-தஞ்சை வெ.கோபாலன்

தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கம் நடத்திவந்த மூத்த எழுத்தாளர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் (1936- 2021) அவர்கள் சுவாமி விவேகானந்தரின் 150வ்து ஜெயந்தியின் போது எழுதிய கட்டுரை இது....
பாரத தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, தக்கதொரு குருநாதரைச் சென்றடைந்து, தன்னையே இந்த நாட்டுக்கு அர்ப்பணம் செய்துகொண்ட ஓர் அற்புதப் பிறவி சுவாமி விவேகானந்தர். அவர் தோன்றிய காலத்தை நினைவில் கொண்டால், இறைவன் அந்தந்தக் காலத்துக்குத் தேவையான மாமேதைகளை இவ்வுலகுக்கு அளித்து, அழிந்து போகும் தறுவாயில் இருப்பனவற்றை மீட்டுப் புத்தாக்கம் செய்யும் பணியை குறையின்றி செய்து வந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், பள்ளி, கல்லூரிக் கல்வி பயிலாதவர்; அன்னை பராசக்தியிடம் எதிர்நின்று உரையாடி தன்னையே அவளிடம் ஒப்புவித்துக் கொண்ட ஞானி. ‘உன்மத்தம்’ எனும் சொல்லொன்று உண்டு. இச்சொல், மனம் மயங்கிய நிலையில் ஏதாவதொரு சிந்தனையில் மட்டும் மனம் நிலைகொண்டிருத்தல் என்று பொருள்படும்.
தமிழகத்தில் திருக்கடவூரில் வாழ்ந்த சுப்பிரமணிய பட்டர் என்பவர் அன்னை அபிராமியிடம் மனம் ஈடுபாடு கொண்டு, அந்த அன்னையிடம் மானசீகமாகப் பேசவும், அவள் அருளில் மூழ்கித் திளைக்கவும் செய்து கொண்டிருந்தவர். அந்தப் பிரதேசத்தை ஆண்டுவந்த மன்னன் வந்து அவர் அருகில் நின்று ”இன்று என்ன திதி?” என்று கேட்டபோதும், அன்று அமாவாசை என்பதைக்கூட அறிந்திடாமல், அன்னை பராசக்தியின் அருள்முகப் பிரகாசத்தைப் பார்த்துப் பரவச நிலையில், அதாவது உன்மத்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் அன்று பெளர்ணமி என்றுரைத்தார். இந்த நிலையில் அவ்வப்போது இருந்தவர் தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும்.
கல்லூரிப் படிப்பும், ஆன்மிக சி ந்தனையும், குருநாதரின் அருளும் கிடைக்கப்பெற்ற ஸ்ரீ விவேகானந்தர், தனது ஒளிமிக்க அறிவுச் சுடரோடு, அன்பர்கள் அளித்த ஊக்கமும் உதவியும் கொண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடக்கவிருந்த ஒரு கண்காட்சியின் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத உலக மாகாநாட்டுக்குக் கப்பலேறிப் பயணப்பட்டார். இன்றுபோல வானத்தில் பறந்து செல்லும் விந்தைப் பயணம் இல்லாத அந்த நாளில், அவர் கப்பலில் புறப்பட்டு கொழும்பு, சிங்கப்பூர், ஜப்பான் வழியாக அமெரிக்க நாட்டின் மேற்குக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.
அன்னிய மண்; அறிமுகமில்லா மனிதர்கள்; அன்பர்கள் திரட்டித் தந்த சிறிதளவு பணம் இவற்றோடு வந்திறங்கிய சுவாமியை அங்கு வரவேற்க கூட்டம் கூடியிருக்கவில்லை. மாலை அணிவித்து மரியாதை செய்து வசதியோடு தங்க வைக்க தொண்டர்கள் இல்லை. இறைவனின் கருணையொன்றையே ஆதாரமாகக் கொண்டு வந்து சேர்ந்த அந்த மாமனிதருக்கு ஏற்பட்ட சோதனைகள் தான் எத்தனை, எத்தனை? கையில் இருந்த பணமெல்லாம் செலவான பின், என்ன செய்வது என்கிற கவலை அவர் மனத்தை அரித்தாலும், இங்கு தன்னை ஏதோவொரு செயலுக்காகக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் இறைவன் அதற்கும் வழிசெய்யாமலோ போய்விடுவார் என்ற உறுதியும் நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.
