்களின் தலைக்குப் பின்புறமும் சூரியத் தகடு போன்ற வடிவம் செதுக்கப்பட்டிருப்பது இதற்கு உதாரணமாகும். எகிப்தியர்களின் புராதன சூரியக் கடவுள் ரா. இவர்  ‘அமோன் ரா, ரா ஹரக்தி, ஹோரஸ்’ எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார். உதயகாலத்து சூரியன்  ‘கெபெரா’ என்றும், நண்பகல் சூரியன் ‘ரா’ என்றும், அஸ்தமன சூரியன்  ‘டெமு’ என்றும் அழைக்கப்பட்டார்.  சூரியன் ரதத்தில் செல்வதாக நமது புராணங்கள் வர்ணிப்பதைப்போல், ரா படகில் பயணிப்பதாக எகிப்திய புராணங்கள் வர்ணிக்கின்றன. இதைச் சித்திரிக்கும் வகையில் பொது ஆண்டுக்கு முந்தைய (பொ.யு.மு) 2,500-ல், கிஸா பெரிய பிரமிடு வளாகத்தில் சுமார் 43 மீட்டர் நீளமுள்ள பிரும்மாண்ட சூரியப் படகு செதுக்கப்பட்டது.

இந்திய மன்னர்கள் தங்களை சூரியன் அல்லது சந்திரனின் வம்சத்தவராகவும், விஷ்ணுவின் அம்சமாகவும் கூறிக்கொண்டதைப் போல, எகிப்திய பாரோ மன்னர்கள், தங்களை ரா கடவுளின் சந்ததியினராக வர்ணித்துக் கொண்டனர். எகிப்தியர்கள் சூரியனை ஆணாக மட்டுமின்றி பெண் தெய்வமாகவும் வழிபட்டனர். சிங்கமுகத்துடன் கூடிய போர்க்கடவுளான ஸெக்மெத் இதில் குறிப்பிடத் தக்கவர். அபுகுரப், உஸெர்கஃப், நைஸரே ஆகிய இடங்களில் உள்ள பிரமிடுகள் சூரியக் கடவுளுக்கானவை.

பாரதமே உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் என்பதற்கான சான்றுகள் தற்போது அதிகம் வெளிவருகின்ற போதிலும், உலகின் முதல் நாகரிகம் என்று மேலைநாட்டு வரலாற்று அறிஞர்களால் புகழப்படும் சுமேரிய நாகரிகத்தில் (இன்றைய இராக், சிரியா நாடுகளை உள்ளடக்கிய பகுதி) சூரியனே முக்கிய தெய்வமாக விளங்கினார். உடு என்ற பெயரில் ஆண் சூரியக் கடவுளையும், இனன்னா என்ற பெயரில் பெண் சூரியக் கடவுளையும் அவர்கள் வணங்கினர். யூத சமயத்தின் எழுச்சியின்போது ஷமாஷ் என்ற பெயரிலான சூரியக் கடவுள் இப் பகுதிகளில் முக்கியத் தெய்வமாக விளங்கினார்.

சுமேரியர்களின் கடவுள்கள்.

சுமேரியாவுக்கு மெசபடோமியா என்ற பெயரும் உண்டு. இதன் தலைநகரான வரலாற்றுச் சிறப்புமிக்க பாபிலோனில் ஸிப்பாரா (இன்றைய அபுஹப்பா) மற்றும் லார்ஸா (ஸெங்கெராஹ்) ஆகிய 2 இடங்களில் மிகப் பெரிய சூரியக் கோவில்கள் எழுப்பப்பட்டன. இந்த இரு கோவில்களுக்கும் பெயர், இ-பாரா. இதன்பொருள் ‘ஒளிரும் இல்லங்கள்’. இவை தவிர, ஊர், மாரி, நிப்புர், நினேவேஹ் ஆகிய இடங்களிலும் ஷமாஷ் கடவுளின் ஆலயங்கள் இருந்தன. ஈராக்கில் உள்ள ஹத்ரா  (ஹதார்) என்ற இடத்தில் தற்போது இடிபாடுகளுடன் காட்சியளிக்கும் அற்புதமான ஷமாஷ் சூரியக்கோவில், பொ.யு. பி. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு ஷாஹிரோ (இதன்பொருள் விடிவெள்ளி) என்ற பெண்தெய்வத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தனிச்சன்னிதி சிறப்பு மிக்கது. நமது ஹிந்து மதப் புராணங்களில் சூரியனின் மனைவி உஷா தேவி என்று வர்ணிக்கப்படுவதும், சூரியன் உதிக்கும் உஷத் காலத்தை இது குறிக்கும் என்று கூறப்படுவதையும் இங்கு ஒப்புநோக்க வேண்டும்.

ஒருகாலத்தில் உலகில் 10 சூரியக் கடவுள்கள் இருந்ததாக சீனப் புராணக்கதை கூறுகிறது. சீனாவில் சூரியன் மற்றும் அக்னியின் உருவகமா கயாங் என்ற சக்தி போற்றப்படுகிறது. ஆப்பிரிக்கர்கள் லிஸா என்றும், பாலினீஸியர்கள் (இன்றைய நியூஸிலாந்து) மௌயி என்றும், அமெரிக்காவின் பூர்வகுடிகளான அஸ்டெக் பழங்குடியினர் டொனாடியுஹ் என்ற பெயரிலும் சூரியனை வழிபட்டனர். மேலும் அமெரிக்காவில் ஐரோப்பிய  ஆக்கிரமிப்பாளர்களாலும் குடியேறிகளாலும் அழித்தொழிக்கப்பட்ட இன்கா, மயன், இராக்யுஸ், ஸிம்ஷியான் ஆகிய நாகரிகங்களைச் சேர்ந்த மக்களும், மெக்ஸிகோ, பெரு ஆகிய நாடுகளில் வாழ்ந்த செவ்விந்தியர்களும் சூரியனையே முக்கியக் கடவுளாக வழிபட்டனர்.இதேபோல ஜெர்மானியர்கள் சன்னா என்ற பெயரிலும், ஜப்பானியர்கள் அமாதெரசு என்ற பெயரிலும் சூரியனை பெண்தெய்வங்களாக வழிபட்டனர். ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை நிப்பான் அதாவது உதயசூரியன் நாடு என்றுஅழைப்பதுடன், தங்களது தேசியக்கொடியிலும் சிவப்புச் சூரியனை இடம்பெறச் செய்துள்ளனர்.

நமது அறியாமையையும், பாவங்களையும் எரித்து, சத்தியத்தை நாடுகின்ற ஞானத்தை நல்குபவர் பிரத்யட்சக் கடவுளான சூரிய பகவான். மகாகவி பாரதியாரின் வார்த்தைப்படி, “தெள்ளிய ஞாயிற்றின் ஒளியைத் தேர்கிறோம், அவன் எங்கள் அறிவைத் தூண்டி நடத்துக” என்று கூறி சூரியப் பெருமானை  அனைவரும் வணங்குவோம்!

$$$

One thought on “பார் போற்றும் பரிதிக் கடவுள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s