இளசை ஒருபா ஒருபஃது  

-மகாகவி பாரதி

‘ஒருபா ஒருபஃது’ என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இஃது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்.

இங்கு மகாகவி பாரதி, வெண்பாவில் அந்தாதியாகப் பாடி இருக்கிறார். இப்பாடல்களில்  காப்பு, பத்துப்பாடல்கள் ஆகியவை, இளசை எனப்படும் எட்டையபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனைக் குறித்துப் பாடியவையாக உள்ளன. இறுதியாக தனிப் பாடல் ஒன்றும் எட்டப்ப ராஜாவைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

.

காப்பு

நித்தரெனும் தென்னிளசை நின்மலனார் தாம்பயந்த

அத்திமுகத் தெங்கோ ளடியிணையே  – சித்திதரும்

என்தமிழி லேது மிழுக்கில்லா மெயஃது

நன்றாகு மென்றருளும் நன்கு.

.

நூல்

தேனிருந்த சோலைசூழ் தென்னிளசை நன்னகரின்

மானிருந்த கையன் மலரடியே  – வானிற்

சுரர்தமனியன்மால் தொழுங்காற் கிரீடத்

தரதனங்கள் சிந்து மகம்.    1

.

அகவிடத்திற் கோர்திலக மாமென் னிளசைப்

பகவனென் னெட்டீசன் பதமே  – திகிரி

பொருந்துகரத் தானென்றோர் போத்திரியாய்த் தேடி

வருந்தியுமே காணாச் செல்வம்.   2

.

செல்வ மிரண்டுஞ் செழித்தோங்குந் தென்னிளசை

யில்வளரும் ஈசன் எழிற்பதமே  – வெல்வயிரம்

ஏந்துகரத் தான்கரியன் எண்கணன்தம் உள்ளத்துப்

போந்துவளர் கின்ற பொருள். 3

.

பொருளாளரீய வேற்போரிளசை

மருளாள நீச ரடியே  – தெருள்சேர்

தமனா மறையவன்மேற் றன்பாச மிட்ட

சமனாவி வாங்கும்பா சம்.   4

.

சங்கத் தவழ்கழனி தண் இளசை நன்னகரில்

எங்கள் சிவனார் எழிற்பதமே- துங்கமிகும்

வேதமுடியின் மிசையே விளங்குநற்

சோதியென நெஞ்சே துணி.  5

.

துணிநிலவார் செஞ்சடையன் தோள் இளசை ஊரன்

மணிகண்டன் பாதமலரே  – பிணிநரகில்

வீழச்செய் யாது விரும்பியஈந் தேஅடியர்

வாழச்செய் கின்ற மருந்து.   6

.

மருளறக் கற்றோர்கண் மருவிளசை ஊரில்

வருமிறைவன் பாத மலரே  – திருவன்

விரைமலரா வட்டவிழியாம் வியன்றா

மரைபூத்த செந்தா மரை.    7

.

தாமரையின் முத்தெங்குந் தான்சிதறுந் தென்னிளசைக்

கோமானெட் டீசன்மலர் கொள்பதமே  – நாமவேல்

வல்லரக்கன் கைலை வரையெடுத்த காலவனை

அல்லற் படவடர்த்த தால்.   8

.

ஆல விழியா ரவர்முலைநேர் தண்வரைசூழ்

கோல மணி இளசைக் கோன்பதமே  – சீல

முனிவர் விடுத்த முயலகன் மீதேறித்

தனிநடனஞ் செய்ததுவே தான்.    9

.

தானே பரம்பொருளாந் தண்ணிளசை யெட்டீசன்

தேனேய் கமலமலர்ச் சீரடியே  – யானேமுன்

செய்தவினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கியருள்

எய்திடவுஞ் செய்யும் எனை. 10

.

தனி

கன்னனெனும் எங்கள் கருணைவேங்க டேசுரட்ட

மன்னவன் போற்றுசிவ மாணடியே  – அன்னவனும்

இந்நூலுந் தென்னாரிளசையெனும் நன்னகரும்

எந்நாளும் வாழவைக்கு மே. 11

.

  • ஆதாரம்: சக்தி வெளியீடு – பக்கம் 475 – 476

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s