குருநாதரின் ஆசி, அவருக்குத் துணை புரிந்தது. ஏதோவொரு உருவத்தில் சக்தி சொரூபமாக குருநாதர் தன் சீடனுக்கு ஏற்பட்ட இடையூறுகளையெல்லாம் பரிதி முன் பனியே போல துடைத்தெறிந்தார். தானே வலிய வந்து உதவி புரிய அமெரிக்க மக்கள் தலைப்பட்டனர். அவர்கள் அதுவரை பார்த்தறிந்திராத புதிய தோற்றம், கம்பீரமான உடை, நடை, பேச்சு ஆகியவை இவரது புகழ் பரவக் காரணமாக அமைந்தது. பாரத புண்ணிய பூமியிலிருந்து அங்கு சென்றிருந்த ஒரு சுதேச சமஸ்தான அதிபதிகூட இவரைப் பார்த்து, இவர் என்ன ஒரு பக்கிரி, இவருடன் என்ன பேச்சு என்று அலட்சியப்படுத்தியவர், பின்னர் அவரே இவரது பெருமையை உணர்ந்து இவருடன் நட்புப் பூண ஆர்வம் கொண்டார்.
சிகாகோ சர்வமத மகாசபைக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தத்தமது சமயத் தலைவர்களிடமிருந்து பிரதிநிதித்துவ கடிதம் கொண்டு வந்திருக்க, ஆதிமூலம் எதுவென்று அறியமுடியாத இந்து சமய நெறியைப் பின்பற்றும் பாரததேசத்து இந்து சந்நியாசியான சுவாமி விவேகானந்தர் மட்டும் யாரிடமிருந்தும், யாருக்காக இந்த மாநாட்டில் பங்கு கொள்கிறோம் என்கிற அறிமுகக் கடிதம் இல்லாமல் வந்திருந்தார்.
பாரதப் பண்பாட்டு அடையாளத்துக்கு அறிமுகம் செய்ய ஆட்கள் தேவையா என்ன? இருந்தாலும் அந்தப் பணியை செய்து முடிக்கவும், அதே அமெரிக்க தேசத்து அன்பர்கள் முன்வந்து உதவி செய்தார்கள். இறைவன் யார், யார் உருவில் வந்து என்னென்ன உதவிகளைச் செய்திருக்கிறார் என்பதை எண்ணும்போது மெய் சிலிர்க்கிறது அல்லவா?
உலகிலேயே உன்னதமான மதம் கிறிஸ்தவ மதமே என்பதை நிலைநாட்ட வேண்டும். அந்தச் சாதனையை உலக மதத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து உட்காரவைத்து அவர்களுக்கிடையே அந்தபி பிரகடனத்தை வெளிப்படுத்திவிட வேண்டுமென்பது தான் அந்த மாநாட்டைக் கூட்டியவர்களின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். மனிதன் ஒன்று நினைக்க மகாசக்தி வேறொன்றை நினைத்தாள் போலும்! தூரக் கிழக்கு தேசத்திலிருந்து காவியுடை அணிந்த வீரத் துறவியொருவர் வந்து அந்த மாநாட்டு உணர்வினைத் தன்னோடு கொண்டு சென்றுவிடுவார் என்று யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்?
மாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் முதல்நாள், அதாவது 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி, அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்குப் பதிலளித்து சுருக்கமாக உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. அவரவரும் முன்னேற்பாடாகத் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த உரையை எழுதிவைத்துப் படித்தனர். காலை முதல் பலமுறை பேச அழைக்கப்பட்டும், பிறகு பார்க்கலாம் என்று கழித்துக்கட்டிவிட்டு, இறுதியாக இதுவே கடைசி வாய்ப்பு என்ற நிலை வந்ததும், சுவாமிஜி பேச எழுந்தார். மற்றவரைப் போல எழுதி வைத்துக் கொள்ளவில்லை. என்ன பேசவேண்டுமென்று திட்டமிட்டிருக்கவும் இல்லை. ஆனாலும் அன்னை சரஸ்வதி அவர் நாவில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அவர் வாயைத் திறந்ததுதான் தாமதம், அன்னை சரஸ்வதி தன் சொற்களைக் கொட்டி விட்டாள். முதல் அழைப்பு-சுவாமிஜியின் முதல் அழைப்பே- அமெரிக்க மக்களின் உயிர்த்துடிப்பைச் சுண்டி இழுத்துவிட்டது. அன்றுவரை எவரும் பேசத் தொடங்கும் முன்பாக, “சீமான்களே, சீமாட்டிகளே” என்றழைக்கும் முறை இப்போது மாற்றப்பட்டு, ஒரு இந்தியத் துறவியின் வாயிலிருந்து “அமெரிக்க நாட்டு சகோதரர்களே, சகோதரிகளே” என்ற உறவுக் குறிப்போடு தொடங்கியது. இது என்ன மாற்றம்? இந்தச் சொல்லுக்கு- அல்ல அல்ல அந்த மந்திரத்துக்குத் தான்- என்ன உத்வேகம்? கரவொலி அடங்க பல மணித்துளிகள் ஆயினவாம். ஏன் இந்த வரவேற்பு? தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
பாரத நாட்டைப் போல பழம் பெருமையும், வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரியமும் இல்லாத நாடு அமெரிக்கா. ஐரோப்பா கண்டத்திலிருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் போய் குடியேறிய குடியேற்ற நாடு. ஐரோப்பாவின் பல பிரிவினரின் கூட்டுக் கலவையாக அமைந்திருந்த அந்த அமெரிக்க கலாச்சாரத்தில் சீமான்கள் இருந்தார்கள், சீமாட்டிகள் இருந்தார்கள், ஆனால் உறவாக எண்ண ஒரு சகோதரனோ, சகோதரியோ இல்லையே! ஒரு இந்திய சந்நியாசிக்கு மட்டுமே அங்கு இருந்தவர்களை மட்டுமல்ல, அமெரிக்க நாட்டினர் அனைவரையும் சகோதரனாக, சகோதரியாக எண்ணி அழைக்கும் மனப்பக்குவம் இருந்தமை அவர்களைக் கவர்ந்திழுத்தது. இதோ ஒரு சர்வதேசக் குடும்ப உருவாகப் போகிறது. அந்தப் புண்ணிய கைங்கர்யத்தைச் செய்ய மகா புண்ணியன் ஒருவர் வந்திருக்கிறார் என்று, இந்த இந்தியப் பெருந்தகையின் பெருமை அமெரிக்க நாட்டில் காட்டுத்தீயாகப் பரவியது.
இந்தியாவில் நிலைகொண்டிருந்த இந்து சமயம் தங்கள் சார்பில் யாரையும் இந்த மகாநாட்டுக்கு அனுப்பவில்லை. இந்த மதத்துக்குத் தலைவர் யார்? இதன் அமைப்பு எது? யார் முடிவெடுப்பது? இதெல்லாம் எதுவும் தெரியாத நிலையில் தன்னைத் தானே இந்துமதத்தின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு. கம்பீரமாக காவியுடையில் வந்து நின்ற சுவாமிஜி, அமெரிக்க மக்களின் கண்களில் ஒரு தேவதூதனாகக் காட்சி அளித்திருக்க வேண்டும். இறைவன் திருவருள் இந்த தேவதூதனின் வழியாக இந்து மதத்தின் பெருமையை அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலகமே தெரிந்துகொள்ள வேண்டுமென்பது திருவுளம் போலும்.
இந்தியாவிலிருந்து தியாசபிகல் இயக்கம், பிரம்ம சமாஜம், பெளத்தம் போன்றவற்றின் பிரதிநிதிகள் வந்திருந்த போதிலும், அவர்கள் அனைவரையும் தன் ஒரு சொல்லால் கட்டிப் போட்டுவிட்டார் சுவாமிஜி. இந்தியாவுக்கு அல்ல, இந்து மதத்துக்கு அல்ல, இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் நிலவிய ஏனைய மதங்களுக்கு அல்ல, உலக மக்களின் ஒருங்கிணைந்த பொது மதத்துக்கே பிரதிநிதி இந்து சமய வாழ்க்கையே என்பதை நிலைநாட்டிவிட்டார் சுவாமிஜி.
நன்றி அறிவிப்புக் கூட்ட உரையிலேயே அவர் பாரதத்தின் பெருமையை வெளிப்படுத்தினார். “உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் அளித்த புனித பூமியைச் சேர்ந்தவன் நான்; வழிபடும் தலத்தை இடித்தொழித்த பின் விரட்டப்பட்ட இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவிக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவன் நான்; அழிவின் விளிம்பில் நின்றிருந்த ஜொராஷ்ட்ரீய மதத்தில் மிச்சமுள்ளவர்களை அணைத்துக் கொண்ட தேசத்தவன் நான்” என்று பெருமிதத்துடன் முழக்கமிட்டவர் சுவாமி விவேகானந்தர்.
வேதத்தின் சாரத்தை அமெரிக்க மக்களிடம் எடுத்துரைத்தார். பகவத் கீதையின் சாரத்தை அவர்களுக்குப் பிழிந்து கொடுத்தார்; அறியாமை என்னும் படுகுழியில் இருந்துகொண்டு உலகமே ஓர் இருட்டறை என்று பிதற்றிக் கொண்டிருப்பவர்களை எள்ளி நகையாடினார்; உலக மதங்களுக்கெல்லாம் தாய் போன்ற வாழ்க்கை நெறிகளே இந்துமதம் என்று பெயருடன் அழைக்கப்படுகிறது என்பதை விரிவாக எடுத்துக் காட்டினார். பாரத புண்ணிய தேசத்தில் இந்துக்கள் வேத நெறிகளின் வழிவந்தவர்கள் என்று உலகம் அறிய உணர்த்தி வைத்தார். அறிவியலார் இன்று சொல்லி வரும் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்துக்கள் உருவாக்கிய வேதங்களில் காணப்படுவதை எடுத்துரைத்தார்.
இந்த பூமியில் பிறந்த குற்றத்துக்காக பாவிகள் என்றழைக்கப்பட்ட குற்றமற்ற மக்களை, அவர்கள் பாவிகள் அல்லர் என்பதையும், இந்து மதத்தில் அவர்கள் இறைவனின் குழந்தைகளாக மதிக்கப்படுவதையும் எடுத்துக் காட்டினார். பூமியையும், அதில் உயிரினங்களையும் படைத்த இறைவனுக்கு உருவையும், வழிபாட்டு வழிமுறைகளையும் மனிதன் படைத்து வைத்தான் என்றார் அவர்.
பூமியில் காணப்படும், அழியும், அழியா வஸ்துக்கள், ஜடப்பொருட்கள் உட்பட இங்கு உயிருள்ள தாவரம், பறவை, மிருகம், மனிதன் என எல்லா உயிர்களுமே இறைவனின் பேரொளியிலிருந்து உருவான சின்னஞ்சிறு அக்கினிக் குஞ்சுகள் என்று எடுத்துரைத்தார் சுவாமிஜி.
ஜடப்பொருளுக்குள் ஜீவனைப் படைத்தான் இறைவன். அந்த ஜீவனை வழிநடத்துவது அந்த ஜடத்தில் வந்தமர்ந்து கொண்ட ‘ஆன்மா’ என்பது. “நீ யார்?” எனும் கேள்வியைக் கேட்டு, நான் உடல் அல்ல, அணியும் உடையல்ல, எனக்கிட்ட பெயரல்ல என்றெல்லாம் சொல்லி, அந்த ஜடத்தில் வந்து அமர்ந்துகொண்ட ஆன்மாவே நான் என்பதை பறைசாற்றினார். இந்தியாவை, இந்திய மக்களை, இந்தியப் பண்பாட்டை உலகறியச் செய்த உத்தமர் சுவாமி விவேகானந்தர் என்பதை, பாரத புண்ணிய தேசத்தில் கடைசி ஓர் உயிர் இருக்கும் வரை மறந்துவிட முடியாது.

சிகாகோவில் வெற்றிக்கொடி நாட்டிய சுவாமிஜி சில ஆண்டுகள் அமெரிக்காவிலும், பின்னர் இங்கிலாந்திலும் தங்கியிருந்துவிட்டு, பற்பல அரிய சீடர்களையும் உருவாக்கிக் கொண்டு இந்தியா மீண்டபோது கொழும்பு வழியாக ராமேஸ்வரம் வந்திறங்கிய போது, அவருடைய புனித பாதம் தன் தலையில் படவேண்டுமென்று பணிந்து வேண்டியவர் ஒரு தமிழ்நாட்டுப் பெருந்தகை என்பது நாமெல்லாம் அறிந்து பெருமைப்பட வேண்டும்.
கொழும்பு முதல் அல்மோரா வரை அவர் பயணம் செய்த வழியெல்லாம் அவருக்குக் கிடைத்த வரவேற்பும், அவருடைய உரைகளும் ஒவ்வொரு இந்தியனும் படித்து அறிந்து பயன்படத் தக்கச் செல்வங்களாகும். சுவாமிஜி பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தோன்றும் ஓர் அவதார புருஷர். அவருடைய சாதனை தனியொரு மனிதனால் சாதிக்க முடியாத அரிய சாதனை.
அந்த மகா புருஷனின் 150ஆம் பிறந்த நாள் ஆண்டுவிழா காலகட்டத்தில் அந்த மகானின் நினைவுக்கு மரியாதை செய்லுத்துவது மட்டுமல்லாமல், அவருடைய கருத்துக்களை இயன்ற அளவு செயல்படுத்த உறுதி கொள்ளவும் வேண்டும்.
சுவாமி விவேகானந்தரையும், அவரை வழிநடத்திச் சென்ற பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் இந்த பூமி உள்ள அளவும், ஒர் இந்தியன் இருக்குமளவும் நினைவில் வைத்துப் பூஜித்திடல் வேண்டும்.
வாழ்க ஸ்ரீ விவேகானந்தர் புகழ்!
$$$